விக்ரம் (1986) | தமிழில் ஒரு புதிய முயற்சி

18
Vikram விக்ரம்

மிழில் வந்த வித்யாசமான படங்களின் பட்டியலில் உள்ள படம் விக்ரம்.

படத்தில் உள்ள புதுமை யாரும் (தமிழில்) முயற்சி செய்யாத கதை மற்றும் படத்தில் வரும் வித்யாசமான காட்சி அமைப்புகள், இடங்கள்.

அக்னிபுத்திரன்

அக்னிபுத்திரன் என்ற ஏவுகணையைக் கடத்தி விடும் கும்பலில் இருந்து எப்படி நாட்டைக் காக்கிறார்கள் என்பதே கதை.

பெரிய குற்றச்சாட்டாகப் படம் வந்த போது கூறப்பட்ட விஷயம் அவ்வளவு முக்கியமான ஏவுகணையை எளிதாக  மூன்று பேர் கடத்தி விடுவதாகக் காட்டி இருந்தது.

விமானத்தில் இருந்து விழும் போது வரும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சில லாஜிக் இடறல்கள்.

குறைகள்

இவை தவிர படத்தில் ரசிக்க எவ்வளவோ காட்சிகள் இருக்க நம்ம மக்கள் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு விட்டார்கள்.

கமலிடம் ஒரு பிரச்சனை ரொம்ப காலம் கழித்து எடுக்க வேண்டிய படங்களை எல்லாம் முன்னரே எடுத்து விடுவது தான் 🙂 .

எடுத்துக்காட்டாக எத்தனையோ படங்களைக் கூறலாம். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் அன்பே சிவம் படத்தில் “சுனாமி” பேரலைகளைக் குறிப்பிட்டு இருப்பார்.

இன்று வரை எனக்கு அது வியப்பான விஷயம்.

புதிய முயற்சி

கிராமம், வேலை இல்லாபட்டதாரி கதை, காதல் என்று வழக்கமான முறையில் போய்க்கொண்டு இருந்த போது, அமரர் சுஜாதா அவர்கள் மற்றும் கமலின் ஆர்வத்தில்  உருவாக்கப்பட்ட படம் விக்ரம்.

இப்படத்தில் கமலை தவிர வேறு எவரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அசத்தலாக நடிப்பு. கமலை ரொம்ப ரசித்த படங்களில் விக்ரம் முக்கியமானது.

குறைகள் கூற இந்தப்பதிவு எழுதவில்லை. இப்படம் ரொம்ப கவர்ந்ததால் அதில் என்னைக் கவர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன் மற்றவை பற்றி சிறு குறிப்பாகத் துவக்கத்திலேயே கூறி விட்டேன் அதுவே போதும்.

இசைஞானி இளையராஜா

படம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே “விக்ரம் விக்ரம்” என்ற வித்யாசமாகப் படமாக்கப்பட்ட பாடல். இந்தப்படம் வந்த புதிதில் பலரால் முணுமுணுக்கப்பட்ட பாடல் இதுவாகும்.

பாடலில் வருபவர்கள் அனைவருக்கும் வித்யாசமாக வடிவமைக்கப்பட்ட உடைகள் என்று ஆரம்பமே எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

அமரர் சுஜாதா, கமலுக்கு பிறகு முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார் என்றால் இசைஞானி இளையராஜா அவர்கள் தான்.

ஒவ்வொரு பாடலையும் வித்யாசமாகக் கலக்கி இருப்பார் குறிப்பாக ஏஞ்சோடி மஞ்சக்குருவி 🙂 . இப்பவும் நான் அலுக்காமல் கேட்கும் பாடல்.

டைப் அடிக்கும் சத்தத்துடன் வரும் “விக்ரம்” பாடல், “ஏஞ்சோடி மஞ்சக்குருவி” பாட்டில் வரும் வித்யாசமான இசையாகட்டும் அந்தப்படத்தின் பின்னணி இசையாகட்டும் பின்னிப் பெடலெடுத்து இருப்பார்.

வழக்கமான இசையாக இல்லாமல் ஒரு விஞ்ஞான கதைக்கு ஏற்ற மாதிரி வித்யாசப்படுத்தி இருப்பார்.

அதுவும் ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அதற்குத் தகுந்த இசை இருக்கும்.

படத்தில் கவுரவ வேடத்தில் அம்பிகா. கமலுக்கு பொருத்தமான ஜோடிகளில் குறிப்பிடத்தக்கவர். பொருத்தம் என்றால் பொருத்தம் அப்படியொரு பொருத்தம்.

“வனிதாமணி” பாடலில் கொஞ்ச நேரம் மகிழியாக இருந்ததோடு சென்று விடுவார்.

எனவே, அவரைப் பற்றிக் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவிற்கு எதுவுமில்லை. கமல் மீதுள்ள அபிமானத்தில் இந்தச் சிறு வேடத்தில் அவர் நடித்து இருக்கலாம்.

குறைந்த நேரமே வந்தாலும் அழகான ரசிக்கும் படியான ரொமாண்டிக் காட்சிகள் 🙂 .

தொழில்நுட்பம்

ஆங்கிலப்படங்களில் என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்பவர்கள், தமிழ் படங்களில் நம் அளவிற்கு ஏதாவது முயற்சி செய்தால், எள்ளி நகையாடுவார்கள்.

அதுபோல ஆனது தான் கமல் துப்பறியும் போது வீட்டு பூட்டைத் திறக்கப் பயன்படுத்தும் முறைகள்.

அதில் கிண்டலடிக்கும் படி ரொம்ப மோசமாக இருக்காது. ஜேம்ஸ்பாண்ட் தனது கைக்கடிகாரத்தை வைத்துச் செய்யும் சில்பான்ஸ் வேலைகளில் 10% கூட இருக்காது.

சத்யராஜ்

நாயகன் மட்டுமே கலக்கலாக இருந்தால் படம் ரசிக்கும்படி இருக்காது உடன் பக்காவான வில்லனும் அவசியம்.

ரஜினிக்கு ஒரு பக்கா வில்லன் ரகுவரன் என்றால் கமலுக்கு சத்யராஜ். விக்ரம் காக்கி சட்டை போன்ற படங்களே அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

நக்கலும் நையாண்டியுமாகக் கலக்கி இருப்பார்.

அவர் நக்கலாகக் கேட்கும் “நெசமாவா” என்பதும்.. வாய்யா விக்ரம்! இப்படி என்கிட்டே பொசுக் பொசுக்குனு மாட்டிக்குறியே! என்பதும் சத்யராஜை தவிர வேற யார் செய்தாலும் எடுபடாது.

சுஜாதா வசனங்கள்

படம் முழுவதும் சுஜாதா அவர்களின் நையாண்டி தெறிக்கும் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கமலும் லிசியும் ராஜஸ்தான் பாலைவனத்தில் போய்க்கொண்டு இருக்கும் போது லிசி கமலிடம்..

அடேங்கப்பா! எவ்வளோ பெரிய ஒட்டகம்! இது மேல எப்படி ஏறி உட்காருவாங்க! என்று ரொம்ப சீரியஸாக கேட்க, அதற்குக் கமல் அது குட்டியாக இருக்கும் போதே உட்கார்ந்துப்பாங்க என்று சிரிக்காமல் கூறுவது நமக்குச் சிரிப்பை வரவழைக்கும்.

இது போல படம் முழுவதும் வசனங்கள் இருக்கும்.

அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா

சலாமியா நாட்டின் (இராஜஸ்தானை சலாமியா நாடாகக் காட்டியிருப்பார்கள்) ராஜாவாக அம்ஜத்கான் அவரது மகளாக டிம்பிள் கபாடியா அவரின் மனைவிகளுள் ஒருவராக மனோரமா.

இக்கதாப்பாத்திரங்களுக்கு இதை விடச் சிறந்த தேர்வு இருக்க முடியாது.

அம்ஜத்கான் ராஜவைப் போலவே இருப்பார் என்றால் இளவரசி என்பதற்கு உதாரணமாக அசத்தலாக இருப்பார் டிம்பிள் கபாடியா.

இளவரசிக்கே உரிய தெனாவெட்டு, அழகு உடை என்று பட்டாசாக இருப்பார்.

டிம்பிளை பாம்பு கடித்து கமல் ரத்தம் எடுப்பதில் ஆரம்பிக்கும் இவர்கள் இருவருக்குமான தொடர்பு.

மன்மதன் கமல் என்பது சரியான வார்த்தை என்பதை “மீண்டும் மீண்டும் வா” பாடல் பார்ப்பவர்கள் அறியலாம் 😉 .

ராஜஸ்தான் பகுதி அரண்மனை, எலிக்கோவில், தண்டனை, வித்யாசமான முகமூடியுடன் பாதுகாவலர்கள் என்று அந்த இடமே நம்மை வித்யாசமான சூழலுக்குக் கொண்டு செல்லும். ரொம்ப ரசித்த காட்சிகள் இவை.

படம் ரொம்ப வித்யாசமாக இருந்தது என்பதை நிரூபிக்கும் காட்சி அமைப்புகள் என்று அமரர் சுஜாதா கமல் கலக்கி இருப்பார்கள்.

மனோரமா

மனோரமா இறுக்கமான சூழ்நிலையைக் கலகலப்பாக்கும் நபர். “நானும் உன்ன மாதிரி கலைக்குழு தான் வந்தேன், இந்தக் குண்டன் என்னை அந்தப் புரத்துக்கு தூக்கிட்டு போய்ப் பந்தாடிட்டான்” என்று கூறி ரணகளப்படுத்துவார்.

இப்ப 16 வது ராணியாக இங்க இருக்கேன் என்று கூறுவதும் அவர்கள் அனைவரும் சிக்கன் சாப்பிடும் போது அரச குடும்பத்தினர் மத குரு துப்பிய பிறகே சாப்பிட வேண்டும் என்று இருப்பதால் மத குரு வரும் போது..

மொட்டையன் வரான்! மொட்டையன் வரான்!! ஐயோ! இவன் துப்பியதை சாப்பிட்டே நான் இப்படி ஆகிட்டேன்‘ என்று கூறுவது ரகளையாக இருக்கும்.

ஜனகராஜ்

இவர்கள் அனைவரைப்போல மனதில் நிற்கும் காதாப்பத்திரம் ஜனகராஜ்.

சலாமியா! உங்களை வரவேற்கிறது!‘ என்று ஆரம்பித்து அதன் பிறகு படம் முழுவதும் நம் வயிற்றை பதம் பார்ப்பார்.

சலாமியா பொண்ணுக ரொம்ப அழாக இருப்பாங்க. பொண்ணுகளைப் பார்க்காதீங்க கண்ணுகளை நோண்டிடுவாங்க‘ என்று கூறுவதும்…

கமலுக்கும் டிம்பிளுக்கும் மொழி பெயர்ப்பாளராக வந்து, ‘கிட்ட வாயா கிட்ட வாயா கிட்ட வாயானா!‘ என்று ரகளையாகக் கூறி தன்னை விட்டால் யாரும் இதை இவ்வளவு சரியாகச் செய்ய முடியாது என்று நிரூபித்து இருப்பார்.

மொத்தத்துல ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கும். யாரையுமே தேவை இல்லை என்று குறிப்பிட முடியாத அளவிற்கு இருக்கும்.

தமிழ் திரையுலகில் புதிதாக முயற்சி செய்த படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால், நிச்சயம் விக்ரம் படம் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

எப்போது பார்த்தாலும் சலிக்காத படங்களில் விக்ரமும் எனக்குண்டு.

அனைத்தும் கமல் ரசிகர்களுக்கும் இந்தப்பதிவு ஒரு ரஜினி ரசிகனின் சமர்ப்பணம்.

தொடர்புடைய கட்டுரை

மகாநதி [1994] ஒரு ரஜினி ரசிகனின் விமர்சனம்

கொசுறு 

அமரர் சுஜாதா அவர்கள் விக்ரம் பற்றிக் குறிப்பிடும் போது,

தமிழ் ஜேம்ஸ்பாண்டு பாணி படம் செய்ய விருப்பப்பட்டு கமலுடன் கலந்து பேசி அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர் ராஜசேகரை வைத்துப் படம் எடுப்பதாகத் தீர்மானித்துப் படம் 1986 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நடிகர்கள் கால்ஷீட் பிரச்சனை, பணம் கிடைக்கும் போது அதற்குத் தகுந்த மாதிரி படப்பிடிப்பு என்று பிரச்சனை இருந்தாலும் பாதி சரியாகவே போனது.

ஆனால், ராஜசேகர் அதே சமயத்தில் ரஜினியை வைத்தும் படம் இயக்க ஒப்புக்கொண்டு இருந்ததால் அதில் பிஸியாகி வரவில்லை இதனால் விக்ரம் படத்தை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் மீதியை இயக்குனர் சந்தான பாரதியை வைத்து எடுக்கப்பட்டது.

அதன் பிறகு கதையை எப்படி கொண்டு போவது என்பது தெரியாமல் ஒழுங்கு இல்லாமல் சென்று எப்படியோ படத்தை முடித்தால் போதும்

என்று ஆகி விட்டதாகக் குறிப்பிடுகிறார்.

விக்ரம் படத்தில் எனக்கு எந்த வித்யாசமும் தெரியவில்லை. முதலில் இருந்து கடைசி வரை ஒருவரே இயக்கியதைப் போலத்தான் இருந்தது.

அதற்கு நிச்சயம் முக்கிய காரணமாகக் கமல் (உடன் சுஜாதா அவர்கள்) இருந்து இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

சுஜாதா அவர்கள் கூறியதைப் படித்த பிறகே எனக்குச் சந்தான பாரதி அவர்கள் இயக்கியது தெரியும். இதை படித்த பிறகு தான் உங்களில் பல பேருக்கு இது பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன்.

தகவல் நன்றி BaalHanuman

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

 1. கலக்கல் படம் கிரி. கணக்கு வைக்காமல் சலிக்க சலிக்க பார்த்தது கடைசில ஒரு ஆறுமாசம் முன்பு கூட பார்த்தேன்… நன்றி:))

 2. ஹ்ம்ம்…. கோபி சரவணா தியேட்டரில் இந்த படத்த பார்த்த ஞாபகம் இன்னும் அப்பிடியே இருக்கு !!! இன்னும் ஒருமுறை பார்த்த அனுபவம் இதை படிக்கும் போது… நன்றி !!!

 3. நானும் இந்த படத்தை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கேன். ஆனா என்னை விட நீங்க நல்லா எழுதியிருக்கிங்க. வாழ்த்துக்கள்.

 4. அந்த கால கட்டத்தில் மிக வித்தியாசமான ஒரு முயற்சி இந்த படம். உங்கள் விமர்சனம் மிக அருமை.

 5. ஆகா …கிரி சார் ..கரெக்ட் டைம் ல கரெக்ட் பதிவு…..
  எப்படியோ சூட்டை தணிசிட்டிங்க…. நான் கோடை ல கூலான பதிவு னு சொன்னன் சார்

 6. அண்ணே !! எனக்கும் பிடித்த படம் !!! நான் வழக்கம் போல டிவிடி வச்சு இருக்கேன் !!!

 7. கமல் ஒரு விபச்சாரிப் பொல் நடத்தும் உடல் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று பத்திரிக்கைகள் கிழிகிழி என்று கிழித்த படம் ஒருவருக்கு ரொம்ப பிடிதிருக்கிறது,,உங்களின் ரசனை வித்தியாசமானதுதான்,,ஆன் சொல்ல மறந்துவிட்டேன் நான் ஒரு மிக திவிரமான கமல் ரசிகனாக இருந்தவன்,,சொல்லப்போனால் இந்த படத்திற்கு நான் கட்டவுட் கூட வைத்திருக்கிறேன்,, அன்று பத்திரிக்கைகள் அவரை கிழித்ததற்கு காரணம் அதற்கு முன் வந்த அனைத்து படங்களிலும் கமல் தன் எக்சர்சைஸ் பாடியை காட்ட தவர மாட்டார்,,அதில் பெரும் இட்டானது சலங்கை ஒலியும் சகலக்கலா வல்லவவனும் மட்டும்தான்

 8. கிரி,

  ஈரோடு ஆனூர் தியேட்டரில் விக்ரம் பார்த்து வியந்து விட்டு, அடுத்த நாள் அபிராமியில் (முதல் படம்) நான் சிகப்பு மனிதன் பார்த்த போது விக்ரம் மறந்தே போய்விட்டது.

  விக்ரம் – தொழில்நுட்பத்தை நம்பி திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பார்கள். சலோமியாவிற்கு போனபிறகு கதையின் ஓட்டம் ரொம்பத்தான் தடுமாறும்.இதை சுஜாதாவே ஒப்புக்கொண்டுள்ளார்.

  நான் சிகப்பு மனிதன் – திரைக்கதையில் ஜாலம் காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் ரஜினியின் அன்டர்ஃப்ளே நடிப்பு, உங்களுக்கு பிடித்த பாட்ஷாவிற்கு முன்னோடி எனலாம். இடைவேளையின் போது “பொறுத்தது போதும் பொங்கியெழு தலைவா” என்ற ரசிகர்களின் கோஷம் இன்றும் காதில் ஒலிக்கிறது.

  ஒரு தகவல்:
  விக்ரம் படத்தில் வில்லன் பெயர் – சுகிர்தராஜா
  சிவாஜியில் சுமனை சந்திக்க கல்லூரிக்கு ரஜினி வரும்போது, சுமன் ” NRI சுகிர்தராஜா” என்று இந்த பெயரை கூறுவார்.

  சுஜாதா எங்கு கண்டுபிடித்தாரோ இந்த பெயரை…… வித்தியாசமான பெயர்.

 9. கிரி….

  நீங்க சிலாகித்து சொல்லுமளவுக்கு நான் ரசித்த படமல்ல விக்ரம்… ஆனால், இளையராஜாவின் இசைக்காக கேசட் கடை வாசலில் நின்றது நினைவுக்கு வருகிறது (அப்போ எல்லாம் சிடி இல்லீங்கோ!!)…… இளையராஜாவின் இசை மிக பிரமாதமாக அமைந்த படங்களில் விக்ரம் படமும் ஒன்று… புன்னகை மன்னன் படத்திற்கு முன்னதாக கம்ப்யூட்டர் இசையை வெள்ளோட்டம் பார்த்து அசத்தியிருப்பார்…

  மீண்டும் மீண்டும் வா பாடலில் ஃப்யூஷன் இசையை தொட்டிருப்பார் (கர்நாடிக் & வெஸ்டர்ன்…)…….

  நிறைய இடங்களில் ரொம்ப இழுவையா இருக்கும் படம்…. க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த ப்ளூ மேட் டெக்னாலஜி பல்லிளித்து இருக்கும்…..

 10. ரொம்ப நாள் கழிச்சு நியாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. டவுன்லோட் போட்டுடலாம்.

 11. தமிழில் பாண்ட் டைப் படம் என்றால் எனக்கு நினைவுக்கு வருவது.. விக்ரேரரராம்!

  நல்லா கிளறியிருக்கீங்க…

 12. எனக்கும் பிடித்த படம் கிரி இந்த படம் வெளியான போது ஐந்து முறை பார்த்திருக்கிறேன் சுஜாதா அவர்கள் இந்த படத்தை குமுதத்தில் கதையாக எழுதினார் படபிடிப்பு நடைபெறும் போது எனக்கு மீண்டும் மீண்டும் வா பாடலும் வனிதாமணி பாடலும் ரொம்ப பிடிக்கும் பதிவுக்கு நன்றி கிரி

 13. கிரி,
  நான் ரொம்ப ரசிச்ச கமல் படம். விமர்சனம் நல்லா இருக்கு. இந்த மாதிரி type ல movies இப்ப வரது இல்லைன்னு எனக்கு வருத்தம் உண்டு

  – அருண்

 14. நாஞ்சில் பிரதாப், சிவா, நரசிம்ம பிரசாத், பாலா, தாமஸ், ஆனந்த், ராஜ், சார்லஸ், காத்தவராயன், கோபி, தினேஷ், கலையரசன், சரவணன் மற்றும் அருண் வருகைக்கு நன்றி

  @சிவா நீங்க கோபியா! ரைட்டு 🙂

  @ஆனந்த் 🙂 குசும்பு

  @சார்லஸ் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்புடுறான் 🙂 அவர் உடலை நன்றாக வைத்து இருக்கிறார்.. மற்றவங்க பலர் தொப்பையும் தொந்தியுமா இருந்தா என்ன பண்ணுறது 🙂 மன்மதன்னா சும்மாவா.

  @காத்தவராயன் எனக்கு இரண்டாம் பாதியும் ரொம்ப பிடித்து இருந்தது. என்னைப்பொருத்தவரையில் சிறப்பாகவே இருந்தது. நான் சிகப்பு மனிதன் செம படம்.

  @கோபி க்ளைமாக்ஸ் சொதப்பி விட்டது உண்மை தான் அந்த கிராபிக்ஸ் காட்சிகளுக்குப் பதிலாக வேறு எதுவும் செய்து இருக்கலாம். அதே போல கதாநாயகிகள் இருவருக்கும் என்ன முடிவு வைப்பது என்பதும் குழப்பமாக இருந்து இருக்கும். எது எப்படியோ இவை எல்லாம் படத்தை ரசிக்க எனக்கு தடையாக இருக்கவில்லை.

  @அருண் எனக்கும் அந்த வருத்தம் உண்டு. இப்படி ஏதாவது முயற்சி செய்தால் நம்ம ஆளுங்க தான் டரியல் ஆக்குறாங்களே! அப்புறம் எங்க எடுக்கறது.

 15. கிரி

  நல்ல அலசல். குறைகளை கூட பதிவு செய்து இருக்கலாம். நான் கமல் படங்களை பார்க்கும் பொது ரசனையான காட்சிகளுக்கு இணையாக குறைகளையும் அலசுவேன். உதாரனத்திற்க்கு மன்மதன் அம்பு ஒரு குப்பை. இதை கமல் ரசிகனாகவே தைரியமாக சொல்வேன்.

  கருத்து வேறுபாடு ஏற்படுவது படங்களை தாண்டிய தனிப்பட்ட விமர்சனங்களின் போது தான்.

 16. பாமரன் புதிய பட விமர்சனம் என்றால் குறைகளையும் விமர்சித்து இருப்பேன் அதனால் தான் விமர்சனம் என்று எழுதாமல் திரைப்பார்வை என்று எழுதினேன். இந்தப்படம் எனக்கு ரொம்பப்பிடித்த படம் எனவே எதனால் எனக்குப் பிடித்தது என்பதை மட்டும் கூறினேன்.

  விக்ரம் போல பல கமல் படங்கள் எனக்கு பிடித்தவை உள்ளன.

 17. கிரி,

  நானும் இந்த படம் வந்தபோது முதல் வாரத்திலேயே பார்த்தேன். IInd half was a drag.
  It was fact action until interval.. after that.. its double movie.. you should have aspro anasin and all..

  But Dimple Kapadia was really good esp. that Song..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here