ஆந்திராவில் பிறந்து தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளத்தில் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
1988 ல் பறவைகள் பலவிதம் என்ற படத்துக்குப் பின்னணி இசை தான் முதல் படம். முழுமையாக இசையமைத்த முதல் படமாக 1989 ல் பூ மனம். Image Credit
இசையமைப்பாளர் வித்யாசாகர்
1990 / 2000 களில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்களில் வித்யாசாகர் குறிப்பிடத்தக்கவர். ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
காலத்தால் அழியாத அதிரடி மற்றும் மென்மையான பாடல்களைக் கொடுத்துள்ளார். இன்னமும் இப்பாடல்கள் மனதுக்கு நெருக்கமானதாக உள்ளது.
சலிக்கவே சலிக்காத பாடல்களில் வித்யாசாகரின் பல பாடல்களுக்கு இடம் உண்டு.
அர்ஜுன்
துவக்கத்தில் சில தமிழ் படங்களுக்கு இசையமைத்தாலும், தெலுங்கிலேயே வித்யாசாகர் கவனம் இருந்தது.
1994 ல் அர்ஜுன் சொந்தப்படமான ஜெய்ஹிந்த்க்கு இசையமைத்தார்.
இதன் பிறகு தொடர்ந்து அர்ஜுன் படங்கள் சிலவற்றுக்கு இசையமைத்தார். பெரும்பாலும் ஹிட் பாடல்களே!
ஜெய்ஹிந்த்
இப்படமே வித்யாசாகருக்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாகத் தமிழில் அமைந்தது. இதில் ஒவ்வொரு பாடலும் மிகப்பெரிய வெற்றி.
இப்பவும் ஜெய்ஹிந்த் பாடல் Goosebumps தரும். இப்பாடலைப் பாடிய SPB அடுத்தக் கட்டத்துக்குத் தன் குரலால் கொண்டு சென்று இருப்பார்.
ஜெய்ஹிந்த் என்று சொல்லும் போது ந்த் யை அழுத்தி அவர் கூறுவது, உணர்ச்சிகரமாக இருக்கும்.
தேசியக்கொடியை கையில் வரைந்து இருக்கும் தேசிய பற்றாளரான அர்ஜுன், தான் இயக்கிய படத்தில் இப்படியொரு பாடலை வைத்ததில் வியப்பில்லை.
இப்பாடலை கேட்கும் ஒவ்வொருமுறையும் எனக்கு Goosebumps ஆகும்.
வெறித்தனமான தேசியப்பற்று இசையைக் கொடுத்த வித்யாசாகருக்கு நன்றி.
இதன் பிறகு கேங்ஸ்டர் பாடலாகப் பொருத்தமாக மால்குடி சுபா குரலில் ஊத்தட்டுமா, கிளுகிளுப்பாகக் கண்ணா என் சேலைக்குள்ள என்று அனைத்துப் பாடல்களும் தாறுமாறு வெற்றி.
சில பாடல்களுக்குச் சிலரை பாட வைத்தால் மட்டுமே வேற லெவலாக இருக்கும். ஊத்தட்டுமா அப்படியொரு பாடல்.
இதன் பிறகு கர்ணா படத்தில் ஹே ஷப்பா (மனோ ஸ்வர்ணலதா கலக்கியிருப்பார்கள்), எப்பவும் உருக்கும் மென்மையான பாடலான மலரே! பாடல்கள் இன்றளவும் ரசிக்கத்தக்கவை.
கண்ணிலே கண்ணிலே, தொலைபேசியில் பேசுவது போல வித்யாசமாக ‘ஹலோ செல்லமா‘ என்று கர்ணா ஒரு மியூசிக்கல் ஹிட்.
செங்கோட்டையில் ‘விண்ணும் மண்ணும்‘ என்ற செம வேகமான பாடல். சுபாஷ் படத்தில் ‘ஹே சலோமா‘ என்ற ஹிட் பாடல் சில்க் க்கு கடைசிப்பாடல்.
அனைத்து வகைப்பாடல்களையும் வித்யாசாகர் கொடுத்தது சிறப்பு.
தரணி
அர்ஜூனுக்குப் பிறகு தரணி இயக்கத்தில் பெரும்பாலான படங்களுக்கு வித்யாசாகர் தான் இசை.
தூள், தில், கில்லி, குருவி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதிலும் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி.
கில்லி இன்றளவும் வித்யாசகர் பெயரை அனைவருக்கும் நினைவுபடுத்துகிறது. ‘அப்படிப் போடு‘ இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் பாடல்.
மற்ற இயக்குநர்கள்
பசும்பொன், நிலாவே வா, பூவெல்லாம் உன் வாசம், தவசி, ரன், வில்லன், அன்பே சிவம், சதுரங்கம், திருமலை, இயற்கை, தம்பி, சந்திரமுகி, மொழி, சிறுத்தை ஆகியவை மிகப்பெரிய வெற்றிப்பாடல்கள்.
நிலாவே வா அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி.
இன்றும் நான் விரும்பிக்கேட்கும் பாடல் தவசி. அன்பே சிவம் பாடல்கள் கதையின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
இயற்கையில் ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு‘ பாடல், மலரே! பாடல் போல மென்மையான பாடல்.
சந்திரமுகி படம் அறிவிப்பு வெளியாகி மோஷன் பிக்சர் வெளியீடு போல ‘அத்திந்தோம்‘ பாடல் சில நொடிகள் வெளியானது அனைவரையும் கவர்ந்தது.
இப்படத்தின் தமிழ், தெலுங்கு இரண்டுமே மிகப்பெரிய வெற்றி.
விருதுகள்
ஸ்வராபிஷேகம் என்ற தெலுங்கு படத்துக்குத் தேசிய விருது, கலைமாமணி விருது , ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகள், கேரளாவில் பல மாநில விருதுகளையும் வித்யாசாகர் பெற்றுள்ளார்.
90 களின் கொண்டாட்டமான நினைவுகளை வித்யாசகர் இசை கொண்டு வருகிறது என்றால் மிகையில்லை.
ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்து இருந்தாலும் ஜெய்ஹிந்த், கர்ணா, தவசி ஆகியவை தற்போதும் சலிக்காமல் அடிக்கடி கேட்கும் பாடல்கள்.
இவையல்லாமல் விண்ணும் மண்ணும், ஹே சலோமா, காதல் வந்தால், நீ காற்று போன்ற சில தனிப்பாடல்களும் அடங்கும்.
நம் மனதை மகிழ்ச்சியில் கொண்டாட்டமாகவும், சோகமான தருணங்களில் மனதை வருடுவதும், பயணங்களைச் சுவாரசியமாக்குவதும் இசை தான்.
அற்புதமான இசையைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள் எப்போதும் பாராட்டுக்குரியவர்களே!
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக வித்யாசாகர் 🙂 . எக்காலத்திலும் நினைவு கூறப்படுவார்.
தொடர்புடைய கட்டுரைகள்
என்ன விட்டு எங்கடி நீ போன | Magic Man SPB
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, ரொம்ப வித்தியாசமான ஒரு பதிவாக நான் கருதுகிறேன்.. ஏனென்றால் படம், பாடல் என எல்லாவற்றையும் திரும்ப, திரும்ப குறிப்பிட்டு இருக்கீங்க!!! எனக்கு தெரிந்து நீங்க இது போல யார்க்கும் எழுதியது இல்லை என நினைக்கிறேன்..
வித்தியாசாகர் சாரிடம் முதலில் பிடித்தது அவரின் குழந்தைத்தனமான சிரிப்பு!!!இதை பற்றி நீங்க சொல்லவே இல்லை!!!
மலரே மௌனமா பாடலுக்கு பெரிய கதையே உண்டு கிரி.. சுருக்கமாக கூறுகிறேன்.. SPB வேலையை முடித்து விட்டு கிளம்பும் போது இசையமைப்பாளர், இந்த பாடல் பதிவு இருக்கிறது என்றவுடன், மிக குறைந்த நேரம் தான் பாடுவேன் சீக்கிரம் ஆரம்பித்து விடுங்கள் என்றாராம்..
ஆனால் பாடல் வரிகளை படித்து விட்டு கிட்டத்திட்ட 2 மணி நேரம் அளவிற்க்கு நேரம் எடுத்து கொண்டு பாடலை பாடிவிட்டு சென்றாராம்.. செல்லும் முன் (ஒரே ஒரு விண்ணபத்தையும் வைத்தாராம்..) பாடல் அருமையாக இருக்கிறது.. காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்றாராம்.. அந்த அளவிற்கு SPB சாருக்கு நெருக்கமான பாடல் இது..
தூள், தில் : இப்போது இந்த படத்தின் பாடல்களை கேட்டவுடன் என் கல்லூரி நாட்களின் போது பேருந்தில் பயணம் செய்த நினைவுகள் வரும்.. தில் படத்தில் கபிலன் எழுதிய : உன் சமையல் அறையில் மிகவும் பிடித்த பாடல்.. தூள் படத்தில் ஆசை ஆசை இப்போதும் கேட்டு வருகிறேன்..
நிலாவே வா : படத்தின் பாடல்கள் செம்ம!!! தற்போதும் இந்த படத்தின் பாடல்களை என் மனநிலைக்கு தகுந்தவாறு கேட்பேன்.. மிகவும் பிடித்த பாடல் : நிலவே, நிலவே.. பாட்ட கேட்கும் போது பறப்பது போல ஒரு உணர்வு வரும்.. பூவெல்லாம் உன் வாசம் படத்தின் பாடலை கேட்டால் பழைய காதலில் நினைவு வந்து விடும்..🙂
காதல் வந்தால் சொல்லியனுப்பு : முதுகலை கல்லூரி படிக்கும் போது இந்த பாட்டுக்காகவே இயற்கை படத்தை பார்க்க கூட்டமாக சென்றோம்.. இந்த பாட்டை கேட்கும் போது நண்பன் மதனின் (திருநெல்வேலி)நினைவு வரும்..
சந்திரமுகி படத்திற்கு எப்படி வாய்ப்பு வந்தது என்று வித்தியாசாகர் அந்த சமயத்தில் ஏதோ ஒரு புத்தகத்தில் தொடராக எழுதி இருந்தார்.. அந்த சமயத்தில் அதை விடாமல் படித்து வந்தேன்.. படத்தின் மாபெரும் வெற்றிக்கு இவரின் பங்களிப்பை மறுக்க முடியாது..
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக வித்யாசாகர் 🙂 . எக்காலத்திலும் நினைவு கூறப்படுவார். உண்மையான வார்த்தைகள் கிரி..
மொழி படத்தை விட்டு விட்டீர்கள். முக்கியமாக “காற்றின் மொழி” என்ற பாடலை எனக்கு எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒன்று.
@யாசின்
“எனக்கு தெரிந்து நீங்க இது போல யார்க்கும் எழுதியது இல்லை என நினைக்கிறேன்”
தேவாக்கு எழுதினேன்.
மலரே பாடல் பலராலும் பாராட்டப்பட்ட பாடல்.
நிலாவே வா பாடல் கேட்டால், என் நண்பன் திருமண நிகழ்வு எனக்கு நினைவு வரும்.
சந்திரமுகி இனி வியப்பு. அனைத்து பாடல்களுமே நன்றாக இருந்தது. ராரா பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
@விபுலானந்தன்
“மொழி படத்தை விட்டு விட்டீர்கள்.”
குறிப்பிட்டுள்ளேனே! திரும்ப ஒருமுறை கவனித்து பாருங்கள்.