வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால், அது என்ன வகையான புத்தகம் என்று தெரியாது.
இதைக் கவிதைத் தொகுப்பு என்று தான் நினைத்து இருந்தேன் ஆனால், நினைத்ததற்கு முற்றிலும் வேறாக இருக்கிறது.
பேயத்தேவர்
“பேயத்தேவர்” என்ற கதாப்பாத்திரத்தின் வீட்டில் ஒருவராக ஓரமாக நின்று நாம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பது போல இருக்கிறது.
வைரமுத்து கவிதை அட்டகாசமாக எழுதுவார் என்று தெரியும் ஆனால், இப்படி நாவல் எழுதுவார் என்று நான் நினைத்ததே இல்லை.
கள்ளிக்காடு என்ற வறண்ட நிலத்தில் நடமாடும் மனிதர்களின் வாழ்க்கையை எந்த வித அலங்காரப் பூச்சும் இல்லாமல் அப்படியே நம் முன்னால் நிறுத்தியிருக்கிறார்.
முழுமையான கிராமத்துப் படம் பார்த்து முடித்தது போல இருந்தது.
நகரத்துச் சத்தங்களில் இருந்து முற்றிலும் விலகி கிராமத்து வாழ்க்கையில் நுழைந்து விடுவோம்.
“பராசக்தி” யில் கலைஞர் வசனம் எழுதினாரே..
“ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்று, அது போலத் துன்பம் மீது துன்பம் என்று பேயத்தேவரை விதி புரட்டியெடுக்கிறது.
சோதனை மேல் சோதனையாக வந்தாலும், அவரின் போராடும் குணம் அனைத்தையும் எதிர்த்து நிற்கிறது.
நமக்கே ஒரு கட்டத்தில் “யெப்பா! பாவம்யா.. ஒரு மனுசனை எவ்வளவு தான்யா சிரமப்படுத்துவீங்க.. போதும்! ஏதாவது நல்லது நடக்க வைங்க!” என்று நினைக்க வைத்து விடுகிறது.
சோகத்தை இந்த அளவிற்குப் பிழிந்து இருக்கத் தேவையில்லை, கிராமங்களின் சந்தோசமான பக்கங்களையும் காட்டியிருக்கலாம்.
மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்
பேயத்தேவர், அவரது பேரன் மொக்கராசு, மகள்கள் செல்லத்தாயி & மின்னல், மனைவி அழகம்மா, மகன் சின்னு மற்ற கதாப்பாத்திரங்கள் முருகாயி.
கடன் கொடுக்கும் வண்டி நாயக்கர் என்ற நண்பர், சிறிது நேரமே வந்தாலும் மிரட்டும் நாயக்கர் வைப்பாட்டி, அந்த ஊர் பூசாரி மற்ற மக்கள் என்று ஒவ்வொருவரும் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறார்கள்.
ஒரு நாவலில் வர்ணனைகள் மிக முக்கியம். ஆசிரியர் சுற்று சூழ்நிலைகளையும், ஒரு கதாப்பாத்திரம் எப்படி நடந்து கொள்வார்.
எப்படிப் பேசுவார், அவரது உடல் மொழிகள் விவரிக்கும் போது தான் அந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்ற முடியும், நம் மனதிலும் அக்கதாப்பாத்திரம் நிற்கும்.
இதில் வைரமுத்து பட்டையக் கிளப்பி இருக்கிறார். பேயத்தேவருக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடலாம், அந்த அளவிற்கு நம் மனதில் அழுத்தமாக நிறுத்தி விட்டார்.
மகனை, மனைவியை, முருகாயி, நாயக்கர் பற்றி விவரிப்பது என்று கலக்கி இருக்கிறார்.
கொஞ்ச நேரமே வரும் வண்டி நாயக்கர் வைப்பாட்டி பற்றிய உடல் மொழி, வர்ணனை என்று அசத்தலாக உள்ளது. மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்.
பல காலம் கழித்துக் கூறினாலும் இவர்களை நினைவு கூற முடியும்.
சில வர்ணனைகளில் வைரமுத்துவின் “திணிப்பும்” காணப்படுகிறது, தவிர்த்து இருக்கலாம்.
ஒருவர் நம்மிடையே பேசும் போது கொடுக்கும் பீடிகைகளை வைத்து “ஆஹா! நமக்கு எதோ வெடி வைக்கப் போறாங்க போல” என்று உணர்ந்து பதட்டமாகி இருப்போம்.
அது போலச் சூழ்நிலைகள் இதில் வருகிறது. பேயத்தேவர் பெண் செல்லத்தாயி பேசும் போதும், நாயக்கர் வைப்பாட்டி பேசும் போதும் இதை நாம் உணர முடியும்.
வறண்ட நிலமான பேயத்தவரின் ஒரு பங்கும் கை விட்டுப் போக, விவசாயம் செய்ய முடியாத நிலம் தான் மீதி இருக்கும்.
வேறு வழி இல்லாமல் இதில் பேரன் மொக்கராசு உதவியுடன் கிணறை வெட்டத் துவங்கும் காட்சிகள் படிக்கும் நமக்கும் ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.
இவர் பெயரில் மட்டும் பேயத் தேவரா இல்ல ஆளே “பேயா” என்று திகைக்கும் அளவிற்கு மிரட்டி இருப்பார்.
மறுமாத்தம்
சாதாரண உணவைக் கூடச் சொல்கிற விதத்தில் கூறினால், அதன் சுவையே அலாதி தான் 🙂 .
பேரன் மொக்கராசுடன் உழவோட்டி முடித்துக் களைப்படைந்து பசியோடு சாப்பிட வரும் பேயத்தேவர், அங்கு அவர் எதிர்பார்த்த “மறுமாத்தம்” இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்து நினைப்பது தான் பின்வருவது.
இதில் வைரமுத்து அப்படியே நாம் நேரில் பார்ப்பது போலக் கூறுகிறார்.
“கானப்பயிறு மணக்க வறுத்து – அம்மியில வச்சு வலப்பக்கம் தட்டி இடப்பக்கம் தட்டி – லேசாத் தண்ணி தெளிச்சு – ஒரே பதத்துக்கு ஒண்ணா நசுக்கி – ரெண்டு காஞ்ச மொளகா – இத்துனூண்டு புளி – ஒரு பல்லோ ரெண்டு பல்லோ பூண்டு எல்லாஞ்சேத்து இழுத்தரைச்சு –
வண்டிமைப் பதத்துக்கு வந்தப்புறம் குழவிய அம்மியவிட்டு இறக்காம அதுலயே நிறுத்தி ஒரு பக்கமா ஓரஞ்சாச்சு இடக்கையால் குழவிசுத்தி வலக்கையால் வழிச்செடுத்து வட்டியில போட்டான்னா… அந்த வாசனையே கூப்பிடுமப்பா கூழ…“
பேயத்தேவர் முருகாயி காதலை விவரிக்கும் காட்சிகளில், தன் மாட்டைச் சிலர் ஓட்டிக்கொண்டு சென்று விட அதை விவரிக்கும் காட்சிகளில், சின்னான் ஆட்டை ஆட்டையைப் போடும் காட்சிகளில் என்று ஒவ்வொன்றும் அசத்தலான வர்ணனை.
குறிப்பாக மாட்டை அடித்த பிறகு தான் செய்த தவறு உரைக்க, பேயத்தேவர் வருத்தப்படுவதைப் படிக்கும் போது நம்மையும் அறியாமல் கலங்கி விடுவோம்.
அணையால் அழியும் கிராமங்கள்
இந்நாவல் பேயத்தேவரின் வாழ்க்கைப் போராட்டங்களை விவரித்தாலும் இறுதியில் கள்ளிக்காடு என்ற கிராமத்துடன் மற்ற கிராமங்களும் புதிய அணை கட்டப்படுவதால் அழிவது, அதனால் பாதிப்புள்ளாக்கும் மக்களின் நிலை தான் மையக் கருத்து.
நமக்கெல்லாம் அணை கிடைத்து அதன் மூலம் கிடைக்கும் நீரை, குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்திப் பயன் பெறுகிறோம்.
ஆனால், இந்த நன்மைக்குப் பின்னே பல கிராம மக்கள் குடும்பம் குடும்பமாகப் பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்த சோகம் இருக்கிறது.
நீங்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களிடம் “இந்த இடத்தை அரசாங்கம் எடுக்கப்போகிறது, கொடுக்குற நட்ட ஈடை வாங்கிட்டு கிளம்புங்க!” என்று கூறினால் உங்களுக்கு எப்படி இருக்கும்?!
இது தான் கள்ளிக்காட்டில் நடக்கும்.
இதைப் பேயத்தேவரை வைத்துக் கடைசி இரண்டு அத்தியாயம் மிரட்டி இருக்கிறார் பாருங்கள்.. அசத்தல்!
கடைசி அத்தியாத்தை அனைவரும் முழுதாகப் படித்து இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
என்ன நடக்குமோ! என்ற பதட்டத்தில் வரிகளைத் தாண்டிப் படித்துச் செல்வோம்.
சுழித்துப் பேரலையாக ஓடி வரும் நீரை விட வைரமுத்து அவர்கள் எழுத்து வேகமாக இருக்கிறது. நீரை விட வேகமாக நாம் படித்துச் செல்கிறோம்.
போட்டி போட்டு அனைத்தையும் மூழ்கடித்து வரும் நீரைப் போல நாமும் தாண்டித் தாண்டிப் படித்துச் செல்வோம்.
“பேயத்தேவரே! முன்னோர்கள் பொருட்களை எடுத்தது போதும்.. ஓடுங்க.. தண்ணீர் வருகிறது!” என்று நாம் மனதினுள் கெஞ்சுகிறோம்.
அந்த வறண்ட நிலத்துச் செம்மண்ணைத் தண்ணீர் மேலும் சென்னிறமாக்கி, செடி மரங்கள் வீடுகள் அனைத்தையும் புரட்டி எடுத்து வேகமாக அலையடித்து ஓடி வரும் போது, நாமே மேடான பகுதிக்குச் சென்று நின்று விடுவோம் போல!
வரிக்குவரி பதட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.
“இதிகாசம்” என்றால் நிச்சயம் நடந்தது என்று பொருள் என்று கூறுகிறார்.
இந்நாவலில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள் அனைத்தும் (பெயரைத் தவிர) உண்மை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நாவலுக்காகப் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டி இருக்கிறார்.
சாகித்திய அகாடமி விருது
“சாகித்திய அகாடமி விருது” கிடைத்து இருக்கிறது ஆனால், விருது வைரமுத்து என்ற பெயருக்குத் தான் கிடைத்து இருக்க வேண்டும், நாவலுக்கல்ல.
இணையத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலைப் பலர் கிழித்துத் தொங்க விட்டு இருக்கிறார்கள். வைரமுத்து மீது பலர் கடுப்பில் இருக்கிறார்கள் போல 🙂 .
பேயத்தேவரின் சிரமத்தையே நாவலின் பெரும்பான்மையான பக்கங்கள் ஆக்கிரமித்து இருப்பதால், சிலருக்குச் சலிப்பைத் தரலாம்.
கள்ளிக்காட்டு இதிகாசம் சோகமாக இருந்தாலும் நான் ரசித்துப் படித்தேன். இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது.
படிக்கக் கொடுத்த நண்பன் பாபுக்கு நன்றி.
Read : கருவாச்சி காவியம் | மனத்திரையில் ஒரு கிராமம்
அமேசானில் கள்ளிக்காட்டு இதிகாசம் வாங்க –> Link
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அருமை நண்பரே மிக அழகான முறையில் விமர்சித்துள்ளீர்கள் நூலை வாங்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது வாழ்த்துகள்.
நேரமிருப்பின் எமது குடிலுக்கு(ம்) வருகை தரவும் நன்றி.
– கில்லர்ஜி
கிரி, ஆயிரமாயிரம் விமர்சங்களை தாண்டி நான் மிகவும் நேசிக்கும் இரண்டு பிரம்மாக்கள் இளையராஜா சார் & வைரமுத்து சார்.. கள்ளிக்காட்டு இதிகாசம் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன்.. ஆனால் அன்று இருந்த மனநிலையில் என்னால் முழுமையாக ரசிக்க முடியவில்லை..
படிப்பதை விட, படிக்க ஆர்வத்தை தூண்டுபவர்களை நான் அதிகம் விரும்புவேன்…உங்கள் நண்பன் பாபுவுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…
நேரம் இருப்பின் வைரமுத்து அவர்களின் பல அறிவியல் கூறுகளை கொண்ட தண்ணீர் தேசம் தொகுப்பை படிக்கவும்… கண்டிப்பாக விரும்புவீர்கள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
தூப்புகாரி புத்தகம் படிங்க கிரி சார் மிக அருமையாக இருக்கும் .. தண்ணீர் தேசம் நாவலும் மிக அருமையான ஒன்று .
தல,
பெருசா எனக்கு இந்த புத்தகத்து பேர்ல ஆர்வம் இல்லை
இருந்தாலும் உங்க எழுத்துக்கு ரசிகன் அதனால இந்த பதிவ படிச்சேன் …நல்லா ரசிச்சு எழுதி இருக்கீங்க…..
வேற என்ன books நீங்க படிக்குறீங்க? in queue ல என்ன books இருக்கு? எதுக்கு கேக்குறேன் நா அதுல ஏதாவது internet ல இருந்தா படிப்பேன்…
– அருண் கோவிந்தன்
இன்னும் இந்த புக்க படிக்கல ஆனா பலர் அதிகம் கேட்டதால் எனுடைய blog ல அப் பண்ணிருக்கன்
கண்டிப்பா உங்க பதிவு படிக்க தூண்டுகிறது ஒரு சின்ன விணா தண்ணீர் தேசம் படிச்சு இருக்கீங்களா இவர் பதிவு தான் நான் படித்த நாவல்லையே என்ன ரொம்ப ஒன்ற வச்ச பதிவு முடிஞ்சா அத படிச்சுட்டு அத பாத்தியும் பதிவிடவும் நன்றி கிரி
கிரி தண்ணீர் தேசம் கவிதை தொகுப்பு போலதான் இருக்கும் ஆனா அது ஒரு அழகிய காதல் கதை அதோடு சேர்ந்து ஒரு நடு கடலில் நடக்கும் பல உயிர்களின் போராட்டம் அருமையாக இருக்கும் தைரியமா படிங்க
அனைவரின் வருகைக்கும் நன்றி
@யாசின் ரங்கநாதன் ராஜகோபால்
நான் தண்ணீர் தேசம் படித்தது இல்லை.. இதை நீங்கள் அனைவரும் கூறிய பிறகு ராஜகோபால் கொடுத்த சுட்டியில் சென்று பார்த்தேன் ஆனால், இது கவிதைத் தொகுப்பு போல உள்ளது.
எனக்கு கவிதை பிடிக்காது.. படிக்க பொறுமையில்லை.
தூப்புக்காரி படிக்க முயற்சிக்கிறேன்.
@அருண் அர்த்தமுள்ள இந்து மதம், கருவாச்சி காவியம், மணிரத்னம் மற்றும் இரு புத்தங்கள் நண்பனிடம் உள்ளது. பெயர் மறந்து விட்டேன்.
கிரி கொஞ்சம் நீண்ட பின்னூட்டம். பொறுத்தருள்க.
கள்ளிக்காட்டு இதிகாசம் – நான் கல்லூரி படித்த காலத்தில் விகடன் பொன்விழா ஆண்டை ஒட்டி ஆனந்த விகடனில் தொடராக வந்தது, விகடனை வாங்கியதும் “பாபா பக்கத்தை” படிப்பேனே ஒழிய “கள்ளிக்காட்டு இதிகாசத்தை” சீண்டிக்கூட பார்த்ததில்லை.
பின்னர் அதே விகடனில் வைரமுத்து தொடராக எழுதிய “கருவாச்சி காவியத்தை” படித்த தாக்கத்தில் “கள்ளிக்காட்டு இதிகாசம்” புத்தகத்தை வாங்கி ஓரிரு வருடங்கள் கழித்து அலுவலகம் செல்லும் நீண்ட பேருந்து பயனத்தில் படிக்கத் துவங்கினேன்.
படிக்க படிக்க அது திரைப்படம் போலவே என் மனதுக்குள் விரிந்து கொண்டே வந்தது. பேயத்தேவர் கதாப்பாத்திரத்தில் “விஜயகுமார்-ராஜ்கிரன்” போன்றோரை பொருத்திக் கொண்டே படித்தேன். “பேயத்தேவர்-முருகாயி” ப்ளாஷ்பேக் காட்சி வந்ததும் மேற்கூறிய அனைத்து நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு நடிகர் வந்து அமர்ந்து கொண்டார். இன்றும் இதை திரைப்படமாக எடுத்தால் அந்த நடிகர்தான் பொருத்தமாக இருப்பார்.
அணையின் மதகுகள் அடைக்கப்பட்டவுடன் வைரமுத்துவின் எழுத்து படிக்கும் என்னையே நீர் சூழ்ந்தது போலவே உணர வைத்தது. கடைசி இரண்டு அத்தியாயம் இருக்கும் போது என் அலுவலகம் இருக்கும் பஸ் ஸ்டாப் வந்து விட்டது. பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து இரண்டு அத்தியாயங்களையும் படித்து முடித்துவிட்டு , அரைமணி நேரம் அலுவலகத்துக்கு காலதாமதமாக சென்றதுடன், அன்று சரியாக வேலையே செய்ய முடியவில்லை.
நான் தென்மாவட்டத்துக்காரன் என்பதால் வைரமுத்துவின் மொழி பிடித்திருந்தது ஆனால் மொழிநடை பிடிக்கவில்லை. வைரமுத்து மைக்கை பிடித்து கதாகலேட்சபம் செய்வது போல இருக்கும் மொழிநடையில் கதைக்குள் செல்ல சிரமமாயிருந்தது.
கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து எழுதிய நாவல்களில் பெஸ்ட் ஆனால் ஓவர் சோகம், கிணறு வெட்டத்துவங்கும் போதே அங்கு ஒரு சாவும் சோகமும் உறுதி என யூகிக்க முடிகிறது. கருவாச்சி காவியம் இதை விட சோகம் கருவாச்சி காவியத்தில் ஒரு பிரசவ அத்தியாயம் எழுதியிருப்பார் படிக்க படிக்க ஆம்பள எனக்கே பிரசவவலி வந்துச்சுன்னா பாத்துக்கங்களேன் :), இந்த ஒரு அத்தியாயம் இந்த நாவலில் உருப்படியானது.
பாரதிராஜா-ஆர்.கே.செல்வமணி போன்ற தயாரிப்பாளர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சேனல் ஆரம்பித்தபோது, இந்த நாவலை இயக்கி நடிக்க பாரதிராஜா ஆசைப்பட்டாராம், வைரமுத்து ரைட்ஸ் தராததால் இருவரும் சில வருடங்கள் பேச்சுவார்த்தையின்றி இருந்தனர்.
சரி; இந்த நாவலுக்கு பொருத்தமான நடிகர் யாரென்ற விஷயத்து வருகிறேன். அவர் வேறு யாருமல்ல சாட்சாத் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” அவர்கள்தான். வைரமுத்து கூட குமுத்தத்தில் வாசகர்கள் கேள்வி-பதிலில் [இப்போ இது “பாற்கடல்” புத்தகம்] பேயத்தேவர் கதாப்பாத்திரத்துக்கு ரஜினிகாந்த் பொருத்தமாக இருப்பார் அவர் தயங்கினால் ராஜ்கிரண் சாரியாக இருப்பார் என்று கூறியிருந்தார். முருகாயி ப்ளாஷ்பேக்கில் பேயத்தேவர் கலப்பையை தூக்கிக்கிட்டு நடக்கும் போது “முரட்டுக்காளை ரஜினிகாந்த்” நடப்பது போலவே இருந்துச்சு. தென்மாவட்டத்துக்கு பொருத்தமான கருத்த தேகம், சொட்டை போன்றவை வயதான தோற்றத்துக்கு சரியாக இருக்கும்.
இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். 1997 என ஞாபகம் , நடிகர் வினுச்சக்ரவ்ர்த்தி சன் டி.விக்கு அளித்த பேட்டியில், தனது ஒவ்வொரு திருமணநாளின் போதும் ஒரு கதை எழுத ஆரம்பித்து ஒரு வருடத்துக்குள் அதை எழுதி முடிப்பேன் என்றும் அப்படி ரஜினிக்காக ஒரு கதை எழுதியிருப்பாதாக கூறினார். வைகை அணை கட்டுவதன் பின்னனியில் அந்த மக்களைப் பற்றிய கதை என்றும், 1996 தேர்தலின் போது சிறிது முளைத்த முடியுடன் மொட்டைத் தலையாக அமெரிக்காவில் இருந்து வந்திறங்கிய ரஜினியைப் பார்த்தபோது ரஜினிதான் இந்த கதைக்கு சரியாக இருப்பார் என்றும் கூறினார்.
வைரமுத்து விகடனில் இந்த கதையை எழுதியது 2002-இல். வைரமுத்துவும் வினுவும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கள்ளர் ஜாதி , இருவருமே அந்த வலியை அனுபவிச்சவங்க அதன் தாக்கத்தில் இருவரும் ஒரே மாதிரி சிந்திச்சிருக்காலாம்.
கடைசியாக; மேற்கு மதுரை மாவட்டத்தில் [இன்றைய தேனி மாவட்டம்] வேலை வெட்டியின்றி களவுத்தொழிலில் இருந்த கள்ளர் ஜாதி மக்களை மீட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க காமராஜர் வைகை அணையை கட்டியதாக ஒரு சாரர் கூறுவதுண்டு. காங்கிரஸை தோற்கடித்து முத்துராமலிங்கத்தேவரின் பார்வர்ட் ப்ளாக் கட்சியை வெற்றி பெறச்செய்த மக்களை பழிவாங்க அவர்களது ஊர்களை உடமைகளை எல்லாம் அணைகட்டி காமராஜர் மூழ்கடித்தார் என்றும் ஒரு சாரர் கூறுவதுண்டு.
@காத்தவராயன் பெரிய பின்னூட்டமாக இருந்தால் சந்தோசம் தான் படுவேன் 🙂
விஜயகுமார் ராஜ்கிரண் நல்ல பொருத்தமான கதாப்பாத்திரங்கள்.. நீங்கள் சொன்னது போல பேயத் தேவர் முருகாயி என்று வரும் போது தலைவர் இருந்தால் நன்றாக இருக்கும்..
ஆனால், படம் பப்படம் ஆகிடும் 🙂 .
வைரமுத்து ஏன் உரிமை தராமல் போனார்? இவர் கதை படமானால் இவருக்குத் தானே பெருமை!
வைரமுத்து கள்ளர் சாதியா..! நான் தேவர் என்று நினைத்தேன்.
ம்ம்ம் காமராஜர் இது போல பழிவாங்கி இருப்பார் என்று தோன்றவில்லை ஆனால், இதை மனதில் நிறுத்திக்கொண்டேன்.
//வைரமுத்து கள்ளர் சாதியா..! நான் தேவர் என்று நினைத்தேன்.//
சரியாக சொல்லவேண்டும் என்றால் வைரமுத்து – பிரன்மலை கள்ளர்.
சிறு விளக்கம்:
1930-களில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக “கள்ளர்-மறவர்-அகமுடையார்” ஆகிய ஜாதிகளை ஒன்றினைத்து முக்குலத்தோர்[தேவர்] என்று ஆக்கியதில் முக்கியபங்கு முத்துராமலிங்கத்தேவருக்கு உண்டு. தேவர் என்று கூறிக்கொண்டாலும் இன்றும் இவர்களுக்குள் பெண் கொடுப்பது பெண் எடுப்பது கிடையாது.
இவ்வாறான ஜாதிய ஒருங்கினைப்புக்கு காரணம் வாக்கு வங்கி அரசியல் – எங்க ஜாதி பெரிது என்று காட்ட……
கள்ளர்களிலும் இரண்டு பிரிவு உண்டு.
ஒன்று “பிரன்மலை கள்ளர்கள்”-தென் மாவட்டத்தில் களவு/காவல் தொழில் செய்து வந்தவர்கள் இவர்களை அடிப்படையாக வைத்துதான் காவல்கோட்டம் நாவல் எழுதப்பட்டு பின்னர் “அரவான்” என்று திரைப்படமாக வந்தது.
மற்றொன்று “தஞ்சாவூர் கள்ளர்கள்” இந்த மக்களை மையம் கொண்டு வந்த முதல் தமிழ்படம் “களவாணி”.இவர்களின் வாழ்க்கை முறை “பிரன்மலைகள்ளர்-மறவர்-அகமுடையார்” ஆகியோரில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இவர்கள் முக்குலத்தோர் என்று கூறிக்கொள்வதை அன்றும் இன்றும் விரும்பியதில்லை. காரணம் சமூக அந்தஸ்துபடி இவர்கள் BC என்றால் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் MBC . அரசியல்வாதிகள் கணக்கு காட்ட முக்குலத்தோர் என்ற லேபிள் ஒட்டபட்டவர்கள் இவர்கள்.
இத்தகைய ஜாதிய ஒருங்கினைப்பு இவர்களில் மட்டுமல்ல பிற ஜாதிகளிலும் நடந்தது.
படையாச்சி-வன்னியர் ஆனார்கள்
கைக்கோளர்-முதலியார் ஆனார்கள்
சாணார், கிராமணி – நாடார் ஆனார்கள்
பல வெள்ளாரர்கள் – பிள்ளை ஆனார்கள்
விரிவான தகவலுக்கு நன்றி 🙂 . முக்குலத்தோர் என்று படித்து இருக்கிறேன் ஆனால், விளக்கமாகத் தெரியாது.
நன்றி காத்தவராயன்.