சச்சின் | மகிழ்ச்சியாக வழியனுப்புங்கள்

8
சச்சின்

கிரிக்கெட் சாதனைகளைப் பற்றி பேசும் போது சச்சின் சாதனைகளைப் பேசாமல் முடிக்க முடியாது என்கிற அளவிற்கு அவருடைய பங்களிப்பு, சாதனைகள் கிரிக்கெட்டில் அதிகம். Image Credit

சச்சின்

16 வயதில் கிரிக்கெட்டில் அதிரடியாக அறிமுகமாகி 24 வருடங்கள் கிரிக்கெட்டில் பங்களிப்பை தருவது என்பது சாதாரண விசயமல்ல.

சச்சினுக்காகவே கிரிக்கெட் பார்த்தவர்கள் எத்தனை? சச்சின் ஆட்டமிழந்தால் அதோடு தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றவர்கள் எத்தனை? Image Credit BBC

எத்தனை மறக்க முடியாத போட்டிகள்! நினைத்து நினைத்துப் பூரிக்கும் நினைவுகள்.

2003 உலகக் கோப்பை பாக் உடனான போட்டியில் சச்சின் அடித்து நொறுக்கிய ஆட்டத்தில் அதோடு ஓய்வு பெற்ற திறமையான ஆட்டக்காரர்கள் எத்தனை?

அக்தர் இவரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறியதை இன்று பார்த்தாலும் அதே சந்தோசத்தோடு ரசிக்கலாமே! ஐந்து ஓவரில் 50 ஓட்டங்கள்.

இந்திய பாக் ரசிகர்களின் இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறிய நேரங்கள்.

இவன் எப்படி போட்டாலும் அடிக்கறாண்டா! என்ற “சென்னை 600028” வசனம் சச்சினுக்கு அம்சமாக பொருந்தும்.

அடக்கம்

சச்சினின் மிகப்பெரிய பலம் என்றால் அது அவருடைய அமைதி / அடக்கம் என்று நிச்சயம் கூறலாம்.

ஒருவர் எவ்வளவு தான் திறமையானவராக இருந்தாலும் அடக்கம் என்ற ஒன்றில்லை என்றால் மக்களின் மனதில் வீற்று இருக்க முடியாது.

சச்சின் போலத் திறமையான வீரர்கள் பலர் உலகளவில் இருந்தும் அனைவருக்கும் பிடித்தவர்களாக அவர்களால் இருக்க முடியவில்லை காரணம் தன்னடக்கம் இல்லாதது.

திறமை இருப்பவன் தெனாவெட்டாத்தான் இருப்பான் என்று கூறுவார்கள் ஆனால், இது போன்ற வசனங்கள் சச்சினுக்கு பொருந்தாது.

கணக்கிலடங்கா சாதனைகள் செய்து இருந்தும் அவரிடம் தலைக்கனம் என்பது கொஞ்சம் கூட இல்லை, அவரது இறுதிப் போட்டி வரை.

எத்தனையோ பந்து வீச்சாளர்கள் சச்சினை கிண்டலடித்து பேசி இருக்கிறார்கள் ஆனால், அவர் எதற்குமே பதில் கூறியதில்லை.

போட்டிகளில் பேசிய பந்து வீச்சாளர்களின் பந்து மைதானத்தை விட்டு பறக்கும் போது தான் புரியும்.

பறப்பது பந்து மட்டுமல்ல இவரைக் கிண்டலடித்த பந்து வீச்சாளர்களின் மானமும் தான் என்பது.

சச்சின் தந்தை

1999 உலகக்கோப்பை போட்டிகள் நடந்து கொண்டு இருந்த போது சச்சின் தந்தை இறந்ததால், காரியத்திற்கு சென்று விட்டு வந்து கென்யாவுடனான அடுத்த போட்டியில் சதம் அடித்து அதை தன் தந்தைக்கும் நாட்டுக்கும் அர்பணித்ததை கிரிக்கெட் ரசிகர் எவரும் மறக்க முடியுமா?

அதை இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.

உலகில் உள்ள அனைத்து மட்டையாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த வார்னே, சச்சினிடம் மாட்டி தலையை சொறிந்து கொண்டு நின்ற ஆட்டங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

சச்சினுக்கு எப்படி பந்து போடுவது என்றே தெரியாமல் வார்னே விழித்த நாட்கள் எல்லாம் இந்திய ரசிகர்களின் பொற்காலங்கள்.

இந்தியா பாக் போட்டிகள் என்றாலே இரு பக்கமும் பரபரப்புக்கும் சண்டைக்கும் பஞ்சமில்லை.

இந்திய அணியிலும் பாக் அணியிலும் வார்த்தை சலசலப்புகள் / முறைப்பு என்று ரணகளமாகவே இருக்கும் ஆனால், சச்சின் பாக் அணியினரிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதே இல்லை.

இது போன்ற அவரின் செயல்களே உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே அவருக்கு நன் மதிப்பை பெற்று தந்தது.

அனைத்து நாடுகளிலும் ஒரு வீரருக்கு ரசிகர்கள் நிறைந்து இருப்பார்கள் என்றால், அதில் நிச்சயம் சச்சினுக்கு முதல் இடம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

ஸ்கோர் என்னப்பா!

இந்தியாவும் கிரிக்கெட்டும் இணை பிரியாத தோழர்கள்.

யார் எப்படி திட்டினாலும், எல்லோரும் ஏன் இப்படி கிரிக்கெட் பின்னாடி பைத்தியமாக அலையறீங்க..! என்று பேசினாலும் திட்டியவர்களே…

ஒரு பரபரப்பான போட்டியில் “அப்புறம்! ஸ்கோர் என்னப்பா! இந்தியா ஜெயித்துடுமா?” என்று கேட்பதே கிரிக்கெட்டையும் இந்தியாவையும் பிரிக்க முடியாது என்பதற்கு சாட்சி.

ஒரு சிலர் வெளிப்படையாக கேட்க கூச்சப்பட்டு விறைப்பாக இருந்தாலும், உள் மனதில் இந்தியா ஜெயித்து விடுமா என்ற எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கும்.

இந்தியாவிற்கு ஒரே மதம் கிரிக்கெட், அதன் கடவுள் சச்சின் என்று கூறுவதை கேள்விப்படாத ரசிகர் இருக்க முடியாது.

சச்சின் தன்னுடைய போட்டிகளின் இறுதிக் காலங்களில் ஓய்வு பெற வேண்டும் என்ற சர்ச்சைகளை சந்தித்தாலும், ஒருநாள் போட்டி, Twenty20, IPL போட்டி என்று ஓய்வை சரியான நேரத்தில் அறிவித்து வந்தே இருக்கிறார்.

தற்போது டெஸ்ட் உடன் ஓய்வு என்பது கிரிக்கெட்டிற்கு முற்றிலும் ஓய்வாக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான ஒன்று தான்.

சச்சின் தனது சமீபத்திய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பது மட்டுமே குறை.

ச்சின் இன்னும் முன்னதாகவே அதாவது அவர் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டு இருந்த போதே ஓய்வு பெற்று இருக்க வேண்டும்.

சமீப போட்டிகளில் சச்சினை ஆட்டமிழக்க செய்வது என்பது பெரிய விசயமில்லை என்பது போல பந்து வீச்சாளர்களுக்கு ஆகி விட்டது.

சச்சின் விக்கெட்

முன்பெல்லாம் சச்சின் விக்கெட் எடுப்பது பெரிய சாதனையாக இருக்கும் ஆனால், தற்போது அதன் பரபரப்பு குறைந்து விட்டது.

அவருடைய தீவிர ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள், சச்சின் ஆட்டமிழந்தால் முன்பு போல பெரிய அதிர்ச்சியை காட்டுவதில்லை.

முன்பெல்லாம் சச்சின் ஆட்டமிழந்தால் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதற்கு தற்போது அதிக இளம் வீரர்களின் வருகையும், அதிரடி ஆட்டங்களும் ஒரு முக்கியக் காரணம்.

சச்சின் ஓய்வை அறிவித்தவுடன் பலர் இனி கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விடுவேன் என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறுகிறார்கள் [அவர்களால் பார்க்காமல் இருக்க முடியாது, அது வேறு விஷயம்].

நிறைவான விடை பெறுதலே

சச்சின் ஒன்றும் அரைகுறையாக முடித்துச் செல்லவில்லை.

பல சாதனைகளைச் செய்து, இனி எவரும் இந்தச் சாதனைகளை முறியடிக்க முடியுமா? என்ற சந்தேகத்தை விதைத்து விட்டுச் செல்லும் அளவிற்கு சாதனை புரிந்து இருக்கிறார்.

எனவே கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெறுவது என்பது அவருக்கு மனதளவில் வருத்தத்ததை தந்து இருந்தாலும் திருப்தியான விடை பெறுதலாகத் தான் இது இருக்க முடியும்.

கோடிக்கணக்கான ரசிகர்கள், எண்ணற்ற சாதனைகள், உலகக் கோப்பை வெற்றி, ஓய்வை கடைசி நேரத்தில் அறிவிக்காமல், ரசிகர்கள் அவரது கடைசிப் போட்டிகளைக் கொண்டாட வாய்ப்பும் தந்து என்று ஒரு நிறைவான விடை பெறுதலே!

இது போல ஓய்வு பெறும் வாய்ப்பு எத்தனை வீரர்களுக்கு கிடைக்கும்! இனி கற்பனையில் மட்டுமே சாத்தியம்.

எனவே சச்சின் ஓய்வு பெற்று போகிறார் என்று அவருக்கு கண்ணீருடன் விடை கொடுக்காமல் அவரை மகிழ்ச்சியாக வாழ்த்தி வழியனுப்பி வைப்பதே அவருக்கு ரசிகர்கள் செய்யும் கைமாறு.

வாழ்த்துக்கள் சச்சின்.

கொசுறு

நம்ம ஆளுங்க சும்மா இல்லாம ஏற்றி விடுவதிலேயே குறியா இருப்பாங்க. உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணக்களமாக்கிடுறாங்க.

கவாஸ்கர், சச்சின் கடைசிப் போட்டியில் 300 ரன் அடிப்பாருங்கறாரு…! இன்னொருவர் [மைதான பராமரிப்பாளர் என்று நினைக்கிறேன்] 400 ரன் அடிப்பாருன்னு சொல்றாரு…!!

கடைசில சச்சின் 30 ரன் கூட முதல் போட்டியில் அடிக்க முடியாம போச்சு. போட்டியும் சொதப்பலாக 3 நாட்களில் முடிந்து விட்டது.

இரண்டாவதும், சச்சினுக்கு கடைசிப் போட்டியும் மேற்கிந்திய தீவு அணிக்கு டன்டனக்கான்னு போயிட்டு இருக்கு 🙂 .

சச்சின் ஏதாவது நல்ல அணியுடன் கடைசிப் போட்டி விளையாடி இருக்கக் கூடாதா!! சவ சவன்னு இருக்கு. Image Credit Cricinfo.com

மேற்கிந்திய தீவு வீரர் Darren Sammy சொல்லி இருந்தாரு.. “நாங்க பல திட்டம் வைத்து இருக்கிறோம்.. இந்திய அணி அதிரடியா ஆடிப் பழகி இருக்காங்க.

நாங்க அவர்களை எளிதா வீழ்த்தத் திட்டம் வைத்து இருக்கோம். சச்சின் எங்க கூட கடைசியா விளையாடுவது மகிழ்ச்சி.

சச்சின் மிகப்பெரிய அவர்ர்ர்ர்ர் இவர்ர்ர்ர்ர் என்று புகழ்ந்து விட்டு, ஆனா நாங்க சச்சின் பார்ட்டியை காலி பண்ணிடுவோம்னு” சொன்னாரு..

அவர் சொன்ன காலி, இந்தக் காலின்னு தெரியாம போச்சே!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

  1. நான் என்றுமே ராகுல் டிராவிட்ன் ரசிகன்.. சிறப்பான பல போட்டிகள் சச்சின் விளையாடி இருந்தாலும் எனக்கு என்றும் மறக்க முடியாத போட்டி 1998 ல் ஆஸ்திரேலியா உடன் அவர் ஷர்ஜாஹ்வில் விளையாடிய போட்டி தான். கடைசி இரண்டு போட்டிகளிலும் சச்சின் சதமடித்து என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவம். சென்றவாரம் தென் ஆப்பிரிக்கா VS பாகிஸ்தான் போட்டியினை இந்த மைதானத்தில் காண சென்ற போது கூட அந்த நினைவுகள் மீண்டும் வந்தது…. 24 ஆண்டுகள் என்பது சாதாரணமான ஒன்று இல்லை… சச்சின் ஒரு பொக்கிஷம்… அதுவும் இந்தியாவுக்கு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்று…பகிர்வுக்கு நன்றி கிரி…

  2. சச்சின் ரஜினி எனக்கு என்னிக்குமே ஸ்பெஷல் தான் தல
    அழுதுட்டேன் farewell ஸ்பீச் ல
    I Miss Sachin
    என்ன எக்ஸாம் இருந்தாலும் சின்ன வயசுல சச்சின் விளையாடி முடிச்சதும் தான் படிக்கவே செய்வேன்
    பதிவு நல்லா இருக்கு தல

    – அருண்

  3. அருண் / கிரி.. சச்சின் ஸ்பீச் மிகவும் அருமையாகவும் / உணர்ச்சிகரமாகவும் இருந்தது. பேச்சினை கேட்க,கேட்க நாவில் ஈரம் வற்றி விட்டது… கண்ணிலும் நீர் கசிந்தது…

  4. giri,
    everyone in india as indians feels that,sachin is their son,பிரதர்,friend அண்ட் வெரி கிளோஸ் relative .சோ திஸ் much sendoff .he gave much security to each soul in india,when we played with our பங்காளி பாகிஸ்தான்.

  5. சச்சின் இல்லன கிரிக்கெட் இந்தளவுக்கு இந்தியால ரீச் ஆகிருக்காது. இதுதான் அவரோட மிக பெரிய சாதனை.

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @முத்துக்குமார் & கௌரிஷங்கர்

    இந்த வரிசை மாறிக்கொண்டே இருக்கும் அதோடு இது சரியான பட்டியல் அல்ல. என்னை விட சிறப்பாக எழுதுபவர்கள் / அதிக வாசகர்களை கொண்டவர்கள் இதில் இல்லை.

    ஏதாகினும் வாழ்த்திற்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here