கருவாச்சி காவியம் | மனத்திரையில் ஒரு கிராமம்

4
கருவாச்சி காவியம்

வைரமுத்து அவர்களின் எழுத்துத் திறமையில் மிளிரும் புத்தகமே கருவாச்சி காவியம். படிக்கும் போது கிராமத்திலேயே சுற்றிக்கொண்டு இருந்த உணர்வு.

கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புத்தகத்தில் பேயத் தேவர் என்ற நபரை நம்மிடையே நடமாடவிட்டு அசத்தியவர்.

இதில் கருவாச்சி என்ற பெண்ணைக் கொண்டு வந்து அதகளம் செய்து இருக்கிறார்.

வர்ணனையில் கள்ளிக்காட்டு இதிகாசத்தை விட இதில் பட்டையக் கிளப்பி இருக்கிறார்.

கருவாச்சி காவியம் கதை

திருமணமாகி 11 நாட்களிலேயே பழைய பரம்பரைப் பகையை மனதில் வைத்துக் கருவாச்சியை கணவன் கட்டையன் விலக்கி வைக்க, தனி ஒரு ஆளாக எப்படித் தன் வாழ்க்கையைத் தைரியமுடன் எதிர்கொள்கிறாள் என்பதே கதை.

கள்ளிக்காட்டு இதிகாசம் போல இதிலும் சிரமம் சிரமம் என்று புத்தகம் முழுக்க இதுவே இருக்கிறது.

நமக்கே ஒரு கட்டத்தில் பேயத்தேவரை போலக் கருவாச்சிக்கு நல்லது நடக்காதா என்று ஏங்க வைத்து விடுகிறது.

அந்த அளவுக்குச் சுழட்டி அடிக்கிறது பிரச்சனைகள்.

இத்தனை இருந்தும் அதை மறக்கடிப்பது இடையிடையே வரும் வர்ணனைகள் தான். இந்தப் புத்தகம் வர்ணனைகளுக்காகவே படிக்கலாம், கதை இரண்டாவது தான்.

வர்ணனை

ஒரு புத்தகத்திற்கு வலு சேர்க்கும் மிக முக்கியமான விசயம் “வர்ணனை”.

வர்ணனை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் ஒரு புத்தகம் ஒருவர் மனதில் நிற்பதும் மறைவதும்.

சுமாரான கதைகள் கூட வர்ணனை நன்றாக இருந்தால், படிக்கச் சுவாரசியமாக இருக்கும்.

புரியும் படி கூறுவதென்றால், திரைப்படத்தில் கதையே இருக்காது ஆனால், திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டி நம்மை ரசிக்க வைத்து இருப்பார்கள்.

இதுவே புத்தகங்களுக்கும் பொருந்தும்.

வைரமுத்து வர்ணனைகளை இந்தப் புத்தகத்தில் வாரி இறைத்து இருக்கிறார். ஒரு பக்கத்துக்குச் சராசரியாக ஐந்து வர்ணனைகள் இருக்கிறது.

தலையில் பேன் பார்ப்பதைக் கூட ஒருத்தர் இப்படிச் சுவாரசியமாக விவரிக்க முடியுமா!! என்று மிரட்டி இருக்கிறார்.

வெள்ளெருக்கம் பூவு – கத்திரி மஞ்சள் – கருஞ்சீரகம் – கருமொளகு – பச்சக்கர்ப்பூரம் – அஞ்சையும் வச்சு நசநசன்னு நசுக்கி, பூப்போலப் பொடிபண்ணி அத ஒருபடி நல்லெண்ணெய்யில போட்டு மூணு நாள் ஊறவச்சா.

நாலாம்நாள் எடுத்து அடுப்புக்கூட்டிப் புளிய வெறகெரிச்சு ஒருபடி நல்லெண்ணெய அரப்படியாச் சுண்டவச்சா.

சமீன்தார் மூட்டுல மூணு நாள் தடவிவிட்டுக் கரம்ப மண்ணப் போட்டுக் கழுவிவிட்டா பாருங்க.. விடிய்ய, வேட்டைக்குப் போகலாங்கிற அளவுக்குச் சமீந்தார் வலி ஊரவிட்டே ஓடிப்போச்சு என்று வைத்தியச்சியைப் பற்றி விவரிக்கிறார்.

கருவாச்சியின் சக்களத்தியாக வரும் பேயம்மாவை வர்ணிப்பதிலும் கிராமத்து கிளுகிளுப்பாகக் கூறுவதிலும் அசத்துகிறார்.

கண்ணாடி வளவிச்சத்தம் தெருவையே தெரட்டியடிக்க – சும்மா “ணங்கு… ணங்கு… ணங்கு…”ன்னு எறங்குற ஒலக்க ஓரளக்குள்ள புகுந்து கல்வாத்தியம் வாசிக்க –

ஏறி ஏறி எறங்குற அவ மார்பு ரெண்டும் மனுசப் பொழப்பும் இப்படித்தாண்டான்னு தன்னால் தத்துவம் பேச –

வெறும் விரல்கடை அளவு மட்டுமே தெரிஞ்ச அவ இடுப்பு, இப்பக் கையளவு தெரிஞ்சு கண்காட்சி காட்ட ஓங்கி ஓங்கி ஒலக்க போட்டா; சொங்க விட்டுச் சோள அரிசி எட்டிப்பாக்குற மாதிரி வீட்ட விட்டு வந்து வெளிய எட்டிப்பாக்குது ஊரு.

உடல் வலி நீங்க

கருவாச்சியின் அம்மா பெரியமூக்கி உடல் வலி நீங்க அமுக்கி விடுவதைப் படித்தாலே நமக்கு வலி எல்லாம் போய்டும் போல 🙂 .

வெரலப் புடிச்சுப் பெருவிரலால நகத்த ஒரு அழுத்து அழுத்தி, சொன்னா வந்திருன்னு ஒரு சுண்டு சுண்டுவா பாருங்க சடக் சடக்குங்குற சத்தத்தோட ஒடஞ்சு வெளியேறும் சொடக்கு. இந்தக் கட்டை வெரல் நாலு மட்டும் எடக்குப் பண்ணும் சொடக்குப் போட.

கட்டைவெரல் சொடக்குப் போடச் சூத்திரம் இருக்கு. உள்ளங்கையில ஒரு கூடு பண்ணி உள்ளுக்கு இழுத்துக்கிருவா கட்ட வெரல. அதத் தடவித் தன் வசமாக்கிப் படக்குன்னு இழுத்து மடக்குன்னு ஒடிப்பா; கடக்குன்னு சத்தம் கேட்கும்.

எண்ணெய் தேய்த்து விடுவது, சமையல் செய்வது, வேலை செய்வது என்று தாறுமாறாக அள்ளித் தெளித்து இருக்கிறார்.

எப்படிப்பா இத்தனை விசயங்களைக் கூற முடியும்? என்று திகைக்க வைக்கிறார்.

நானெல்லாம் சாப்பாட்டு பிரியனல்ல, நன்றாகச் சமைத்தால் விருப்பமாகச் சாப்பிடுவேன் அவ்வளவு தான்.

இதில் வைரமுத்து விளக்கும் சமையல் முறையைப் படித்தால், சாப்பிட்டே ஆக வேண்டும் போல, அப்படியொரு உணர்வு வருகிறது.

இவற்றையெல்லாம் மற்றவர்களிடம் கேட்டுத் தான் இதில் பயன்படுத்தி இருக்க முடியும்  ஆனால், அதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவது என்பது உண்மையிலே அசாத்தியமானது.

கருவாட்டுக் குழம்புக்கு யாரும் பாக்காத ஒரு பண்டுதம் பாப்பா கருவாச்சி. மூணாங்கொதியில புளிகரைச்சு ஊத்தி நாலாங்கொதியில எறக்குறதுக்கு முன்னால கரண்டியில சுடவச்ச நல்லெண்ணயக் கருவாட்டுக் குழம்புச் சட்டிக்குள்ள எறக்கி –

சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி ஒரு அளாவு அளாவி மினு மினு மினுன்னு எண்ணெ மெதக்க எறக்கி வப்பா பாருங்க… அந்த வாசன அடுத்தத் தெரு வரைக்கும் அடிக்கும்; நாக்குத் செத்த ஆளுக்கும் நமநமங்கும். 

எனக்குக் கருவாடு பிடிக்காது ஆனால், இதைப் படிக்கப் பிடித்து இருந்தது 🙂 .

ஓவியங்கள் ம.செ 

கூலிக்கு மாரடிப்பது

கூலிக்கு மாரடிப்பது என்று கேள்விப் பட்டு இருப்பீர்கள். நானும் கேள்விப் பட்டு இருக்கிறேன் ஆனால், அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது.

இதில் அதைக் காட்சியோட விளக்கும் போது ஆயுசுக்கும் மறக்காது.

அதோடு இதன் காரணமும் மிகச் சோகமானது.

Home Work

இந்தப் புத்தகத்திற்காக நிறைய Home Work செய்து இருக்கிறார். அதற்கு 100 / 100 மதிப்பெண் வாங்கி இருக்கிறார்.

சும்மா சொல்லக்கூடாதுங்க.. பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார். ஒவ்வொரு பக்கத்தின் விவரங்களையும் ரசித்துப் படித்தேன்.

கருவாச்சி யாருடைய உதவியும் இன்றித் தானே குழந்தை பெறும் சூழ்நிலையை விவரித்து இருக்கிறார் பாருங்கள்.. யப்பா… செம்ம.

இவர் கூறுவதைப் படிக்கும் போது நம் மனத்திரையில் அப்படியே படம் போல ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதுவரை படித்ததில் பொன்னியின் செல்வனுக்குப் பிறகு எனக்கு வர்ணனைகள் காட்சிகளாக மனத்திரையில் ஓடியது இந்தப் புத்தகத்திற்குத் தான்.

படிக்கும் போது கிராமத்திலேயே உலவி கொண்டு இருந்தது போலவே இருந்தது.

எதிர்பார்த்த முடிவு

கருவாச்சி காவியத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்டது. சில காட்சிகள் வழக்கமான திரைப்படக் காட்சிகள் போல இருந்ததும் மட்டுமே குறையாகக் கூற முடியும்.

ஒரு சாமியார் கிராமத்திற்கு வந்து கருவாச்சியிடம் பேசித் தகவல்களைப் பகிர்வது சிறப்பாக இருந்தாலும், செயற்கையாகவே தோன்றியது.

கதை இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு நடந்தவையாகக் கூறப்பட்டு இருக்கிறது.

ஆனால், ஒரு கிராமத்துக் கதை என்ற அளவில் தோன்றுகிறதே தவிரச் சுதந்திரம் அடையும் முன்பு இருந்த சூழ்நிலையைப் பற்றிய எந்தச் சம்பவங்களும் வரவில்லை, அவசியமும் இல்லை.

வறட்சி கிராமம்

கிராமம் என்றால் “கருத்தம்மா” படத்தில் “பச்சைக் கிளி பாடும்” பாடல் மாதிரி பசுமையாகக் இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டு படித்தால், மகேஸ்வரி மாதிரி அதிர்ச்சியாக வேண்டியது தான் 🙂 .

வறட்சியோ வறட்சி தான் புத்தகம் முழுக்க.

எதிர்ப்பு 

வைர மோதிரம் செய்யும் அத்தியாயத்தில் கல்யாணம் ஆன புதிதில் இளஞ்சோடி நடந்து கொள்ளும் முறையை வைரமுத்து விவரித்ததற்குச் சம்பந்தப்பட்ட பிரிவினரிடையே எதிர்ப்பு வந்து மன்னிப்புக் கேட்டு இருக்கிறார்.

இதைப் படித்த பிறகே இப்படியெல்லாம் யோசிக்கலாமா! என்று தோன்றியது.

அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு காட்சியாகப் பார்த்தால் ஒன்றுமில்லை ஆனால், பிரச்சனையாக்கனும் என்று நினைத்தால், செய்ய முடியும்.

இரட்டைக் காப்பியம்

கள்ளிக்காட்டு இதிகாசம் / கருவாச்சி காவியம் இரண்டையும், சிலப்பதிகாரம் / மணிமேகலை இரட்டைக் காப்பியங்களுடன் ஒப்பிட்டு நியாயப்படுத்தி இருக்கிறார்.

நாம் என்ன தான் சிறப்பாக எழுதி இருப்பதாகக் கருதி இருந்தாலும், பண்டைய / மூத்தவர்கள் படைப்போடு ஒப்பிடாமல் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் மரியாதை.

நம்மை மற்றவர்கள் தான் புகழுனுமே தவிர, நாமே நம்மைப் பெருமையாகக் கூறிக் கொண்டால் அதற்கு மதிப்பு இருக்காது.

வைரமுத்து இதற்கு என்ன தான் விளக்கம் கூறி இருந்தாலும், மற்றவர்கள் நினைக்கும் எண்ணம் ஒரே மாதிரி தான் இருக்கும். இதைத் தவிர்த்து இருக்கலாம்.

கருவாச்சி காவியம் நாவலில் சில குறைகள் / விமர்சனங்கள் இருந்தாலும் அசத்தலான கிராமத்துப் புத்தகம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தமிழில் கிராமத்துத் திரைப்படங்கள் வருவது குறைந்து விட்டது. எப்போதாவது ஒன்று வருகிறது அதுவும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஆகி விடுகிறது.

கருவாச்சி காவியம் புத்தகம் படித்தால் கிராமத்து வாழ்க்கையை அனுபவித்து வந்த திருப்தி கிடைக்கும் என்பது உறுதி.

புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த நண்பன் பாபுக்கு நன்றி.

அமேசானில் வாங்க –> கருவாச்சி காவியம் –> Link

தொடர்புடைய கட்டுரை – கள்ளிக்காட்டு இதிகாசம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, கருவாச்சி காவியத்தை சில ஆண்டுகளுக்கு முன் படித்து பார்த்து, அதன் வாசனையிலே சுற்றி திரிந்தேன். அந்த நாட்களில் வைரமுத்து அவர்களின் வேறு சில புத்தகங்களையும்,குறிப்புகளையும், கானொளிகளையும் தேடி தேடி படித்தேன் பார்த்து ரசித்தேன். அந்த நாட்கள் மிக அழகானவை… இன்றும் வாசிக்க கூடிய மனநிலை அப்படியே உள்ளது.

    ஆனால் வேலை, ஓய்வின்மை, கிரிக்கெட் இது போல சில காரணங்களால் நிறைய வாசிக்க முடியவில்லை.. பல நேரங்களில் வருத்தமாக இருக்கும்.. சமீபத்தில் இணையத்தில் அகதிகள் குறித்து வாசித்ததை உங்களுடன் பகிர்கிறேன்..
    ========================================================
    நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு…சத்தியமாக வார்த்தைகள்..
    ========================================================
    உலகில் நம் தாய்மொழியை விட ஒரு சிறந்த மொழி இருக்குமா என்று தெரியவில்லை.. (அப்படி இருந்தாலும் அதை கற்க நான் விரும்பவில்லை).. ஒரு சிலவற்றை படிக்கும் போது இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, சுவையாக வேறு எந்த மொழியிலும் சொல்ல முடியுமா என்ற கேள்விதான் என்னுள் எழும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. தல,
    பதிவு நல்லா இருக்கு. புக் லிங்க் கு நன்றி
    இந்த புக் பத்தி கேள்வி பட்டு இருக்கேன் படிச்சது இல்லை

    விமர்சனத்துக்கு நன்றி.. அப்புறம் மனம் நு (nagarujana படம் ) ஒரு தெலுங்கு படம் free டைம் ல பாருங்க
    படம் எனக்கு ரொம்ப புடிச்சது

    – அருண் கோவிந்தன்

  3. கிரி,

    கருவாச்சி காவியத்தை விகடனில் தொடராக வெளிவந்த போதே படித்தேன்.

    கள்ளிக்காட்டு இதிகாசத்தில் கதை என்ற ஒன்றை அணை தொடர்பான பின்புலம் அழுத்தமாக வடிவமைத்து கொடுத்தது,

    ஆனால் கருவாச்சி காவியத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டுமே வடிமைக்கப்பட்டு இருந்தது, அதுவும் கூட பின் அத்தியாயங்களில் திடீரென வேகமெடுத்து சம்மந்தா சம்மந்தாமில்லா கதாப்பாத்திரங்களை இடைச்செருகி ஏதோ போலாகிவிட்டது , திம்சு, சாமியார், பையனுக்கு பைத்தியம் பிடிப்பது இதெல்லாம் சுவாரஸியத்துக்காக சேர்க்கப்பட்டதா இல்லை தொடரை விரைவாக முடிப்பதற்காக அள்ளி தெளிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

    நாவலை தொடராக எழுதுவதால் எழும் பிரச்சனைகள் இது, கதாசிரியனால் முழுமையாக எழுதமுடியாது. பத்திரிக்கைகாரர்கள் கொடுக்கும் காலக்கெடு, தொடர் பெரும் வரவேற்ப்பை பொறுத்தது. ஜெயக்காந்தன் எழுதிய “ஒருவீடு ஒருமனிதன் ஒருஉலகம்” தொடராக பத்திரிக்கையில் வெளிவந்தது, நாவல் தொடருக்கு உரிய சுவாரிஸியத்துடன் ஆரம்பித்து எழுத்தாளரின் போக்கில் மெல்ல [ அதிக விவரனைகளுடன்] நடைபோட்டு சென்ற போது, அந்த பத்திரிக்கையின் ஆசிரியர், “இந்த கதை முடிய இன்னும் எத்தனை வாரம் ஆகும்” என்ற கேட்க………. அடுத்த வாரமே முடியும் என்று கோபத்தில் திடுதிப்பென கதை முடித்திருப்பார். ஆனாலும் கடைசி அத்தியாயம் படு சுவாரஸியமாக இருக்கும். பல கேள்விக்கு நாமே விடையை யோசித்து கொள்ள வேண்டும் 🙂

    கருவாச்சி காவியத்தில் பெரிய சுவாரஸியம் எனக்கு தெரியாததற்கு காரணம் என்னோட கிராம வாழ்க்கையில் அது போல், அல்லது அதை விட சோகம் நிறைந்த பெண்களை பார்த்ததாக கூட இருக்கலாம்.

    ஆனால்;

    பிரசவ அத்தியாயத்தில் எனக்கே பிரவவலி வந்தது போல இருந்தது. அருமையான வர்ணனை.

  4. @யாசின் “நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு”

    வாவ் யாசின். அட்டகாசம் 🙂

    ஒரு நாட்டின் குடியுரிமையையே வாங்கினாலும் எப்போதும் எத்தனை தலைமுறையானாலும் “Indian Origin” என்றே அழைக்கப்படுவார்கள். நம்முடைய இந்திய முகம் மாறினால் ஒழிய இந்த விமர்சனங்கள் ஓயாது. ஜீன் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    இது அனைத்து நாட்டு மக்களுக்கும் பொருந்தும்.

    “உலகில் நம் தாய்மொழியை விட ஒரு சிறந்த மொழி இருக்குமா என்று தெரியவில்லை.. (அப்படி இருந்தாலும் அதை கற்க நான் விரும்பவில்லை).”

    அப்படி சொல்லாதீங்க யாசின்.. கற்றுக் கொள்வது தவறில்லை ஆனால், நம் தாய் மொழிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல் இருந்தால் சரி.

    அதிக மொழிகள் தெரிந்து வைத்து இருப்பது நல்லதே!

    @அருண் நானும் கேள்விப்பட்டேன். வாய்ப்புக் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

    @காத்தவராயன்

    “நாவலை தொடராக எழுதுவதால் எழும் பிரச்சனைகள் இது, கதாசிரியனால் முழுமையாக எழுதமுடியாது. பத்திரிக்கைகாரர்கள் கொடுக்கும் காலக்கெடு, தொடர் பெரும் வரவேற்ப்பை பொறுத்தது”

    ரொம்ப சரி. நெருக்கடி இருந்தாலே இயல்பான எழுத்து வராது.

    “அடுத்த வாரமே முடியும் என்று கோபத்தில் திடுதிப்பென கதை முடித்திருப்பார். ஆனாலும் கடைசி அத்தியாயம் படு சுவாரஸியமாக இருக்கும். ”

    அப்படியா!! கிடைத்தால் படித்து விட்டுக் கூறுகிறேன்.

    கருவாச்சி காவியம் நான் கதைக்காக படித்ததை விட அதன் வர்ணனைகளுக்காக ரசித்துப் படித்தது தான் உண்மை. கதை நாம் ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்தது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here