ரஜினியை விமர்சிக்கும் பாஜக ஆதரவாளர்கள்

3
ரஜினியை விமர்சிக்கும் பாஜக ஆதரவாளர்கள்

தயநிதி பதவியேற்றதுக்கு ரஜினி வாழ்த்தியதுக்கும், கடப்பா தர்கா சென்றதுக்கும் பாஜகவினர் ரஜினியை விமர்சிக்கிறார்கள், திருப்பதி சென்றதுக்குத் திமுகவினர் / திராவிடன் ஸ்டாக்குகள் விமர்சிக்கிறார்கள். Image Credit

திமுகவினர் ஆரம்பகாலத்தில் இருந்தே விமர்சித்து வருகிறார்கள், தற்போது பாஜகவினரும் குறிப்பாகச் சமூகவலைத்தளப் பாஜகவினர் இணைந்துள்ளார்கள்.

ரஜினி

தலைவர் எப்போதுமே தனது மனதுக்குச் சரி என்று படுவதைச் செய்கிறார், மற்றவர்களின் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பது எளிதல்ல.

மற்றவர்கள் பாராட்ட வேண்டும், அனுதாப்பட வேண்டும், புகழ வேண்டும் என்று நினைத்து எதையும் அவர் செய்வதில்லை.

எனக்கும் இவர் செயல்களில் பல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், நமக்குப் பிடித்த மாதிரியே அனைத்தையும் ஒருவர் செய்ய வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்பதால், அவற்றைக் கடந்து விடுகிறேன்.

அதிகம் பாதித்தது, அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது ஆனால், அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார்.

வருத்தம், ஏமாற்றம் இருந்தாலும், அவர் மீது கோபம் இல்லை.

ரஜினியாக இருப்பதும் கடினம், அதே போல அவருக்கு ரசிகராக இருப்பதும் கடினம்.

ஏனென்றால், ரஜினி தனது மனது கூறும்படி செய்வதை மற்றவர்கள் விமர்சிக்கும் போது அதற்குப் பதில் கூறியாக வேண்டிய கட்டாயத்தில் ரசிகன் இருப்பான்.

எதற்கு முக்கியத்துவம்?

என் முக்கியத்துவம் பெற்றோர் & குடும்பம் –> நெருங்கிய நண்பர்கள் –> இந்துமதம் –> ரஜினி –> மற்றவர்கள்.

இந்து மதம் வரைக்கும் புரிந்து இருக்கும். அடுத்தது ரஜினி இருக்கக்காரணம், அவரால் வாழ்க்கையில் பல நல்ல வழக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

நேரடியாக ரஜினி எனக்கு எதுவும் கூறவில்லை ஆனால், அவரின் பேச்சுகள், அனுபவங்கள் மூலமாகக் கற்றுக்கொண்டது ஏராளம்.

பாஜக / வலது சாரி ஆதரவாளன் ஆனால், அதற்காக ரஜினியை நியாயமற்று விமர்சித்தால், சரி என்று கேட்டுக்கொண்டு இருக்கும் பாஜக ஆதரவாளன் அல்ல.

அதே சமயம் அண்ணாமலை, மோடி மீது பெரு மதிப்பு வைத்துள்ளவன்.

தலைவர்களுக்கு இருக்கும் பக்குவம் அவர்களது ஆதரவாளர்களுக்கு இருப்பதில்லை.

பாஜக ஆதரவாளர்கள்

பாஜக ஆதரவாளர்கள் என்றால், குறிப்பாகச் சமூகவலைதள ஆதரவாளர்களைக் கூறுகிறேன். இவர்களில் பெரும்பாலானோர் கட்சியில் உறுப்பினர் கூட இல்லை.

இவர்களுக்கு எப்படியென்றால், பாஜகவை ஆதரிப்பவர்கள் இவர்களைப் போலவே 100% இந்துமத ஆதரவாளர்களாக இருக்க வேண்டும், இவர்கள் எதிர்ப்பவர்களை எல்லாம் எதிர்க்க வேண்டும்.

இவர்கள் வெறுப்பவர்களை மதிக்கக் கூடாது, மற்ற மதத்தினரை மதிக்கக் கூடாது. மாற்றுக்கருத்து இருக்கக் கூடாது.

எதிராக நடந்தால், உடனே விமர்சிக்க வேண்டியது. இவர்களுக்கும் திராவிடன் ஸ்டாகிஸ்ட்டுகளுக்கும் எந்த வித்யாசமும் கிடையாது.

அதாவது இவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது.

அண்ணாமலை

ஆனால், கவனித்துப்பாருங்கள், அண்ணாமலை உட்படப் பெரும்பாலான பாஜக தலைவர்கள் ரஜினி மீது பெரு மதிப்பு வைத்து இருப்பார்கள்.

காரணம், இவர்கள் அரசியல் புரிந்தவர்கள். அரசியலை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்தவர்கள்.

குறைந்தபட்சம் மாற்றுக்கருத்து இருந்தாலும், வெளிப்படையாக விமர்சிக்க மாட்டார்கள் அல்லது நாகரீகமாக எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.

அண்ணாமலை அடிக்கடி கூறுவார், 'அரசியல் எளிதல்ல' என்று. இதை எத்தனை சமூகவலைதளப் பாஜகவினர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியாது.

ரஜினி ஆன்மீக பற்றுள்ளவர், தேசியவாதி என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால், இவர்கள் எதிர்பார்ப்பது போல மற்ற மதங்களை வெறுப்பவர் அல்ல.

தமிழ் இயக்குநர்கள் பலர் இந்துமதத்தை இழிவுபடுத்திப் படம் எடுக்கும் போது இந்துமத்தை பெருமைப்படுத்தி நடிப்பவர் ரஜினி.

காலா படத்தில் மட்டும் சில காட்சிகள் கை மீறிப் போய் விட்டது.

இதை ரஜினி எதிர்பார்த்து இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். தவறாகவே இருந்தாலும், இது ஒன்றுக்காக மற்ற அனைத்தையும் எதிர்ப்பது முட்டாள்தனம்.

100% சரியாக எவராலும் எதையும் செய்ய முடியாது. சில நேரங்களில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ கூட நடக்கலாம். அடுத்த முறை சரி செய்துகொள்ள வேண்டியது தான்.

தனது மனதுக்கு நெருக்கமான, பாபா என்ற தோல்விப்படத்தைத் தற்போது மறுவெளியீடு செய்து ஆன்மீகத்தை மக்களிடையே கொண்டு செல்கிறார்.

பாஜகவினர் வாதப்படியே பணத்துக்காக என்று வைத்துக்கொண்டாலும், அதனால் நல்லது நடந்தால் சரி தானே!

இவர்கள் இப்படியென்றால், பாஜகக்கு வலு சேர்க்க பாபாவை மறுவெளியீடு செய்கிறார் என்று திராவிடன் ஸ்டாக்குகள் விமர்சிக்கிறார்கள்.

ரஜினியாய் இருப்பது எளிதல்ல.

பாஜக திட்டங்கள்

CAA உட்பட மத்திய அரசின் பல திட்டங்களை மற்றவர்கள் கருத்துக்கூற பயந்து தவிர்த்த போது அதை ஆதரித்துத் தைரியமாகப் பேசி உறுதியாக நின்றவர்.

2019 தேர்தலில் ஊடகங்கள் கேள்வி கேட்ட போது 10 பேர் ஒருவரை எதிர்த்தால், யார் பலசாலி? என்று கேட்டு மோடிக்கு ஆதரவு தெரிவித்தவர்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது அன்றே அதை ஆதரித்து ட்வீட் போட்டார்.

அவர் NewIndia என்று குறிப்பிட்டதைப் பலரும் கிண்டல் செய்தார்கள். அந்த நேரத்தில் இதைத் தவிர்த்து இருக்கலாம் என்று நானும் நினைத்தேன்.

ஆனால், இன்று NewIndia என்பது உண்மையாகி வருகிறது. ஏராளமான மாற்றங்களை இந்தியா கண்டு வருகிறது.

இழப்பு ரஜினிக்கு அல்ல

ரஜினி போலத் தைரியமாக வெளிப்படையாக, மற்றவர்கள் விமர்சிப்பதை பற்றிக்கவலைப்படாமல் மனதுக்குச் சரி என்று படுவதைப் பேசும் தேசிய சிந்தனை கொண்ட ஒரு மாஸ் நடிகரைத் தமிழில் காட்டச்சொல்லுங்கள் பார்ப்போம்.

இவரைப் பாஜகவினர் எதிர்க்கிறார்கள் என்றால், இவர்களைப் போல முட்டாள்கள் யார் இருக்க முடியும்? இவர்களுக்குப் போட்டி திராவிடன் ஸ்டாக்கிஸ்ட்டுகள் மட்டுமே!

ரஜினி போன்ற இந்து மதத்தை மதிக்கும், தேசிய சிந்தனை கொண்ட நபரையே சொத்தைக் காரணங்களுக்காக இவர்கள் விமர்சித்து எதிர்க்கிறார்கள் என்றால், முட்டாள்கள் அன்றி வேறென்ன.

இவரைப்போன்றவரை எதிர்ப்பது பாஜகக்கு தான் இழப்பு, ரஜினிக்கு அல்ல.

ஏனென்றால், அவர் மனதுக்குச் சரி என்று படுவதைச் செய்துகொண்டே தான் உள்ளார். இன்றுவரை விமர்சித்தவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர், ரஜினி உயர்ந்துகொண்டே தான் செல்கிறார்.

இன்னும் சொல்லப்போனால், இவர்கள் விமர்சிப்பதை பற்றி அவர் கவலைப்படாமல், தன் மனதுக்குச் சரியென்றால், திரும்பவும் ஆதரிக்கத்தான் போகிறார்.

காரணம், இவர் மற்றவர்களைத் திருப்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

இதனாலே தன்னை விமர்சித்தவர்களைக் கூடப் பாராட்ட ரஜினியால் முடிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சமீப இயக்குநர் பிரதீப் உட்படப் பலரைக் கூறலாம்.

இவ்வளவு ஏன்! பிரதீப்பை பாராட்டியதற்கு ரஜினி ரசிகர்கள் பலரே தலைவர் மீது கோபப்பட்டார்கள் ஆனால், அது தான் ரஜினி. அது தான் அவரின் சுயம்.

எனக்குக் கூடப் பிடிக்கவில்லை தான் ஆனால், ஒருவரை நம் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சைக்கோத்தனம்.

வாழ்க்கை துணையே நாம் கூறும் அனைத்தையும் ஏற்க மாட்டார்கள் ஆனால், ரஜினி இவர்கள் விருப்பம் போல பேச, நடந்து கொள்ள வேண்டுமாம். 

என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்!

சுருக்கமாக, ரஜினியால் பாஜகக்கு என்ன இழப்பு? பாஜகவை விமர்சித்தாரா? இழிவு படுத்தினாரா? இதையெல்லாம் செய்துகொண்டு இருப்பவர்களை விட்டுவிட்டு ரஜினியை பிடித்துத் தொங்கிக்கொண்டுள்ளார்கள்.

இவ்வளவையும் விளக்கினாலும் புரிந்து கொள்ளாமல் திரும்ப ரஜினியை திட்டிக்கொண்டு இருப்பார்கள். ஏனென்றால், அவர்கள் டிசைன் அப்படி!

பாஜக தலைவர்கள்

பாஜக தலைவர்களுக்கும் ஒருவேளை தொண்டர்களைப் போல மாற்றுக்கருத்து இருந்தாலும், பொதுவெளியில் விமர்சிக்க மாட்டார்கள்.

காரணம், அவர்கள் அரசியல் தெரிந்தவர்கள். எதை எதிர்க்க வேண்டும், எதை எதிர்க்கக் கூடாது என்பதை அறிந்தவர்கள்.

அதனால் தான், அவர்கள் தலைவர்களாக உள்ளனர், மற்றவர்கள் அனைத்துக்கும் உணர்ச்சிவசப்பட்டு, எதையும் யோசிக்காமல் எதிர்த்துச் சமூகதளப் போராளியாக மட்டுமே உள்ளார்கள்.

கள நிலவரம் புரியாதவர்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? யாரை எதிர்க்க வேண்டும்? என்று தெரியாத பாஜகவினர் மட்டுமே ரஜினியை எதிர்ப்பார்கள்.

இவர்கள் ஆதரிக்கும் அண்ணாமலையே ரஜினி செய்வதைத்தான் செய்துகொண்டுள்ளார் என்பது இவர்களுக்குப் புரியப்போவதில்லை.

அதாவது அடிப்படை நாகரீகம் பின்பற்றி, இந்து மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து மதங்களையும் மதித்து அனைவரையும் நேசிப்பவராக உள்ளார்.

அதனால் தான், பொதுமக்கள் அண்ணாமலைக்குப் பேராதரவு தருகிறார்கள் என்ற அடிப்படையே புரியாமல் உள்ளனர்.

ரஜினி இந்து மதத்தை நேசிப்பவர், தேசிய சிந்தனை கொண்டவர் தான் ஆனால், இவர்கள் எதிர்பார்ப்பது போல மற்றவர்களை வெறுத்து இழிவுபடுத்துபவர் அல்ல.

அதை ரஜினியிடம் என்றுமே எதிர்பார்க்க முடியாது!

பின்குறிப்பு

ரஜினியை புரிந்துகொண்ட பாஜகவினருக்கு இக்கட்டுரை பொருந்தாது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. தூற்றுவார் ஒரு புறம், தூற்றி கொண்டிருக்க!!!
    போற்றுவர் ஒரு புறம் , போற்றி கொண்டிருக்க!!!
    எதையும் தன் காதில் வாங்கி கொள்ளாமல்
    மேலும் மேலும் உயர பறந்து கொண்டிருக்கிறார்
    ரஜினி சார்…

    தனிப்பட்ட முறையில் ரஜினி சார் மீது எனக்கு பல விமர்சனங்கள் (குறிப்பாக அரசியல்) இருந்தாலும், அவரின் உழைப்பின் மீது எப்போதும் தனி மரியாதை உண்டு.. ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் கார் கொடுக்காமல், தன்னை அவமானப்படுத்தி வீதியில் நடக்க வைத்த போது,

    மீண்டும் சில வருடங்களிலே IMPORT CAR வாங்கி சும்மா கெத்தாக AVM ஸ்டுடியோ முன்பு போய் நின்ற தருணம்.. தற்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்க வைக்கிறது.. அது தான் சூப்பர் ஸ்டார்..இந்த சம்பவத்தை ரஜினி சார் சொல்வது செம்மையா இருக்கும்.. தர்பார் ஆடியோ ரிலீஸ் நிகழ்வில் சொன்னதாக நினைவு..

    கோவையில் பணி புரிந்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய புதிய உயரதிகாரிக்கும் எனக்கும் 7 1/2.. சரி இனி சரி வராது..என்ற மனநிலைக்கு வந்த போது, பணி புரிந்து கொண்டே வேறு வேலை தேடும் சமயத்தில், திருப்பூரில் மேகலா கரோனா நிறுவனத்தில் நேர்காணல் கடிதம் வந்தது..

    அந்த சமயத்தில் பேருந்து நிலையத்திலிருந்தே, அந்த அட்ரஸ் தேடி கொண்டே மதிய வெயில் சமயத்தில், உணவு உண்ணாமல் ஹார்வி ரோட்டில் நடந்து சென்ற தருணம் எப்போதும் கண் முன் வந்து போகும்.. இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் கடந்தாலும்.. நேற்று நடந்து போல தோன்றுகிறது..

  2. @யாசின்

    “இந்த சம்பவத்தை ரஜினி சார் சொல்வது செம்மையா இருக்கும்.. தர்பார் ஆடியோ ரிலீஸ் நிகழ்வில் சொன்னதாக நினைவு..”

    ஆமாம்.

    ரஜினி பேசியதை பலரும் பல முறை கேட்டதாக கூறி உள்ளார்கள்.

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது காரணம், அதில் உண்மையும் சுவாரசியமும் இருப்பதால்.

    “அட்ரஸ் தேடி கொண்டே மதிய வெயில் சமயத்தில், உணவு உண்ணாமல் ஹார்வி ரோட்டில் நடந்து சென்ற தருணம் எப்போதும் கண் முன் வந்து போகும்.”

    அப்போதெல்லாம் எதற்கும் நடை பயணம் தான். சென்னையில் 10 பைசா 5 பைசா புழக்கத்தில் இருந்த காலம் அது.

    சில காசுகளை மிச்சப்படுத்த நடந்தே பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன். தற்போது எவ்வளவு மாறி விட்டது!

    ஆனால், நீங்கள் நடந்து சென்றதுக்கு அப்போது இருந்த உங்கள் மனநிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  3. டைரக்டர் சொல்லும்படி ஆடும் கூத்தாடியை தலைவனாக கொண்ட படிக்காத பக்கிக்கு நுண்ணறிவு குறைவாகத்தான் இருக்கும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!