பலரிடையே உள்ள பிரச்சனை, தெரிந்தே / தெரியாமல் செய்த தவறை ஒப்புக்கொள்ள மறுத்து, மேலும் சிக்கலாக்கிக் கொள்வது. இப்பிரச்சனையைத் தவிர்க்க மன்னிப்புக் கேளுங்கள்.
மன்னிப்புக் கேளுங்கள்
தவறு நம் மீது இருந்தால், மன்னிப்புக்கேட்டுக் கொள்வது, மன நிம்மதியையும், திருப்தியையும் அளிக்கும். Image Credit
மன்னிப்புக் கேட்க நம்மைத் தடுப்பது ஈகோ என்ற சுய கௌவரம் மட்டுமே!
இதுவே நம்மை அனைத்து இடங்களிலும் பிரச்சனைகளை மேலும் பெரிது படுத்தி, சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
தவறே செய்யாமல் எவராலும் இருக்க முடியாது. எதோ ஒரு நிலையில் தெரிந்தோ தெரியாமலோ தவறு நடக்க வாய்ப்புகள் உள்ளது.
பெரும்பாலும் கோபத்தாலும், அவசரப்படுவதாலுமே இந்நிலை ஏற்படுகிறது.
தவறு செய்வது மனித இயல்பு. எனவே, இதைப் பெருங்குற்றமாகக் கருதி மன உளைச்சல் அடைய வேண்டியதில்லை.
எப்போது மன்னிப்புக் கேட்கலாம்?
மன்னிப்புக் கேட்க முடிவானதும், பிரச்சனை நடந்த அன்றே கேட்கக் கூடாது. ஏனென்றால், மனதளவில் எதிர் நபர் தயாராக இருக்க மாட்டார்.
மன்னிப்புக் கேட்கச் சென்று அது மேலும் சிக்கலைக் கொண்டு வரலாம். கூறுவதைப் புரிந்து கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்க மாட்டார்.
எனவே, பிரச்சனை நடந்த அடுத்த நாள் நேரில் சென்று (உங்கள் பக்கம் தவறு இருந்தால்) நான் செய்தது தவறு தான் என்று சம்பந்தப்பட்டவரிடம் கூறலாம்.
நேரில் சந்திக்க முடியாத நிலையில் அலுவலக ரீதியாக இருப்பவர் என்றால், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.
ரொம்பத் தாமதம் செய்தாலும், மன்னிப்புக்கு உண்டான முழுப்பலனும் கிடைக்காது.
மன்னிப்புக் கேட்பதன் மூலம், அவர் மனதில் இருந்த வன்மமும் குறையும் அதோடு, உங்கள் மீதான மதிப்பும் உயரும், பிரச்சனையும் அதோடு முடியும்.
கேட்கும் மன்னிப்பை கடமைக்காகக் கேட்காதீர்கள், மனப்பூர்வமாகக் கேளுங்கள்.
மன்னிப்புக் கேட்பதால் பெறுபவை
- மன நிம்மதி.
- மன உளைச்சலில் இருந்து விடுதலை.
- அவசியமற்று ஒருவரை பகைத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.
- மன பாரம், அழுத்தத்தை இறக்கி வைத்ததால், சுதந்திரமான உணர்வு.
- மனதின் வன்மம் நீங்கும்.
- இப்பிரச்சனையில் இருந்து விலகி, அடுத்தப் பணியில் கவனம் செலுத்தலாம்.
செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதால், எந்த விதத்திலும் குறைந்து விடப்போவதில்லை. மாறாகப் பல படி உயர்கிறீர்கள்.
மன்னிப்புக் கேட்பது கோழைத்தனம் அல்ல.
மன்னிப்புக் கேட்க மிகப்பெரிய தைரியம் தேவை. மனதில் உண்மை, தைரியம் உள்ளவர்களாலே மன்னிப்பு கேட்க முடியும், தவறை ஒத்துக்கொள்ள முடியும்.
அனைவராலும் செய்ய முடியாத, செய்யத் தயங்குகிற ஒரு காரியத்தைச் செய்கிறீர்கள் என்றால், சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் உயர்ந்தவரே!
தொடர்புடைய கட்டுரைகள்
செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!
மிகவும் அருமையாக கூறினீர்கள் கிரி.
கிரி, கல்லூரி பருவத்திலும், தற்போதும் நான் எப்போதும் ரொம்ப யதார்த்தமாக பழக கூடியவன். முடிந்த மட்டும் நான் இருக்கும் இடம் கலகலவென வைத்து கொள்வேன். கல்லூரி படிக்கும் போது, பள்ளி படிக்கும் மாணவனின் உருவம் தான் எனக்கு. மீசை இருக்காது, குழந்தை போல இருப்பேன். என்னுடைய பேச்சு திறனால் எளிமையாக எல்லோருடன் பழகி நட்பு கொள்வேன். இந்த திறமை இல்லை என்றால் நண்பர்கள் ஒதுக்கி இருப்பார்கள். இதுவரை யாரிடமும் சண்டை இட்டதில்லை.. உறவினர் மத்தியில் நிறைய உரசல்கள் இருந்தாலும், ஒதுங்கி செல்வேன் தவிர வம்புக்கு செல்ல மாட்டேன். இந்த பழக்கம் எனக்கு அம்மாவிடம் இருந்து வந்தது. இரும்பு பெண்மணி எனது தாய். மன்னிப்பு என்றாலே விருமாண்டி வசனம் தான் நினைவுக்கு வரும். மன்னிக்க தெரிஞ்சவன் தான் மனுஷன், ஆனா மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@சக்தி நன்றி
@யாசின் எனக்கும் நீங்க சண்டை போடுவீங்கன்னு தோணல 🙂 . எப்போதுமே அமைதியான, பிரச்சனை இல்லாத வழியைத் தான் விரும்புகிறீர்கள்.
உங்கள் எண்ணம் இதுபோலவே இருப்பதால், உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் பிரச்சனைகளும் குறைவாகவே இருக்கும்.