டெல்லியில் குடியுரிமை சட்டத்தின் ஆதரவு எதிர்ப்பாளர்களால் மோதல் ஏற்பட்டு கலவரமானது.
வன்முறையாளர்களையும், கட்டுப்படுத்தாத அரசையும், இதை முன்னரே கண்டுபிடிக்காத உளவுத்துறையையும் கண்டித்து ரஜினி பேசியிருந்தார்.
முஸ்லீம் மதகுருமார்கள் குறித்துக் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க விரும்புவதாக ரஜினிக்கு ‘ஜமாஅத்துல் உலாமா சபையினர்‘ கடிதம் அனுப்பி இருந்தனர்.
ரஜினி படப்பிடிப்பில் இருந்ததால், சென்னை வந்த பிறகு பேசுவதாகக் கூறி, அவர் சென்னை வந்த பிறகு அழைத்துப் பேசி இருந்தார்.
ரஜினி யார்? எப்படிப்பட்டவர்?
அரசியல்வாதிகள், ஊடகங்கள் ரஜினியை எதிர்க்க, அவரைப் பாஜக இயக்குகிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
தமிழகத்தில் பாஜக க்கு எதிர்ப்பு இருப்பதால், இதன் மூலம் அவருக்கு மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வதே அவர்கள் நோக்கம்.
ரஜினி நல்லவர், வல்லவர் என்று சான்றிதழ் கொடுக்க இக்கட்டுரையை எழுதவில்லை.
இக்கட்டுரை உலாமா சபையினர் நடந்து கொண்ட விதத்தைப் பாராட்டவே.
ஜமாஅத்துல் உலாமா சபையினர்
முஸ்லீம் அமைப்பினர் ரஜினி சந்திப்பை, அவர்கள் கூறும் கருத்துகளை ஊடகங்கள் எப்படித் திரித்து வெளியிடும் என்பதை அனைவரும் அறிவார்கள்.
அதுவும் இது போன்ற மதச் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்றால் அரசியல் சார்பு ஊடகங்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியும்.
ஆனால், நடந்ததோ வேறு.
அரசியல் கட்சிகளின் தொடர்புடையவர்கள் ரஜினியை சந்திக்க முயன்ற போது அவர்களைச் சந்திக்க மறுத்து, அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத, ஜமாஅத்துல் உலாமா சபையினரை மட்டுமே ரஜினி சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஜமாஅத்துகள் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலாமா சபையினரின் பெருந்தன்மை
சுய கௌரவம் (EGO) பார்க்காமல் தங்கள் விளக்கங்களை ரஜினிக்கு கொடுக்க நினைத்தது.
இவர்கள் ரஜினிக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. ரஜினி எந்த அரசு பதவியிலோ, பொறுப்பிலோ இல்லை.
அரசியல் கட்சித் தலைவரும் இல்லை.
குடியுரிமை சட்டத்தை ஆதரித்துள்ளார். அதோடு மதகுருமார்களையும் விமர்சித்துள்ளார். பாஜக ஆதரவாளராக ஊடகங்கள் தொடர்ந்து இவரைக் குறிப்பிட்டு வருகின்றன.
இவ்வளவையும் தாண்டி இவர்கள் ரஜினியை சந்தித்தார்கள். ஏதோ ஒருவகையில் ரஜினி மீது நம்பிக்கை அல்லது மதிப்புக் கொண்டுள்ளார்கள்.
சந்திக்க முயன்றதே மிகப்பெரிய விஷயம் என்றால், பேசி முடித்த பிறகு அவர்கள் நடந்து கொண்ட விதமும், ஊடகங்களைக் கையாண்ட விதமும் மிகச் சிறப்பு.
தங்கள் தரப்பு விளக்கங்களைக் கூற வந்தாலும், இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, பேசியதை திரிக்காமல், சாதகமாக மாற்றிக்கொள்ளாமல் மிக நேர்மையாக நடந்து கொண்டார்கள்.
ஊடகங்களின் நெருக்கடி
ஊடகங்கள் இவர்களிடம் இருந்து சர்ச்சையான கருத்தைப் பெற்று விட வேண்டும் என்று பலவாறு கேள்விகளைக் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள் ஆனாலும், ஊடகங்களுக்கு அந்த வாய்ப்பையே அவர்கள் கொடுக்கவில்லை.
உலாமா சபையினர் ஊடகங்களை அடிக்கடி சந்திப்பவர்கள் அல்ல ஆனாலும், ஊடகங்களை அடிக்கடி சந்திப்பவர்களை விடச் சிறப்பாகக் கையாண்டார்கள்.
ஊடகங்கள் எதிர்பார்க்கும் எந்தப் பதிலையும் கூறாமல், பேசியதை மட்டுமே கூறினார்கள்.
இச்சந்திப்பை உலாமா சபையினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஏன் கூறினேன் என்றால்,
ரஜினியின் நிலைப்பாட்டை மாற்றிக் கூறவில்லை ஆனால், குடியுரிமை சட்டத்தால் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும், அதற்கு ரஜினி கூறிய பதிலையும் குறிப்பிட்டார்கள்.
இது மிக நேர்மையான, நியாயமான விளக்கம்.
இவர்கள் ரஜினி கூறிய கருத்தையும் கூறினார்கள், அதே சமயம் தங்கள் நிலைப்பாட்டையும் விட்டுக்கொடுக்கவில்லை. மிகச்சிறந்த பண்பாடு.
இதன் பிறகு ஊடகங்களில் பேசிய போதும், விவாதங்களில் கலந்து கொண்ட போதும் தேவையற்ற வார்த்தைகள் எதையும் விடாமல், உணர்ச்சிவசப்படாமல் பேசினார்கள்.
பொறுப்பில் உள்ளவர்கள் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தார்கள்.
ஊடகங்களுக்குப் பெருத்த ஏமாற்றம். சர்ச்சையை எதிர்பார்த்தார்கள் ஆனால், நடக்கவில்லை. இதனால் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தவில்லை
உலாமா சபையினர் ஊடங்களுக்குக் கூறியது மிக முக்கியமானது.
மக்களின் அச்சத்தைப் போக்கி அமைதியான நிலை உருவாக வேண்டும் என்று விவாதித்ததையும், பாஜக குறித்த எதிர்மறை பேச்சுகளைப் பேசாததும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் நினைத்து இருந்தால், வழக்கமான அரசியல்வாதிகள் போல இதைச் சொன்னதோடு பாஜக வையும் இங்கே விமர்சிக்க அவர்களுக்கு வாய்ப்பு இருந்தது ஆனால், வந்த நோக்கம் என்னவோ அதை மட்டும் பேசி முடித்துக்கொண்டார்கள்.
இதுவே வழக்கமான அரசியல்வாதிகளுக்கும் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே உள்ள வித்யாசத்தைக் காட்டியது.
அதே போல ரஜினியும் தனக்கு சாதகமாக்கி கொள்ளாமல், ட்விட்டரில் ‘எப்போதும் அன்பும் ஒற்றுமையும், அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்‘ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதன் மூலம் தன் எண்ணத்தையும் கூறி விட்டார் அதே சமயம் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புகிறார்கள் என்று உலாமா சபையினரையும் முன்னிலைப்படுத்தினார்.
சுருக்கமாக, இச்சந்திப்பு நேர்மறை எண்ணங்களை மட்டுமே ஏற்படுத்தியது.
பின்னாளில் அவர்களுக்கு ரஜினி மீது மாற்றுக்கருத்து வரலாம், விமர்சிக்கலாம் அது வேறு ஆனால், அவர்கள் தற்போது வந்த நோக்கம் என்னவோ அதற்கு நேர்மையாக நடந்து கொண்டார்கள் என்பதே இங்கே குறிப்பிட விரும்புவது.
மத்திய அரசு செய்யத் தவறிய செயல்
மத்திய அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள் ஆனால், அதைச் சரியாகச் செயல்படுத்துவதில்லை.
இதுவே கடுமையான விமர்சனங்களுக்குக் காரணம். இதுபற்றி விரிவாகப் பின்னர் ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்.
தற்போதும் குடியுரிமை சட்ட ஆதரவு நிலைப்பாட்டில் எனக்கு மாற்றமில்லை ஆனால், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.
தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் ஆனால், குடியுரிமை சட்டம் குறித்த விஷயத்துக்கு அரசு சரியான முறையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.
துவக்கத்திலேயே செய்து இருந்தால், மோசமாகி இருக்காது.
பிரச்சனை செய்கிறவர்கள் எப்படி விளக்கியும் செய்வார்கள் ஆனால், சட்ட விழிப்புணர்வு, விளக்கங்களை மக்களுக்கு எடுத்துரைப்பது அரசின் முக்கியக் கடமை.
முஸ்லீம் நண்பர் ஒருவர் தனித்தகவலில் பேசும் போது, முஸ்லீம் மக்களுக்கு இச்சட்டத்தால் உள்ள அச்சத்தைக் குறிப்பிட்டார், நானும் ஒப்புக்கொண்டேன்.
நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
எதிர்மறை எண்ணங்களும், வெறுப்புணர்வும் என்றும் அமைதி தராது.