அண்ணாத்த (2021) | ரஜினி திருவிழா

9
அண்ணாத்தே

கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு கிராமம் சார்ந்து வரும் தலைவர் படம் அண்ணாத்த. பல வருடங்களாக வழக்கமான தலைவர் படங்களிலிருந்து விலகி இருந்ததற்கு இதில் அனைத்தையும் திரும்பக் கொண்டு வந்துள்ளார்கள். Image Credit

அண்ணாத்த

கதை என்று பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை. வழக்கமான ஒரு பொழுதுப் போக்குப் படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளார்கள்.

தங்கச்சி சென்டிமென்ட்டை முதன்மையாக வைத்து எடுத்துள்ளார்கள்.

ரஜினி

ரொம்ப வருடங்களுக்குப் பிறகு கிராமத்துக் கதையில் ரஜினியைப் பார்ப்பதே உற்சாகமான அனுபவம். கூடுதல் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக அசத்தியுள்ளார்.

சென்டிமெண்ட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் ரஜினிக்கு எப்போதுமே கூடுதல் பலமளிப்பவை.

பல மாஸ் காட்சிகள் உள்ளன, குறிப்பாக இடைவேளை முதல்.

கீர்த்தி சுரேஷ் நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஒரே சேர காட்டும் காட்சியில் ரஜினி மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

நட்சத்திர பட்டாளம்

ஏராளமானோர் உள்ளனர் ஆனால், சிலருக்கு மட்டுமே குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரம். மற்றவர்கள் ரஜினி படம் என்பதால் விருப்பப்பட்டு நடித்து இருக்கலாம்.

குஷ்பூ, மீனா, சதீஷ், சத்யன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் என்று அனைவருமே சில காட்சிகளிலே வருகிறார்கள். சூரி ஓகே.

குஷ்பூ, மீனா காட்சிகள் சில தெலுங்கு படத்தை நினைவு படுத்தினாலும், அடுத்து வரும் காட்சியில் சென்டிமென்ட் வைத்துச் சரி செய்து விட்டார்கள்.

நயன்தாரா சந்தித்த சில நிமிடங்களிலேயே சாரல் பாடல் வந்தது பலருக்கு அதிர்ச்சியாக இருந்து இருக்கும்.

ரஜினி நயன்தாரா இருவரும் ஜோடி என்றாலும், நண்பர்கள் போலத்தான் கொண்டு சென்றுள்ளார்கள்.

பிரகாஷ்ராஜ் குறைந்த நேரமே வந்தாலும் நிறைவாகச் செய்துள்ளார்.

ரஜினிக்குப் பிறகு நடிக்கக் கீர்த்தி சுரேஷுக்கு அதிக வாய்ப்பு. தாய்க்குலங்களின் பேராதரவு கீர்த்தி சுரேஷுக்கு தான் 🙂 .

வசனங்கள்

படத்தில் வசனங்கள் குறிப்பிடத்தக்கவை. ரொம்ப நீளமாக இல்லாமல் இரு வரிகளில் சுருக்கமாக, மனதில் பதியும் வசனங்கள் ஏராளம் உள்ளன.

சென்டிமென்டுக்கும் பொருந்தியுள்ளது, மாஸ் காட்சிகளுக்கும் பொருந்தியுள்ளது. சிவா இன்னும் எத்தனை வசனம் தான் கைவசம் வைத்துள்ளாரோ! 🙂 .

இரண்டாம் பாதி முழுக்கவே கொல்கத்தாவில் முடித்துள்ளார்கள். சிறுத்தை படம் போல இதிலும் அங்குள்ளவர்கள் தமிழிலேயே பேசுகிறார்கள்.

சிவாவின் முந்தைய படங்களை நினைவுபடுத்துவதை தவிர்த்து இருக்க வேண்டும்.

இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகள் அதிகம் ஆனால், இடையிடையே கீர்த்திச் சுரேஷ் சென்டிமென்ட் காட்சிகள் வைத்துச் சமன் செய்துள்ளார்கள்.

சண்டைக்காட்சிகள் ரொம்ப மிகைப்படுத்தலாக இல்லாமல், ரசிக்கும்படி எடுக்கப்பட்டுள்ளது.

வில்லன்கள் அபிமன்யு & ஜெகபதி பாபு நடிப்பு நன்றாக இருந்தது. ஜெகபதி பாபுக்கு கூடுதல் காட்சிகள் கொடுத்து இருக்கலாம்.

இரண்டாம் பாதி முழுக்கவே கொல்கத்தா என்று இல்லாமல், கொஞ்சம் தமிழ்நாட்டிலும் கொண்டு வந்து இருக்கலாம் என்று தோன்றியது.

ஒளிப்பதிவு & இசை

படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் மிக முக்கியப்பங்காற்றி உள்ளன.

ராமோஜிராவ் திரைப்பட நகரில் படம் எடுக்கப்பட்டதாகக் கூறினார்கள் ஆனால், அது போல ஒரு பார்வையைக் கொடுக்காமல், வெளிப்புறப்படப்பிடிப்பு போலவே உள்ளது.

அதோட வீட்டு அமைப்பு, திருமண நிகழ்ச்சியில் அதன் அலங்காரம், விளக்குகள், தோரணம், வாழைமரம் என்று அசத்தலாக உள்ளது.

தமிழ் திரையுலகில் முற்போக்கு வாதிகள் அதிகமானதால் கடவுளைக் கிண்டல் செய்து திரைப்படங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் செவுள்ள விட்டது போலக் காட்சிகள்.

இதற்குச் சிவாவுக்கும் ரஜினிக்கும் சிறப்பு நன்றி.

பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. வா சாமி, பின்னணி இசை மாஸ் காட்சிகளுக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளது.

வழக்கமான ஒரு பொழுதுபோக்குப் படம் அண்ணாத்த. இதில் உலகக் கதையை, லாஜிக்கை எல்லாம் தேடிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.

2.45 மணி நேரம் நகைச்சுவை, சென்டிமென்ட், மாஸ் / சண்டை காட்சிகள் என்று பொழுது போக்க உத்தரவாதமான படம், மற்றவர்கள் விலகி இருக்கலாம்.

அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Directed by Siva
Written by Siva, Savari Muthu, Antony Bhagyaraj, Chandran Pachaimuthu (Dialogues)
Screenplay by Siva
Story by Siva, Aadhi Narayana
Produced by Kalanithi Maran
Starring Rajinikanth, Keerthy Suresh, Meena, Khushbu, Jagapathi Babu
Cinematography Vetri
Edited by Ruben
Music by D. Imman
Production Sun Pictures
Distributed by Red Giant Movies
Release date 4 November 2021 (India)
Running time 163 minutes[1]
Country India
Language Tamil

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

9 COMMENTS

  1. அண்ணாத்தே படத்தை குறித்து கலவையான விமர்சனங்களை படித்து வருகிறேன்.. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது படம் வசூலில் பெரிய வெற்றி பெறும் என எண்ணுகிறேன்.. ரஜினி ரசிகனாக நீங்கள் படத்தை எந்த அளவிற்க்கு ரசித்து இருப்பீர்கள் என உங்கள் எழுத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. அன்பின் சக தலைவர் ரசிகர்களே…

    நம்முடைய ஆஸ்தான நாயகனின் திரைப்படம் பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லை என்று மனம் விட்டுச் சொல்வதால் நீங்கள் அவரின் ரசிகர் இல்லையென்றாகிவிடாது.

    திரைப்படம் சரியாக இல்லையென்பதில் உங்களுடைய தவறு எதுவும் இல்லையெனும்போது யாருக்காக பூசி மொழுக வேண்டும்.

    நாம் கொடுக்கும் பணத்திற்கான தரமான பொருள் கிடைக்கவில்லையென்றால் அதை ஏன் நாம் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்?

    அனைத்தையும் பொறுத்துக்கொண்டு ஆஹா ஓஹோ என்று சொல்லிக்கொண்டே இருந்தால் எதை எடுத்தாலும் இவர்கள் பார்ப்பார்கள் என்று இப்படிப்பட்ட குப்பைகள்தான் அவர்களிடமிருந்து கிடைக்கும்.

    படத்தைப் பற்றிய உண்மயான கருத்துக்கள் நடிகர்களையும் இயக்குனர்களையும் சென்றடையட்டும்.

    அடுத்தவர்களுக்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் உங்களுடைய மனதுக்காவது உண்மையாக இருங்கள்.

    தனக்குக் கூட உண்மையாக இல்லாதவன் எதற்கு ரஜினி ரசிகனாக இருக்க வேண்டும்?

    #முத்துசிவா.

    Muthusiva Facebook பதிவில் இருந்து எடுத்தது.
    எனது எண்ணமும் இதுதான்

  3. பல காட்சிகள் ஏங்கேயோபார்த்த மாதிரி இருந்தது.மற்றபடி வித்தியாசமான அல்லது புதுமையாக எந்த ஒரு விஷயம் இல்லை.70+ வயதில் ஒருவர் இவ்ளவு சிறப்பாக சண்டைகாட்சிகள் நடிப்பது ஆச்சாரியமான விஷயம்தான்.பொழுதுபோக்கான படம்.இது மாதிரி மசாலா படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பது தவறு.

  4. @யாசின்

    “அண்ணாத்தே படத்தை குறித்து கலவையான விமர்சனங்களை படித்து வருகிறேன்..”

    விமர்சனங்கள் மட்டுமே படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம்.

    அண்ணாத்தே மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    “ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது படம் வசூலில் பெரிய வெற்றி பெறும் என எண்ணுகிறேன்”

    சந்தேகமே வேண்டாம்.

    “ரஜினி ரசிகனாக நீங்கள் படத்தை எந்த அளவிற்க்கு ரசித்து இருப்பீர்கள் என உங்கள் எழுத்துக்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.”

    இவ்வளவு கொண்டாட்டமாக பார்த்தது.. அதுவும் பல வருடங்களாக கிராமத்து படம், பக்கா கமர்சியல் படமாக எதிர்பார்த்த எனக்கு மன நிறைவை பெற்றுத்தந்தது.

    அண்ணாத்தே மக்கள் விரும்பும் படமாக இருக்கும் 100% . நம்பாதவர்களுக்கு சில நாட்களில் புரியும்.

    • ஆகா ஓகோ என்று விமர்சனம் பெற்று மண்ணைக் கவ்விய பல படங்களை நாம் பார்த்துள்ளோம். மொக்கை படம் என்று சொல்லி செய்யப்பட்ட படங்கள் வசூலை குவித்த தையும் பார்த்திருக்கிறோம்.களநிலவரம் என்பது வேறு.

  5. @ஹரிஷ்

    “நம்முடைய ஆஸ்தான நாயகனின் திரைப்படம் பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லை என்று மனம் விட்டுச் சொல்வதால் நீங்கள் அவரின் ரசிகர் இல்லையென்றாகிவிடாது.”

    படம் பிடிக்கவில்லையென்றால் தான் உண்மையான ரசிகரா? 🙂 அரிய கருத்து.

    “எனது எண்ணமும் இதுதான்”

    அனைவருக்கும் ஒரு படம் பிடிக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், கருத்துகள், ரசனைகள் இருக்கும்.

    எனவே, உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அது உங்கள் கருத்து.

    எனக்குப் பிடித்துள்ளது. பொதுமக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது அவர்கள் தான்.

  6. @விஜயகுமார்

    சரியாகக் கூறினீர்கள். இது உலகப்படம் அல்ல அல்லது சமூகத்தைப் புரட்டிப்படும் படமும் அல்ல.

    ஒரு பொழுது போக்குப்படம் இதற்குண்டான மனநிலையில் தான் படம் பார்க்க வேண்டுமே தவிர. சரவணபவனில் அசைவம் இல்லையென்று சண்டை போடக் கூடாது.

    • சரவணபவனில் அசைவம் இல்லையென்று சண்டை போடக் கூடாது.உண்மையில் இதுதான் ultimate.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here