சமூகத்தளங்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு ஒவ்வொருவருக்குள்ளும் தூங்கிக்கொண்டு இருந்த வன்மத்தை அவர்களே அறியாமல் வெளிக்கொணர்ந்து ஆடவிட்டுக்கொண்டு உள்ளது. ரஜினியும் நேர்மறை எண்ணங்களும் எப்படிப்பட்டது எனப் பார்ப்போம். Image Credit
ரஜினியும் நேர்மறை எண்ணங்களும்
ரஜினியை சமூகத்தளங்களில் வன்மமாக விமர்சிப்பது வழக்கமானது. காரணமே இன்றி அவதூறு பேசுவது, தவறாகக் கூறுவது எனத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
ஒருமுறை இதுகுறித்துப் பேசிய ரஜினி,
“ஏன் சமூகத்தளங்களில் இவ்வளவு எதிர்மறை எண்ணங்கள், வன்மங்கள்?! எதிர்மறை செய்திகளை, பகிர்வுகளைப் படிக்க வேண்டாம். நம் எண்ணவோட்டத்தையே மாற்றும் சக்தி இவற்றுக்கு உண்டு” என்று இதுபோலப் பொருள்வரும் படி கூறினார்.
இன்றைய தலைமுறையினரிடையே எதிர்மறை எண்ணங்கள், வன்மங்களை சமூகத்தளங்கள் உசுப்பேற்றி தீனி போட்டு வளர்க்கிறது.
என் எண்ணவோட்டத்தைப் பிரதிபலிக்கும் ரஜினி
ரஜினியின் கருத்துகள் பெரும்பாலும் எனக்கு ஒத்துப்போவதால், அவர் கூறும் கருத்துக்களைப் பின்பற்றிப் பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறேன்.
ரஜினி கூறியதைக் கேட்ட பிறகு, எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள், செய்திகள் ஆகிய அனைத்தையும் முற்றிலும் தவிர்த்து விட்டேன். எதிர்மறை கருத்துகளையே பேசும், விவாதிக்கும் WhatsApp குழுக்களில் இருந்து வெளியே வந்து விட்டேன்.
இவற்றை பின்பற்றிய பிறகு இதனால் எனக்குக் கிடைத்த நிம்மதி, திருப்தி கொஞ்ச நஞ்சமல்ல.
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் நமக்கு நல்லதே நடக்கும் என்று கூறியதை நான் கடுமையாகப் பின்பற்றுகிறேன்.
இதனால், எதுவுமே எனக்குக் கடினமாகத் தோன்றுவதில்லை, பிரச்சனையாக இருப்பதில்லை.
மனம் எப்போதுமே அமைதி நிலையில் இருக்கிறது. அப்படியும் பார்க்கப் படிக்க நேர்ந்தால், சில நிமிடங்களே இருக்கும், பின் அந்த எண்ணங்களில் இருந்து தானாகவே விடுபட்டு விடுவேன்.
கூறவே முடியாது
ரஜினியை பற்றி நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் குறை கூறலாம் ஆனால், ஒருவரை கூடத் தவறாகக் கூறினார், இழிவாகப் பேசினார் என்று கூறவே முடியாது.
மோடி, ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான் என்ற யாரை பற்றிக் கேட்டாலும் அவர்களுடைய நல்ல பக்கங்களை மட்டுமே கூறுவாரே தவிர அவர்களைப் பற்றி எதிர்மறையாக, தவறாகக் கூற மாட்டார்.
நாம் நேர்மறை எண்ணங்களை நினைக்கும் போது, நம்முடைய எண்ண அலைகளும் நல்ல எண்ணங்களுடனான பலன்களையே நமக்குக் கொண்டு வரும்.
அரசியலிலும், திரையிலும் ரஜினியை கீழிறக்க ஊடகங்கள், சமூகத்தளங்கள் மூலம் பலரும் முயல்கிறார்கள் ஆனால், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறார்.
ரஜினியை பிடிக்கவில்லை என்றாலும், இதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நேர்மறை சிந்தனைகளின் பலன்
இத்தனை பேர் ரஜினியை வீழ்த்த முயற்சித்தும், போலியான தகவல்களைப் பரப்பியும் அவரின் புகழ் உயர்ந்து கொண்டே செல்வதை “ஏன்?” என்று யோசித்தால், உங்களின் கேள்விக்குப் பதில் கிடைக்கலாம். “எண்ணம் போல வாழ்க்கை“.
நேர்மறையாகச் சிந்திக்க ஆரம்பித்த பிறகு எனக்குக் கிடைத்த பலன்கள் ஏராளம். இதை நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
புறம் கூறுதல்
ரஜினி போல அடுத்தவரைப் புறம் கூறுவதை முழுவதும் நிறுத்த முடியவில்லை ஆனால், முயன்று கொண்டு உள்ளேன். நிறுத்தி விடுவேன் என்ற நம்பிக்கையுள்ளது.
ஒருமுறை நாகேஷ் அவர்கள் தனக்கு இன்னொருவர் செய்த பிரச்சனையைப் பற்றி ரஜினியிடம் கூறிய போது, ரஜினி அமைதியாகக் கேட்டுக்கொண்டு பதில் அளிக்கவில்லை.
இதற்கு நாகேஷ், “என்னடா இது! நாம இப்படிச் சொல்றோம் இவர் ஆறுதலாக ஒன்றுமே சொல்லாமல் இருக்கிறாரே!” என்று நினைத்துக் கடுப்பாகி விட்டார்.
பின்னர், அந்த இடத்தில் இல்லாத மூன்றாம் நபரைப் பற்றி ரஜினி பேசுவதில்லை என்பதைத் தெரிந்து கொண்டதாக நாகேஷ் பத்திரிகை பேட்டியில் கூறியுள்ளார்.
இதைத்தான் நானும் முயல்கிறேன் ஆனால், ஓரளவு தான் பின்பற்ற முடிகிறது. இருப்பினும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டதில் திருப்தி.
என்னுள் நேர்மறை எண்ணங்களை அழுத்தமாகப் பதித்து, அதனால் பலன்களைப் பெற உதவிய தலைவர் ரஜினிக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தலைவா! நீங்கள் பல காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து எங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவன்
தொடர்புடைய கட்டுரைகள்
எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்
புதிய உலகம் காண 4 எளிய வழிகள்!
“அந்த ஐந்து விழாக்கள்” ரஜினி எழுதிய தொடர்! (1996)
ரஜினிக்கு ரசிகனாக இருப்பதால் என்ன பயன்?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
This is really a best birthday wishes for Thalaivar !
அருமையான கட்டுரை…. நானும் முயன்று பார்க்கிறேன், வெற்றி கொள்வேன் என்ற எண்ணத்தோடு!!! மிக்க நன்றி கிரி !!!
எப்போதும் போல் நான் நினைப்பது ஒன்றே ஒன்று!!! ஆயிரமாயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ரஜினி சாரின் உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.. ரஜினி சார் மட்டும் அல்ல!!! தன்னுடைய உழைப்பால் உயர்ந்த அனைவரையும் மிகவும் பிடிக்கும்.. அவர்களது வாழ்க்கையிலிருந்து எனக்கு தேவையான படிப்பினைகளை எடுத்து கொள்வேன்.. அந்த வகையில் ரஜினி சாரின் எளிமை எனக்கு பிடித்த ஒன்று..
சில சமயங்களில் நண்பர்களுடன் விவாதத்தின் போது கூட, தமிழ்நாட்டில் நடக்கும் ஏதேனும் இயற்கை சீற்றங்களோ அல்லது துயர நிகழ்வுக்கு ரஜினியின் நிதி எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள ஊடகங்கள் அவ்வளவு ஆர்வமாக இருப்பார்கள்.. என்னுடைய கேள்வி ரஜினி சார் எதற்கு பணம் கொடுக்க வேண்டும்???? நாளை ஏதோ ஒரு கட்டத்தில் ரஜினி தன்னுடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் இழந்து நடு தெருவுக்கு வந்து விட்டால் அவரை பழிப்பவர்கள் / இன்று அவரிடம் பணம் எதிர்பார்ப்பவர்கள் உதவி செய்வார்களா என்ன??? ரஜினி மட்டும் அல்ல மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதும் தவறு தான் … நம்முடைய கோரிக்கைகளை நாம் வாக்களித்த அரசாங்கத்திடம் தான் முறையிட வேண்டும்..
நான் படுத்த ஐந்து நொடிகளில் தூங்குபவன் : கிரி, மகிழ்ச்சியான ஒன்று!!! நான் படுத்த ரெண்டு நொடிகளில் தூங்குபவன்.. என்னை சுற்றி ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நிறைவான தூக்கம் என்பது கடவுள் கொடுத்த வரம்..அந்த வகையில் நாம் இருவரும் பாக்கியசாலிகள் தான்!!! பகிர்வுக்கு நன்றி..