இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை

1
Rajini speech about revolution - இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை

மார்ச் 12 ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததுடன், ‘நான் முதல்வர் பதவிக்கு விருப்பப்படவில்லை. அரசியல் மாற்றம் தேவை, இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை‘ என்று கூறினார்.

மனமுடைந்த ரசிகர்கள்

ரஜினி இது போலக் கூறிய பிறகு 95% ரசிகர்கள் சோர்ந்து, மனமுடைந்து போனார்கள். காரணம், ரஜினியை முதல்வராகக் காண வேண்டும் என்பது 25 வருட காத்திருப்பு.

தற்போது ‘வேறொருவர் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவார், நான் கட்சியை மட்டுமே கவனிப்பேன்‘ என்று ரஜினி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பெரும்பாலான ரசிகர்கள், ரஜினி முதல்வர் என்பது நடக்காது என்பதற்காக வருத்தப்பட்டார்கள்.

எனக்கு 20% வருத்தம் என்றாலும் மீதி 80% ரஜினியால் தமிழகத்துக்கு ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தது நடக்காது போய்விடுமே என்ற கவலையே அதிகம் இருந்தது.

தமிழகத்தின் வளர்ச்சியே என் எதிர்பார்ப்பு

தமிழகம் மிகச்சிறந்த மாநிலம், மக்கள் மிகத்திறமையானவர்கள், அன்பானவர்கள் ஆனால், மோசமான அரசியல்வாதிகளால் பாழாகி வருகிறது.

இப்படியே தொடர்ந்தால், மக்களையும் கெடுத்து, தமிழகத்தின் எதிர்காலத்தை நாசமாக்கி விடுவார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிகம்.

தமிழகத்தை நான் அதிகம் நேசிக்கிறேன்.

தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகளே மாற்றி மாற்றி ஆட்சி புரிந்து வருகின்றன. இவர்களால் தமிழகம் நாசமாகி விட்டது என்று முட்டாள்தனமாகக் கூற மாட்டேன்.

இவர்களால் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது, இதை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டாலே அறிய முடியும் ஆனால், நாளைடைவில் ஊழல், லஞ்சம் கட்டுப்பாடே இல்லாமல் வளர்ந்து விட்டது.

நடைமுறை எதார்த்தம்

இந்த இரு கட்சிகளை எதிர்க்க / அகற்ற உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, தற்போதைக்கு மக்கள் செல்வாக்கு உள்ள நபர் என்றால், அது ரஜினி மட்டுமே.

வேறு யாராலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியாது.

பல நல்ல இயக்கங்கள் இருக்கிறார்கள் ஆனால், அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு, ஆதரவு பெரியளவில் இல்லை.

இங்கு விருப்பத்தைப் பற்றிப் பேசவில்லை, நடைமுறை எதார்த்தத்தைக் கூறுகிறேன்.

எனவே, ரஜினி முதல்வராக வந்து தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.

ரஜினி வரவில்லை என்றால், அவர் அளவுக்கு மாற்றத்தைக்கொண்டு வரக்கூடிய சக்தியுள்ள பிரபலமான நபர் தற்போதும் இல்லை, எதிர்காலத்திலும் அதற்கான அறிகுறி இல்லை.

அதிர்ச்சி

இந்நிலையில் ரஜினி முதல்வர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்று கூறியது எனக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனென்றால், கலைஞர், ஜெ போன்ற Face Value க்கு தான் தமிழக மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதோடு புதிதாக ஒருவரை கொண்டு வந்து இவருக்கு வாக்களியுங்கள் என்றால், எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? மக்களையும் தவறாக நினைக்க முடியாது.

இதனால், ‘எப்படித் தேர்தலில் வெற்றி பெறுவது? மாற்றத்தைக் கொண்டு வருவது?‘ என்ற இயல்பான கவலை வந்தது.

தமிழகத்துக்கு விடிவுகாலமே இல்லையா, கடைசிவரை ஊழல் லஞ்சம் என்றே பார்த்து வாழ்க்கையை முடித்து விட வேண்டியது தானா?!‘ என்ற வெறுப்பே மேலிட்டது.

முதல் மூன்று வருடங்களாவது ரஜினி முதல்வராகத் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டுப் பின்னர், இந்தமுறைக்கு மாறிக்கொள்ளலாமே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

ரஜினியின் சரியான முடிவுகள்

ரஜினி எடுத்த பல முடிவுகள் தவறு என்று நினைத்த போதெல்லாம், அது சரி என்று ஆகி அசிங்கப்பட்டு நின்று இருக்கிறேன். ஒரு முறை இரு முறையல்ல, பல முறை.

ரஜினி இப்படிக் கூறி இருக்கலாம், இப்படிப் பேசி இருக்கலாம், இதைக் கூறி இருக்கக் கூடாது, இதை ஏன் கூறினார்?‘ என்று நினைத்ததெல்லாம் பின்னாளில் தவறாகி விட்டது.

அதாவது, ரஜினி கூறியது, கூறாமல் இருந்தது சரியாகி விட்டது.

எனவே, இந்த முறையும் என் எண்ணம் தவறாகப் போக வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

பொதுமக்கள் கொடுத்த ஆதரவு

ரஜினி இப்படிக் கூறியதும், பெரும்பான்மை ரசிகர்கள் மன பலம் இழந்து விட்டார்கள், நான் உட்பட.

பலருக்கு ரஜினி முதல்வராக முடியாதே என்ற ஏமாற்றம், எனக்குத் தமிழகத்துக்கு மாற்றம் கிடைக்காமலே போய் விடும் போல உள்ளதே என்ற கவலை.

ரஜினியை எதிர்ப்பவர்கள் சும்மாவே ஆடுவார்கள், தற்போது சலங்கையைக் காலில் கட்டியது போல நிலைமை ஆகி, செமையாக ஓட்டித் தள்ளினார்கள்.

மிக மோசமாகக் கிண்டலடித்தார்கள்.

ரஜினி பேசிய மார்ச் 12 ரசிகர்கள் தான் ஏமாற்றமானர்களே தவிர, பொதுமக்கள் அல்ல. ரஜினியின் முடிவுக்குப் பொதுமக்கள் ஆதரவு கொடுக்கத் துவங்கினார்கள்.

கோபமான, சோகமான மனநிலையில் இருக்கும் போது அதிகம் பேசாமல், அமைதியாக இருந்து, அன்று இரவு தூங்கி எழுந்தாலே மனது தெளிவாகி விடும்.

அதே தான் இந்த விஷயத்திலும் ஆனது. அடுத்த நாள் (மார்ச் 13) காலையில் நிலைமை மாறியது.

ரஜினியின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட ரசிகர்கள்

25 வருடங்களாக எதிர்பார்த்த ஒன்று நடக்காது என்று அறியும் போது எந்த ரசிகனும் வருத்தப்படவே செய்வான், ஏமாற்றமே இருக்கும்.

அவன் மனம் மாற, இம்முடிவை ஏற்றுக்கொள்ளச் சில காலம் எடுக்கலாம். இதுவே எதார்த்தம்.

ஆனால், பெரும்பான்மை ரசிகர்கள் அடுத்த நாளே (மார்ச் 13) ரஜினி முடிவுக்குத் தங்களை மனதளவில் தயார் படுத்திக்கொண்டார்கள்.

உண்மையிலே இது போன்ற ரசிகர்களைப் பெற்றதுக்கு ரஜினி கொடுத்து வைத்து இருக்க வேண்டும். தங்கள் ஏமாற்றத்தை மறைத்து, தலைவர் செய்வது நல்லதுக்கே என்று ஏற்றுக்கொண்டார்கள். அதைச் செயல்படுத்தவும் துவங்கி விட்டார்கள்.

இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மார்ச் 14 ம் தேதி முதல் தீவிரமாகி, மன்றத்தினர் ரஜினி கூறிய திட்டங்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கிளம்பி விட்டார்கள்.

ரஜினி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

முதல்வர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்றாலும் பரவாயில்லை, எங்களுக்கும் எந்தப் பதவியும் வேண்டாம் ‘நீங்க வந்தா மட்டும் போதும்’‘ என்ற நிலைக்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள்.

ஒருவேளை இந்த அதிர்ச்சி வைத்தியத்தைத் தான் ரஜினி எதிர்பார்த்தாரா என்று தெரியவில்லை.

ஏனென்றால், ஒருவேளை நாங்கள் நினைத்தது போல, ரஜினி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தாலும், அதன் பிறகு பதவிகளுக்குப் போட்டியாகத் தான் இருக்கும்.

முந்தைய கட்சிகளின் ஆட்சியை விடச் சிறப்பாக இருக்கலாம் ஆனால், சிஸ்டம் மாறி இருக்காது.

அடிப்படை அமைப்பு சரியாகாதவரை எதற்கும் நிரந்தரத் தீர்வு இல்லை.

தற்போது ‘பதவிக்காக அரசியலுக்கு வருவதென்றால், அப்படிப்பட்டவர்கள் எனக்குத் தேவையில்லை. அதோடு அவசியமில்லா பதவிகள் தேர்தலுக்குப் பிறகு நீக்கப்படும்‘ என்று நேரடியாகவே குறிப்பிட்டு தெளிவுபடுத்தி விட்டார்.

வேறுபாடு

பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறவங்களைக் கிட்டவே சேர்க்க மாட்டேன்‘ என்று 2017 டிசம்பர் 31 ரஜினி கூறியதற்கும் தற்போது கூறியதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளது.

முதலில் அப்படிக் கூறி இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால், தற்போது கூறியதற்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், ரஜினிக்கு கவலையில்லை.

ஏனென்றால், தற்போதே தெளிவாகக் கூறி விட்டார்.

நாட்டுக்கு நல்லது செய்யணும்னு எண்ணம் இருக்கிறவங்க மட்டும் வாங்க, மற்றவங்க வர வேண்டாம். பதவிக்காக வருகிறவர்கள் எனக்குத் தேவையில்லை‘ என்று கூறி விட்டார்.

எப்படி இருந்தாலும் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நல்லது பண்ண நினைக்கிறவங்க மட்டும் வாங்க போதும் என்று கூற நிச்சயம் மனதிடம் வேண்டும்.

நான் அவ்வளவு உழைத்தேன், இவ்வளவு உழைத்தேன், செலவு செய்தேன் அதனால் எனக்குப் பதவி வேண்டும்‘ என்று யாரும் நாளைக்குக் கேட்க முடியாது.

பொதுமக்களிடையே ரஜினியின் முடிவுக்கு வரவேற்பு காணப்படுகிறது.

தமிழகம் முன்னறேனும்

ரஜினியின் முடிவுக்குத் தற்போது மக்கள் கொடுத்துள்ள ஆதரவு, வரும் காலங்களில் அதிகரிக்கும், ரஜினி கூறிய எழுச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.

முன்பே கூறியது போல, எனக்கு ரஜினி முதல்வர் ஆக வேண்டும் என்பது விருப்பம் தான் ஆனால், அதை விட மிகப்பெரிய கனவு தமிழகம் முன்னறேனும், லஞ்சம் ஊழல் ஒழியனும், அனைவருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கனும் என்பதே.

எனவே, எனக்கு மாற்றம் வரணும்! அது ரஜினி முதல்வராகி வந்தாலும் சரி, அவர் தலைமையில் வந்தாலும் சரி. நல்லது எப்படி நடந்தால் என்ன?!

சிஸ்டம் மாறனும்

பதவி அழகு பார்ப்பது எனக்குப் பிடிக்காது‘ என்று கோபமாக ரஜினி கூறினார்.

தமிழ்நாட்டில் கெட்டுப்போய் உள்ள சிஸ்டம் மாறணுமா? அல்லது ரஜினி முதல்வர் ஆகணுமா? ரஜினி நல்லவர் என்று பலர் நம்புகிறார்கள் ஆனால், அவர் காலத்துக்குப் பிறகு என்ன ஆகும்?

சிஸ்டம் மாறினால் தான் தலைமுறை கடந்தும் அதே நிலை தொடரும்.

எனவே, இங்கே ரஜினி முதல்வர் ஆகிறாரா இல்லையா என்பதை விடச் சிஸ்டம் மாறனும் என்பதே முக்கியம்.

சிஸ்டத்தை மாற்ற முயற்சிக்காமல் ரஜினி வந்தாலும், மற்றவர்களைவிட இவர் நேர்மையான ஆட்சியைக் கொடுக்க முயற்சிக்கலாம் ஆனால், ரஜினியாலையே அவர் நினைத்ததை தற்போதுள்ள அரசியல் அமைப்பு முறையில் செய்ய முடியாது.

ரஜினி கூறியதே சரி 

ரஜினி சிஸ்டம் கெட்டு விட்டது என்று கூறிய போது பலர் கிண்டலடித்தார்கள் ஆனால், அதைத் தற்போது செயலாக்க, தைரியமாகத் துணிந்து விட்டார்.

இப்படித்தான் இருக்கும்.. வருகிறவர்கள் வாங்க‘ என்று கூறி விட்டார்.

திரும்ப ஒருமுறை ரஜினி விஷயத்தில் நான் நினைத்தது தவறானது எனக்கு மகிழ்ச்சியே.

இவர் கூறிய திட்டங்கள் தான் சரி, இதுவே சிஸ்டத்தை மாற்றும், எதிர்காலத் தமிழகம் வளமான தமிழகமாக மாற உதவும், வழக்கமான அரசியல் முறை மாறும்.

ரஜினியின் நல்ல நோக்கத்தை என்னைப் போலப் பெரும்பாலான ரசிகர்கள் புரிந்து கொண்டது போல, புரிந்து கொள்ளாத சிலரும் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள்.

ரஜினியே கூறியது போலத் தற்போதைய நிலையிலே அரசியல் முறை தொடர, ரஜினி எதற்கு?!

இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை

திரைப்படங்களில் ‘ஆகா! இப்படி இருந்தால் எப்படி இருக்கும்!‘ என்று நினைப்பவர்கள், அதையே ஒருவர் நிஜத்தில் கொண்டு வந்தால், பாராட்டாமல் கிண்டலடிக்கிறார்கள்.

ஊடகங்களிடம், ‘மாற்றத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்‘ என்று ரஜினி கூறினால், ரஜினி பேச்சின் Troll Video வை ஒளிபரப்புகிறார்கள். இவ்வளவு தான் நம் சிவப்பு விளக்கு ஊடகங்கள்.

இப்படியே அடுத்தவனின் முயற்சியைக் கிண்டலடித்து, நடக்காது, முடியாது என்று எதிர்மறையாகவே பேசித் தானும் கெட்டுத் தன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்காமல், மாற்றத்துக்குத் துணை புரியுங்கள்.

ரஜினி கூறியது போல ‘இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை‘.

இன்னும் தனது திட்டங்கள், கொள்கைகளை ரஜினி முழுமையாகக் கூறவில்லை. அவற்றைக் கூறும் போது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.

நம்ம மாநிலம் நல்லா வரனும், முன்னேறனும், லஞ்சம், ஊழல் ஒழியனும்ன்னு ரொம்ப ஆசைப்படுறேன். தயவு செய்து திரும்பப் பழைய நிலைக்கே கொண்டு போய் விட்டுடாதீங்க.

நல்லது நடக்கும்னு நம்புங்க! நடக்கும்..!!

தொடர்புடைய கட்டுரைகள்

Bye Bye சிங்கப்பூர்

நேர்மையாக நடந்த ஜமாஅத்துல் உலாமா சபையினர்

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?
1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here