அதிசயம் அற்புதம் ரஜினி | அலசல்

11
அதிசயம் அற்புதம் Rajini Press meet Announcement December 2020

ஜினி வரமாட்டார், ஏமாற்றுகிறாரெனப் பல்வேறு வசைகள் விமர்சனங்களுக்குப் பிறகு ‘அதிசயம் அற்புதம் நிகழும், ஜனவரியில் கட்சி துவங்கும் நாளை, 2020 டிசம்பர் 31 அறிவிக்கிறேன்’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினி

ரஜினி என்றாலே சர்ச்சைகள் கொடிகட்டி பறக்கும். வியப்பான செய்தி என்னவென்றால், மற்றவர்கள் ஊகத்திலேயே பேசி சர்ச்சையாக்கி விடுவார்கள்.

அரசியலுக்கு வருவதாக முதல் முறையாகக் கூறியது 2017 டிசம்பர் 31 தான்.

ஆனால், அவர் 25+ வருடங்களுக்கு மேலாகக் கூறி வருவதாக ஊடகங்கள் பிம்பத்தை ஏற்படுத்தி, அதை மக்களையும் நம்ப வைத்து விட்டார்கள். Image Credit

கடந்த 3 வருடங்களாக ‘இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை, ஆரம்பிப்பது போலத் தெரியவில்லை, ஆரம்பிக்க மாட்டார்‘ என்று ஆளாளுக்குப் பேசி, 2020 நவம்பர் 30 நடந்த மாவட்ட செயலாளர் சந்திப்பில் உச்சத்தைத் தொட்டது.

வரமாட்டாரோ! என்று ரசிகர்களே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனால், வழக்கம் போல அனைவர் ஊகத்தையும் பொய்யாக்கி உறுதி செய்தார்.

ரஜினி ரசிகர்கள்

கடந்த காலங்களில் ரஜினி ரசிகர்கள் எதிர்கொண்ட அவமானங்கள், ஏச்சுகள், கிண்டல்கள் அளவிடமுடியாத அளவுக்கு இருந்தது.

ரஜினியை கிண்டலடிக்காத, விமர்சிக்காத நபர்களே இல்லையெனும் அளவுக்கு ரசிகர்களைக் கேள்வி கேட்டார்கள். பதில் கூற முடியாத நெருக்கடியில் இருந்தனர்.

ரஜினி கட்சி துவங்க மாட்டார் என்பதில் துவங்கி பல்வேறு வகையான விமர்சனங்களைச் சமூகத்தளங்களில் செய்து வந்தனர்.

அனைத்தையும் ரஜினி என்ற ஒருவருக்காகத் தாங்கிக்கொண்டனர்.

ரஜினி வருவாரா மாட்டாரா?

இந்தக் கேள்வி தோன்றாத நபரை தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, என்ன பதில் சொல்வார் என்ற குறுகுறுப்பு.

ரசிகர்கள் உட்படப் பலரும் முழுமையாக நம்பிக்கை இழந்த போது, எனக்கு நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணங்கள் இருந்தன.

உறுதியான அறிவிப்பு இல்லாததால், பலரின் கிண்டலுக்கு ஆளாக வேண்டியது இருந்தது. அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மக்களின் நம்பிக்கை எதிர்பார்ப்பு

சிறுநீரகப் பாதிப்பால் சிகிச்சைக்காக ரஜினி சிங்கப்பூர் சென்ற போது உயிருக்கே உத்தரவாதம் இல்லையெனும் அளவுக்குச் சூழ்நிலை இருந்தது.

சிங்கப்பூர் மருத்துவமனை சிகிச்சையில் குணமாகி திரும்ப வந்தார்.

ரஜினி உடல்நலம் பெற்றதுக்குச் சிகிச்சை மட்டுமே காரணம் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயம் இல்லை.

சிகிச்சை முக்கியக் காரணம் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாதது பலரின் பிரார்த்தனை.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடாத சமயம் என்பதால், கட்சி சார்பாக இல்லாமல் அனைத்து மக்களின் அன்பிலும் இருந்தார்.

எனவே, எவருக்குமே எண்ணி பார்த்து இராத அளவுக்கு, ரஜினி குணமாகத் தங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டது போல பிரார்த்தனை செய்தார்கள்.

இதில் குறிப்பிட வேண்டியது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பிரார்த்தனை / அன்பு.

ரஜினி உயிருடன் இருப்பதற்கு முக்கியக் காரணம் தமிழக மக்களின் பிரார்த்தனையே! ரஜினியே மறுக்க மாட்டார்.

படங்களில் நடிக்கவா பிழைத்து வந்தார்?

ரஜினியை பற்றி நண்பர்கள் மூலமாகப் பல உறுதியான தகவல்கள் தெரிந்தவன் என்ற அடிப்படையில் கூறுவது, அவர் கடவுளின் ஆசி பெற்றவர்.

மிகையாகத் தோன்றினாலும் இது என் முழுமையான நம்பிக்கை.

நம்புவதும் நம்பாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

ரஜினி பிழைத்து மறு பிறவி எடுத்து வர கடவுள் உதவியது படங்களில் நடிக்க என்றா நினைக்கிறீர்கள்!

நிச்சயம் கிடையாது.

தமிழ்நாட்டுக்கு ரஜினி மூலமாக அதிசயம் அற்புதம் நடைபெறவே ரஜினி உயிருடன் வந்தார். இதில் துளி கூட எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

ரஜினி அரசியல் முடிவில் மாற்றம் இருந்ததா?

முடிவை எடுத்த பிறகு மாற மாட்டேன் என்று ரஜினி கூறினாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அல்லது கொரோனா போன்றவற்றால் அவர் அரசியலை தவிர்க்க நினைத்து இருக்கலாம்.

அரசியல் வேண்டாம் என்று ஒதுங்க முயற்சித்து இருக்கலாம்.

ஆனால், அவரே நினைத்தாலும் இதில் இருந்து விலக முடியாது. காரணம், இது இயற்கையின் நியதி. நடந்தே ஆக வேண்டும், ரஜினி தப்பிக்கவே முடியாது.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம்

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாயச் ச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

தமிழகத்துக்கு ரஜினி மூலம் நல்லது நடக்கும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள்.

ஊழல், லஞ்சம் ஒழிந்து / குறைந்து நல்ல சூழல் நிலவும் என எண்ணுகிறார்கள் குறிப்பாகப் பாதுகாப்பு கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

இவ்வளவு பேருடைய நம்பிக்கை எதிர்பார்ப்பு வீணாகி விடுமா?!

வாய்ப்பே இல்லையென்பது என் உறுதியான எண்ணம். எனவே, ரஜினியே வேண்டாம் என்றாலும், விதி அவரை இழுத்து வந்து விடும். இந்த மாற்றம் நடந்தே ஆக வேண்டும்.

ரஜினி அறிவித்ததால் இதைச் சொல்றீங்க என்று நினைப்பவர்கள் இருக்கலாம்.

கிடையாது.

இவற்றை Blog ல எழுதவில்லையே தவிர, நெருங்கிய நண்பர்களிடம் இதையே தான் கூறி இருந்தேன். எனவே, அவர்களுக்கு உண்மை தெரியும்.

எனவே, 2021 சட்ட மன்ற தேர்தலில் ரஜினி நிச்சயம் வெற்றி பெறுவார். இது நடக்கும்.

ஸ்டாலின்

மிகப்பெரிய கனவில் இருக்கும் ஸ்டாலினுக்கு, ரஜினி வரவு பேரிடியாக இருக்கும் என்பதில் துளி கூடச் சந்தேகமில்லை.

ஏனென்றால், ஸ்டாலினுக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் Do or Die தேர்தல்.

இதில் வெற்றிபெறவில்லையென்றால், இன்னும் பத்து வருடங்களுக்கு திமுக ஆட்சியைப் பிடிப்பது கடினம்.

தற்போதே ஸ்டாலினுக்கு 68 வயதாகி விட்டது.

தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாக, மிகச்சிறந்த கட்டமைப்புடன் இருந்தும் நம்பிக்கையில்லாமல் பிரஷாந்த் கிஷோர் வைத்து வெற்றியை பெற முயல்கிறார்.

வயதை குறைத்து காட்ட என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து வருகிறார். அவை மீம்களாக மாறி அவருக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது.

இதை ஸ்டாலினும் உணர்ந்தது போலத் தெரியவில்லை.

ரஜினி மீது கோபப்படுவது நியாயமா?

ரஜினியால் வெற்றி வாய்ப்புப் பாதிக்கப்படப்போகிறது என்ற கடுப்பு ஸ்டாலினுக்கு இருப்பது நியாயமானது தான் ஆனால், அதற்கு முன்பே கலைஞர் ஒரு காரணம்.

2016 சட்டமன்றத் தேர்தலில் என்ன காரணத்தால் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளாராக்காமல் கலைஞரே முதல்வர் வேட்பாளாரானார் என்று தெரியவில்லை.

நியாயமாக ஸ்டாலினை தான் கலைஞர் அறிவித்து இருக்க வேண்டும்.

ஒருவேளை அழகிரி பிரச்சனையைச் சமாளிக்கச் செய்து இருந்தால், அதுவே தற்போதைய நெருக்கடியான நிலைக்குக் காரணமாகி விட்டது.

அப்போதே ஸ்டாலினை அறிவித்து இருந்தால், திமுக க்கு வெற்றி வாய்ப்பு இருந்து, ஸ்டாலின் முதல்வராகி நிலைத்து இருக்கலாம் ஆனால், நடக்கவில்லை.

இதெல்லாம் கர்மா என்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

ஏன் கர்மா?

கலைஞர் பல நல்ல திட்டங்களை, செயல்களைச் செய்து இருந்தாலும் பல ஊழல்களையும், அநியாயங்களையும் செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.

கலைஞர் குடும்பத்தில், பொதுமக்கள் மீது நடந்த அத்துமீறல்கள் கர்மாவாக  ஸ்டாலின், உதயநிதி உட்பட அனைவரையும் பாதிக்கும்.

எம்ஜிஆர், கேப்டன் பேசியதை கிண்டலடித்த திமுக க்கு, ஸ்டாலினுக்கும் இதே போல நிலை வரும் என்று நினைத்து இருப்பார்களா?

இதெல்லாம் இயல்பாக நடந்தது என்று நினைக்கிறீர்களா?

சென்னை மேயராகச் சிறப்பான நிர்வாகத்தை வழங்கிய ஸ்டாலின் இப்படி மோசமாக உளறுவார் என்று எவரும் நினைத்து இருப்பார்களா?!

நான் சத்தியமாக நினைக்கவில்லை.

மாறுகிறார் என்றால், என்ன காரணம்?!

முன்பு செய்த பாவங்களின் சம்பளம். இதுவே இவரின் வெற்றிக்கும் ரஜினியால் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இதுவரை நடந்ததையும் இனி நடக்கபோவதையும் கணக்குப் போட்டுப்பாருங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும்.

சாதாரணமாகப் பார்த்தால் ஒவ்வொன்றும் கடந்து போகும் வழக்கமான நிகழ்வுகள். யோசித்துப் பார்த்தால், ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு புரியும்.

காரணமில்லாமல் காரியமில்லை.

இதையும் மீறி ஸ்டாலின் வெற்றி பெறுகிறார் என்றால், அது கலைஞர், ஸ்டாலின் புண்ணியம் மிச்சம் இருக்கிறது என்று மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்.

அதிமுக

அதிமுக பற்றிக் கூற ஒன்றுமில்லை. இவர்கள் திமுக போல ரஜினியை எதிர்ப்பதாகத் தோன்றவில்லை. சிலர் மட்டுமே விமர்சிக்கிறார்கள் அதுவும் கடுமையாக இல்லை.

சசிகலா வந்த பிறகு மாற்றம் இருக்குமா என்று வந்த பிறகு தான் தெரியும்.

என்ன நடந்தாலும் குறிப்பிடத்தக்க அதிமுக வாக்குகளும் ரஜினிக்குச் செல்லும்.

பாஜக

அனைவரும் ரஜினியால் திமுக க்குப் பாதிப்பு என்று பேசுகிறார்களே தவிர பாஜக பற்றிக் கூறவில்லை.

அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்பது போலத்தான் தெரிகிறது.

ரஜினி வருவதால், பெரும்பாலான பாஜக வாக்குகள் ரஜினிக்கு தான் வரும். பாஜக க்கு தான் வாக்கே இல்லையே! எங்கே இருந்து வரும்னு தானே யோசிக்கறீங்க 🙂 .

தற்போது பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் பாஜக குறிப்பிடத்தக்க வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது மறுக்க முடியாத உண்மை.

வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை ஆனால், கடந்த வருடத்தை ஒப்பிடும் போது 2020 வருடம் வரவேற்பு உள்ளது.

தமிழிசை மாநிலத் தலைவராக இருந்த போது தமிழக பாஜக நிலை பரிதாபமாக இருந்தது ஆனால், முருகன் தலைமையில் நல்ல முன்னேற்றம்.

முருகன் காரணமல்ல

திமுகவை இந்து சர்ச்சை காரணமாக எதிர்ப்பவர்கள் பாஜக க்கு வாக்களிப்பார்கள்.

ஆனால், தற்போது ரஜினி வந்ததால், பாஜக க்கு வாக்களிக்க நினைத்தவர்கள் பலர் ரஜினிக்கு தான் வாக்களிப்பார்கள்.

ஏனென்றால், பாஜக க்கு வாக்களித்தும் பயனில்லை காரணம், ஜெயிக்கிற குதிரைக்கு வாக்களித்துத் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றவே அனைவரும் விரும்புவார்கள்.

அதே ரஜினி வராமல் இருந்தால், வழக்கமான அளவை விடப் பாஜக க்கு வாக்குகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருந்தது.

எனவே, பாஜக க்கு வரப்போகிற வாக்கு ரஜினிக்கு செல்வதால், வேல் யாத்திரை உட்படப் பல முயற்சிகள் செய்தும் பாஜக அதே நிலையில் இருக்கவே வாய்ப்புள்ளது.

இந்தமுறை பாஜக வாக்கு குறைந்தால், அதற்கு ரஜினி வரவே காரணமாக இருக்கும். முருகன் திறமையின்மை என்ற காரணமல்ல. Its a coincidence.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட மாட்டேன் என்று 2020 மார்ச்சில் ரஜினி தீர்மானமாகக் கூறினார்.

கொரோனா பாதிப்புத் தெரியாத சமயத்தில் கூறியது.

அப்போது போதுமான காலம் இருந்தது. இன்னொருவரை அறிமுகப்படுத்தி மக்களிடையே கொண்டு செல்ல அவகாசம் இருந்தது.

ஆனால், தற்போது நான்கு மாதங்களே உள்ளன.

தேர்தல் வாக்குறுதியை மூன்று வருடங்களில் நிறைவேற்றவில்லையென்றால், ஆட்சியைக் கலைத்து விடுவேன் என்று ரஜினி கூறி இருந்தார்.

எனவே, ரஜினி கட்சி வெற்றிபெறும் பட்சத்தில் முதல் மூன்று வருடங்கள் ரஜினி முதல்வராக இருந்து தன் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இடைப்பட்ட காலத்தில் சரியான நபரைக் கண்டறிந்து அவரை முதல்வராக்கலாம்.

செயல் திறன் மிக்க நபர்

தற்போது புதிதாக ஒருவரை அறிவிப்பதை விட இடைப்பட்ட காலத்தில் செயல் திறனுடன் கூடிய மிகத் தகுதியான நபரை எளிதாகக் கண்டறியலாம்.

ஊகத்தின் அடிப்படையில் முதல்வர் வேட்பாளராக ஒருவரை தேர்வு செய்வதை விடத் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்வது எளிது, சரியானதும் கூட.

மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் காரணம், அவர்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும், திறமையாக நடந்து கொண்டாரா! தகுதியான நபரா! இல்லையா என்பது.

ரஜினியே முதல் மூன்று வருட முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துப் பரப்புரை செய்தால், நிச்சசயம் வாக்குகள் எண்ணிக்கை கூடும்.

ரஜினியின் பிடிவாதம் அனைவரும் அறிந்தது. முடிவெடுத்தால் மாற்ற மாட்டார் ஆனால், நடுவில் கொரோனா புகுந்து தாமதம் செய்து விட்டதே.

இது எதிர்பாராத சூழ்நிலை. எனவே, மேற்கூறியதை ரஜினி பரிசீலிக்கலாம்.

மக்களிடையே இதே நியாயமான காரணத்தைக் கூறலாம், மாற்றிச் சொல்கிறாரே என்று நினைக்க வாய்ப்புக் குறைவு.

மூன்று வருடங்கள் முடியாது என்றால், இரு வருடங்களையாவது பரிசீலிக்கலாம்.

இது அறிவுரையல்ல, பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

அதிசயம் அற்புதம்

ரஜினி வரமாட்டார் என்றார்கள், வந்து விட்டார். வெற்றி பெற மாட்டார் என்கிறார்கள், வெற்றி பெறுவார்.

வெற்றி பெற்றாலும் நல்ல ஆட்சியைத் தர முடியாது என்பார்கள், தருவார்.

குறை கூறுபவர்கள் கூறிக்கொண்டே தான் இருப்பார்கள், தடுக்க முடியாது.

ரஜினி வந்தால் நல்லதொரு மாற்றம் தமிழகத்தில் நடக்கும், ரஜினி கூறிய அதிசயம் அற்புதம் நிகழும் என்று முழுமையாக நம்புகிறேன்.

என்னைப்போலப் பலரின் நம்பிக்கை வீண் போகாது.

ரஜினியின் மீதுள்ள நம்பிக்கையை விட, ரஜினியை வைத்து இந்த மாற்றத்தை நடத்தப் போகும் இயற்கையின் மீது பெரும் நம்பிக்கையுள்ளது.

ஏனென்றால், அவரை இழுத்து வந்ததே விதி தான். எனவே. அதற்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று. சுருக்கமாக, ரஜினி மேலே கையைக் காட்டும் கடவுள்.

தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.

ரஜினியை குறைத்து மதிப்பீடு செய்பவர்களுக்குக் காலம் பதில் கூறும்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். அதிசயம் அற்புதம் நிகழும்!

தொடர்புடைய கட்டுரைகள்

ரஜினியின் அரசியல் முடிவு

தலைவர் ரஜினி

திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?

கொசுறு

ரஜினி மீது நம்பிக்கையுள்ளவர்கள் செய்ய வேண்டியது, தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாக்குச் சேகரிப்பது தான்.

ரசிகர்களால் மட்டுமே ரஜினி வெற்றி பெற முடியாது, நடைமுறையில் சாத்தியமும் இல்லை. இதில் ரஜினி தெளிவாக உள்ளார்.

ரஜினிக்கு வாக்களிக்கிறேன் என்பவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு இருந்தால், சரி செய்ய அறிவுறுத்த வேண்டும்.

2021 ஜனவரி 1 ம் தேதியன்று 18 வயது முடிந்தவர்களாக இருப்பவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.

2020 டிசம்பர் 15 க்குள் தங்கள் பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும். 2021 ஜனவரி 15 இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சரியாக உள்ளதா என்று பரிசோதிக்க https://www.nvsp.in/ தளம் சென்று Search in Electoral Roll ல் வாக்காளர் எண்ணை கொடுத்துத் தேடினால் தெரிந்து விடும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

11 COMMENTS

  1. கிரி, என்னுடைய தனிப்பட்ட பார்வையில் சினிமா துறையில் ரஜினி சாரின் உழைப்பும், திறமையும், வளர்ச்சியும் மதிப்பிட முடியாத பொக்கிஷங்கள்.. இவரின் குணநலனை பற்றி பல பேர் கூற , பல காணொளிகளை கண்டுள்ளேன்.. சினிமா துறையில் இன்னொரு ரஜினி சார் வருவாரா என்றால், அதற்கான வாய்ப்பு கடினம் என்பதை விட இல்லை என்பது தான் நிஜம், இவரை விட மற்ற நடிகர்களுக்கு பல திறமைகள் இருந்தாலும், இவர் தொட்ட உயரத்தை யாராலும் தொட முடியவில்லை என்பது தான் நிஜம்..ஒரு சச்சின், ஒரு தோனி, ஒரு ரஜினி சார்.. இது என்றைக்கும் மாறாது..

    ஆனால் அரசியலில் ரஜினி சார் நுழைவு தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை.. ரஜினி சாரின் வருகையை நான் எதிர்க்கவில்லை.. எந்த நடிகராக இருந்தாலும் என் நிலை இதுதான்..

    சினிமா என்பது மட்டும் அரசியலில் நுழைவதற்கான கருவி அல்ல.. முறையான கல்வி தகுதியும், ஆட்சி புரிவதற்கு தகுந்த அனுபவமும் யார் அரசியலில் நுழைவதற்கும் அடிப்படை தகுதியாக இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்.. இது போல மாற்றம் வருமா என்று தெரியவில்லை?? வந்தால் நன்றாக இருக்கும்..

    தற்போது சகாயம் சார் மாதிரி ஒருவர் வேண்டும்..நல்ல கல்வி தகுதி, முறையான பணி அனுபவம், தமிழ் பற்று, ஊழலுக்கு எதிரான மனிதர், நிதானமானவர் என எல்லா நிலைகளிலும் உயர்ந்து நிற்கிறார்..காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    (எனவே, 2021 சட்ட மன்ற தேர்தலில் ரஜினி நிச்சயம் வெற்றி பெறுவார். இது நடக்கும்.) கிரி நீங்க ரொம்ப நம்பிக்கையாக இருக்குறீங்க!!! அடுத்த மூன்று / நான்கு மாதம் மிகவும் சவாலான காலங்கள் .. ரஜினி சார் எவ்வாறு தனது திட்டத்தை வகுக்கிறார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. Sema Comedy script, good imagination.

    Karma is the highlight of whole content, The person who locks his marriage hall in the name of maintanence to avoid using it for corona purpose says he will give his life for People.

    Idiotic idol.

  3. தமிழருவி மணியன் ராசி இல்லை. சென்ற தேர்தலில் விஜயகாந்த்

    இந்த தேர்தலுக்கு ரஜினிகாந்த்.

    ரஜினிக்கு தமிழக மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஒரு வாய்ப்பு

  4. புற்றுக்குள் குடியிருந்த பாம்புகள் எல்லாம் இப்போது உயிர்வந்து வெளியே வந்துவிட்டன. இப்படி எல்லாம் ரஜினி சார் புகழ் பாட உங்களுக்கு எப்படித்தான் நா கூசவில்லையோ. தான் , தன் குடும்பம் என்றிருந்தவர் மோடி பாடி வெளியே வந்திருக்காரு. படத்தில பண்ணின கூத்துக்களை உண்மைன்னு நினைச்சு சில விசிலடிச்சான் குஞ்சுகள் புறப்பட்டிருக்கிறது. இது எங்கே போய் முடியும்னு இன்னமும் ஒரு 6 மாததில் தெரியும். மாத்துவோம். ஏமாத்துவோம்தான் சரியாக இருக்கும். இவ்வளவு காலம் ரஜினி சாருக்கு குரல் கொடுத்த உங்களை போன்றவர்களை விட்டுவிட்டு அர்ஜுனன் என்னும் முன்னாள் உபி/ சங்கியை முதன்மை நிலைய செயலாளராக நியமிப்பதெல்லாம் என்ன மாற்றத்தை கொண்டுவருமோ தெரியல. இத சொல்லுறதால என்னைய உபின்னு சொல்லாதீங்க. எடப்பாடிக்கு கூட தொண்டனாக இருக்கலாம் ஆனால் ஸ்டாலினுக்கு முடியல.

  5. @சிவக்குமார் 🙂

    @யாசின் பாப்போம் என்ன நடக்கிறது என்று. அனைவருக்குமே தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது தான். எப்படி நடந்தால் என்ன? நடக்கணும் அவ்வளவே.

    @Sivakumar Time will answer. Lets wait .

    @AR. SURIAMOORTHY “ரஜினிக்கு தமிழக மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு ஒரு வாய்ப்பு”

    ஏற்றுக்கொள்கிறேன் 🙂 .

  6. @Sam Anderson

    “புற்றுக்குள் குடியிருந்த பாம்புகள் எல்லாம் இப்போது உயிர்வந்து வெளியே வந்துவிட்டன.”

    புரியவில்லை. கொஞ்சம் விளக்குங்க.

    “இப்படி எல்லாம் ரஜினி சார் புகழ் பாட உங்களுக்கு எப்படித்தான் நா கூசவில்லையோ”

    நான் புகழ் பாடவில்லை. எனக்குத் தெரிந்ததை வைத்துக் கூறுகிறேன். உங்களுக்கு அப்படி தோன்றினால் என்ன செய்வது.

    “இது எங்கே போய் முடியும்னு இன்னமும் ஒரு 6 மாததில் தெரியும்.”

    இதைத்தான் நானும் கூறுகிறேன்.

    “இவ்வளவு காலம் ரஜினி சாருக்கு குரல் கொடுத்த உங்களை போன்றவர்களை விட்டுவிட்டு அர்ஜுனன் என்னும் முன்னாள் உபி/ சங்கியை முதன்மை நிலைய செயலாளராக நியமிப்பதெல்லாம் என்ன மாற்றத்தை கொண்டுவருமோ தெரியல.”

    ஹலோ பாஸ் எனக்கு என்ன தெரியும்.. 🙂 🙂 .

    ரஜினிக்கு ஆதரவா கட்டுரை எழுதினால் எனக்கு தகுதி இருப்பதாக அர்த்தமா! என்ன கொடுமைங்க.

    ரஜினி எனக்கு பிடிக்கும் அவ்வளவு தான்.. அதற்காக அவருக்காக கட்டுரை எழுதுகிறேன் அதற்கு பதவி தரவேண்டும் என்றால் எப்படி.

    அர்ஜுன மூர்த்திக்கு இருக்கும் அனுபவம் என்ன?! அவருடன் என்னைப்போன்றவர்களை ஒப்பிடுகிறீர்களே!

    ரசிகர்களை மட்டுமே நம்பி ரஜினி களத்தில் இறங்கினால் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. அப்படிப்பார்த்தால், பாபா, லிங்கா போன்ற படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்க வேண்டும்.

    மக்களின் ஆதரவு இல்லாமல் ரசிகர்களின் ஆதரவை வைத்து மட்டுமே எதையும் செய்ய முடியாது.

    அதற்கு ரசிகர்கள் அல்லாத மற்றவர்களின் ஆலோசனைகள், உதவிகள் தேவை. இதை 2020 மார்ச்சிலேயே கூறி விட்டார்.

    அவர் யாரையும் ஏமாற்றவில்லை, அனைத்தையும் வெளிப்படையாக கூறி ரசிகர்களின் விருப்பத்தின் பேரிலேயே தான் செய்கிறார்.

    விருப்பமில்லாதவர்கள் ஒதுங்கி விடலாம்.

    அனைவரையும் திருப்தி செய்வது தலைவன் பணியல்ல. எது சரி என்று தீர்மானித்து அதை நோக்கிப் பயணிப்பது.

    ரசிகர்களுக்கும் பொறுப்பு கொடுப்பார், அதை யாருக்கு எப்படி கொடுப்பது என்பதையும் அவர் அறிவார்.

    எனவே, எங்களுக்காக வருந்த வேண்டாம். எங்களுக்கு அவர் அரசியலுக்கு வருவதே மகிழ்ச்சி, பதவியல்ல.

    எனக்குத் தேவை தமிழ்நாடு முன்னேறணும், தமிழக மக்கள் நல்லா இருக்கணும். இது நடந்தா போதும், வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை.

    “இத சொல்லுறதால என்னைய உபின்னு சொல்லாதீங்க. எடப்பாடிக்கு கூட தொண்டனாக இருக்கலாம் ஆனால் ஸ்டாலினுக்கு முடியல.”

    நான் எதுக்குங்க சொல்லப்போறேன் 🙂 . நீங்க யாருக்கு வேணா ஆதரவா இருங்க. அது உங்க தனிப்பட்ட விருப்பம். நான் கூற என்ன உள்ளது.

    ரஜினி தன் கொள்கைகளை அறிவித்து, தேர்தல் வாக்குறுதியைக் கொடுக்கும் போது அவர் கூறுவது நியாயமாக, எதார்த்தமாக இருந்தால், அவருக்கு வாக்களிப்பதை நீங்கள் பரிசீலிக்கலாம் 🙂 .

    ரஜினி எதிர்ப்பைப் பிடிவாதமாகத் தொடர்ந்தே ஆக வேண்டிய கட்டாயமில்லை.

  7. மிகவும் சிறப்பானத்தொரு கட்டுரை பதிவு கொடுத்துள்ளீர்கள் கிரி. அருமை . உங்கள் கருத்தே என் கருத்தும். நான் ரஜனி ரசிகன் அல்ல. எந்த ஒரு நடிகர் சார்பும் இல்லாதவன் ஆனால் ரஜனியை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அவர் மிக நல்ல மனிதர் என்பதற்காகவே. ஆகையால் ஒரு நல்ல மனிதர் முதல்வராக வந்து சிறப்பான ஆட்சி தந்தால் வரவேற்கத்தக்க விடயம்தானே. கழகங்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இது மிகவும் முக்கியம். அது ரஜனி ஒருவரால் மட்டுமே செய்யமுடியும். உங்களை மாதிரி நானும் இயற்கையை நம்புகிறவன். எனவே ரஜனி அவர்கள் சொன்ன மாதிரி சிஸ்டத்தையே மாற்றி காட்டுவாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுவரை நம்பிக்கை வைத்து காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை

  8. @விபுலானந்தன்

    தற்போதைக்கு மாற்றத்தைக் கொண்டு வர உள்ள வாய்ப்புகளில் ரஜினி தான் முதன்மையானவர். இதனாலயே இவரை குறிப்பிடுகிறேன்.

    எனக்கு ரஜினி தான் வரவேண்டும் என்பதில்லை. தமிழகத்தை முன்னேற்ற நினைக்கும் புதியவர் எவராக இருந்தாலும் ஒப்புதலே.

    தற்போதைய நிலைக்கு ரஜினி மட்டுமே வாய்ப்புள்ளவர். எனவே, அவரைக் குறிப்பிடுகிறேன்.

    நான் என் கணக்கில் கூறுகிறேன், சிலருக்கு ஏற்புடையதாக இல்லை. காலம் பதில் கூறட்டும்.

    உங்க நம்பிக்கைக்கு நன்றி 🙂

  9. “ரஜினி வரமாட்டார் என்றார்கள், வந்து விட்டார். வெற்றி பெற மாட்டார் என்கிறார்கள், வெற்றி பெறுவார்.வெற்றி பெற்றாலும் நல்ல ஆட்சியைத் தர முடியாது என்பார்கள், தருவார்.” -கிரி.

    தொழில்நுட்ப அறிவு மிக்க கிரி அவர்கள், அரசியல் அறிவையும் வளர்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

  10. எனக்குத் தெரிந்தது இந்த அரசியல் தான். நீங்க சொல்ற அரசியல் அறிவு யாரிடம் கற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.

    யார் செய்த அரசியல் பார்த்து அரசியல் கற்று கொண்டீர்கள் என்று தெரிவித்தால், அதைப் பின்பற்றிக் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!