அந்த ஐந்து விழாக்கள் கட்டுரையை எழுத முக்கியக்காரணம், கமல் அவர்கள் விகடனில் எழுதி வரும் தொடர் குறித்த தட்ஸ்தமிழ் தள செய்தி கருத்துப் பகுதியில்,
“ரஜினிக்கு என்ன தெரியும்? எழுதத் தெரியுமா? அரசியல் பற்றிய கருத்துகள் தெரியுமா? அதைச் சுவாரசியமாகக் கூறத் தெரியுமா?” என்று அதோடு சில அநாகரீக கருத்துகளையும் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.
ரஜினி பற்றிப் பலர் அறியாத செய்திகளை, அவரின் ஜனரஞ்சகமான எழுத்துத் திறமை பற்றித் தெரிந்து கொள்ளாமலே அவரை விமர்சிப்பது நியாயமற்றது.
ரஜினி என்றாலே எதையும் யோசிக்காமல் திட்டுவது, விமர்சிப்பது வழக்கமாகி விட்டது.
அந்த ஐந்து விழாக்கள்
எனவே, ரஜினி துக்ளக்கில் எழுதிய “அந்த ஐந்து விழாக்கள்” என்ற தொடர் குறித்துத் தெரியாதவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று ரசிகனாக எழுதியதே இக்கட்டுரை.
ஐந்து விழாக்கள் எவை?
ஃபிலிம் சேம்பர் – தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை “ஜெ” அவர்கள் முதல்வர் ஆனதை ஒட்டி “ஜெ” க்கு நடத்தியப் பாராட்டு விழா.
“ஜெ ஜெ ஃபிலிம் சிட்டி” துவக்க விழா
பெஃப்சி விழா
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு ஃபிரான்ஸ் அரசு கொடுத்த “செவாலியே” விருதுக்குத் திரையுலகம் நடத்திய பாராட்டு விழா
பாட்ஷா திரைப்படத்தின் வெற்றி விழா
ரஜினியின் எளிமையான பேச்சு
ரஜினி இத்தொடர் முழுக்க ஜனரஞ்சக எழுத்தில் அசத்தலாகத் தன்னுடைய எண்ணங்களைத் தயக்கமில்லாமல், தெளிவாக, பயமில்லாமல் கூறியிருக்கிறார்.
ரஜினிக்குத் தன்னைச் சிறுமைப் படுத்தி மற்றவர்களை உயர்த்திப் பேசுவது வழக்கமானது. இத்தொடரின் துவக்கமும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது.
பாட்ஷா பட விழா முடிந்த சமயங்களில் பல சர்ச்சைகள் ஏற்பட்டன, அப்போது பத்திரிகையாளர் “சோ” ரஜினிக்கு ஆலோசனைகள் கூறி அவருக்குப் பக்க பலமாக இருந்து இருக்கிறார்.
எனவே, தன்னுடைய கருத்தை தெரிவிக்கவும், வாரப்பத்திரிகை ஆகி இருக்கும் துக்ளக் இதழுக்கு உதவி செய்யவும் ரஜினி நினைத்து அவருடைய துக்ளக் இதழில் எழுத நினைத்து இருக்கிறார்.
“சோ”வே கேட்பார் என்று எதிர்பார்த்து, “சோ” எதுவும் கேட்காததால், பொறுமை இழந்து தானே அவரிடம் கேட்டு இத்தொடரை எழுதியதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டு இருக்கிறார் 🙂 .
ரஜினி ஏன் விமர்சனங்களுக்குப் பதில் கூறுவதில்லை?
பலருக்கும் இருக்கும் இக்கேள்விக்கு ரஜினி கூறும் விளக்கம், நடைமுறை எதார்த்தமாக உள்ளது.
“ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்வது என்று ஆரம்பித்தால், எல்லாவற்றுக்கும் பதில் கூறியாக வேண்டும். இது நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய விசயமும் அல்ல.
ஒரு சிலதுக்கு மட்டும் மறுப்போ பதிலோ தந்து விட்டு மற்றவற்றை விட்டுவிட்டால், ஒருவேளை இவையெல்லாம் உண்மையில்லையோ என்ற சந்தேகம் மற்றவர்களுக்கு வரும்.
எனவே, விமர்சனங்களைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். மறுப்புகள், பதில்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விடுவேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது தெரிகிறதா? ஏன் மற்றவர்கள் பேசியே வீணாகப் போகிறார்கள், இவர் பேசாமலே மரியாதையைத் தேடிக்கொள்கிறார் என்று!
ரஜினி கூறியதில் எனக்கு முழு உடன்பாடு.
இதைத் தான் “காது கேட்காத தவளை” கதையாகச் சந்திரமுகி விழாவில் கூறினார் போல.
வாழ்க்கை கருத்துகள்
வாழ்க்கை பற்றிய ரஜினியின் கருத்துகளுக்கு நான் அதி தீவிர ரசிகன்.
என் வாழ்க்கையில் நான் செம்ம அடி வாங்கி இருப்பதால், இவர் கூறும் அனைத்துமே எனக்குப் பொருந்திப் போகிறது. அதோடு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது.
உதாரணத்துக்குப் பின்வருவனவற்றைப் படித்துப் பாருங்கள். ரஜினிக்கா எழுதத் தெரியாது?! 🙂
“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒரு நாள் உதவாமற்போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கை விட்டுவிட மாட்டான்.
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதே போல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.
அது தான் இயற்கை என்று சொல்லும் போது, அதில் பல அம்சங்களும் அடங்கி இருக்கும். கஷ்டம் – சுகம்; பாவம் – புண்ணியம்; நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல வகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு.
வாழ்க்கையில் கஷ்டத்தையும் ஒரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும்.
நீங்கள் ஓர் ஏர் கண்டிஷ்ண்ட் அறையிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை தெரியாது ஆனால், சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறது ஏ.சி. அறைக்குப் போனால், அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.
ஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன், கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான்.
கஷ்டம் சுகம்
நமக்குச் சுகமான அனுபவங்கள் வரும்போது நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறுத்துப்போய் விடுகிறோம்.
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு இன்பம் கிட்டும் பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம்.
அதே போல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்தக் கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம்.
வாழ்க்கையில் இரண்டும் கலந்து தான் இருக்கும். அதுதான் நல்லதும் கூட.“
என்று கூறி இருக்கிறார், அவ்வளவும் நடைமுறை எதார்த்தம்.
பிரச்சனைகளைத் தீர்க்கும் விதம்!
“பிரச்சனைகள் வரும் போது, அது பணப் பிரச்சனையோ, மன நிலையைப் பாதிக்கக்கூடிய வேறு ஏதாவது பிரச்சனையோ என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் மனம் உடைந்து, அந்தக் கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை.
அந்தக்கஷ்டத்தைத் தீர்க்க உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படித் தீர்வு காண முடியும் என்று யோசிக்க வேண்டும்.
அந்தப்பிரச்சனை எப்படி உருவானது? ஏன் உருவானது? யாரால் உருவானது? அதில் நம் தவறு என்ன? மற்றவர்கள் தவறு என்ன? என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சனை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்து விடும்.
தவறு நம்முடையதாக இருந்தால், மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடையதாக இருந்தால், அதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க நூறு பொய்கள் சொல்ல வேண்டியது போல, ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் பல கஷ்டங்கள் உருவாகி விடும்.“
என் தளத்தை தொடர்ச்சியாக படித்து வருகிறீர்கள் என்றால், மேற்கூறிய ரஜினியின் கருத்தின் பாதிப்பு என் எழுத்திலும் இருப்பதைக் கவனித்து இருப்பீர்கள்.
அப்பாக்கு பிறகு நான் அதிகம் வாழ்க்கையைக் கற்றுக்கொண்டது ரஜினியிடமே!
ரஜினியைப் பார்க்க வேண்டும் என்ற “ஜெ”
1978 ல் புரட்சிதாசன் என்ற தயாரிப்பாளர் / இயக்குநர் “நான் போட்ட சவால்” என்ற படத்தை ரஜினியை நாயகனாக வைத்து இயக்க திட்டமிட்டு இருந்து இருக்கிறார்.
அதை ரஜினியிடம் கூறி, நாயகி யார் தெரியுமா? “ஜெயலலிதா” என்று தெரிவிக்க, ரஜினி வியப்படைந்து மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்.
அந்தச் சமயத்தில் “ஜெ” மிகப் பிரபலமான நடிகை, ரஜினி அறிமுக நாயகன் மட்டுமே!
புரட்சிதாசன் ரஜினியை, “உங்களை ஜெயலலிதா சந்திக்க விரும்புகிறார் எனவே, அவரைச் சென்று பாருங்கள்” என்று கூற ரஜினிக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு.
நடிகரைத் தானே சந்திக்க வருவார்கள், இவர் நடிகையைச் சந்திக்கக் கூறுகிறாரே! என்று நினைத்துப் பின் எதற்கு என்று கேட்க, படத்தில் நடிக்கும் முன்பே பேசி ஒரு புரிதலை ஏற்படுத்திக்க விரும்புகிறார் என்று கூறுகிறார்.
பின் ரஜினி, “ஜெ” போயஸ் தோட்ட வீட்டுக்கு செல்ல, ரஜினியை அவருடைய உதவியாளர் என்று நினைத்து தொடர்ந்து நிருபரிடம் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார் “ஜெ”.
அங்கே இருந்த இயக்குநர் ஸ்ரீதர் தர்மசங்கடமாகி ரஜினியை அறிமுகப்படுத்த, வியப்படைந்த “ஜெ”…
“ரஜினிகாந்தா..! ஓ மை காட்..! படத்தில் வயதானவரா இருந்தீங்க ஆனால், நேரில் இளமையா இருக்கீங்க” என்று கூறியதைக் கேட்டு ரஜினி கூச்சமாகியிருக்கிறார் 🙂 .
பின்னர் “ஜெ” கதாநாயகிக்கு கதையில் முக்கியத்துவம் இல்லை என்று கூறி விலகி, இயக்குநர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரஜினியை தொலைபேசியில் அழைத்து வேறு ஒரு பொருத்தமான கதையில் எதிர்காலத்தில் நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இதற்காகவே இப்படத்தைப் பார்த்தேன், நல்லவேளை “ஜெ” நடிக்கவில்லை 😀 .
“ஜெ” ரஜினி சந்திப்பு
“ஜெ” முதல்வர் ஆன பிறகு, ரஜினி அனுமதிபெற்று “ஜெ” வை அவரது வீட்டில் தனது மனைவியுடன் சந்தித்து வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
தமிழக மக்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள் எனவே, அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்யுங்கள், உங்களின் நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை, என்று கூறியதற்கு “ஜெ” வும் தான் அதை நிறைவேற்றுவேன் என்று பதிலளித்து இருக்கிறார்.
வெளியே வரும் போது “ஜெ” வீட்டில் பணி புரிபவர்கள் ரஜினியுடன் நிழற்படம் எடுக்க விரும்ப, ரஜினி சங்கடத்துடன் இருந்து இருக்கிறார்.
இதைக்கண்ட “ஜெ” “என்ன தயங்குறீங்க! அவர்களுடன் படம் எடுத்துக்குங்க, பார்த்தீர்களா உங்களுக்கு எங்கள் வீட்டிலேயே எவ்வளவு ரசிகர்கள்!” என்று கூறி சிரித்து இருக்கிறார்.
இது குறித்துத் தனது மனைவி லதாவுடன் கலந்துரையாடி இருக்கிறார்.
எம்ஜிஆர் இல்லையென்றால் ராகவேந்திரா மண்டபம் இல்லை
ராகவேந்திரா மண்டபம் திறப்பு விழாவுக்கு “ஜெ” வை அழைத்து இருக்கிறார்.
“ஜெ” ரஜினியின் அழைப்பிதழில் உள்ள மண்டபத்தின் படத்தை ரசித்துக் கொண்டு இருந்து இருக்கிறார்.
இந்நிகழ்வு எனக்கு ரஜினியின் முக்கியமான படத்தின் ஒரு காட்சியை நினைவுபடுத்தியது. எதுன்னு கண்டுபிடிங்க பார்ப்போம் 😉 .
இந்நேரத்தில் சசிகலாவும் வர, அவரையும் ரஜினிக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் 😀 .
எம்ஜிஆர் மீது ரஜினி பெரும் மரியாதை வைத்து இருக்கிறார்.
இந்த மண்டபம் கட்டும் போது ரஜினிக்குப் பிரச்சனைகள் வந்துள்ளது. இதை எம்ஜிஆர் தான் தீர்த்து வைத்துள்ளார்.
எம்ஜிஆர் அவர்கள் இல்லையென்றால், இந்த மண்டபமே இல்லை, மண்டபத்தைக் கட்டியே இருக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறி உள்ளார்.
எம்ஜிஆர் அவர்களின் உதவியை மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.
ரஜினி குறைந்த முதலீட்டில் மண்டபம் கட்ட முடிவெடுத்து இருந்த நிலையில், எம்ஜிஆர் அவர்கள் தான் ரஜினியிடம் “பெரிதாகக் கட்டுங்கள், நான் பணம் தருகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
கலைஞரும் ரஜினியும்
மண்டப திறப்பு விழா நடந்த சமயத்தில் முதல்வராக இருந்தவர் கலைஞர் அவர்கள். கலைஞரை விழாவுக்கு அழைக்க ரஜினி நினைத்தது, நண்பர்கள் கூறிய ஆலோசனை, கலைஞரை அழைத்த விதம் எல்லாமே சுவாரசியம்.
கலைஞர் தன்னுடைய வேலைப் பளுவிலும் திறப்பு விழாவுக்குப் பாண்டிச்சேரியில் இருந்து வந்து கலந்து இருக்கிறார்.
மண்டபத்தை கட்டியதை பற்றி மேடையில் கூறிக்கொண்டே, பேச்சு வாக்கில் கலைஞருக்கு நன்றி கூற ரஜினி மறந்து விட்டார்.
இதற்கு ரஜினி கலைஞரிடம் மன்னிப்பு கேட்டதும் அதற்குக் கலைஞரின் பதிலும் அவர்களின் பெருந்தன்மையைக் காட்டியது.
வதந்தியும் எம்ஜிஆர் விசாரிப்பும்
எம்ஜிஆர் அவர்களுக்கு ரஜினி மீது ஒரு வதந்தி காரணமாக வருத்தம் ஏற்பட்டது. இதனால் ரஜினியை எம்ஜிஆர் அவர்களே அழைத்து நேரில் விசாரித்துத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
“எம்ஜிஆர் நினைத்து இருந்தால், என்னை மிரட்டி இருக்கலாம், என்ன வேண்டும் என்றாலும் செய்து இருக்கலாம், அவருக்கு முன் நான் தூசு ஆனால், நேரிடையாகத் தெளிவுபடுத்தி எனக்கு ஆலோசனை வழங்கினார்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
வதந்தியை மற்றவர்களிடம் விசாரிப்பதை விடச் சம்பந்தப்பட்டவரையே அழைத்துப் பேசி விட்டால், பிரச்சனைகள் பரவாது என்று குறிப்பிடுகிறார்.
இந்த விசயத்தைத் தான் இன்னும் பலர் ரஜினியை எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்து விட்டார் என்று கூறிக்கொண்டு உள்ளார்கள்.
ஒரு வதந்தியை சரி செய்யப் போய் அதனால் இன்னொரு வதந்தி சுற்றிக்கொண்டு உள்ளது 🙂 .
ரஜினி கூறியதை வைத்துப் பார்த்தால், எம்ஜிஆர் அவர்கள் ரஜினியிடம் மிக அன்பாக இறுதிவரை நடந்து கொண்டுள்ளதாகத் தான் தோன்றுகிறது. நல்ல ஆலோசகராகவும் இருந்து இருக்கிறார்.
“ஜெ” ரஜினி மோதல்
ரஜினியைப் பற்றித் தெரியாத தற்காலத் தலைமுறையினர் இத்தொடரைப் படித்தால், ரஜினி எவ்வளவு தைரியமாக நடந்து கொண்டு இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியும்.
“ஜெ”வுடன் நடந்த மோதல் அனைத்துமே நேரிடையாக மேடையிலேயே நடந்து இருக்கிறது. அப்போதே “ஜெ” குறித்துப் பேசவே அனைவரும் பயந்த காலம்.
ரஜினிக்கு தைரியமில்லை என்று கூறுபவர்கள் அனைவருமே இது பற்றி எதுவுமே தெரியாதவர்கள் அல்லது தெரிந்துமே தெரியாதது போல நடந்து கொள்பவர்கள்.
இதையெல்லாம் மற்றவர்கள் கற்பனையிலும் நினைக்க முடியாது. குறிப்பாகச் “செவாலியே விருது” விழாவில் ரஜினி பேசியது எல்லாம், உண்மையிலேயே தைரியமான நிகழ்வு.
நல்லதை பாராட்டவும், தவறை சுட்டிக்காட்டவும் என்றுமே ரஜினி தயங்கியதில்லை.
நபரைப் பார்த்து தன் கருத்தைக் கூறாமல், பிரச்சனை மற்றும் சம்பவத்தை வைத்து மட்டுமே கூறி இருக்கிறார். கலைஞரை “ஜெ” முன்பு பாராட்ட ரஜினிக்கு மட்டுமே இதுவரை முடிந்துள்ளது.
சமீபத்தில் நடந்த “நடிகர் திலகம் மணிமண்டபம்” திறப்பு விழாவில் கூட, மற்றவர்கள் தவிர்த்த கலைஞர் அமைத்த சிலையைப் பற்றி எக்கவலையும் இல்லாமல் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
மாறிய “ஜெ”
முதல்வராக பதவியேற்ற போது, “ஜெ” அணிந்து இருந்த கோட்டுக்கு ரஜினி யோசித்த விதம் அபாரம்! அதை விட அதற்கு இவர் கொடுக்கும் விளக்கம் ரொம்ப சிறப்பு 🙂 .
அதோடு அங்கு நடந்த சம்பவங்களை அவர் கூறுவது, ஒரு சாதாரண பொது ஜனம் எப்படி நினைப்பாரோ, என்ன என்ன கேள்விகள் எல்லாம் நம் மனதில் தோன்றுமோ அவை அத்தனையும் அவர் கூறும் போது, படிக்கும் நமக்கு வியப்பாக இருக்கும்.
தென்னிந்திய வர்த்தக சபை விழாவில் “ஜெ” வரும் போது சில நிமிடங்களுக்கு முன்பே அனைவரும் எழுந்து நிற்க, ரஜினிக்கு ஒரே வியப்பு! இன்னும் முதல்வர் வரவே இல்லையே ஏன் அனைவரும் இப்போதே எழுந்து நிற்கிறார்கள்?! என்று நினைக்கிறார்.
அமைச்சர்கள் அனைவரும் ரஜினியையே கவனிக்க (எழுகிறாரா இல்லையா என்று) அதற்கு அவர் கூறும் விளக்கமும் அவர் நடந்து கொண்டதும் ரஜினி எப்படிப்பட்டவர் என்று கூறுகிறது.
“ஜெ” ரஜினி மோதல் பகுதி மிகச் சுவாரசியமாக உள்ளது 🙂 .
இத்தொடரில் தெரிந்து கொண்டது, ரஜினி வன்மம் வைத்து யாரிடமும் நடந்து கொள்ளவில்லை. சூழ்நிலைகளைப் பொறுத்தே கருத்துகளைக் கூறி உள்ளார்.
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திக் கெத்து காட்டிய ரஜினி
இன்னொரு வதந்தி ரஜினி பற்றி இன்றும் உலவுகிறது.
ரஜினி தனது போயஸ் தோட்ட வீட்டுக்குச் செல்லும் போது “ஜெ” பாதுகாப்பை காரணம் கூறி காவலர்கள் தடுத்ததால், காரில் இருந்து இறங்கி வெளியே வந்ததால், கூட்டம் கூடி நெரிசல் ஆனதால், காவலர்கள் ரஜினியை அனுமதித்ததாக.
ரஜினி அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என பொசுக்குன்னு கூறி விட்டார் 🙂 .
“போக்குவரத்து நெரிசலில் 30 நிமிடங்கள் காத்திருந்தது உண்மை தான் ஆனால், பத்திரிகைகள் கூறியது போல நான் நடந்தே எல்லாம் வீட்டுக்குச் செல்லவில்லை, காவலர்கள் என்னை மட்டும் போகச்சொல்லி விட்டார்கள் என்பதில் உண்மையில்லை“
என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதில் இருந்து ரஜினி நடந்ததை மட்டுமே தொடரில் விவரித்து இருக்கிறார் என்று தெரிகிறது.
தமிழகமும் தமிழக மக்களும்
ஒன்றை மட்டும் திட்டவட்டமாகக் கூறுகிறேன்.
ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில், மனதில் தான் இருக்கிறார்.
நான் எத்தனையோ வெளிநாடுகளைச் சுற்றிப்பார்த்து இருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்து இருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கின்ற கருணை, மனித நேயம், அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது.
அதனால் தான் நம்முடைய தமிழ்நாட்டை “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்று சொல்கிறார்கள்.
ஒருவனிடம் திறமை இருந்து நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருக்கிறது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.
என்று கூறி முடித்து இருக்கிறார்.
முடிவுரை
சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன். கூறாமல் விட்ட சுவாரசியங்கள் ஏராளம். இதுவே மிகப்பெரிய கட்டுரையாக வந்து விட்டது.
புதிதாக இக்கட்டுரையைப் படிப்பவர்கள் ரஜினியின் தெரியாத பக்கங்களையும், தற்போதைய தலைமுறையினர் ரஜினியின் “இன்னொரு முகத்தை”யும் தெரிந்து கொள்ள வாய்ப்பு.
“அந்த ஐந்து விழாக்கள்” முழுமையான PDF கட்டுரை.
பொதுவில் வந்துவிட்ட எவரையும் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் நம்மால் விமர்சிக்கப்படும் நபரைப் பற்றி விமர்சிக்கும் முன் முழுமையாக அறிந்து கொள்ளும் கடமையும் நமக்குண்டு. [ வசன உதவி நன்றி MM அப்துல்லா 🙂 ] .
நான் எழுதியதில் எனக்கு மிக மனநிறைவைக் கொடுத்த கட்டுரைகளில் ‘அந்த ஐந்து விழாக்கள்’ கட்டுரையும் ஒன்று.
நன்றி
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ரஜினி தனது மகள் திருமணத்திற்கு ரசிகர்களுக்கு தனியாக விருந்தளிப்பேன் என்று சொல்லியிருந்தார். அது நடந்ததா? உங்கள் கருத்தென்ன?
சூப்பர் கேள்வி கிரி ப்ளஸ் replay
எம்ஜிஆர் விடயத்தில் ரஜினி கூறியிருப்பது பொய்.
அப்போது என்ன நடந்தது என்பது தமிழகத்தில் இருந்த பலர் அறிந்தது.
கிரி, வாழ்வின் அடிநிலையிலிருந்து, வாழ்வின் உயரமான நிலைவரை பார்த்தவர் சூப்பர் ஸ்டார். பல சூழல்களில் ஏற்ற இறக்கங்களை பார்த்து இருப்பவர். இவ்வுலகம் நன்றாக வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். எல்லோரையும் கேட்டு கொண்டு தான் பயணம் செய்ய முடியும் என்றால் நம்முடைய இலக்கை என்றுமே அடைய முடியாது.
என்னை பொறுத்தவரை வாழ்வின் கடினமான நிலையிலிருந்து உயர்ந்தவர்களும் சரி, உயரத்திலிருந்து வீழ்ந்தவர்களும் சரி, சாதித்தவர்களே!!! அவர்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து நமக்கு தேவையானதை எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் வழக்கம். யாரையும் விமர்சிக்க கூடாது என்பது என் எண்ணம்.
“ஒருவனிடம் திறமை இருந்து நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருக்கிறது என்று சொன்னால், அவனுடைய மொழி பற்றியோ, ஜாதி பற்றியோ, எதைப் பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்” சத்தியமான வார்த்தைகள். பகிர்வுக்கு நன்றி கிரி.
@ஜோதிஜி
இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி இருக்கிறேன் நீங்க “அண்ணனுக்கு ஒரு ஊத்தாதாதாதாப்பம்” ரேஞ்சுக்கு சம்பந்தமே இல்லாத கேள்வியை கேட்டு இருக்கீங்க 😀 😀
ரஜினி இதை கூறிய பிறகு இத்தனை வருடங்களில் ஒரே ஒரு ரசிகன் கூட என்னை இது போல கேட்டதில்லை ஆனால், மற்றவர்கள் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள் ஏன்?
ரஜினி விருந்து போட்டால் என்ன? போடாட்டி என்ன? இது ரஜினிக்கும் ரசிகனுக்கும் உள்ள புரிதல். இதை தெரிந்து மற்றவர்களுக்கு என்ன ஆகப் போகிறது?
எனக்கு இதன் காரணத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் 🙂 .
@லாலா நீங்க கழுகாரை விட பெரிய ஆளா இருப்பீங்க போல 🙂 . கழுகார் தான் யார் என்ன பேசினாலும் பக்கத்துல இருந்து கேட்ட மாதிரியே கட்டுரை எழுதுவாரு 🙂
அது மாதிரி அங்கே என்ன நடந்தது என்று எம்ஜிஆருக்கும் ரஜினிக்கும் அங்கு இருந்த மற்றவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று.
லாலா வை பற்றி தவறாக எதையாவது சொல்லி .. ஊரெல்லாம் இப்படி சொல்றாங்களே..அப்ப அது உண்மை தான் என்று கூறினால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்!
@யாசின்
“அவர்களின் வாழ்க்கை முறைகளிலிருந்து நமக்கு தேவையானதை எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் வழக்கம்”
சரியா சொன்னீங்க.
நான் வணங்கும் ஒரே கடவுள் ரஜினி ரஜினி ரஜினி அவர்கள் தான்.
மாமனிதன்
ஓகே ஆஸ்ரமம் ஸ்கூல் ரெண்ட் 1 கோடி என ஆச்சி
சிறப்பான பதிவு .உங்களுடைய நேர்மை எனக்கு உங்களிடத்தே மதிப்பையதிகரிக்து.