ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா வெளியாகி வைரலாகி உள்ளது. Image Credit
ரஜினி
தலைவர் பற்றி எழுதி நாட்களாகிறது. அரசியலுக்கு வருவதாக இருந்த போது எழுத ஏதாவது இருந்தது ஆனால், விலகிய பிறகு படம் தவிர எழுத வேறு இல்லை.
அக்குறையை ரஜினின்னா மட்டும் பொங்கும் போராளிகள் போக்கிவிட்டார்கள். பாடல் வெளியான முதல் நாளிலிருந்து வித விதமாக எழுதி வருகிறார்கள்.
அடேங்கப்பா! சமூகத்துக்காக எப்படியெல்லாம் கவலைப்படுகிறார்கள் என்று அவர்கள் முன்னர் எழுதியதை படித்தால், அப்படியே மாறாக உள்ளது 🙂 .
ஒரே தமாசு தான் போங்க.
காவாலா
இயக்குநர் நெல்சன் மற்றும் படத்தில் நடித்தவர்கள் பலர் ஏற்கனவே இது வழக்கமான படமில்லை, ரஜினி நடித்ததிலேயே வித்தியாசமானது என்று கூறுகிறார்கள்.
சன் பிக்சர்ஸ் ப்ரோமோக்கு ப்ரோமோ என்று கொஞ்சம் காவாலா இசையை வெளியிட்ட போதே பலரும் நன்றாக உள்ளதாகக் கூறினார்கள்.
பாடல் வெளியாகும் முன்பே பாடலின் இசையை வைத்துத் தமன்னா பாடல் என்று அனைவரும் முடிவு செய்து விட்டார்கள் ஆனால், தமன்னாவுடன் தலைவரும் வர, பொங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ரஜினி நடிப்பதை நிறுத்தனும், இந்த வயதில் இப்படியொரு ஐட்டம் பாடலில் ரஜினி நடிக்கனுமா? இதற்கு ரஜினி நடிக்காம இருந்தாலே நல்லது என்று பல விமர்சனங்கள்.
எனக்கு அந்தக் கொஞ்ச இசை மட்டும் பிடித்தது ஆனால், முழுப் பாடல் அவ்வளவாக ஈர்ப்பாக இல்லை. கடைசியாக எனக்கு பிடித்த பாடலாக அரபிக்குத்து உள்ளது.
ஆனால், பெண்களிடமும், குழந்தைகளிடமும் காவாலா மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமன்னா
தற்போதைய நிலைக்கு உலகில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பட்டியலில் தமன்னா முக்கிய இடத்தில் இருப்பார். அவருடைய திரை வாழ்க்கையிலேயே இப்படியொரு வெற்றியைக் கண்டு இருக்க மாட்டார்.
இப்பாடலுக்கு ஆடி, காணொளியை வெளியிடுவது தான் தற்போதைய ட்ரெண்ட். இந்தியா மட்டுமல்ல, இந்தியா தாண்டியும் இந்தியர்கள் அல்லாதவர்களும் இதற்கு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆண்களும் ஆடுகிறார்கள் ஆனால், பெண்களுக்கே பொருத்தமானது.
அப்படியென்ன இதில் இருக்கிறது என்று புரியவில்லை!
எனக்குப் புரிந்தால் என்ன புரியவில்லையென்றால் என்ன?! தலைவர் படப் பாடல் பெரிய வெற்றி, அவ்வளோ தான். அது போதுமே!
இன்ஸ்டாகிராம், YouTube, FM, Music Channel, ட்விட்டர் என்று எங்குப் பார்த்தாலும் காவாலா தான் டாப் ட்ரெண்டிங்.
இப்பாடல் வெற்றியைச் சகிக்க முடியாமல், பலரும் வித விதமாகப் புலம்புவதைக் காண்பதே எனக்குப் பேரானந்தம்.
பலரின் வயிற்றுக்குள்ளே மிகப்பெரிய பாய்லரே எரிந்து கொண்டு உள்ளது 😀 .
ஜெயிலர்
படம் எப்படி இருக்கும்? தலைவரின் புதிய வகை நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?! என்பதே என் எதிர்பார்ப்பு.
தற்போது ஊடகம், சமூகத்தளம் முழுவதும் முழுவதும் ரஜினி எதிர்ப்பு பரவலாக உள்ளது. எனவே, வரிசைகட்டி குறை கூறுவதே இவர்கள் வழக்கம்.
ரஜினியின் ஆன்மிகம் சிலருக்குப் பிரச்சனை, சிலருக்கு சன் பிக்சர்சில் நடித்தது ஏற்பில்லை, சிலருக்கு இன்னும் ஓய்வு பெற மாட்டீங்கறாரே என்ற கடுப்பு, சிலருக்கு இவர் புகழ் குறையவில்லையே என்ற எரிச்சல்.
எனவே, ஒவ்வொரு முறையும் ஏதாவது கூறி விமர்சிப்பார்கள் ஆனால், அது மற்றவர்களுக்கு இல்லை, ரஜினிக்கு மட்டுமே இந்த விமர்சனம்.
காவாலா பாடலுக்காக மற்றவர்கள் விமர்சித்தாலும், தலைவரை ரசிப்பவர்கள் கோபப்படாதீர்கள். அவர்கள் பதட்டத்தை, வயித்தெரிச்சலை கொண்டாடுங்கள் 🙂 .
தலைவர் நிறையப் படங்களில் நடிக்க வேண்டும். ஓய்ந்து அமர்ந்தால், இயற்கை படுக்க வைத்து விடும். எனவே, தலைவர் இது போல நடித்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டும், அவர் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும்.
73 வது வயதிலும் அனைவரையும் கவர்ந்து, இன்னும் பலரை வயித்தெரிச்சலில் புலம்ப விட்டுள்ளாரே! சாதாரணச் செயலில்லை.
இந்த வயதிலும் என்னா வேகம்! என்னவொரு ஸ்டைல்! செம.
கவுண்டர் சொல்ற மாதிரி ‘என்னை இப்படிப் புலம்ப விட்டுட்டாரே!‘ என்ற கடுப்பில் சமூகத்தளங்களில் புரட்சி போராளிகள் எழுதிக்கொண்டுள்ளார்கள்.
தலைவர் பற்றி எழுத ஒரு வாய்ப்புக்கொடுத்த வயித்தெரிச்சலால் அவதிப்படுகிறவர்களுக்கு நன்றி 😀 .
கொசுறு
வாழ்க்கையில் தலைவர் மூலமாகக் கற்றுக்கொண்டது ஏராளம்.
தனிப்பட்ட முறையில் அவர் எனக்குக் கூறவில்லையென்றாலும், அவர் மேடைகளில், நிகழ்ச்சிகளில் பேசுவது, நடந்து கொள்வதை வைத்தே கற்றுக்கொண்டேன்.
இவை என் வாழ்க்கையில் மிகப் பயனுள்ளதாக உள்ளது 🙂 . தற்போது பெரியளவில் எதுவுமே பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எளிதாகக் கடந்து செல்ல முடிகிறது.
எனக்கும் தலைவரிடம் பிடிக்காதது உள்ளது ஆனால், என் எதிர்பார்ப்புகளை அவரிடம் திணிக்காமல், அவரை அவராகவே ஏற்றுக்கொண்டேன்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, தனிப்பட்ட முறையில் ரஜினி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும்.. காரணம் இரண்டு விஷிங்கள். வாழ்க்கையில் புகழ், பணம், அந்தஸ்த்து என உச்சத்தை அடைந்தும் அவரிடம் மாறாமல் இருக்கும் எளிமை & உழைப்பு. சமகாலங்களில் தன்னுடன் பயணித்தவர்களை என்றும் மறக்காமல் இருப்பது..
ரஜினி சார் மிக சிறந்த நடிகர்.. ஆனால் காலம் முற்றிலும் அவரை வேறு திசையில் பயணிக்க வைத்து விட்டது.. காரணம் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.. ரஜினி சாரே தனக்கு பிடித்த மாதிரி வேறு பாணியில் நடிக்கலாம் என்றாலும் இவர்கள் ஒத்து கொள்வார்களா? என்பது சந்தேகம்.. தன் திரைப்பயணத்தில் பல வெற்றி / வெகு சில தோல்விகளை பெற்று இருந்தாலும், அவர் கடைசியில் நடிக்கும் 1 / 2 படத்தில் அவரின் முத்திரையை பதிக்க வேண்டும்.. முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் படம் அமைய வேண்டும்.. போர் தொழில் படத்தில் சரத் குமார் சாருக்கு பதிலாக ரஜினி சார் செய்து இருந்தாலும் படம் வேறு மாதிரி இருந்து இருக்கும்..
ரஜினி ரசிகனா / அனிருத் இசைக்காக இந்த காவாலா பாடலை ரசிக்கலாம்.. எனக்கு சுத்தமாக செட் ஆகாது.. (சுருக்கமா சொன்னா சேது படத்தில் சிவக்குமார் சார் சொல்லுவார், விக்ரம் பேர் சீயான் என கேட்டவுடன் “நாக்கை புடுங்கிக்கிட்டு செத்து விடலாம்” போல இருக்கு என்பார்.. கிட்டத்திட்ட என் நிலையும் இது தான்.. உண்மையில் இது தான் ட்ரெண்ட் என்று சொல்கிறார்கள்.. நமக்கு ஒன்னும் புரியில கிரி?
பழைய பாடல்களை கேட்ட மன நிலையியே இருந்தாலே போதும் என்பது தான் என் நிலைப்பாடு.. நாற்பது வயதை கடந்த நான் இன்னும் 40/50 வருடங்களுக்கு முன்பு வந்த பாடல்களை இன்றும் ரசிக்கிறேன்.. சில பழைய பாடல்களை இன்னும் அதிகம் முன்பு ரசித்து கேட்டதோடு இல்லாமல், தற்போது இன்னும் அதிகம் ரசித்து கேட்கிறேன்..
இளையராஜா சார் பாடல் மட்டுமில்லமல் அவருடன் சமகாலத்தில் பயணித்த சந்திரபோஸ், சங்கர் கணேஷ், கங்கை அமரன், TR, மரகதமணி இவர்கள் பாடல்களையும் ரசித்து கேட்பதுண்டு..
@யாசின்
“ஜினி சாரே தனக்கு பிடித்த மாதிரி வேறு பாணியில் நடிக்கலாம் என்றாலும் இவர்கள் ஒத்து கொள்வார்களா? என்பது சந்தேகம்”
🙂 உண்மை தான். அதோடு பலர் இதை நம்பி முதலீடு செய்கிறார்கள். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.
“முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் படம் அமைய வேண்டும்.”
எனக்கு படம் வெற்றி பெற வேண்டும் அவ்வளவே 🙂 . வித்யாசமான படங்களில் ஏற்கனவே நடித்து விட்டார். ஜெயிலர் கூட ஒரு மாறுபட்ட படம் என்றே நினைக்கிறன்.
“உண்மையில் இது தான் ட்ரெண்ட் என்று சொல்கிறார்கள்.. நமக்கு ஒன்னும் புரியில கிரி?”
😀 Hukum செமையா இருக்கு.
“நாற்பது வயதை கடந்த நான் இன்னும் 40/50 வருடங்களுக்கு முன்பு வந்த பாடல்களை இன்றும் ரசிக்கிறேன்.. சில பழைய பாடல்களை இன்னும் அதிகம் முன்பு ரசித்து கேட்டதோடு இல்லாமல், தற்போது இன்னும் அதிகம் ரசித்து கேட்கிறேன்..”
பெரும்பாலும் 40 யைக்கடந்தவர்கள் மனநிலை இது தான். நான் அதிகம் பழைய பாடங்கள் குறிப்பாக 90’s பாடல்களே அதிகம் கேட்பேன்.
“இளையராஜா சார் பாடல் மட்டுமில்லமல் அவருடன் சமகாலத்தில் பயணித்த சந்திரபோஸ், சங்கர் கணேஷ், கங்கை அமரன், TR, மரகதமணி இவர்கள் பாடல்களையும் ரசித்து கேட்பதுண்டு.”
நானும்.. அனைவரது இசையும் பிடிக்கும்.