கூகுள் Vs ஃபேஸ்புக்

7
கூகுள் Vs ஃபேஸ்புக் facebook-vs-google

ல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு. பல வருடங்களாகச் சக்கைப் போடு போட்ட யாஹூ நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தற்போது கூகுள் Vs ஃபேஸ்புக் என்ற நிலையில் உள்ளது.

கூகுள் Vs ஃபேஸ்புக்

துவக்கத்தில் கூகுள் நிறுவனம் தேடியந்திரம் மூலமே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.

பின்னர் தன் தனித் தன்மையால் முன்னேறி அடுத்தக் கட்டமான மின்னஞ்சல் துறையில் ஜிமெயிலாக நுழைந்தது. Image Credit

இதன் பிறகு YouTube நிறுவனத்தைக் கையகப்படுத்தியதொடு மட்டுமல்லாமல் அதைப் பணம் காய்க்கும் மரமாகவும் சிறப்பாக மாற்றியது.

பின்னர் கூகுளின் வளர்ச்சி அசுர வளர்ச்சி என்று கூறலாம். Cloud Storage, Chrome Operating System, Google Map போன்ற துறைகளில் தன்னை மேம்படுத்திக் கொண்டது

மக்களின் ரசனை மாற்றம்

உலக மக்களின் ரசனை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டு இருக்கிறது. நேற்று பரபரப்பாகப் பேசப்பட்ட விசயம் இன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது.

ஒரு காலத்தில் கலக்கிய Orkut இன்று மூடப்பட்டு விட்டது.

அந்தச் சமயத்தில் பரபரப்பாக Orkut ல் நடந்த  பரிமாற்றங்களை இதைப் பயன்படுத்தியவர்கள் அறிவார்கள்.

மின்னஞ்சல் என்றால் யாஹூ தான் என்ற நிலை மாறி ஜிமெயில் ஆகி தற்போது மின்னஞ்சல் பயன்பாடே குறைந்து வரும் நிலையாகி விட்டது.

கூகுள் தன்னுடைய மற்ற சேவைகளில் கவனம் செலுத்திய அளவுக்கு தன் சமூகத்தளமான Orkut பற்றிக் கவலைப்படவில்லை.

இந்த [2004] நேரத்தில் நுழைந்தது தான் ஃபேஸ்புக். தற்போது கூகுளை என்ன சங்கதி என்று கேட்டு கூகுள் Vs ஃபேஸ்புக்  என்ற நிலையாகி வருகிறது.

அனைத்தும் ஒரே இடத்தில்

மக்கள் சமூகத்தளங்களில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களுக்கு ஒரே இடத்தில் சிரமமில்லாமல் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. காலமாற்றத்தில் தவிர்க்க முடியாத மாற்றங்கள்.

அதிகரிக்கும் “சூப்பர் மார்க்கெட்” இதை உணர்த்தும்.

இதே நிலை தான் சமூகத்தளங்களிலும் நடக்கிறது. ஒரு தளத்தின் சுட்டி (Link) இருந்தால் அதை க்ளிக் செய்து சென்று படிக்க யாரும் விரும்புவதில்லை.

தளத்தை விட்டு நகராமல் அங்கேயே படிக்கும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது.

ட்விட்டர் போன்று சுருக்கமாகப் படித்து ரசித்து / சிரித்து / கோபப்பட்டு / ஆச்சர்யப்பட்டு நகருவதைத் தான் அனைவரும் விரும்புகிறார்கள்.

நீண்ட பாராவாக இருந்தாலே படிக்க யோசிக்கும் நேரத்தில் சுட்டியை க்ளிக் செய்து வெளியே போக யாரும் விரும்புவதில்லை.

எனவே தான் சுட்டி பகிரப்படும் போது கிடைக்கும் Like யை விடச் சுருக்கமாகச் சுவாரசியமாக எழுதப்படும் நிலைத் தகவலுக்கு (Status update) அதிக Likes கிடைக்கிறது.

செய்தி நிறுவனங்களின் செய்தியை ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறாமலே படிக்கும் வசதியை (News feed) கொடுக்க ஃபேஸ்புக் திட்டமிட்டது.

இதற்கு செய்தி நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை (Hits) குறையும் என்று இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஒரு தளத்தில் நுழைந்தால் தனக்குத் தேவையான அனைத்தும் அங்கேயே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வலுப்பெற ஆரம்பித்து விட்டது.

இதற்குச் சமூகத்தளமான ஃபேஸ்புக் வசதியாக இருக்கிறது.

மக்கள் வழக்கமாக என்ன எதிர்பார்ப்பார்கள்?

  • செய்தி –> இருக்கிறது
  • நண்பர்கள் தொடர்பு –> இருக்கிறது
  • உலக நடப்பு –> உடனடியாகத் தெரிகிறது
  • காணொளி –> உடனே பார்க்க முடிகிறது
  • மதம் –> இருக்கிறது
  • திரைப்படம் –> இருக்கிறது
  • அரசியல் –> இருக்கிறது
  • விளையாட்டு –> இருக்கிறது
  • நமக்குப் பிடித்த பிரபலங்கள் –> இருக்கிறார்கள்
  • இடங்கள் பற்றிய குறிப்பு –> இருக்கிறது
  • நாம் எழுதியதற்குப் பாராட்டு – -> உடன் கிடைக்கிறது

வேறு என்ன வேண்டும்? அனைத்துமே ஒரே இடத்தில் இருக்கும் போது மக்கள் இங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இது தான் ஃபேஸ்புக் பலம்.

அவசியம் vs பொழுதுபோக்கு

மக்கள் இணையத்தில் அவசியத்தேவைகளுக்குச் செலவிடும் நேரத்தை விடப் பொழுதுபோக்குகளுக்குச் செலவிடும் நேரம் அதிகமாகி விட்டது.

எடுத்துக்காட்டுக்கு இக்கட்டுரை என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் தொழில்நுட்ப செய்திக் கட்டுரை.

இதற்குக் கிடைக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட, பிரபல நடிகர் பற்றிக் கட்டுரை எழுதி இருந்தால் கூட்டம் அதிகம் இருக்கும்.

மக்கள் அரசியல் / பொழுதுபோக்கு செய்திகளுக்கே அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். இது இயல்பு தவிர்க்க முடியாதது.

இது போன்ற சூழ்நிலையில் அத்யாவசியத் சேவைகளில் அதிகம் கூகுள் சேவைகளும் பொழுதுபோக்குச் சேவைகளில் ஃபேஸ்புக் நிறுவனமும் வருகிறது.

அவசியம் என்ற பிரிவில் ஏன் கூகுள்?

கூகுள் சேவையில் பொழுது போக்கு என்றால், YouTube / Blogger மட்டுமே உள்ளது. அதிலும்  செய்திகளைத் தேடிப் பார்ப்பவர்கள் அதிகம் உள்ளார்கள்.

மற்றபடி கூகுள் தேடியந்திரம், ஜிமெயில், கூகுள் மேப், கூகுள் டிரைவ் போன்ற சேவைகள் அவசியத் தேவைகளின் பயன்பாடாக உள்ளது.

கூகுள் தேடுதல்

தொழில்நுட்பத்துறையில் பலரின் பணியைக் காப்பாற்றிக் கொண்டு இருப்பதே கூகுள் தேடல் தான். பலரின் தொழில்நுட்பப் பிரச்சனைகளுக்குத் தேடலாக கடவுள் போல உதவுகிறது.

ஜிமெயில் பிரபலமடைந்து வந்தாலும் தற்போது சமூகத்தளங்களின் வரவால் (ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் WhatsApp) மின்னஞ்சல் பயன்பாடு குறைந்து வருகிறது.

Readமின்னஞ்சல் அழியப்போகிறதா?

சமூகத்தளத்தில் கோட்டை விட்ட கூகுள்

இதையெல்லாம் சரியாகத் திட்டமிட்டு வந்த கூகுள், சமூகத்தளம் என்ற விசயத்தில் தோல்வி அடைந்து விட்டது.

தனது சமூகத்தளமான Orkut வரவேற்பை இழந்த நேரத்திலேயே எச்சரிக்கையாகி இருக்க வேண்டும் ஆனால், கவனக்குறைவாக இருந்து விட்டது.

இந்த இடைவெளியில் ஃபேஸ்புக் தன்னை நிலை நிறுத்தி விட்டது.

சமூகத்தளங்கள் பிரச்சனையில் அவசரப்பட்டு Google Buzz என்ற தளத்தை ஜிமெயிலுடன் இணைத்து கூகுள் அறிமுகப்படுத்தியது ஆனால், மிகப்பெரிய தோல்வியானது.

காரணம், ஜிமெயில் கணக்கு வைத்து இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையானதால், ஜிமெயில் பிடிக்காதவர்கள் இதைப் புறக்கணித்து விட்டனர்.

அதோடு ஒன்றை மக்களிடையே திணித்தாலே அதற்கு எதிர்ப்பு வருவது இயல்பு. இதைக் கூகுள் உணர வேண்டும்.

இது ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சாதகமாகி,  தன் தளத்தை அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும்படி வடிவமைத்து கூடுதல் பயனாளர்களை ஈர்த்து விட்டது.

கூகுள்+

பின்னர் தாமதமாக விழித்துக் கொண்ட கூகுள் இதற்கு அடுத்து கூகுள்+ என்ற  சேவையை அறிமுகப்படுத்தியது.

ஒருமுறை தோல்வி அடைந்தவர்கள் அடுத்த முறை எந்த அளவிற்குக் கவனமாக இருக்க வேண்டும்?!

ஆனால், ஃபேஸ்புக் போன்ற வடிவமைப்புடனே எந்தத் தனித்துவமும் இல்லாமல் தனது கூகுள்+ சேவையைக் கூகுள் அறிமுகப்படுத்தியது.

அதோடு மிகப்பெரிய குறையாகத் தனது அனைத்துச் சேவைகளையும் கூகுள்+ சேவையோடு இணைத்துத் தனது பயனாளர்களைக் கட்டாயமாகப் பயன்படுத்தத் வைத்தது.

இது பெரும்பான்மையானவர்களுக்குப் பிடிக்கவில்லை.

கூகுள் எதிர்பார்ப்பதில் நியாயமுமில்லை.

இந்தச் சமயத்தில் ஃபேஸ்புக் இன்னும் தன்னைச் சிறப்பாக நிலை நிறுத்திக் கொண்டது.

ஃபேஸ்புக் துவக்கத்தில் கூகுள் நிறுவனத்தின் கூகுள்+ சேவையைப் பார்த்துப் பயந்து பல மாற்றங்களை அறிவித்தது.

ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் கூகுள்+ மக்களிடையே வரவேற்பை இழந்து விட்டது.

மீண்டு தாமதமாக உணர்ந்த கூகுள் தன் பல சேவைகளைக் கூகுள்+ சேவையில் இருந்து பிரித்து வருகிறது.

முதற் கட்டமாக Google Photos யை இதில் இருந்து பிரித்து இருக்கிறது. இது போல மற்ற சேவைகளையும் பிரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம்.

Pinterest

இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விசயம் கூகுள்+ வந்த அதே காலகட்டத்தில் தான் Pinterest என்ற நிழற்படத் தளமும் அறிமுகமாகியது.

தன் தனித்தன்மை காரணமாகக் கூகுள்+ செய்ய முடியாததை இந்தத் தளம் சாதித்துத் தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

இவர்களால் செய்ய முடிந்த ஒரு விசயத்தை ஏன் கூகுளால் செய்ய முடியவில்லை? காரணம் தனித்தன்மை இல்லை.

அனைத்திலும் தனித்தன்மையுடன் இருந்ததால் தான் கூகுள் மற்ற சேவைகளில் வெற்றி பெற முடிந்தது. ஒருத்தரை காபி அடித்தாலே நமக்கு மரியாதை இருக்காது.

எனவே, காபி அடித்த கூகுள்+ தோல்வி அடைந்து விட்டது.

ஃபேஸ்புக் ஆலமரம்

தற்போது ஃபேஸ்புக் ஆலமரம் போலத் தனது கிளைகளைப் பரப்பி இணைய ஆக்டோபஸ் மாதிரி அனைத்தையும் ஒரே இடத்தில் பிடித்துக்கொண்டு இருக்கிறது.

பிரபலமான Instagram தளத்தை வாங்கிச் செம்ம லாபம் பார்த்து வருகிறது.

கூகுள் அதிகப் பணம் கொடுத்து வாங்க யோசித்த WhatsApp நிறுவனத்தை வாங்கிப் பட்டையக் கிளப்பி வருகிறது.

இது போல ஒரு சேவை கூகுளிடம் இல்லை மற்றும் இது போலக் கொண்டு வர பல காலமாகும்.

அப்படியே கொண்டு வரும் சமயத்தில் ஃபேஸ்புக் சேவைகள் எங்கேயோ இருக்கும்.

காணொளி தளங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு

கூகுள் நிறுவனத்திற்கு YouTube விளம்பரம் மூலம் அதிக வருவாய்க் கிடைக்கிறது.

இதைச் சரியாக உணர்ந்த ஃபேஸ்புக் தற்போது காணொளிகளுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது.

YouTube காணொளிகளை விடத் தன் தளக் காணொளிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறது.

ஃபேஸ்புக் தளத்தை விட்டுப் போக விரும்பாதவர்கள் பெரும்பாலும் இதில் பகிரப்படும் காணொளிகளையே அதிகம் காண்கிறார்கள்.

ஃபேஸ்புக்கின் காணொளிகளில் விளம்பரம்

 

கூகுளின் விளம்பரங்களின் வருவாயில் கை வைக்கும் அடுத்த முடிவை ஃபேஸ்புக் எடுத்து இருக்கிறது.

விரைவில் தனது தளத்தில் உள்ள காணொளிகளில் விளம்பரத்தை நுழைக்கப் போகிறது.

நிறுவனங்களுடன் விளம்பர வருமானத்தை வெளிப்படையாகப் பகிருவதை அறிமுகப்படுத்தி தன் பக்கம் அனைவரையும் ஈர்க்கும் முயற்சியைச் செய்து கொண்டு இருக்கிறது.

இது நிச்சயம் கூகுளின் வருமானத்தைப் பாதிக்கும்.

மக்கள் தற்போது படிப்பதில் காட்டும் ஆர்வத்தை விடக் காணொளிகளைப் பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மக்களின் ஆர்வத்தை உணர்ந்து தான் பல நிறுவனங்களும் காணொளித் தளங்களை உருவாக்கி வருகின்றன.

இதை முன்கூட்டியே உணர்ந்து கூகுள் வாங்கிய நிறுவனம் தான் YouTube.

காணொளிக்கு இருக்கும் எதிர்காலத் தேவையை உணர்ந்து இந்தத் துறையில் தன்னை YouTube மூலம் நிலை நிறுத்திய கூகுள் ஏன் சமூகத்தளத்தைக் கோட்டை விட்டது என்று புரியவில்லை.

தற்போது ஃபேஸ்புக், கூகுள் Vs ஃபேஸ்புக்  என்று YouTube கோட்டையை அசைத்துப் பார்க்க துவங்கி விட்டது.

YouTube பிரபலமாக இருக்கக் காரணம்

 

YouTube ல் தேடுவது போல ஃபேஸ்புக் காணொளிகளைத் தேட முடியாது. அதோடு YouTube ல் clean UI (User Interface) உள்ளது.

எளிமையான வடிவமைப்பு ஆனால், ஃபேஸ்புக் UI அவ்வளவாகச் சிறப்பாக இல்லை அதோடு தளங்களில் பகிர எளிமையாக இல்லை.

இதுவே YouTube க்கு இருக்கும் சாதகமான சூழ்நிலை.

ஃபேஸ்புக் வளர்ச்சியைச் சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் ஃபேஸ்புக் Vs கூகுள்+ என்று இருந்தது தற்போது ஃபேஸ்புக் Vs கூகுள் ஆகி விட்டது.

ஃபேஸ்புக் ஒரே ஒரு தளத்தை வைத்து கூகுள் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டி வருகிறது.

எனவே, இது ஒரு எச்சரிக்கை தான். கூகுள் காலியாகி விட்டது என்று அர்த்தமல்ல.

சமூகத்தளத்தில் கூகுள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் சிக்கல் தான். ஏனென்றால் எதிர்காலம் சமூகத்தளங்களையே மையப்படுத்தி இருக்கும்.

வாழ்க்கை ஒரு வட்டம்

இன்று ஃபேஸ்புக் நிலை சிறப்பாக இருக்கிறது ஆனால், இதுவே தொடரும் என்று உறுதியில்லை.

முன்னரே கூறியபடி முன்பு Orkut பிரபலம் பின்பு Myspace தளம் தற்போது ஃபேஸ்புக் அவ்வளவு தான்.

எதிர்காலத்தில் இன்னொரு நிறுவனம் பிரபலமாகி ஃபேஸ்புக் ஒன்றுமில்லாமல் போகலாம்.

இந்த விசயத்தில் கூகுள் தப்பிக்கும் காரணம் கூகுள் ஒரு சேவையை நம்பி இல்லை.

கூகுளின் பரந்து விரிந்த வியாபார எல்லை

Blogger, Drive, Chrome Browser, Chrome Operating system, YouTube, Google Earth, Search Engine, Gmail, Map, Chromebook, Storage, Android OS.

Fiber Internet, Nexus Phone / Tablet, Google Workspace (Business), Photos, Play store, Voice, Chromecast, Nest என்ற ஏராளமான சேவைகளை வைத்துள்ளது.

எனவே, ஒன்று போனாலும் மற்றவைக் காப்பாற்றும்.

அதோடு கூகுள் சமூகத்தளம் தவிர அனைத்திலும் தன்னைச் சிறப்பாக மேம்படுத்திக்கொண்டு வருகிறது.

ஃபேஸ்புக் என்பது ஒற்றை ஆலமரம் அதில் Instagram மற்றும் WhatsApp சேவைகள் தான் முக்கியமானவை.

எனவே, ஃபேஸ்புக் இன்று ஏறி அடித்தாலும் ஒருநாள் இறக்கத்தை எதிர்கொள்ள வேண்டியது வரலாம் ஆனால், கூகுள் அந்த நிலையை அடைய காலம் எடுக்கும்.

அது கூகுளில் உள்ளவர்களின் திறமை குறையும் காலம் மட்டுமே! இதுவே கூகுள் மற்றும் ஃபேஸ்புக்குக்கு உள்ள வேறுபாடு.

தலைவர் கூறியது போல “உயரத்திற்குச் சென்றவர்கள் அங்கேயே தொடர்ந்து இருக்க முடியாது. கீழே வந்து தான் திரும்ப மேலே செல்ல முடியும். இது தான் வாழ்க்கை”.

இது கூகுள் / ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இனி என்ன நடக்கும் என்பதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. ரொம்ப நல்லா இருக்கு பதிவு தல
    குறிப்பா இந்த columns – “மக்கள் வழக்கமாக என்ன எதிர்பார்ப்பார்கள்?”, “கூகுளின் பரந்து விரிந்த வியாபார எல்லை”

    – அருண் கோவிந்தன்

  2. மற்ற தளங்களை கட்டாயமாக இணைப்பது கடுப்பை தருகிறது.
    கூகிள் க்கு யாராவது இப்படி ஆப்பு கொடுத்தால் தான் சரியாகும்.

  3. கிரி, ரொம்ப தெளிவா, எளிமையா, நேர்த்தியா விவரித்து எழுதி இருக்கீங்க… (

    (அனைத்திலும் தனித்தன்மையுடன் இருந்ததால் தான் கூகுள் மற்ற சேவைகளில் வெற்றி பெற முடிந்தது. ஒருத்தரை காபி அடித்தாலே நமக்கு மரியாதை இருக்காது.) அழகா சொல்லி இருக்கீங்க!!! தொழில்நுட்ப துறையில் நிறைய விஷியங்கள் பற்றி படிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது..

    பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. கிரி அவர்களுக்கு எனது வணக்கம், நான் தங்களது தளத்தை இரண்டு ஆண்டுக்களுக்கு மேலாக தொடர்கின்றேன்,இருந்தாலும் இதுதான் எனது முதல் இடுகை மன்னிக்கவும், நான் கூகுள் மேப்பின் தீவிர ரசிகன் எனது சுற்றுல திட்டங்களுக்கு கூகுள் மேப் மிக உதவியாக இருந்துள்ளது, மேலும் நான் விரும்பிய நாடுகள் மற்றும் இடங்கள் எப்படி இருக்கின்றது என வீட்டில் இருந்தபடியே கூகுள் மேப்பின் மூலம் சுற்றிப் பார்த்து விட்டேன்,கூகுள் மேப் இருந்தால் நாம் மற்ற நாட்டிற்கோ அல்லது நகரத்திற்கோ சென்றாலும் நாம் தொலைந்து விட்டோமோ என்ற உணர்வு ஏற்படாது எனலாம்,இது ஒரு வழிகாட்டும் நண்பன் போல் உள்ளது. மேலும் நான் கூகுள் Translate செயலி மூலமாகவே (டைப் செய்யவில்லை )எனது மொபைல் தொடுதிரை மூலமாக எழுதி உள்ளேன்,இந்த செயலியும் தமிழில் எழுத மிக உதவியாக உள்ளது.தங்களுடைய தொழில்நூட்ப தகவல்கள் அனைத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது தங்களுடைய எழுத்துப் பயனம் தொடர வாழ்த்துக்கள்.

  5. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @கார்த்திக் கூகுள் மேப் மிகச் சிறந்த சேவை என்பதில் சந்தேகமே இல்லை.

    நீங்கள் கூகுள் மொழிமாற்றி மூலம் இதை எழுதியது மகிழ்ச்சியை அளிக்கிறது 🙂 . தொடர்ந்து பயன்படுத்தும் போது மிக மிக எளிதாகி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here