ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும்?

21
gmail ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும்

ஜிமெயில் ஒரு அற்புதமான மின்னஞ்சல் சேவை என்பது பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும்! என்று கூறுகிறேன்.

ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும்?

1. ஸ்பாம்

சம்பந்தம் இல்லாத இடங்களில் இருந்து எல்லாம் மின்னஞ்சல் வரும். லாட்டரி பரிசுச் சீட்டு விழுந்ததாக, உங்கள் வங்கி விவரங்களைக் கேட்டு, வயாகரா மாத்திரை வாங்கக்கூறி, ஆபாச மின்னஞ்சல்கள் என்று வந்து குவியும்.

இவை ஜிமெயிலில் கிடையாது அல்லது மிகக் குறைவான அளவு வருகிறது. மிகத் திறமையான தொழில்நுட்ப முறையில் இவற்றை வடிகட்டி விடும்.

இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது.

விஷயம் தெரிந்தவர்கள் ஓரளவு சமாளிக்கலாம், ஒன்றுமே தெரியாதவர்கள் ஸ்பாம் விசயத்தில் ஏமாற அதிக வாய்ப்புள்ளது.

நம் அனுமதி இல்லாமலே நாம் அனுப்பவது போல வயாகரா விளம்பரங்கள் நம் contact ல் உள்ளவர்களுக்குச் சென்று விடும்.

இதைச் சந்திக்காத நபர்களே இருக்க மாட்டார்கள் குறிப்பாக யாஹூ வில் இருந்து அதிகம் வரும்.

2. வேகம்

நாம் பயன்படுத்தும் மென்பொருளாகட்டும் கணினியாகட்டும் வேகமாக இருந்தால் தான் நமக்கும் பயன்படுத்த விருப்பம் இருக்கும்.

இல்லை என்றால் ஒன்றை க்ளிக் செய்து விட்டு அது திறப்பதற்காகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனை ஜிமெயிலில் கிடையாது. தேவையற்ற விசயங்களை நீக்கி, மல்டிமீடியா சமாச்சாரங்களைக் குறைத்து, எவ்வளவு விரைவாகத் திறக்க முடியுமோ அவ்வளோ தூரம் உதவி செய்கிறது.

ஜிமெயில் AJAX என்ற தொழில்நுட்ப முறையைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறது. எனவே அதனுடைய வேகம் மற்ற மின்னஞ்சல்களை விட அதிவேகத்தில் உள்ளது.

புது மின்னஞ்சல் வந்தாலோ, Reply செய்தாலோ, Forward செய்தாலோ தாமதம் செய்யாமல் அடுத்த நொடியே நடக்கும்.

இதே மற்ற மின்னஞ்சல்கள் முக்கிக் கொண்டு இருக்கும். க்ளிக் செய்துவிட்டு சில நொடிகளுக்குப் பிறகே எதுவும் நடக்கும்.

3. எளிமை

கூகுள் என்றாலே எளிமையை தளத்தின் முகப்புப் பகுதியில் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். இதையே தன்னுடைய ஜிமெயில் சேவைக்கும் பின்பற்றுகிறது.

இடது புறம் Inbox sent mail Compose mail மட்டுமே இருக்கும். மற்றவை தேவை என்றால், கர்சரை கொண்டு சென்றால் அவை தெரியும் படி அமைத்து இருப்பார்கள்.

Delete Forward spam என்று எதுவும் முகப்பில் இருக்காது, ஒரு மின்னஞ்சலைத் தேர்வு செய்தால் மட்டுமே அவை தெரியும்.

காரணம் தேர்வு செய்யாமல் நாம் Delete forward அல்லது வேறு லேபிள் செய்ய முடியாது அப்புறம் எதற்கு அவை தெரிய வேண்டும்.

சுருக்கமாகக் கூறினால் ஜிமெயில் F டிவியில் வரும் மாடல் போல இருக்கும் மற்ற மின்னஞ்சல்கள் கல்யாணப் பெண் போல அதீத அலங்காரத்துடன் இருக்கும் 🙂 .

4. ஃபோல்டர் / லேபிள்

யாஹூ பயன்படுத்திக்கொண்டு இருந்த போது அதில் இருந்த ஃபோல்டர் வசதி  உபயோகமாக இருந்தது. மின்னஞ்சல்களைப் பிரிக்க எளிதாக இருந்தது.

ஜிமெயிலில் ஃபோல்டர் வசதி இல்லை ஆனால், அதற்கு இணையாக லேபிள் வசதி உள்ளது.

இதுவும் ஃபோல்டர் போலத் தான் ஆனால் வேறு மாதிரி. ஜிமெயிலுக்கு மாற நான் தயங்கியதற்கு இதுவும் ஒரு காரணம் ஆனால், பயன்படுத்திய பிறகு எவ்வளவு எளிமையானது எனப் புரிந்தது.

5. தேடல்

கூகுள் என்றால் தேடல் தான் பிரபலம். தனது ஜிமெயிலிலும் இதை உட்புகுத்தியுள்ளது.

இதன் மூலம் நமக்குத் தேவையான மின்னஞ்சல்களை நொடியில் கண்டறிய முடியும். அட்வான்ஸ் தேடுதல் முறையில் தேடுதலை இன்னும் எளிமை ஆக்குகிறது.

6. சங்கடமான சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியும்

நாம் சில நேரங்களில் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சலைத் தவறுதலாக மற்றொருவருக்கு அனுப்பி விடுவோம்.

Send பட்டனை அழுத்திய பிறகே உணர்வோம் ஆனால், மின்னஞ்சல் சென்று விடும்.

அவசரமாகத் டைப் செய்யும் போது சில விசயங்களை மறந்து அனுப்பி இருப்போம். இதைத் தடுக்க நீங்கள் 30 நொடி வரை இதை ஜிமெயிலில் தாமதிக்க வைக்கலாம்.

மின்னஞ்சல் அனுப்பியும் 30 நொடி வரை செல்லாமல் இருக்கும்.

காத்திருக்க தேவையில்லை என்றால் Inbox / வேறு எதை க்ளிக் செய்தாலும் உடனே சென்று விடும். இதன் மூலம் தர்மசங்கடமான சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியும்.

7. Threaded Conversation

ஜிமெயிலில் உள்ள அற்புதமான வசதி. இது ஒன்றிக்காகவே இதைப் பயன்படுத்துபவர்கள் பலர்.

இதன் வசதி என்னவென்றால் குழும மின்னஞ்சல்கள் [Group mails] ஒரே தலைப்பில் வரும் போது தனித்தனியாக இல்லாமல் ஒரே மின்னஞ்சலிலேயே ஒன்று இரண்டு என்று சேர்ந்து கொண்டு இருக்கும்.

இதன் மூலம் பத்து பேர் இந்தத் தலைப்பில் அனுப்பி இருந்தால் ஒரே பக்கத்தில் ஒரே முறையில் படிக்க முடியும்.

வரிசையாகப் படிக்க எளிதாகவும், ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்க வேண்டிய அவசியமுமில்லை.  மின்னஞ்சல் எண்ணிக்கையின் அளவு குறைவாகத் தெரியும்.

இதே யாஹூ ஹாட்மெயில் என்றால் குழும மின்னஞ்சல்களில் இருந்து மின்னஞ்சல்கள் வந்து குவிந்து விடும். குப்பை மாதிரி இருக்கும்.

இந்த வசதியை இதற்கு முன் எதோ மின்னஞ்சல் நிறுவனம் வைத்து இருந்ததாகவும் இதை ஜிமெயில் காப்பி அடித்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

தற்போது, விரும்பினால் யாஹூ ஹாட்மெயில் போல லூப் [Threaded Conversation] இல்லாமல் தனித்தனியாகவரும் படியும் வைத்துக்கொள்ள வசதி தந்து உள்ளது.

8. பாதுகாப்பு

பாதுகாப்பில் நம்மை உஷார் படுத்துவதில் ஜிமெயிலுக்கு நிகர் எந்த மின்னஞ்சல் நிறுவனமும் இருக்க முடியாது.

வழக்கமாக ஒரு இடத்தில் லாகின் செய்கிறீர்கள் என்றால், உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து பயன்படுத்திக்கொண்டு இருந்தால் நம்மை உஷார் படுத்தும்.

வேறு IP யில் இருந்து லாகின் செய்து இருக்கிறார்கள் என்று. [Open in 1 other location]

ப்ரௌசிங் சென்டர் செல்கிறீர்கள் லாகின் செய்து விட்டு மறந்து லாஃகாப் செய்யாமல் வந்து விடுகிறீர்கள். உடனே வேறு இடத்தில் லாகின் செய்து மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள sessions களை நீங்கள் லாஃகாப் செய்து விடலாம்.

திரும்ப அங்கேயே சென்று இதைச் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை.

அதே போல Account Activity யில் சென்று எந்தெந்த IP யில் இருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சந்தேகம் இருந்தால் உடனடியாக நமது கடவுச்சொல்லை மாற்றி விடலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் கணக்கு திறந்து இருந்தால் நமக்கு எச்சரிக்கைப் படுத்தும். நாட்டின் பெயருடன் இருப்பதால் நம்மால் எளிதாக அறிய முடியும்.

இரட்டை அடுக்கு பாதுகாப்பு முறை [2 – Step verification] என்ற வசதி இருக்கிறது.

வழக்கமாக நாம் எல்லோரும் கடவுச்சொல் [Password] கொடுத்து உள்ளே செல்வோம் இந்த வசதியைச் செயல்படுத்தி விட்டால் அதன் பிறகு நமக்கு ஒரு SMS Code வரும் அதை இதில் கொடுத்த பிறகு தான் நுழைய முடியும்.

இதன் மூலம் உங்கள் கடவுச்சொல்லை தெரிந்து கொண்டாலும் உங்கள் SMS பார்க்க முடியவில்லை என்றால் யாரும் ஹேக் செய்ய முடியாது.

உதாரணத்திற்கு உங்கள் வங்கிக்கணக்கில் நுழையச் சில வங்கிகள் SMS மூலம் Code அனுப்புவார்கள் அதே முறை தான் இதற்கும்.

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

ஹேக் என்பது ஒரு திறமையான செயல். உங்கள் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தம் இல்லை.

உங்களை யாரும் ஹேக் செய்ய முயற்சிக்கவில்லை என்று அர்த்தம்.

இரட்டை அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஹேக் செய்பவர்கள்உள்ளார்கள்.கடுமையான பாதுகாப்புகளைக் கொண்ட தளங்களையே பதம் பார்த்தவர்கள் உள்ளனர்.

எனவே, எப்படி இருந்தாலும் ஹேக் செய்து விடுவார்கள் என்று அசட்டையாக இருப்பதை விட இது போலப் பாதுகாப்புகளை ஏற்படுத்திக்கொள்வது நமக்கு நல்லது. ஹேக் வாய்ப்புகளைக் குறைக்கும்.

Read: ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?

மற்ற மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் ஜிமெயிலுக்கு எப்படி மாறுவது என்பதை கேள்வி பதில் [FAQ] முறையில் அமைத்து இருக்கிறேன்.

கேள்வி 1

வேறு மின்னஞ்சல் பயன்படுத்துகிறேன். தற்போது இதில் இருந்து மாறினால் என்னுடைய பழைய மின்னஞ்சல்களை எப்படி இதற்குக் கொண்டு வருவது?

மிக மிக அடிப்படையான கேள்வி. ஏனென்றால் அனைத்தையும் மாற்றுவது என்பது ஒரு அலுவலகத்தை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு மாற்றுவதிற்கு நிகரானது.

முகவரி, தொலைபேசி எண், பொருட்கள், கணினி, நெட்வொர்க் என்று அனைத்தையும் மாற்றம் செய்வது போலச் சிரமமான பணி.

உங்களுடைய தற்போதைய மின்னஞ்சல் முழுவதையும் ஒன்று விடாமல் உங்கள் புதிய ஜிமெயில் கணக்கில் இம்போர்ட் செய்ய முடியும், அதாவது எந்த வித மாற்றமும் இல்லாமல் தேதி நேரம் உட்பட. மிக மிக எளிதானது.

இதைத் தொடங்கியவுடன் முடிய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். உங்களின் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். முடிந்தவுடன் தானியங்கியாக அறிவிப்பு வரும்.

இதில் மின்னஞ்சல் மட்டுமல்ல உங்கள் நண்பர்கள் முகவரிகளையும் இதுபோல செய்து விடலாம். உங்கள் மின்னஞ்சல்கள் ஒரு லேபிளில் வகைப்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டு contact [@] giriblog.com. இதன் மூலம் நீங்கள் பழைய முகவரி மின்னஞ்சல்களை எளிதாக இனம் காண முடியும்.

கேள்வி 2

பழைய மின்னஞ்சல் முகவரியை அனைவருக்கும் தெரிவித்து எப்படி இதை உபயோகிக்க தொடங்குவது?

உங்களுடைய புதிய மின்னஞ்சல் கணக்கில் இருந்து உங்கள் contact ல் உள்ள அனைவருக்கும் நான் இந்த புதிய முகவரிக்கு மாறி விட்டேன். எனவே, உங்கள் contact ல் இந்த முகவரியை அப்டேட் செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பி விடுங்கள்.

கேள்வி 3

இதற்கு மாறினாலும் தொடர்ந்து பழைய மின்னஞ்சலுக்கே அனுப்புவார்களே என்ன செய்வது?

இது நடைமுறை பிரச்சனை தான். நீங்கள் ஜிமெயில்க்கு மாறிய பிறகு Auto Reply / Vacation response Enable செய்து விடலாம்.

அதிக பட்சம் ஒரு மாதம் உங்கள் பழைய மின்னஞ்சல் கணக்கில் பதில் அளிக்கலாம், அது கூட இனி இதற்கு அனுப்பாதீர்கள்! புதிய ஜிமெயில் ஐடிக்கு அனுப்பி விடுங்கள், என்று கூறி விடுங்கள்.

ஒரு சிலர் தங்கள் contact அப்டேட் செய்யாமல் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். அதற்குப் பதில் தராதீர்கள். பின் அவர்களே அனுப்புவதை நிறுத்தி விடுவார்கள்.

பதில் அனுப்பிக்கொண்டு இருந்தால், இதிலேயே தான் வந்து கொண்டு இருக்கும்.

உங்கள் மொபைல் எண்ணை மாற்றினால் நீங்கள் அறிவித்தும் பழைய எண்ணையே தொடர்பு கொள்வார்கள். அது போலத் தான். எனவே இந்தத் தவறை செய்யாதீர்கள்.

இதோடு மிக முக்கியமான விஷயம் பல்வேறு இடங்களில் (வங்கி, மொபைல் நிறுவனம் etc) உங்களுடைய பழைய மின்னஞ்சல் முகவரியே இருக்கும்.

இங்கே உங்கள் புது முகவரியை மறக்காமல் அப்டேட் செய்ய வேண்டும்.

More Details – https://mail.google.com/mail/help/intl/en/switch.html

மேற்கூறிய காரணங்களே ஏன் ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும் என்பதற்கான விளக்கங்கள். இன்னும் ஜிமெயிலுக்கு மாறவில்லையென்றால், மாறுங்கள்.

ஜிமெயில் இலவசமாகத் தரும் எண்ணற்ற வசதிக்கு என்னால் முடிந்த சிறு உதவி. பணம் கொடுத்தால் கூட இவ்வளவு வசதி தருவார்களா என்பது சந்தேகம் தான் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

21 COMMENTS

  1. நான் உங்க ப்ளாக் ரசிபதர்கான காரணம் ஜிமெயில் மாதிரி மிகவும் எளிமை ஆக இருப்பது தான். மிகவும் நன்றான போஸ்ட். வாழ்த்துக்கள்.

  2. விளக்கமான பதிவு நன்றி கிரி.

    1. ஜிமெயில் 10GB Storage space தருகிறது.
    2. வேறு கணினியில் லாகின் ஆகி இருந்தால் இங்கிருந்தே logout ஆக,
    இன்பாக்ஸ் சென்று Right bottom சென்று details கிளிக் செய்து “sign out all other sessions” பிரஸ் பண்ணவும்.

  3. அம்மாடி… எத்தன? நான் யாஹூ மற்றும் ஜிமெயில் ரெண்டிலயும் அக்கவுன்ட் வைத்துக்கொண்டு யாஹூ மட்டுமே பயன்படுத்துகிறேன். எனக்கு யாஹூ போல ஜிமெயிலை ரசிக்க முடியவில்லை. என்னவோ யாஹூ எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. உங்களின் பதிவை படித்த பிறகு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  4. பயனுள்ள பதிவு கிரி, என்னை போன்ற தகவல் தொழில் நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களுக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும்..

  5. மிக நல்ல தகவல்கள். நீங்க சொன்னமாதிரி இதுவரை நான் ஸ்பாம் ஈமெயில் ஜிமெயிலில் பார்த்தது கிடையாது. அந்த வடிவேல் பாணி (தேவை இல்லாத ஆணி) உண்மைதான் அட்வர்டைச்மென்ட் பிரச்சினையும் கிடையாது. ஆனா ஒரு பிரச்சினைதான் பல்வேறு ஈமைல்களை ஒரே சமயத்தில் பார்க்கும் வசதி கிடையாது. அது மட்டுமல்லாமல் வீடியோ சாட் பண்ணும்போது யாகூவை விட இதில் குறைந்த அளவே Bytes பரிமாற்றம் நடக்கும் என்று நினைக்கிறேன் – உண்மையா ?

    தக்க சமயத்தில் காப்பாற்றியது எப்படி என்றால். எனக்கு முதலாவதாக நிச்சயிக்கப்பட்ட பெண் (அவர் வேலை பார்த்தது ஒரு ஐடி கம்பெனி – இது ஒன்னு போதும்) அவரிடம் நான் ஜிமெயில் மூலமாக சாட் செய்வது வழக்கம் ஒரு கட்டத்தில் என்னைப்பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு (குறிப்பாக சொத்து, நான் வேலை செய்யும் சவுதி வாழ்க்கை முறை சுதந்திரம் பற்றியும் மற்றும் அவரை விட கூடுதல் சம்பள விபரம்) ஆகிய அனைத்தையும் எடைபோட்டு கடைசியில் என்னை அவமானப்படும்படி நடுத்தெருவில் விட்டு விட்டார். கல்யாண ஏற்பாடு செய்த செலவோடு என் வாழ்வும் தொலைந்து போனது. இதையெல்லாம் விட அவர் ரொம்ப உத்தமி போலவும் நான் கொடுமைக்காரன் போலவும் சித்தரிக்க முயற்சி செய்தபோது நான் விழித்துக்கொண்டேன் என்னுடைய ஜிமெயிலை எதேச்சையாக ஆராய்ந்த போது நாங்கள் சாட் செய்த அத்தனை விபரங்களும் அதில் இருந்தன – என்னை பிரிந்து செல்ல கடைசியாக அவர் சொன்னகாரணமும் (அவருக்காக வேறு யாரோ வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்காராம் அதையெல்லாம் மறச்சு தான் நிச்சயதார்த்தம் பண்ணினாராம்). சாட் செய்த அத்தனை விபரங்களையும் பிரின்ட் செய்து (நாற்பது பக்கம்.. இல்லை என்றாகிவிட்டபிறகு யார் மானம் போனால் எனக்கென்ன – நானொன்றும் புத்தன் இல்லை… இதுவும் திரேதாயுகமில்லை) சங்க தலைவரிடம் கொடுத்துவிட்டேன். மேட்டர் சால்வுட். இப்போ வேறு (ஐடி கம்பெனியில வேலைபார்க்காத பெண்ணை) திருமணம் செய்து கொண்டு எனது வாழ்க்கை நிம்மதியாக துவங்கியிருக்கிறது.

  6. // அது மட்டுமல்லாமல் வீடியோ சாட் பண்ணும்போது யாகூவை விட இதில் குறைந்த அளவே Bytes பரிமாற்றம் நடக்கும் என்று நினைக்கிறேன் – உண்மையா ? // எதுக்காக கேட்டேன்னா சில இடத்தில் இன்டர்நெட் சிக்னல் ரொம்ப வீக்கா இருக்கும்போது கூட தொந்தரவு இருக்காது. (ஸ்கைப் யாகூ அப்படியில்ல) அதுவுமில்லாம பல ஈமெயில் பரிமாற்றம் நடக்கும்போது பழைய ஈமைல்கள் club செய்யப்பட்டு ஒரே Thread ஆக தெரியும் – தேவை இல்லாமல் முன்னே உள்ள சம்பாஷணைகளை பார்க்க வேறெங்கும் கிளிக் செய்ய தேவையில்லை. சமீபத்தில் தான் Android போன் வாங்கியிருந்தேன் – ஈமெயில் / கூகிள் டிரைவ் / ஆண்ட்ராய்டு / மொபைல் விபரங்கள் ஈமெயில் அக்கௌண்டில் பேக்கப் …. (இன்னும் கூகிள் கார், கண்ணாடி) வசதிகள் வார்த்தைகளில் அடங்காது… என்னமோ போங்க

  7. //சுருக்கமாகக் கூறினால் ஜிமெயில் F டிவியில் வரும் மாடல் போல இருக்கும் மற்ற மின்னஞ்சல்கள் கல்யாணப் பெண் போல அதீத அலங்காரத்துடன் இருக்கும் //

    கல்யாணம் ஆகியும் இன்னும் F டிவி பாக்குறிங்க விட்டுகாரம்மா கவனமா இருக்கான்னும் இல்லாட்டி “நீங்கள் ஏன் சீன பெண்ணை மணக்கவேண்டும் ” என்ற பதிவை எதிர்பார்க்கலாம் 🙂 ஜிமெயில் பயன்படுத்தும் வெப் அனல்ய்ச்டிக்ஸ் முறை மூலம் உங்களுடைய மெயில் படிக்கபடுவதும் அதற்க்கு பொருத்தமான விளம்பரம் தோன்றுவதையும் இன்ன பிற குறைகளையும் எழுதுங்கள் கண்முடித்தனமாக ஜிமெயில்லை காதல் பண்ணாதிர்கள் .
    இப்படிக்கு கூகிள் அடிமை .

  8. நான் ஜிமெயிலை பயன்படுத்த இவை தான் காரணம். இன்னும் சில வசதிகளும் இதில் உள்ளன. நாம் நம்முடைய From அட்ரஸ் மாற்றிக் கூட மின்னஞ்சல் அனுப்பலாம்.

    இது குறித்த எனது பதிவு – http://www.karpom.com/2012/02/how-to-use-gmail-to-send-email-from.html

  9. தேங்க்ஸ், இதே மாதிரி பிளாக்கர் பற்றியும் பல சந்தேகங்கள் உள்ளன. ஒரு பதிவு போட்டால் ன்றாக இருக்கும.
    வணக்கம்

  10. நானும் ஜிமெயில் காதலன் தான். என்னோட வரலாற்றை சுருக்கமா சொன்னா 2008 ல ஜிமெயில் 2.0 interface வந்தபோது, IE 6 ல அதை யூஸ் பண்ண முடியாத (ஒரே) காரணத்துக்காக பயர்பாக்ஸ் மாறினேன் (இப்போ க்ரோம்). என்னுடைய நண்பர்கள் 20 க்கும் மேற்பட்டவர்கள் ஜிமெயில் அக்கவுன்ட் ஓபன் பண்றதுக்கு உதவியிருக்கிறேன்..

    2009 ல அம்மா, அப்பா பேர்ல இருந்த என்னோட மெயில் ஐடியை என் பெயருக்கு மாத்துறதுக்காக, ஒரு புது யாகூ அக்கவுண்டுக்கு எல்லா பழைய ஜிமெயில் மெயிலையும் import பண்ணி, அதிலேயிருந்து திரும்பவும் புது ஜிமெயில் ஐடிக்கு import பண்ண வேண்டியிருந்தது..

    இன்னிக்கு தேதிக்கு ஜிமெயில யாரும் அடிச்சுக்க முடியாது. ஆனா ஜிமெயில்ல யாகூ மாதிரி tabbed interface, start screen, external applications இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு ஒரு பீலிங்…

  11. ரொம்ப எளிமையான விளக்கங்கள் உள்ள பதிவு

    அப்புறம் நீங்க கமலகண்ணன் சார் சொல்லுற மாதிரி “ஏன் சீன பெண் ” பதிவு எழுதினாலும் ரசிக்க நான் ரெடி … உங்க எழுத்து நடை அப்படி .. நீங்க என்ன எழுதினாலும் அதை ரசிக்கலாம்

    நேத்து தான் ரொம்ப யோசிச்சு பார்த்தேன் ஏன் வேற யாருக்கும் இல்லாத ஒரு ஈர்ப்பு கிரி பேர்ல நு .. அப்ப தோணின சில விஷயங்கள்
    1 நேர்மையான விமர்சனம்
    2 தன்னோட கருத்து இது தான் நு சொல்லுற பண்பு
    3 அடுத்தவங்க கருத்து காது கொடுத்து கேக்குறது
    4 அழகா தன்னையே களாச்சு கிட்டு போறது
    5 wife வும் பாராட்டு றது அப்படியே சைடு ல மாளவிகா பத்தியும் பேசுறது
    6 அம்மா அப்பா பேர்ல மரியாதை
    7 தனக்கு தெரிஞ்ச விஷயங்கள் technical , non – technical share பண்ணுறது
    8 அழகான அப்பா வா பையன் பத்தின பதிவு
    9 emotinal லா மட்டும் இல்லாம மூளையும் யோசிச்சு விஷயங்கள் அணுகுவது
    10 சமுதாய அக்கறை

    இன்னிக்கு இது போதும் தல … எனக்கே கூச்சமா இருக்கு 🙂

    உங்கள ரஜினி ரசிகர் ரா தான் புடிச்சது முதல்ல .. இனுமே ரஜினி உங்களுக்கு புடிக்காம போனாலும் நான் உங்களுக்கு ரசிகர் தான்… என்னோட தினசரி ல நான் செய்யுற விஷயம் – அப்பா, அம்மா கிட்ட பேசுறது, கிரி யோட எழுத்துகள் படிக்குறது
    உங்க உரை நடை என்னோட part of daily activities மாறி ரொம்ப நாள் ஆச்சு தல … last week ரொம்ப போர் அடிச்சது நு உங்க பயணங்கள் பதிவுகள் எல்லாம் படிச்சுட்டு இருந்தேன் .. இன்னும் ஒரு டைம் dull ல பீல் பண்ணேன் அப்போ self -realization சம்மந்தமா ஒரு பதிவு படிச்சேன்.. வடிவேலு type காமெடி யும் உங்க பதிவு ல இருக்கும், இளையராஜா மெலடி மாதிரி ஒரு family emotion பதிவுகள் ல பீல் பண்ணலாம்… இப்படி சொல்லிட்டே போலாம்

    என்னிக்கும் நீங்க உங்க family யோட ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கனும்.. உங்களோட ரசிகனா நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன்.. உங்களுக்கு இது ரொம்ப பெரிய வார்த்தையா தெரியும் ஆனா ஒவ்வொரு நாளும் உங்க குடும்பம் போக இன்னும் ஒருதரோட (நான் தான் :)) வாழ்க்கை சந்தோசத்துல உங்க பங்கு இருக்குனு மட்டும் தெரிஞ்சுகோங்க தல ..

    ரொம்ப பெருசா போயிடுச்சு மன்னிச்சுகோங்க

    – அருண்

  12. உங்களுடைய feedburnerல் subscribe செய்ய முடியவில்லை. சரி பார்க்கவும்

  13. கிரி,
    அருமையான பதிவு. பல தெரியாத தகவல்கள். ரொம்ப நன்றி கிரி. அப்புறம் உங்களுடைய பழைய பதிவில் உங்கள் போட்டோ பார்த்தது இன்னும் மகிழ்ச்சி. – பயபுள்ள

  14. அனைவரின் வருகைக்கும் / கருத்திற்கும் நன்றி

    @முத்து எங்க கட்சிக்கு சீக்கிரம் மாறுங்க 🙂

    @ராஜ்குமார் எப்படிங்க இப்படி! ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு சம்பவம் சொல்றீங்க.. 😉 சூப்பர். நீங்க சொன்ன மாதிரி பல நேரங்களில் சாட் Save பண்ணி இருப்பது ரொம்ப பயனைத் தரும். தற்போது உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இருப்பது அறிந்து ரொம்ப சந்தோசம். அப்புறம் நாற்பது பக்கம் குறைவா இருக்கே! ஹி ஹி

    நீங்க கூறியது சரி தான். கூகுள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ளும். ஜிமெயிலிலும் இந்த வசதி உள்ளது.

    @கமலக்கண்ணன் கல்யாணம் ஆனா F TV பார்க்கக் கூடாதா! 🙂 இது என்னங்க அநியாயமா இருக்கு. BTW நான் சிங்கப்பூர் வந்த பிறகு பார்த்தது இல்லை, ஊர்ல இருக்கும் போதும் ஆர்வம் இருந்தது இல்லை. அதில் வரும் இசைக்காக சில நேரங்களில் பார்ப்பேன்.

    கூகுள் நம்ம மெயிலை படிக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அது தானியங்கியாக நடைபெறுவது இதன் மூலம் நம் தகவல்கள் எதுவும் அவர்கள் பார்க்க முடியாது. அப்படியே அவர்கள் படித்தாலும் அந்த அளவிற்கு நான் வொர்த் இல்லை 🙂 படித்தாலும் ஒன்றும் கிடைக்காது.

    @வெற்றிமகள் பிளாக்கர் பற்றி பதிவர் அப்துல் பசித் என்பவர் எழுதி இருக்கிறார் படித்துப்பாருங்கள். இல்லை உங்களுக்கு எதில் சந்தேகம் என்று கூறுங்கள் தெரிந்தால் கூற முயற்சிக்கிறேன்.

    @Abarajithan External applications கொடுக்கும் பல வசதிகளை கூகுளே தருவதால் அதற்கு அவசியமில்லாமல் இருந்து இருக்கலாம் அதோடு அவர்களை உள்ளே விட்டால் உங்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது. Start Screen என்று எதைக் கூறுகிறீர்கள்?

    @அருண் ரொம்ப நன்றி. புல்லரிக்க வைக்கறீங்களே! 😉

    @மணி அனைத்தும் சரியாகவே உள்ளது.

  15. விளக்கமான பகிர்வு.

    இப்போதைக்கு இரண்டு கட்சியிலும் இருக்கிறேன்:)! எப்போது முழுமையாக ஜிமெயிலுக்கு மாறுவேனோ தெரியவில்லை.

  16. என்னோட ஜிமெயில் id : thalarajesh@gmail.com (idha partha vudaney neenga manasula yedho ninaikureenga….yennanu opena sollunga :P) but, i am not using it.

    அருண் ரொம்ப பீல் பண்ணி எழுதியிருக்கிறார் . ஒரு தடவை chat பண்ணும்போது சொன்னீங்க “அருண் ரொம்ப நல்லவருன்னு “. அதுக்கு அர்த்தம் இப்பதான் புரிஞ்சுது.

    செவுடன் காதுல ஊதுன சங்குன்னு solluvangaley, ,,,,,,நான் கடைசி வரைக்கும் யாஹூ தான் use பண்ண போறேன். என்ன மாதிரி ஆட்களுக்கு யாஹூ போதும்னு நினைக்குறேன். 🙂

  17. @ராஜேஷ் உங்க காதுல சங்கு இல்ல.. குச்சிய விட்டு ஆட்டுனா கூட கேட்க மாட்டீங்க போல 😀

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here