ஃபேஸ்புக் நடத்திய உளவியல் தாக்குதல் [FAQ]

3
ஃபேஸ்புக் நடத்திய உளவியல் தாக்குதல்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் ஃபேஸ்புக்கில் இருந்து 5 கோடி பயனாளர்கள் தகவல்களைப் பெற்று தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது உலகளவில் பெரும் சர்ச்சையாகி விட்டது.

ஃபேஸ்புக் நடத்திய உளவியல் தாக்குதல்

ட்ரம்ப் வெற்றி பெற்ற போது ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்று கூறப்பட்டுப் பலரால் விவாதிக்கப்பட்டது ஆனால், ஆதாரம் எதுவுமில்லாததால் முக்கியத்துவம் பெறவில்லை. Image Credit

ஆனால், தற்போது ஃபேஸ்புக் ஆதாரங்களுடன் வசமாகச் சிக்கி விட்டது, நிறுவனர் மார்க்கும் தாமதித்து வேறு வழி இல்லாமல் தற்போது இதை ஒத்துக்கொண்டு மன்னிப்புக்கேட்டுள்ளார்.

எப்படித் தகவல்கள் கசிந்தன?

ஃபேஸ்புக்கில் ஏராளமான Third Party Apps உள்ளன. இதை நாம் நிறுவும் போது நம்மிடமிருந்து அனுமதியை கேட்கிறது, நாமும் கொடுத்து விடுகிறோம்.

இது போல App மூலமாகத் தான் தகவல்கள் கசிந்துள்ளன.

இதற்கு ஃபேஸ்புக் நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் பயனாளர் கணக்கு Hack செய்யப்படவில்லை, கடவுச்சொல்லை, பயனாளர்கள் விவரங்களை ஃபேஸ்புக் நேரடியாகத் தரவில்லை ஆனால், ஒப்பந்தத்தை மீறி அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொண்டன என்று முட்டுக்கொடுத்தார்கள்.

தற்போது விசயம் கை மீறி போய் ஆதாரத்துடன் சிக்கிக்கொண்டதால், சரணடைந்து உள்ளனர்.

இது எப்படித் தெரிந்தது?

சேனல் 4 செய்தி நிறுவனம் “Sting Operation” நடத்தி வெளிக்கொண்டு வந்துள்ளது.

இதனால் என்ன பிரச்சனை?

உளவியல் ரீதியான தாக்குதல் பயனாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது, அது அவர்கள் அறியாமலே என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களைப் பற்றிய தகவல்களை வைத்து எதை விரும்புகிறீர்கள், படிக்கிறீர்கள், Like செய்கிறீர்கள் என்று ஒவ்வொரு அசைவையும் கவனித்துத் தகவலைத் திரட்டுவது.

இதைச் செய்த பிறகு தனக்குத் தேவையான செய்திகளை, விளம்பரங்களைப் பயனாளர்கள் கண்களில் படவைத்து அவர்கள் மனதை மாற்றுவது.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், தேர்தல் சமயத்தில் உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரைப் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் இவர்கள் செய்வார்கள்.

தொடர்ச்சியாக உங்கள் கண்களில் பட்டுக்கொண்டே இருக்கும் போது உங்கள் மனம் உங்களை அறியாமலே மூளை சலவை செய்யப்படுகிறது.

இப்பிரச்சனை ஃபேஸ்புக்கில் இரண்டு வருடங்களாக நடந்து கொண்டு இருந்து இருக்கிறது ஆனால், வெளியே தெரியவே இல்லை என்பது அதிர்ச்சி.

இது மிகப்பெரிய உளவியல் தாக்குதல்!

என்னென்ன பிரச்சனை தற்போது?

WhatsApp ல் இருந்து விலகிய Anton இப்பிரச்சனை வெளியே வந்ததும் “#deletefacebook” என்ற Hashtag போட, பிரச்சனை தீயாகப் பற்றிக்கொண்டது.

பாதிக்கப்பட்டதாக உணர்ந்த பலரும் கொந்தளிக்க, பிரச்சனை எக்குத்தப்பாகச் சென்றதால், ஃபேஸ்புக் பங்கு மதிப்பு டமால் என்று 11.4 % அடி வாங்கி 60 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியது.

பிரபல உலவியான ஃபயர்பாக்ஸ் இதுவரை கொடுத்து வந்த விளம்பரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டது.

தற்போது ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் பலர் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை அறிந்து ஃபேஸ்புக் கணக்கை மூடி வருகிறார்கள்.

சுருக்கமாக ஃபேஸ்புக் மிகப்பெரிய கெட்டப்பெயரை சம்பாதித்து விட்டது.

சிக்கலுக்கு மேல் சிக்கல்

ஃபேஸ்புக் கணக்கை மூடி வருபவர்கள் தங்கள் தகவல்களைத் தரவிறக்கம் (Download) செய்து பின்னர் கணக்கை நீக்குவார்கள்.

அவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்டத் தகவலில் தங்களுடைய Call History உட்பட ஏராளமான தகவல்கள் இருந்ததால், தற்போது இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மன்னிப்பு

ஏற்கனவே மார்க், மன்னிப்பு கேட்டு இருந்தாலும், தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு முழுப் பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.

இது எந்த வகையில் ஃபேஸ்புக் செய்த திருட்டை சமாதானப்படுத்தும் என்பது புரியவில்லை.

இதனால் ஃபேஸ்புக் பாதிக்கப்படுமா?

தெரியவில்லை ஆனால், தற்போது பலர் கோபத்தில் வெளியேறினாலும் பின்னர் திரும்ப வருவார்கள் என்றே கருதுகிறேன்.

அதோடு இதன் தாக்கம் மேலைநாடுகளில் அதிகம் இருக்கலாம். இந்தியாவில் பெரியளவில் இருக்காது என்பதே என் எண்ணம்.

நம்மவர்கள் ஃபேஸ்புக்குக்கு அடிமையாகி விட்டார்கள், அதோடு இதை வைத்து மற்றவர்களைத் திட்டுவது, வன்மத்தை வெளிப்படுத்துவது, கலாய்ப்பது என்று பொழுதுபோக்காக்கி விட்டார்கள்.

எனவே, அந்தப் போதையை அவ்வளவு சீக்கிரம் விட்டுத் தரமாட்டார்கள், தான் பாதிக்கப்படுகிறோம் என்று அறிந்தும்.

பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்த முடியுமா?

மிக எளிதாகச் செய்ய முடியும். இதற்குப் பெரியளவில் விளக்கம் தேவையில்லை, சிறு உதாரணம் போதும்.

கொஞ்ச நாள் முன்பு கனடா பிரதமரைப் பற்றிப் போலியாக வந்த மீமை ஒரு லட்சத்திற்கும் மேல் “தமிழன் என்றால் பகிருங்கள்” என்ற வாக்கியத்திற்காகப் பகிர்ந்து இருந்தார்கள்.

இவர்கள் என்ன கூறினாலும் அப்படியே நம்புபவர்கள், எளிதில் உணர்ச்சிவசப் படுபவர்கள். இவர்களைப் போன்றவர்களை மூளைச்சலவை செய்வது மிக எளிது.

இவர்களுக்கென்று எந்தத் தனிப்பட்ட உறுதியான முடிவுகளும் இல்லை, கண்களில் படுவதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அதன் படி முடிவெடுப்பவர்கள்.

இவர்களைப் போன்றவர்கள் லட்சக்கணக்கோர் ஃபேஸ்புக்கில் குவிந்துள்ளனர். பிறகு இவர்களுக்கு என்ன பிரச்சனை?! எளிதாக மூளை சலவை செய்யலாம்.

சரி இப்ப என்னதாங்க செய்வது?!

ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறுவது என்பது உங்கள் முடிவு. அதோடு இது மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வாகாது!

நான் ஃபேஸ்புக் பயன்படுத்துவது 100% என் தளத்துக்குத் தகவல்களைத் திரட்ட மட்டுமே! Blog எழுதுவதால், நடப்பு செய்திகளைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே இருக்கிறேன்.

தனிப்பட்ட கணக்கைப் பயன்படுத்தாமல், போலிக்கணக்கை தான் பயன்படுத்துகிறேன், இதில் நண்பர்கள் எவரும் இல்லை.

தனிப்பட்ட கணக்கில் மாற்றுக்கருத்துகளால் நண்பர்களுடன் மனத்தாங்கல் ஏற்படுகிறது எனவே, அதனால் நட்பை இழக்க விரும்பவில்லை என்பதால், 2014 வருடம் விலகி விட்டேன்.

வருடத்துக்கு ஒரு / இரு முறை எட்டிப்பார்த்தாலே அதிகம். ஃபேஸ்புக் நடத்திய உளவியல் தாக்குதல் விவகாரமானதே.

தொடர்புடைய கட்டுரைகள்

என்னது.. ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!

தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

கொசுறு 

கூகுளும் கிட்டத்தட்ட இதே தான் செய்கிறது ஆனால், மற்றவர்களுடன் நம் தகவலைப் பகிரவில்லை. தன் சேவையை மேம்படுத்த மட்டும் பயன்படுத்துகிறது.

இருப்பினும் ஃபேஸ்புக் மாட்டிக்கொண்டது, கூகுள் இன்னும் மாட்டவில்லை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். கூகுள் தற்போது எச்சரிக்கையாகி நடவடிக்கை எடுத்து வருகிறது.

யாரும் மாட்டாதவரை நல்லவரே! 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. மோடியை பிரதமராக்கியதில் பேஸ்புக் ஆற்றிய பங்கு அளப்பரியது, அதனால் தான் பிரதமரானவுடன் முதல் வேலையாக அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் ஆபீஸுக்கே போய் மார்க்கை சந்தித்து தன்னுடைய நன்றியை காட்டிவிட்டு வந்தார் கேடி

  2. கிரி, உங்க பதிவை படித்த பின்பு தான் இந்த பிரச்சனையின் முழுவிவரம் தெளிவாக எனக்கு தெரிந்தது.. விவரமாக, சுருக்கமாக, தெளிவாக எழுதியுள்ளீர்கள்… இந்த பிரச்சனையை குறித்து தினம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.. எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை… பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. @கனடா தமிழன் சமூகத்தளங்களின் குறிப்பா ஃபேஸ்புக் பங்கு பாஜக வெற்றிக்கு மிக முக்கியம் ஆனால், அவர் அதற்கு தான் மார்க்கை சந்தித்தாரா என்பது எனக்கு தெரியாது.

    @யாசின் நன்றி 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here