மின்னஞ்சல் அழியப்போகிறதா?

10
மின்னஞ்சல் அழியப்போகிறதா?

ழுத வந்து ஆறு வருடங்கள் ஆனாலும் இது வரை எந்தத் தளத்திலும் என் கட்டுரை வெளிவந்தது இல்லை.  நானும் முயற்சி செய்யவில்லை என்பதும் உண்மை தான்.

One India

தற்போது மின்னஞ்சல் அழியப்போகிறதா? கட்டுரை தமிழில் மிகப்பிரபலமான மற்றும் இந்தியாவின் முக்கிய தளங்களில் ஒன்றான One India (thatstamil) வில் வெளியாகி இருக்கிறது.

ரொம்ப மகிழ்ச்சியான செய்தியில் ஒரு சிறப்பு உள்ளது. நான் எழுத வந்ததே தட்ஸ்தமிழால் தான் அதிலேயே வந்தது கொஞ்சம் கூடுதல் சந்தோசம் தான்.

Read: தட்ஸ்தமிழும் நானும்! [2009]

பொதுவாகக் கட்டுரையை அனுப்பினால் ஓரளவு மாற்றம் செய்து தான் வெளியிடுவார்கள். Image Credit

அதனால் எடிட் செய்யாத மின்னஞ்சல் அழியப்போகிறதா? கட்டுரையை இங்கே பகிரலாம் என்று நினைத்தேன்.

ஆனால், கிட்டத்தட்ட 95 % எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட்டதால், அதை அப்படியே இங்கே பகிர்கிறேன். நன்றி.

One India Link

மின்னஞ்சல் அழியப்போகிறதா?

மின்னஞ்சல் (Electronic Mail (a) Email) என்பது நமது தின வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மற்றவர்களுடன் வேகமாகத் தொடர்பு கொள்ள செலவில்லாத ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது.

ஹாட்மெயில்

துவக்கத்தில் மின்னஞ்சல் என்றால் அனைவருக்கும் தெரிந்தது ஹாட்மெயில் தான். முதலில் துவங்கப்பட்ட மின்னஞ்சல் சேவையும் இது தான்.

இந்த மின்னஞ்சல் சேவையை இந்தியரான சபீர் பாட்டியா தனது நண்பர் ஜாக் ஸ்மித்துடன் துவங்கினார் (ஜூலை 4, 1996) என்பது நமக்குப் பெருமையளிக்கும் விஷயம்.

தகவல்களைப் பகிர்ந்திட எளிமையாகவும் வேகமாகவும் இருந்ததால் அனைவரிடமும் விரைவில் வரவேற்ப்பை பெற்றது.

இதனுடைய வளர்ச்சியைப் பார்த்துப் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இதை USD 400 மில்லியனுக்கு (டிசம்பர் 1997) வாங்கிக்கொண்டது!

யாஹூ

ஹாட்மெயில் உடன் வந்த இன்னொரு மின்னஞ்சல் சேவை “ராக்கெட் மெயில்”. இதுதான் பின்னாளில் “யாஹூ”வாக மாறியது.

இன்று வரை மின்னஞ்சல் சேவையில் முன்னணியில் இருப்பது ஹாட்மெயில்… அடுத்தது யாஹூ. தொடர்ந்து ஜிமெயில் சேவை.

நம்மிடையே தற்போது ஜிமெயில் பிரபலமாக இருந்தாலும் மின்னஞ்சல் ரேங்கிங்கில் மூன்றாவது இடத்திலேயே உள்ளது.

துவக்கத்தில் மிகக் குறைவான அளவிலேயே சேமிப்பு அளவு கொடுத்தார்கள். 2 MB அளவுக்குதான் இருந்தது.

ஜிமெயில்

1 GB என்று ஜிமெயில் அதிரடியாக இடம் கொடுத்த பிறகு அரண்டு போன மைக்ரோசாப்ட் யாஹூ நிறுவனங்கள், பின் தங்களின் அளவையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

ஜிமெயில் வந்த பிறகு ஹாட்மெயில், யாஹூ மின்னஞ்சல்களுக்கு இறங்கு முகமாகவே உள்ளது.

இன்று வரை பயனாளர்களை அதிகளவில் கொண்டு மின்னஞ்சல் சேவையில் முதல் இரண்டு இடங்களில் ஹாட்மெயில், யாஹூ இருந்தாலும் வளர்ச்சியின் அடிப்படையில் ஜிமெயில் முன்னணியில் உள்ளது.

ஃபேஸ்புக் & ட்விட்டர்

இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத்தளங்கள் பிரபலமான பிறகு பலரும் தங்கள் தகவல்களை இதிலேயே பரிமாறிக் கொள்வதால் மின்னஞ்சல் பயன்பாடு குறைந்து வருவதாகப் பேசப்பட்டது.

இதற்குச் சிகரம் வைத்தது போல ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவையைத் துவங்கியது இது ‘Messaging Service’ என்று அழைக்கப்பட்டது.

ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவை என்பது வழக்கமான மின்னஞ்சல் சேவை போல இல்லாமல் Email, IM, SMS ஆகியவற்றை உள்ளடக்கி அமைத்து இருந்தது.

இது “Gmail Killer” என்று அழைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போல எதுவும் நடக்காமல் புஸ்ஸாகிவிட்டது!

ஜிமெயிலுக்கு, ஃபேஸ்புக் மின்னஞ்சல் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படியொரு சேவை வந்தது என்றே பலருக்கு தெரியவில்லை.

குறைந்த மின்னஞ்சல் பயன்பாடு

இவை இப்படி இருந்தாலும் பலர் மின்னஞ்சலைப் பயன்படுத்தாமல் ஃபேஸ்புக் ட்விட்டரிலியே பேசிக்கொள்வது அதிகரித்துக் கொண்டு வருவது உண்மை.

அதிகம் சமூகத்தளங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் மின்னஞ்சலில் உங்கள் நண்பர்களைத் தொடர்பு கொள்வதை விடச் சமூகத்தளங்களில் தொடர்பு வைத்திருப்பதே அதிகமாக இருக்கும்.

யோசித்துப் பார்த்தீர்களென்றால் தனிப்பட்ட முறையில் நீங்கள் அனுப்பும், பெறும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை முன்பை காட்டிலும் இப்போது குறைந்திருக்கும்.

குழும மின்னஞ்சல்கள் (Group Mails), அறிவிப்பு மின்னஞ்சல்கள் போன்றவை இந்தக்கணக்கில் வராது.

மின்னஞ்சலில் இருப்பது போலச் சமூகத் தளங்களிலும் நமக்குத் தேவையானவர்களை பிரித்துத் தகவல்களைத் தெரிவிக்க முடியும்.

அதாவது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நமது தகவலைத் தெரிவிக்க முடியும்.

Bubble notification

சமூகத் தளங்களில் Bubble notification வசதியின் மூலம் நம்மால் மின்னஞ்சலைப் பார்க்காமலே நமக்கு வந்திருக்கும் தகவலை உடனடியாக அறிய முடியும்.

இணைய தொலைபேசிகளில் Push notification என்ற முறையில் விரைவாக அறிய முடியும்.

ஃபேஸ்புக் சமீபத்தில் நமக்கு வரும் தகவல்கள் அறிவிப்பு முறையில் மின்னஞ்சல் முறையை மாற்றி Bubble notification முறையை ஊக்குவித்துள்ளது.

நமக்கு மின்னஞ்சல் வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம்.

முன்பு நமக்கு வந்த தகவலை அறிய அனைவரும் மின்னஞ்சலையே ஃபேஸ்புக்கில் பயன்படுத்திக்கொண்டு இருந்தோம்.

தற்போது Bubble notification எளிதாக இருக்கிறது. அதோடு மின்னஞ்சல்களின் எண்ணிக்கையையும் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

கூகுள் + ம் இதே முறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

@ சிம்பல்

@ சிம்பல் மூலம் நாம் விரும்பும் நபரின் பெயரைக் கொடுத்து உடனடியாக அவரது கவனத்தைப் பெற முடியும்.

இதைப்போல எளிதான வசதி இருக்கும் போது மின்னஞ்சல் அனுப்புவது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகிவிட்டது.

இதை எளிதாக ஃபேஸ்புக் மற்றும் கூகுள் + ல் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் + பயனாளர்கள் இந்த முறையையே பின்பற்றுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக ஒருவரைப் பற்றிய தகவலை ஃபேஸ்புக், கூகுள் + ல் பதிகிறோம் என்றால் நாம் @ <நண்பர் பெயர்> கொடுத்து உடனே அவரது கவனத்தை ஈர்க்கலாம்.

அதாவது “நான் உங்கள் தொடர்புள்ள செய்தியை இங்கே கூறி இருக்கிறேன் இங்கே வாருங்கள்” என்பதாகும்.

இதன் மூலம் அந்த நபர் உடனடியாகத் தன்னைப் பற்றிய தகவலுக்குப் பதில் தர முடியும் அந்தச் செய்தியைத் தாமாகக் கவனிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

சமூகத்தளங்கள்

உலகளவில் அதிகம் பார்வையிடும் தளமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தன் முதல் இடத்தை ஃபேஸ்புக் தக்க வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகத்தளங்கள் வளர்ச்சியைக் கண்டு மிரண்ட கூகுள் இதன் காரணமாகத் தான் கூகுள் + சமூகத் தளத்தைத் துவங்கியது.

எதிர்காலத்தில் சமூகத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அனைவரும் கூறுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

சமூகத்தளங்கள் மூலம் பல நாடுகளின் தலை எழுத்தே மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு உதாரணமாகத் துனீசியா, எகிப்து, லிபியா என்று கூறிக்கொண்டே போகலாம்.

இந்தியாவில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு பெரிதும் துணையாக இருந்தது சமூகத் தளங்களே என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயமாகும்.

இது போலப் போராட்டங்களின் செய்தியை மக்களிடம் வேகமாகக் கொண்டு செல்லப் பயன்பட்டவை சமூகத் தளங்களே!

இதற்கு யாரும் மின்னஞ்சலை முக்கிய தகவல் பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தவில்லை என்பதை இங்கே நாம் உணர வேண்டும்.

பரபரப்பு செய்தி என்றால் ட்விட்டரில் காட்டுத்தீயாகச் சில நிமிடங்களில் உலகம் முழுவதும் பரவி விடுகிறது.

தற்போதைய தலைமுறை

இன்னொரு முக்கியமான விஷயம் தற்போதைய தலைமுறையின் துவக்கமே சமூகத் தளங்களோடு உள்ளது. அவர்கள் மின்னஞ்சலைக் குறைவாகவே பயன்படுத்தி இருப்பார்கள்.

இந்த நிலையில் எதிர் வரும் தலைமுறையினர் மின்னஞ்சல் என்ற வசதிக்கே போகாமல் சமூகத் தளங்களுக்கே முன்னுரிமை அளிப்பார்கள்.

இதனால் படிப்படியாக மின்னஞ்சல் பயன்பாடு குறைய அதிக வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால் முன்பு கடிதம் பிரபலமாக இருந்தது.

தற்போதைய தலைமுறையினர் நேராக மின்னஞ்சல், தொலைபேசிக்கு வந்து விட்டார்கள் அதாவது கடிதப் பயன்பாடு என்ற ஒன்றை தொடாமலே!

அதே போல அடுத்த தலைமுறையினர் மின்னனஞ்சலுக்கு செல்லாமலே நேராகச் சமூகத்தளங்களுக்கு வந்து விடுவார்கள்.

அவர்கள் மின்னஞ்சலை முக்கிய சேவையாகப் பயன்படுத்த வேண்டிய தேவையே இருக்காது அல்லது அவர்களுக்குப் பயன்படுத்த அதிகம் வாய்ப்பு அமையாது.

இதனாலே நிபுணர்கள் மின்னஞ்சலுக்குச் சிறப்பான எதிர்காலம் இல்லை என்கிறார்கள்.

மாற்றுக்கருத்து

எப்போதுமே எந்த ஒரு விஷயத்திற்கும் மாற்றுக்கருத்து நிச்சயம் இருக்கும். அப்படி மின்னஞ்சல் சமாச்சாரத்தில் மாற்றுக்கருத்து சிலவற்றை பார்ப்போம்.

நிறுவனங்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மின்னஞ்சலையே பயன்படுத்த முடியும். சமூகத்தளங்களை பயன்படுத்த முடியாது.

சமூகத் தளங்கள் சீனா போன்ற பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் நீங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த முடியாது.

இது போலச் சமயங்களில் நமக்கு அங்கே நண்பர்கள் இருந்தால் இதில் தொடர்பு கொள்ள முடியாது.

இதற்கு மின்னஞ்சல்தான் மாற்று தகவல் பரிமாற்ற சாதனம்.

அலுவலகப் பயன்பாடு

அலுவலகங்களில் சமூகத் தளங்களுக்குத் தடை உள்ளது. எனவே இதில் தகவல்களைப் பார்க்க முடியாது.

இதற்கு அந்தச் சமயங்களில் நமது இணைய தொலைபேசி போன்ற சில மாற்று வசதிகள் இருந்தாலும் உடனடி பயன்பாட்டிற்கு சிரமமாகவே இருக்கும்.

உலகில் இன்னும் பெரும்பான்மையானோர் மின்னஞ்சலையே பயன்படுத்துக்கிறார்கள். அதோடு நம் நண்பர்கள் அனைவரும் சமூகத்தளங்களில் உறுப்பினராக இருப்பார்கள் என்று கருத முடியாது.

நாம் செய்யும் சிறு தவறு கூடப் பெரிய அபாயத்தில் முடியலாம்.

எடுத்துக்காட்டாகச் சமீபத்தில் ஹாலிவுட் நடிகரான Charlie Sheen பிரபல பாடகரான Justine Bieber க்கு தனிப்பட்ட முறையில் தகவல் அனுப்பவதாக நினைத்துத் தனது தொலைபேசி எண்ணை அவரை ட்விட்டரில் பின் தொடரும் 5 மில்லியன் நபர்களுக்கும் அனுப்பி விட்டார்.

நடைமுறை சிக்கல்கள்

சமூகத் தளங்கள் மூலம் நண்பர்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளலாம்.

அதையே தொழில் அலுவலக பணி சம்பந்தப்பட்ட நிலை என்று வரும் போது இதைப் பயன்படுத்துவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது.

அது சில நேரங்களில் சாத்தியமும் இல்லை. இதைப்போலச் சமயங்களில் மின்னஞ்சலையே பயன்படுத்த வேண்டி இருக்கும்.

மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் சமீபமாக இணையம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விசயமாக உள்ளது.

இது பற்றி எழுதாத தொழில்நுட்பத் தளங்களே இல்லை என்கிற அளவிற்கு இது பற்றி அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள்.

முடிவாகத் தகவல் பரிமாற்றத்துக்குத் துவக்கத்தில் புறா, ஓலை அனுப்பினார்கள் பின் கடித முறை வந்தது. அது மெதுவாக உள்ளது என்று மின்னஞ்சல் பிரபலமானது.

தற்போது அதுவும் மெதுவாக உள்ளது என்று சமூகத்தளங்களுக்கு மாறியுள்ளனர்.

நாளை இதை விட வேகமாக இன்னொரு சேவை வரும். அப்போது… மின்னஞ்சல் அழியப்போகிறதா? தலைப்பு மாறும். அவ்ளோதான்!!

Update 2014 December : தற்போது WhatsApp பிரபலமாகி மின்னஞ்சல் பயன்பாட்டைப் பெருமளவில் குறைத்து விட்டது. நண்பர்களிடையே மின்னஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நின்று விட்டது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

 1. சார், உங்க இரண்டு கட்டுரைகள் ஈழத் தமிழ் தொழில்நுட்ப சஞ்சிகையான ‘கம்ப்யூட்டர் ருடே’ ஜூலை 2011 இதழில் வெளியாகியுள்ளன. உங்களது ‘facebookஐ தக்க வருகிறது google+” எனும் கட்டுரையும், ‘google+ ஒரு அசத்தலான முன்னோட்டம்” கட்டுரையும் உங்களுக்கு ஆசிரியரால் நன்றி தெரிவித்து உங்கள் இணைய முகவரியுடன் வெளியாகியிருந்தன. உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன். ஸ்கேன் செய்து தற்போது அனுப்ப முடியாதுள்ளது. மன்னிக்கவும்.

 2. Abarajithan நீங்கள் கூறியது நினைவுள்ளது. இவை நான் ஏற்கனவே எழுதி உங்கள் தளத்தில் மீள் பதிவு செய்யப்பட்டவை ஆனால் இந்தக்கட்டுரை எழுதி தரப்பட்டு அங்கு வெளியான பிறகு இங்கே பதிகிறேன்.

  ஸ்கேன் எல்லாம் தேவையில்லை Abarajithan உங்களுடைய இந்த பதிலே போதுமானது. பலர் என்னுடைய கட்டுரையை என்னுடைய அனுமதி இல்லாமலே போட்டு இருக்கிறார்கள் என்னுடைய தள முகவரி கூட குறிப்பிடாமல். அந்த விசயத்தில் நீங்கள் நேர்மையானவரே! 🙂

 3. விமான பயண நினைவுகளை இன்னும் விட மாட்டீங்க போல இருக்குதே:)

  தட்ஸ்தமிழ் வரை வந்துட்டீங்களா!வாழ்த்துக்கள்.

  நீங்கள் சொல்லும் @,+ குறியீடுகள் பொது உரையாடலுக்கு சரியாக இருக்கலாம்.நிறுவனம் சார்ந்த கடித தொடர்புக்கு இன்னும் அவுட்லுக்கே பாதுகாப்பாக உள்ளதென நினைக்கிறேன்.

 4. சமூகத் தளங்கள் மூலம் நாம் நண்பர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளலாம். அதையே தொழில் அலுவலக பணி சம்பந்தப்பட்ட நிலை என்று வரும் போது இதை பயன்படுத்துவது அவ்வளவு நாகரீகமாக இருக்காது.

  ……உண்மை. எனது நண்பர்களில் சிலர், Facebook போன்ற தங்களது சமூக தளங்களில், தங்களுடன் வேலை செய்யும் நண்பர்களை சேர்த்துக் கொள்வதில்லை.

 5. சார். நான் ஒன்றும் அந்த சஞ்சிகையின் ஆசிரியரோ, ஏன் நிருபரோ கூட இல்லை. அந்த சஞ்சிகைக்கும் உங்கள் பக்கத்திற்கும் நான் வாசகன் மட்டும்தான். உங்கள் பதிவு வெளியானதைக்கண்டு மகிழ்ந்தேன். உங்களிக்கும் தெரிவித்தேன் அவ்வளவே..

 6. கிரி ….facebook ,google + இதுல எல்லாம் அக்கௌன்ட் ஓபன் பன்னுரதுக்கே ….ஈமெயில் வேணும் தானே ?

 7. @ராஜநடரஜான் எந்த ஆட்டத்தை கேட்கறீங்க? 🙂

  நீங்களும் விமானப் பயணக் கட்டுரையை நீங்கள் இன்னும் நினைவு வைத்து இருக்கீங்களா?

  @சித்ரா உண்மை தான்

  @Abarajithan ரொம்ப நன்றி 🙂

  @rajinitheclever நீங்க சொல்வது சரி தான் ஆனால் மின்னஞ்சலின் தேவை குறையும் போது மின்னஞ்சல் தேவை இல்லாமலே கணக்கை திறக்க முடியும்படி அமைத்து விடுவார்கள். தற்போது நீங்கள் கவனித்து இருக்கலாம் ஒரு சில தளங்களில் கணக்கு துவங்க facebook கணக்கு இருந்தாலே போதுமானது மின்னஞ்சல் கணக்கு தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here