பத்து மலை | மலேசியா பயணம்

18
பத்து மலை | மலேசியா பயணம்

ந்த வருடத்தில் இந்தியா கிளம்பிடனும் என்று உறுதியாக இருப்பதால், எப்படியாவது உலகின் மிகப்பெரிய மலேசியா “பத்து மலை” தைப்பூச திருவிழாவிற்குச் சென்று வந்து விட வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால், செல்வதற்கு உடன் யாரும் இல்லாததால் செல்ல முடியவில்லை.

பத்து மலை

சீனப் புத்தாண்டு விடுமுறையில் திடீர் என்று மலாக்கா செல்லலாம் என்று முடிவான பிறகு அப்படியே பத்து மலையும் சென்று வரலாம் என்று நினைத்தேன்.

விசா கூடச் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் விண்ணப்பித்தேன்.

நல்ல வேளை கிளம்பும் முதல் நாள் கொடுத்து விட்டார்கள்.

நான் நண்பர்கள் பாபு, சுரேஷ் மூவரும் காரில் சென்றாலும், சுரேஷ்க்கு கால் வலியால் மலை ஏற முடியாது என்பதால் அவர் வர முடியாது என்றானது, அப்படியே வந்தாலும் மேலே ஏற முடியாது.

இதனால் பத்து மலை செல்வது சந்தேகமாகவே இருந்தது.

எனக்குத் திரும்ப இது போல வர வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை.

தலைவரை இவ்வளவு அருகில் இருந்தும் பார்க்காமல் செல்கிறோமே! என்று இருந்தது. பிறகு நான் பாபு இருவர் மட்டும் மலாக்காவில் இருந்து பேருந்தில் சென்று வருவது என்று முந்தைய இரவு முடிவானது.

காலையில் நேரத்திலேயே சென்று திரும்பி வந்தால், கோவில் செல்வதற்கும் பின் திரும்ப மலாக்கா வந்து சுற்றிப் பார்க்க எளிதாக இருக்கும் என்று பாபு கூறிய யோசனையை ஏற்றுக் காலை 6 மணிக்குக் கிளம்புவதாக முடிவானது.

காலை 6 மணி என்பது மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் இரவு போல இருக்கும், 7 மணிக்கே இருட்டாகத்தான் இருக்கும்.

இதில் எங்கே டாக்சி தேடுவது! என்பதால் சுரேஷ் தானே காரில் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாகக் கூறினார், 15 நிமிடப் பயணம்.

கூகுள் வழிகாட்டி

காலையில் இருட்டில் கூகுள் வழிகாட்டி உதவியுடன் சரியாகப் பேருந்து நிலையத்தை அடைந்தோம்.

சுரேஷ் கூகுள் வழிகாட்டியில் நன்கு தேர்ந்தவராக இருக்கிறார், இதை வைத்து அனைத்து இடங்களிலும் பட்டையைக் கிளப்பினார் 🙂 .

எனக்கு எந்தப் பக்கம் திரும்புவது என்று சந்தேகம் இருக்கும் இடங்களில் எல்லாம் எந்தச் சந்தேகமும் இல்லாமல் சென்று அவரோட அனுபவத்தைக் காட்டினார்.

உதாரணத்திற்கு நேராகச் செல்லும் போது இடது பக்கம் ஒரு வழி அதோடு இன்னொரு பாலம் வந்தால் மேலேயா கீழேயா எதில் செல்வது என்ற குழப்பம் வரும்.

கூகுள் வழிகாட்டி அதுவே சரியாகக் கூறும் என்றாலும், கொஞ்சம் அனுபவம் இருந்தால் மட்டுமே தூரம் திருப்பங்களை எளிதாகப் புரிந்து கணிக்க முடியும்.

ஏற்கனவே அனுபவம் இருந்ததால் காரில் ஏறியவுடனே வழி தெரிந்தாலும் இதையும் உதவிக்கு வைத்துக் கொள்கிறார். இருட்டிலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்றடைந்தோம்.

அரை மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்பதால் 6.30 பேருந்தை பிடிக்க முயற்சி செய்தோம் ஆனால், 7 மணி தான் முடிந்தது.

மலாக்காவில் இருந்து கோலாலம்பூர் செல்ல 10 அல்லது 12 ரிங்கட் கட்டணம்.

12 ரிங்கட் கொஞ்சம் கூடுதல் சொகுசாகவும் தொலைக்காட்சியும் இருந்தது. பல பேருந்து நிறுவனங்கள் உள்ளது, நம் விருப்பம் போல எதில் வேண்டும் என்றாலும் செல்லலாம்.

TBS (Terminal Bersepadu Selatan)

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்று நினைத்தோம் ஆனால், 8.45 க்கு புறநகர் பேருந்து நிலையமான TBS (Terminal Bersepadu Selatan) ஐ அடைந்து விட்டது.

1.45 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் எந்த வித அலுப்பும் இல்லாமல் அடைந்து விட்டோம்.

பேருந்தில் மொத்தமே 7 பேர் தான் இருந்தோம்.

கோலாலம்பூர் சென்ட்ரல்

அங்கே (Bandar Tasik Selatan) இருந்து LRT ரயில் சேவையில் “கோலாலம்பூர் சென்ட்ரல்” சென்று அங்கே இருந்து பத்து மலை செல்லும் இன்னொரு ரயிலில் மாற வேண்டும்.

TBS லியே பத்து மலை வரை பயணச்சீட்டு எடுத்தால் கட்டணம் குறைவு.

எந்தச் சிரமும் இல்லாமல் காலை 9.30 க்கு பத்து மலை வந்தடைந்து விட்டோம். ரயில் நிலையம் கோவில் அடிவாரத்திலேயே இருப்பது வசதியாக இருந்தது.

பெருமாள் கோவில்

ஏற்கனவே ஆறு வருடங்களுக்கு முன்பு இங்கே வந்து இருந்தாலும் பெருமாள் கோவில் பார்த்தது போல நினைவில்லை.

கடந்த முறை டாக்சியில் வந்ததால் ஓரமாக இருந்த இந்தக் கோவிலை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் இந்தக் கோவில் வழியாகத் தான் சென்றாக வேண்டும்.

சிறிது உயரத்தில் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பெருமாளுக்கு அட்டகாசமாக அலங்காரம் செய்து இருந்தார்கள்.

பொதுவாக நான் கும்பிடுவது எல்லாம் அதிகபட்சம் ஐந்து நொடிகள் தான். தலைவர் முருகனுக்கு மட்டும் கொஞ்சம் நேரம் எடுக்கும்.

பெருமாள் அலங்காரத்தைப் பார்த்து அசந்து போனதால், கூடுதல் நேரம் நின்று பார்த்து வந்தேன். சமீபத்தில் அலங்காரம் பார்த்து வியந்தது இதுவாகத் தான் இருக்கும்.

அதற்குச் சிலையின் வெளிச்சமான பின்னணியும் மற்றும் வித்தியாசமான வண்ணத்தில் இருந்த பூ மாலையும் காரணமாக இருக்கலாம்.

சிவன் கோவில்

அதன் பிறகு விநாயகர் மற்றும் சிவன் கோவில் உள்ளது. அசுரன் புத்தகம் படித்த பிறகு சிவனுக்கும் ரசிகன் ஆனது போலத் தோன்றுகிறது.

இங்கேயும் சென்று வணக்கம் போட்டு விட்டு வந்தேன். சமீபமாக சிக்ஸ் பேக் சிவன் என்னை ரொம்பக் கவர்ந்து விட்டார் 🙂 .

இந்த முறை பத்து மலை ஏறும் முன்பு பெண்கள் டிராயர் அல்லது தொடை வரை இருக்கும் உடை அணிந்து இருந்தால் அடிவாரத்தில் 5 ரிங்கட் கொடுத்து துணி வாங்கி இடுப்பில் கட்டிய பிறகு தான் செல்ல முடியும்.

கடந்த முறை இது போல விதிமுறை இருந்ததா! என்று நினைவில்லை. திரும்பி வந்து துணியைக் கொடுத்தால் 2 ரிங்கட் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்.

இது போலச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. வேறு எங்கும் இது போலப் பார்த்ததாகவும் நினைவு இல்லை.

படிகள் செங்குத்தாக இருப்பதால், பெண்கள் மேலே ஏறும் போது பின்னாடி வருபவர்களுக்குத் தர்மசங்கடம் ஆகி விடக் கூடாது என்பதற்காக, இது இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இடுப்புக்கு கீழே சரி… மேலே…?!

மூலவர்

மூலவரை தரிசித்து விட்டு (அறிவிப்பைப் பார்த்தால் தான் மூலவர் என்று தெரியும், ரொம்பச் சாதாரணமாக இருக்கும்) திரும்பச் சில படிகட்டுகள் ஏறினால் ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகன் கோவில் சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு கிளம்பினோம்.

கோவில் பற்றி ஏற்கனவே விளக்கமாக எழுதி இருக்கிறேன்.

பலர் மூச்சிரைத்து நிற்பதைப் பார்க்க முடியும். படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதால் கொஞ்சம் படிகள் ஏறியவுடனே மூச்சு வாங்கும், நின்று நின்று தான் ஏற முடியும்.

வயதானவர்களும் ஏறி வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

விடுமுறை காலம் என்பதாலோ என்னவோ வெளிநாட்டினர் கூட்டத்தோடு உள்ளூர் கூட்டமும் அதிகளவில் இருந்தது.

பத்து மலைக்கு மலாக்காவில் இருந்து வேட்டியில் தான் சென்றேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது 🙂 .

நீண்ட நாட்களுக்குப் பிறகு வேட்டி கட்ட வாய்ப்பு.

ஊருக்குச் சென்றால், எங்கெல்லாம் வேட்டி அணிந்து செல்ல முடியுமோ அங்கெல்லாம் அணிந்து செல்ல வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.

குப்பைகள்

பத்து மலை உலகளவில் எவ்வளவு பிரபலமான கோவில்! ஆனால், கோவிலின் உள்ளே தண்ணீர் பாட்டில்கள், பைகள், குப்பைகள் என்று இருக்கிறது.

படிக்கட்டுகள் முழுவதும் சாப்பாட்டு பைகளும், குப்பைகளும் நிறைந்து இருக்கின்றன.

எவ்வளவு வருமானம் பார்க்கிறார்கள், சுத்தமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டாமா!

கோவிலுக்கு வருகிறவர்களும் கோவில் புனிதமான இடம் என்ற எந்த உணர்வும் இல்லாமல் இது போலச் செய்வதைப் பார்த்தால், எரிச்சலே மேலிடுகிறது.

இதில் கோவில் நிர்வாகத்தையும் குற்றம் கூற வேண்டும். இவர்கள் உண்டியல் வைக்கக் காட்டிய ஆர்வத்தில் குப்பைத் தொட்டி வைக்கவும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

உண்டியல் தான் எங்குப் பார்த்தாலும் காணப்படுகிறது. வெளிநாட்டினர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்!

வெளிநாட்டினரை விடுங்கள் நம் கோவிலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா! முருகனிடம் உள்ள தடியை வாங்கி எல்லோரையும் நாலு சாத்து சாத்தனும் போல இருந்தது.

கோவில் உள்ளே வரை செருப்பு அனுமதிக்கிறார்கள். நம் தற்குறிகள் சிலர் உள்ளே கோவில் பிரகாரத்தின் படிக்கட்டின் மீதே செருப்போடு அமர்ந்து பல்லைக் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

முருகனைப் பார்க்க ஆர்வமாக வந்தேன் ஆனால், ஏனோ திருப்தி இல்லாமலே கிளம்பினேன். மொத்த ஆர்வமும் கீழே இறங்கும் போது வடிந்து விட்டது.

உணவகம்

கீழேயே உணவகம் இருந்தது, சுவையும் நன்றாக இருந்தது. சாப்பிட்டு விட்டு அங்கே இருந்து 11.30 க்கு கிளம்பி திரும்ப ரயிலில் சென்றோம்.

அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இருப்பதால், பிரச்சனையில்லை.

ரயிலில் புகைப்பிடிக்கக் கூடாது, சாப்பிடக்கூடாது என்ற அறிவிப்போடு முத்தம் இடக்கூடாது என்றும் இருந்தது 🙂 . “Indecent behavior” not allowed என்று அறிவிப்பு இருந்தது.

ரயில் மெதுவாகவும் சில இடங்களில் சில நிமிடங்கள் நின்றே சென்றது.

ரயில் / பேருந்து நிலையங்களில் பல இடங்களில் எஸ்கலேட்டர் வேலை செய்யவில்லை.

காலையில் கூட்டமே இல்லாமல் இருந்ததால் இப்பவும் அப்படியே இருக்கும் என்று நினைத்துச் சென்றால், செம கூட்டமாக இருந்தது.

விமான நிலையம் போல அறிவிப்புகளுடன் பேருந்து நிலையம்  பிரம்மாண்டமாக இருக்கிறது.

2.15 மணி பேருந்தில் இடம் கிடைத்தது ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது.

வழியிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நாங்கள் மலாக்கா சென்றடைந்த போது 5.30 ஆகி விட்டது. கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வீணாகி விட்டது.

மலாக்கா

நாங்கள் மலாக்கா திட்டமிடாமல் வந்தோம். எங்குமே தங்க விடுதி கிடைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் “House full” என்று அறிவிப்பு இருந்தது.

அப்புறம் எப்படியோ இடம் பிடித்தோம். நான்கு பேர் தங்கும் அறை 130 ரிங்கட். அறை நன்றாக இருந்தது.

நாங்கள் தங்கி இருந்த Golden star விடுதி அருகே உணவு விடுதி இருந்தது, கேரளாவைச் சார்ந்தவர்கள். டீ, காஃபி, புரோட்டா போன்றவை ரொம்ப நன்றாக இருந்தது.

சிங்கப்பூர் புரோட்டாவை விட இங்கு நன்றாக இருந்தது.

மலையாளிகள் சிங்கப்பூர் மலேசியாவில் அதிகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபி உணவகம்

திரும்ப மாலை, அருகில் இருந்த இடங்களுக்குச் சென்று நிழற்படம் எடுத்துக்கொண்டு வந்தோம்.

நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு எதிரே இருந்த பஞ்சாபி உணவு விடுதியில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து சென்றால், அதன் சுவையில் மயங்கி விட்டோம்.

நான் இவ்வளவு சுவையாகச் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. இரண்டு இரவும் இங்குத் தான் சாப்பிட்டோம்.

இன்னும் அந்தச் சுவை நாவில் இருக்கிறது 🙂 . தயிர் அட்டகாசமாக இருந்தது.

தந்தூரி சிக்கன் அதிகமாகக் கொடுத்து விட்டார்கள். நான் கூட வீணாகி விடுமோ என்று நினைத்தேன் ஆனால், சுவை நன்றாக இருந்ததால், வீணாகவில்லை.

சுவை நன்றாக இருந்தால், வழக்கமாகச் சாப்பிடுவதை விடக் கூடுதலாகச் சாப்பிடுகிறோம் என்று நினைக்கிறேன்.

அதிகம் சாப்பிட மாட்டேன் இருப்பினும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இங்கே ரொம்பத் திருப்தியாகச் சாப்பிட்டேன். இருவருக்கும் ரொம்பப் பிடித்து இருந்தது.

ஒருவேளை மலாக்கா செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக இங்கே சென்று சாப்பிட்டுப் பாருங்கள். அங்கே இருந்த சிங் நன்றாகக் கவனித்தார்.

இந்த இடம் மலாக்கா சென்ட்ரல் அருகேயே உள்ளது. பின்வருவது முகவரி.

The Tandoori House Restaurant
273, Jalan Melaka Raya 3
Taman Melaka Raya
75000 Melaka

நிழற்படங்கள்

சென்ற இடங்களில் எல்லாம் பாபுவை அனைத்தையும் படம் எடுக்கக் கூறி ஒரு வழி ஆக்கிட்டேன்.

நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் படங்களை எடுத்தவர் உங்கள் பாபு” (என்று போடும்படி மிரட்டினார்) 😀 .

பாபுக்குப் படம் எடுப்பதில் ரொம்ப ஆர்வம், வளைச்சு வளைச்சுப் படம் எடுத்துத் தள்ளினான். இந்தக் கேமராவில் நான் எடுத்தால் கூட நன்றாக வருகிறது 🙂 .

விலை கேட்டு அதிர்ச்சியானதால், வாங்கும் யோசனையைக் கை விட்டு விட்டேன்.

காலையில் நேரத்திலேயே கிளம்பலாம் என்று முடிவானது. ஏனென்றால் மாலையாகி விட்டால் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்து விடும்.

மொத்த சிங்கப்பூரும் மலேசியா வந்தது போல இருந்தது. எங்குப் பார்த்தாலும் சிங்கப்பூர் கார்கள் தான்.

மலாக்கா லிட்டில் இந்தியா

காலையில் லிட்டில் இந்தியா பகுதியில் [அங்கேயும் ஒரு லிட்டில் இந்தியா 🙂 ] இருந்த உணவு விடுதியில் சாப்பிட்டோம், அட்டகாசம். செம்ம கவனிப்பு.

சீனர்களும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தார்கள். இங்கே நம்ம ஊரை விட விலை குறைவு.

மூன்று முட்டை தோசை, ஒரு சாதா தோசை, ஒரு ஆஃப் பாயில், உப்புமா, இரண்டு காஃபி இன்னொன்னு எதோ சாப்பிட்டார்கள் மறந்து விட்டேன்.

இவ்வளவும் சேர்த்து 350 ருபாய் நம் மதிப்பில் வந்தது. நம்ம ஊரில் சாதா தோசையே 80 ருபாய் சொல்கிறார்கள்.

நம் ஊரில் நிச்சயம் 500 ரூபாய்க்கு மேல் வந்து இருக்கும். சாம்பார் சுவை எல்லாம் சொல்வதற்கே இல்லை.. அவ்வளவு அசத்தலாக இருந்தது.

சிங்கப்பூரில் இருந்து வரும் எங்களுக்கே (எங்களுக்கே என்றால், நிரந்தரவாசி அல்லாத எங்களுக்கே) பெரும்பாலும் விலை குறைவாகத் தோன்றுகிறது.

சுருக்கமாக சிங்கப்பூர் பணத்தில் பாதி விலை.

இதே அமெரிக்கா ஐரோப்பா போன்ற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அவர்கள் பண மதிப்பில் ஒன்றுமே இல்லை.

இதனால் தான் வெள்ளைக்காரர்கள் நம் ஊர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற இடங்கள் வந்தால் செலவழிக்கத் தயங்குவதில்லை.

பவுண்டில் செலவு செய்தால், அவர்களுக்கு இவையெல்லாம் இலவசம் என்பது போலத் தான் தோன்றும்.

கோவிலுக்குச் செல்ல நினைத்தேன் ஆனால், நேரமில்லாததால் திரும்பப் புராதான தெரு சென்று சில நிழற்படங்களை எடுத்த பிறகு கிளம்பி விட்டோம்.

கிளம்பியவுடன் கூகுள் வழிகாட்டி உதவி மூலம் பல சாலைகளைச் சுற்றி சரியாக விரைவுச் சாலை அழைத்துச் சென்றது.

அங்கே இருந்து சரியாக 200 கிலோமீட்டர்.

இளையராஜா பாடல்கள்

திரும்ப ஒரு அற்புதமான நெடுஞ்சாலைப் பயணம். பாபு செம பாடல்களைப் பதிவு செய்து கொண்டு வந்து இருந்தான். அனைத்துப் பாடல்களுமே நன்றாக இருந்தது.

பெரும்பாலும் புதிய இசையமைப்பாளர்கள் பாடல்கள்.

சமீபமாகத் தமிழில் நிறைய இசையமைப்பாளர்கள் அறிமுகம் ஆகி இருப்பது ரொம்ப நல்ல விஷயம்.

பாதித் தூரம் சென்ற பிறகு இளையராஜா பாடல்கள். இதைக் கேட்டால் இன்னும் 200 கிலோமீட்டர் கூடச் சலிப்பில்லாமல் செல்லலாம் 🙂 . 

அதி தீவிர இளையராஜா ரசிகரான சுரேஷ், இளையராஜா பாடல்கள் வந்ததும் உற்சாகமாகி விட்டார்.

இரு புறமும் இயற்கையின் அழகைப் பார்த்து, காரை நிறுத்தி ரசிக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால், பின்னால் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டு இருந்ததால், அந்த யோசனையைக் கை விட்டுவிட்டேன். கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறி இருந்தால், கலக்கலாக இருந்து இருக்கும்.

கடந்த இடுகையில் நெடுஞ்சாலை பற்றிக் கூறும் போது ஒன்றை மறந்து விட்டேன். இந்த நெடுஞ்சாலை இரு வழிச் சாலை என்பது எனக்கு மிக மிக ஆச்சர்யமான ஒன்று.

நம் ஊரிலேயே ஆறு வழிச் சாலை இருக்கின்ற போது ஏன் இன்னும் இரு வழிச் சாலையிலிருந்து மாற்றாமல் வைத்து இருக்கிறார்கள் என்று குழப்பமாக இருந்தது.

விரிவாக்கம் செய்வதும் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

கிரி – சுரேஷ் – பாபு

பாபு சுரேஷ் இருவருக்குமே நான் கடமைப் பட்டு இருக்கிறேன்.

பாபு எனக்காகத் தான் பத்து மலை வந்தான், அதோடு நிழற்படம் எடுக்கக் கூறிய என்னுடைய தொல்லையையும் சகித்துக் கொண்டான் 🙂 .

சுரேஷ் க்கு காலில் வலி இருந்தாலும் இரண்டு நாட்களும் எங்களுக்காகக் கார் ஓட்டிக்கொண்டு வந்த நல்லவர்.

இவரைப் போல நல்லவர் வல்லவரைப் பார்ப்பது அரிது 🙂 . அநியாயத்துக்கு அனுசரித்துப் போவார். நானே நிறைய முறை “சுரேஷ்! இப்படி எல்லாம் நீங்க ரொம்ப நல்லவராக இருக்காதீங்க!” என்று கூறும் அளவிற்கு இருப்பார்.

எங்கள் இருவர் சார்பாக சுரேஷ்க்கு மிக்க நன்றி.

இந்தப் பயணம் ஒரு அவசரப் பயணம் என்பதால் நிறைய இடங்கள் பார்க்க முடியாமல் போய் விட்டது. இருப்பினும் இது போன்ற வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! Road Trip செல்வது எனக்கு ரொம்பப் பிடித்தமானது.

சென்ற மலாக்கா இடுகை – மலேசியா பயணம் – மலாக்கா

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

18 COMMENTS

  1. பயணம் படிக்க சுவாரசியமாக இருந்தது. பத்து மலை இன்னும் நான் சென்றதில்லை. உங்க நண்பர் பாபு எடுத்த படங்கள் நன்றாக உள்ளது. உங்க தமிழ்படம் கமெண்ட் (நீங்கள் பார்த்துக்கொண்டு.. ) ரசித்தேன் 🙂

    நம்ம ஊர்ல எல்லாம் இப்ப ஹோட்டல் சாப்பாடு விலை ரொம்ப அதிகம் ஆகிடுச்சு பாஸ்.

    இப்ப கமெண்ட் பாக்ஸ் சரியாக உள்ளது தமிழிலும் டைப் அடிக்க முடிகிறது. நன்றி

  2. தல சூப்பர்.. செமையா இருக்கு உங்க பயண அனுபவம்.

    நான் மலாக்கா போய் இருக்கிறேன்.. அமைதியான ஊர். நன்றாக இருக்கும். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.. என்ன கேமரா?

    நீங்க பார்க்க வேண்டிய இடம் இன்னும் இருக்கு.. அங்கேயும் போய் இருந்தால், இன்னும் நிறைய எடுத்து இருக்கலாம். நீங்க சொன்ன பஞ்சாபி ஹோட்டல் போகலை.. மிஸ் பண்ணிட்டோம்.

    ஒரு வழியா கமெண்ட் பிரச்சனை சரி செய்துட்டீங்க போல. கலக்குங்க.

  3. கிரி வழக்கம் போல அருமையான பயணக்கட்டுரை. நீங்க இது போல பயணம் சென்று ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்கிறேன். பயணக்கட்டுரை பார்த்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது.

  4. கிரி, கட்டுரை முழுமையாக படித்த பின் உட்கார்ந்த இடத்திலே மலேசிய சென்று வந்த அனுபவம் கிடைத்தது… எண்ணங்கள்,கனவுகள், ஆசைகள், நேரம், நண்பன் எல்லாம் இருந்த போது போதிய பணம் இல்லை… இப்போ தேவையான பணம் இருக்கும் போது நேரம் மட்டும் இல்லை கிரி..

    கோவையில் பணி புரிந்த போது சக்தியோட சேர்ந்து வார விடுமுறையில் சுத்தாத இடம் கிடையாது.. இந்த ஆண்டோடு எங்கள் நட்பு 10 வருடம் முடிகிறது..முடிவு என்பது ஆண்டுக்கு தான் மட்டும் எங்களுக்கு இல்லை…

    நெடுதூர பயணம் என்றாலே அழைக்காத விருந்தாளி இளையராஜா சார்.. தினம் தினம் பிரமித்து போகிறேன் அவரின் பாடல்களில்… என்னுடைய சோகங்களையும், வலிகளையும், மகிழ்ச்சியையும் 80% சுமந்தது அவரின் பாடல்கள் தான்… பகிர்வுக்கு நன்றி கிரி..

  5. அருமை கிரி… almost the same experience i had it before when i been to those places few times.
    Regarding the cleanliness and the people’s behaviour (going with chappel, improper attaires etc) i think it could be due to the place has been announced as tourist place rather a Holy temple…!!! So it is unavoidable where lot of international people visits every day. But same as you..i too feel sad..!!

    I also recommend you to visit Penang during “Tahipoosam” (Thanneer malai murugan). I visited there for two thaipoosam festivels..(if possible wish to visit every year). So nativity/colorful/ lovely people etc.
    The important event is coconut breaking while chariot coming… must see event..pls try next time.

  6. அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது.பகிர்வுக்கு மிக்க நன்றி…

    மலர்

  7. ஹாய் கிரி எப்படி இருக்கீங்க? பயணம் சூப்பர்.

    உங்க செல்ஃபி படம் நல்லா இருக்கு.. ஹோட்டல் ல ஃபுல் கட்டு கட்டி இருக்கீங்க போல 🙂

    இனி நம்ம சென்னை கோவை எல்லாம் காஸ்ட்லி நகரத்தில் சேர்த்திடனும்.. வெளிநாடுகளை விட இங்கே அநியாயமா ஹோட்டல் ல அதிகமா இருக்கு. சமாளிக்கவே ரொம்ப சிரமமா இருக்கு.

    டெக்னிக்கல் போஸ்ட் எழுதலையா.. ரொம்ப நாள் ஆச்சு போல.

  8. கிரி, நீங்க KL வந்தது தெரிந்து இருந்தால் கண்டிப்பா நான் வந்து பார்த்திருப்பேன். KL Sentral அருகாமையில் தான் என்னோட வீடு. என்னோட அனுபவத்தில் வாழ்வதற்கு அருமையான ஊர் மலேசியா கிரி, முன்பு நான் சிங்கபூர்,UK UAE / GULF, நாடுகளில் பணிபுரிந்துள்ளேன். இவைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் இது. எல்லாமே நம்ம ஊர் போல நம்ம ஊரைவிட மண்மணம் மாறாமல் கிடைக்கும். எல்லா பண்டிகைகளும் நம்ம விருப்பம் போல் கொண்டாடலாம். நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்து இங்கு வந்தால் வாழ்க்கை மிக இனிது.

  9. ஹாய், glad you are going back to India this year. we badly need a Kejriwal for Tamil Nadu. Hope you will fill up that need. 🙂

  10. முதலில் உங்க நண்பர் பாபுக்கு என் நன்றியைச் சொல்லிடுங்க. ஒரு பயணக்கட்டுரையில் நான் எதிர்பார்க்கும்

    நாம் பார்த்த சின்னச் சின்ன விசயங்கள்,

    நாம் பாதிப்படைந்த விசயங்கள்

    ஞாபகப்படுத்தும் விசயங்கள்

    இதன் மூலம் பலருக்கும் சொல்ல வேண்டிய விசயங்கள் என் அனைத்தையும் இந்தப் பயணக்கட்டுரையின் மூலம் எனக்குக் கிடைத்தது.

    மலாக்கா, கெந்திங், இந்த இரண்டு இடங்களுக்கும் நான் சென்றதில்லை. மற்ற இடங்கள் ஒரளவுக்குச் சுற்றியுள்ளேன்.

  11. அருமையான பயணக் கட்டுரை.. ஒருமுறையாவது மலேசியா போய் வரணும் 🙂

  12. செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதை செல்லுமிடமெல்லாம் குப்பையாக்க என்று நம் புரிந்து வைத்துள்ளர்கள் போல.

  13. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @சிவா Feedly Reader ஆமாம் “ஒருவழியா” பின்னூட்டப் பிரச்சனை சரியாகி விட்டது 🙂

    @யாசின் நான் கூட உங்கள் இருவர் நட்பு 15 வருடங்களுக்கும் மேல் இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் பாதி வருடங்கள் பிரிந்து இருந்தீர்கள். இணைந்து இருந்தது சில வருடங்களே இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குறுகிய வருடங்களில் இவ்வளவு நட்பாகி விட்டீர்களா! ஆச்சர்யமாக இருக்கிறது.

    @சிவா தண்ணீர் மலை முருகன் பற்றி நண்பர் ஒருவரும் கூறினார். அப்போது அவ்வளவாக தோன்றவில்லை.. தற்போது நீங்கள் கூறுவதைக் கேட்கும் போது இங்கே சென்று இருக்கலாமோ / தவற விட்டுடோமோ என்றது தோன்றுகிறது 🙁

    @அர்விந்த் அடுத்த இடுகை அது தான் .

    @சிங்கக்குட்டி இது நண்பர்களுடன் சென்றேன் என்பதால் கூற முடியவில்லை.இது என்ன பெரிய விசயம். மேலே பாருங்க சிவா தண்ணீர் மலை முருகன் பற்றி கூறி இருக்கிறார். நாம அங்கே போயிட்டு வருவோம். என்ன சொல்றீங்க? 🙂

    @சிட்டி பாபு நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. குறைவான விலை நல்ல தரம். நீங்கள் கூறியபடி நல்ல சம்பளம் என்றால் வசிக்க அருமையான ஊர். பாதுகாப்பு என்ற விசயம் தான் பிரச்சனையாக இருக்கிறது. அங்கே பாதுகாப்பு இல்லை. இது பற்றி பலரும் குறை கூறுகிறார்கள்.

    @Renga திரைப்படங்களுக்கு ஏதாவது பிரிவு இருந்தால் சொல்லுங்கள்.. அதுக்கு வேண்டும் என்றால் சரி.. இதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் 🙂

    @ஜோதிஜி ஒரு சோதனை பின்னூட்டம் போட்டு உறுதிப் படுத்துகிட்டீங்க 🙂 இந்த முறை பிரச்சனை இருக்காது. சரி பண்ணிட்டேன்.

    பாபுக்கிட்ட சொல்லிட்டேன். நன்றி

    @சங்கர் உங்க பாராட்டு பாபுக்கு போவதாக 🙂

  14. கிரி,
    பதிவு அட்டகாசம்
    உங்க பயண கட்டுரை குறிப்பா flight travel கட்டுரை கு பெரிய ரசிகன் நான்…

    நான் நெஜமா சொல்லுறேன் உங்க பயண கட்டுரை பத்தின பதிவுகள ஒரு book கா release பண்ணுங்க ….ரொம்ப வரவேற்பு இருக்கும்…விளையாட்டா இதை எடுத்துக்க வேண்டாம்

    ஒரு சந்தேகம் உங்க பயண கட்டுரை tag பதிவுகள் மட்டும் எப்படி தேடுறது? முதல்ல எல்லாம் அப்படி தேட முடியுமே, நான் எதுவும் மிஸ் பண்ணுறேனா ?

    – அருண் கோவிந்தன்

  15. கிரி,
    உங்க home page ல தேடும் போது என்னோட tag related கேள்விக்கு கு பதில் கிடைச்சது
    நன்றி

    -அருண் கோவிந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here