Neru (2023 Malayalam) | நீதி கிடைக்குமா?

3
Neru

நீதிமன்ற காட்சிகள் அதிகம் வந்த படங்களில் ஒன்றாக Neru. Image Credit

Neru

சாரா முகமது என்ற பார்வையற்ற பெண்ணை, அவர் தனியாக இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி மைக்கேல் வல்லுறவு செய்து தப்பித்து விடுகிறான்.

சாரா தனது அப்பாவைப்போலவே களிமண் சிலை வடிவமைப்பில் தேர்ந்தவர் என்பதால், தொடு உணர்வின் மூலம், மைக்கேலை வடிவமைத்துக் கொடுக்கிறார்.

வழக்கு நீதிமன்றம் செல்கிறது. மைக்கேல் மிகப்பெரிய பணக்காரன் பையன் என்பதால், இந்தியாவின் சிறந்த வழக்கறிஞராக உள்ள ராஜசேகரன் வாதாடுவார்.

சாராக்கு ஆதரவாக வரும் அரசு வழக்கறிஞர் சொதப்பி விடுகிறார். இதனால், வருபவர் தான் மோகன்லால்.

மோகன்லால் வந்த பிறகு வழக்கு என்ன ஆனது என்பதே Neru.

சாரா

பார்வையற்றவராக இருந்தாலும், பார்வையற்றவர் என்று மிகைநடிப்பு செய்யாமல் சாரா நடித்துள்ளார்.

மோகன்லால் வழக்காடுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு மீண்டு வந்ததால், வழக்காடுவதில் form இல்லாமல் இருப்பதால், வழக்கை எடுக்க மாட்டார்.

சாரா வீட்டுக்கு மோகன்லால் வரும் போது அவரின் நிலைக்குச் சாராவின் பக்குவமான அதே சமயம் தவிர்க்க முடியாத அளவுக்குப் பேச்சு அமைவது சிறப்பு.

சாராக்கு இக்கதாபாத்திரம் சிறப்பாகப் பொருந்தியுள்ளது. அதிலும் இறுதியில் கலக்கி விட்டார். அவர் பேச்சு, உடல்மொழி எல்லாமே சிறப்பு.

மோகன்லால்

மோகன்லாலின் இயல்பான நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகன். இவருக்குச் செயற்கையாக நடிக்கவே வராதோ எனும் அளவுக்கு இயல்பாக நடிப்பார்.

இப்படத்திலும் இயல்பான நடிப்பை வழங்கி, உணர்ச்சிகரமான இறுதிக்காட்சியிலும் கண்கலங்கி நடித்து இருப்பார், அதில் கண்ணீர் வழிவது போல இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்று தோன்றியது.

இக்காட்சியில் நமக்குக் கண்கள் கலங்காமலிருந்தால், வியப்பு தான். கண் கலங்கவில்லை, எனக்குக் கண்ணீரே வழிந்து விட்டது.

மோகன்லால் சும்மா தான் இருப்பார், இவர் வருமானத்துக்கு என்ன செய்கிறார் என்று தோன்றியது. இது மாதிரி வரும் கதாபாத்திரங்கள் வெட்டியா இருப்பார்கள்.

எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று பல படங்களில் தோன்றியது போல இதிலும் தோன்றியது.

போட்டியாளராக வரும் ஆகச்சிறந்த வழக்கறிஞர் ராஜசேகரன் நடிப்பு ரொம்ப சுமார். அதாவது உச்சநீதிமன்ற நீதிபதி போலக் கெத்தாக இல்லை, உடல்மொழியிலும் அதை பிரதிபலிக்கவில்லை, வழக்கிலும் பாதி தான் வாதாடுவார்.

இவரது மகளாக, மோகன்லாலின் முன்னாள் காதலியாக வரும் வழக்கறிஞர் பிரியாமணி பேசுவது நன்றாக உள்ளது ஆனால், முகபாவனைகள் சிறப்பாக இல்லை.

நீதிமன்றம்

இது போன்ற பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்றால், மிகக்கொடுமையான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

இதுவொரு இரண்டாம் கொடுமையான அனுபவம் போலத்தான். என்ன தான் பணத்துக்காக என்றாலும், எப்படி இது போன்ற வழக்குகளுக்குக் குற்றவாளிக்காக ஆஜராகி வாதாடுகிறார்களோ!

அதுவும் சாரா போன்ற ஒரு பெண்ணின் முகத்தைப்பார்த்தாலே கேள்வி கேட்கத்தோன்றாது.

படத்துக்காக இவ்வழக்கில் தீர்ப்பு விரைவில் கிடைத்து விடுகிறது ஆனால், வழக்கமாகத் தீர்ப்பு வர 5 – 10 வருடங்களாகி விடும்.

இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட பெண் நிலை சொல்லி மாளாது.

தமிழில் விதி என்ற மோகன் / பூர்ணிமா ஜெயராம் நடித்த படம் அதிக நீதிமன்றக் காட்சிகளைக் கொண்டதாக இருக்கும்.

வசனங்களுக்கும், வாதங்களுக்குமே, நீதிமன்றக் காட்சிகளுக்குமே முக்கியத்துவம் இருப்பதால், ஒளிப்பதிவு, பின்னணி இசை முக்கியத்துவம் பெறவில்லை.

யார் பார்க்கலாம்?

நீதிமன்ற வழக்கு, வாதங்களில் ஆர்வம் உள்ளவர்கள் பார்க்கலாம். இவற்றோடு சாரா, மோகன்லாலின் இயல்பான நடிப்புக்காகவும்.

ஆகச்சிறந்த ஆக்கமில்லை ஆனால், நிச்சயம் பார்க்கத் தக்கப்படமே!

Disney+ Hotstar ல் காணலாம், தமிழிலும் உள்ளது.

Directed by Jeethu Joseph
Written by Santhi Mayadevi, Jeethu Joseph
Produced by Antony Perumbavoor
Starring Mohanlal
Cinematography Satheesh Kurup
Edited by V. S. Vinayak
Music by Vishnu Shyam
Release date 21 December 2023
Running time 152 minutes
Country India
Language Malayalam

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. இந்த படத்தை நானும் பார்த்தேன் கிரி.. படம் நன்றாக இருந்தது.. சாராவின் உடல் மொழி / எதார்த்தமான நடிப்பு நன்றாக இருந்தது.. லால் சாரின் நடிப்பை சொல்லவே வேண்டாம்.. எந்த பாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே மாறி விடுவார்..(வெகு நாட்களுக்கு முன்பு பார்த்த சிறைச்சாலை / இருவர் படங்களை, தற்போது சில தினங்களுக்கு முன்பு பார்த்தேன்.. சரியான நடிப்பு குறிப்பாக இருவர் படத்தில்..).

    போட்டியாளராக வரும் ஆகச்சிறந்த வழக்கறிஞர் ராஜசேகரன் நடிப்பு ரொம்ப சுமார் – உண்மை கிரி..

    இதே வழக்கறிஞர் பாத்திரத்தை ஜெய்பீம் படத்தில் ராவ் ரமேஷ் (ராம் மோகன் Advocate general) ஆக நடித்து இருப்பார்.. தெலுங்கு நடிகராக இருந்தாலும் உடல்மொழி அருமையாக இருக்கும்..கடந்த சில ஆண்டுகளில் என்னை மிகவும் கவர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர். பிரியாமணி நடிப்பு ஓகே தான்.. இன்னும் அழுத்தமாக நடித்து இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும்..

    எப்படி இது போன்ற வழக்குகளுக்குக் குற்றவாளிக்காக ஆஜராகி வாதாடுகிறார்களோ! :

    என்ன கிரி எத்தனையோ அரசியல் வழக்குகளில் குற்றவாளி என்று தெரிந்தும் அவருக்காக வாதாடுகின்றனர். வாய்தா, வாய்தா என்று வாழ்க்கை இழுத்தடிகின்றனர்.. சட்டத்தின் ஓட்டத்தில் இருந்தது எப்படி தப்பிப்பது என்று குற்றவாளிகளுக்கு கற்று கொடுப்பதே இவர்கள் தான்.. குறிப்பாக ஜெ வின் வழக்கு கடந்து வந்த பாதையை பார்த்தால் தலை சுற்றி விடும். இது போன்ற ஏராளமான வழக்குகள்..

    வழக்கு சம்பந்தப்பட்ட படங்களில் என்னை பொறுத்தவரை மௌனம் சம்மதம் படம் தான் பெஸ்ட் படம் என்பது என் அபிப்ராயம். (விதி படத்தை இதுவரை பார்க்கவில்லை). மௌனம் சம்மதம் படத்தை நான் சிறு வயதில் பார்த்தேன்.. எப்போது டிவி இல் வந்தாலும் முழு படத்தை பார்ப்பேன்.. இப்போதும் YOUTUBE எப்போதாவது காண்பேன்..

    ஒவ்வொரு முறை பார்த்த படமாக இருந்தாலும் புதிதாக பார்த்த உணர்வு ஏற்படும்.. மம்முட்டியின் உடல்மொழி, நாகேஷ் சார் நடிப்பு, திரைக்கதை, காட்சி அமைப்பு, பின்னணி இசை எல்லாம் சிறப்பாக இருக்கும்.. கல்யாண தேனில பாடல் எந்தவித மனநிலையிலும் நான் விரும்பி கேட்கும் பாடல்..

  2. @யாசின்

    “இதே வழக்கறிஞர் பாத்திரத்தை ஜெய்பீம் படத்தில் ராவ் ரமேஷ் (ராம் மோகன் Advocate general) ஆக நடித்து இருப்பார்.. தெலுங்கு நடிகராக இருந்தாலும் உடல்மொழி அருமையாக இருக்கும்”

    எனக்கு பிரகாஷ்ராஜ் தான் நினைவுக்கு வந்தார். இவர் இக்கதாப்பாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்து இருப்பார்.

    இதற்கு முன் மனிதன், தெய்வமகள் படங்களில் நன்றாக செய்து இருப்பார்.

    இவரைக் குறிப்பிட நினைத்தேன் ஆனால், ஒப்பீடு செய்ய வேண்டாம் என்பதற்காக குறிப்பிடவில்லை.

    “பிரியாமணி நடிப்பு ஓகே தான்.. இன்னும் அழுத்தமாக நடித்து இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும்..”

    வழக்காடியது நன்றாக இருந்தது ஆனால், பல இடங்களில் இக்கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் இல்லை.

    குறிப்பாக இறுதியில் வழக்கு முடிந்து சிரித்து கொண்டு இருப்பார். முடிவை இயல்பாக எடுத்துக்கொண்டார் என்று ஒரு பார்வையில் எடுத்துக்கொண்டாலும், பொருத்தமாக இல்லையென்பது என் கருத்து.

    “என்ன கிரி எத்தனையோ அரசியல் வழக்குகளில் குற்றவாளி என்று தெரிந்தும் அவருக்காக வாதாடுகின்றனர். வாய்தா, வாய்தா என்று வாழ்க்கை இழுத்தடிகின்றனர்.”

    சரி தான் யாசின்.

    ஆனால், பாலியல் வல்லுறவுக்கும் ஊழலுக்கும் வித்தியாசம் உள்ளதே!

    என்னால் இரண்டையும் ஒப்பிட முடியவில்லை. பாலியல் குற்றங்கள் என்னைப்பொறுத்தவரை கொடூரமானவை ஆனால், ஊழல் சமூகத்தில் இயல்பானதாக மாறி விட்டது.

    இது ஒரு பெண்ணை மனரீதியான உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் இவர் அடையும் பாதிப்பு ரொம்ப அதிகம்.

    ஊழல் வாய்தா போன்றவை வேறு வகை பிரச்சனை.

    “விதி படத்தை இதுவரை பார்க்கவில்லை”

    எப்படி பார்க்காமல் விட்டீர்கள் என்று வியப்பாக உள்ளது. பாருங்கள்.. இதுவும் கிட்டத்தட்ட இது போன்ற ஒரு கதை தான்.

    “மௌனம் சம்மதம்”

    மம்முட்டி நடிப்பு நன்றாக இருக்கும்.. அதோட அமலா ரொம்ப பிடித்தவர் 🙂

    • கிரி.. பழைய பாடல்களை விரும்பி கேட்கும் அளவிற்கு பழைய படங்களை பார்த்து மிகவும் குறைவு.. சொல்லப்போனால் கல்லூரி முடித்தும் நான் இரவு காட்சிக்கு சென்றதில்லை. கோவையில் பணி புரிந்த சமயத்தில் சக்தியுடன், எங்கள் நிறுவன தங்குமிடத்திற்கு அருகில் இருந்த பழைய திரையரங்கில் வாரத்தில் எப்படியும் 3 / 4 பழைய படங்களை பார்ப்பதுண்டு. வார இறுதியில் மட்டும் புதிய படம்.. அந்த சமயத்தில் பல நல்ல நல்ல பழைய படங்களை பார்த்தேன்.. அதன் நினைவுகள் தற்போதும் பசுமையாக இருக்கிறது. ஞாயிறு மட்டும் கோவையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வது.. கோவையில் நான் இருந்த வரை இது தொடர்ந்தது.. உணமையில் அது ஒரு வசந்த காலம்.. அது மீண்டும் திரும்பாது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here