ஆவணப்படம் போல ஆரம்பித்துத் திகில் படமாக மாறுவதே Udal. Image Credit
Udal
படுக்கையிலேயே இருக்கும் வயதான மாமியார், அவரது கணவராக இந்திரன். மருமகளாக துர்கா. மாமியாரைப் பார்த்துக்கொள்ளும் செவிலியர் இல்லாத நேரத்தில் துர்கா அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவருக்குத் தேவையான அனைத்தையும் செய்வது துர்காவுக்குச் சலிப்பையும், வெறுப்பையும் தருகிறது. இவரது கணவர் வேலைக்காக வேறு ஊரில் இருப்பார்.
இதனால் இங்கு அவருக்கு ஆறுதலாக இருப்பது அவரது கள்ளக்காதலன் தியான். தனது மாமியாரைப் பார்த்துக்கொள்வது வெறுப்பைத் தருவதால், காதலன் துணையுடன் மாமியாரைக் கொல்லத்திட்டமிடுகிறார்.
இறுதியில் என்ன ஆனது என்பதே Udal.
செம திரில்லர்
முதல் அரை மணி நேரம் ஆவணப்படம் போலவே செல்கிறது. பொறுமையிழந்து வேறு படம் பார்க்கலாம் என்று நினைக்கும் வேளையில் விறுவிறுப்பு கூடி இறுதி வரை பரபரப்பாக வைத்துள்ளது.
மாமனாருக்குக் காது சரியாகக் கேட்காது, பார்வை ஒரு பக்கம் கிடையாது.
மருமகள் துர்கா துவக்கத்தில் சாதுவாக இருப்பார் ஆனால், கொலை செய்யத் திட்டமிட்ட பிறகு அவருடைய மொத்த கதாபாத்திரமும் வேறு நிலைக்குச் செல்கிறது.
அவர் திட்டம் என்னவென்றால், ஏற்கனவே மாமியார் படுக்கை, எல்லோரும் எப்போது சாவார் என்று பார்த்துக்கொண்டு உள்ளார்கள். இந்நிலையில் சத்தம் இல்லாமல் கொன்று விட்டால், யாருக்கும் சந்தேகம் வராது.
அவர் திட்டம் சரி என்றாலும், அவர் எதிர்பார்க்காதது நடந்து மொத்தத் திட்டமும் ரணகளமாகி விடுகிறது.
துர்கா நடிப்பு தாறுமாறாக உள்ளது. அடேங்கப்பா! இவரா அவர் என்று திகைக்க வைக்கிறார். இவர் ஒரு பக்கம் கலக்கினால், மாமனார் இந்திரன் மாஸ் காட்டுவார்.
தெலுங்கு பட உலகைப் போல மலையாளப் படவுலகில் சிறந்த நடிகர்களுக்குப் பஞ்சம் போல. அடிக்கடி ஒரே முகங்கள் வருகிறார்கள்.
இதில் இந்திரன், திறமையான நடிகர், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்றாலும், பல படங்களில் காண முடிகிறது.
குறைந்த முதலீடு அதிக இலாபம்
ஒரு பிரச்சனை வந்தால், ஒருவருக்கொருவர் எப்படிச் சந்தேகப்படுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள் என்பது சுவாரசியம்.
ஆனால், என்னதான் மாமியார் படுத்து இருக்கிறார், மாமனாருக்குக் காது, பார்வைக் குறைபாடு உள்ளது என்றாலும், ரொம்ப சுதந்திரமாக இருவரும் பேசுவது, புகைப்பது, சுற்றுவது என்பது நம்புகிற மாதிரியில்லை.
ஒரு காட்சியில் ஒன்றை மறந்து விடுவார்கள், அதுவும் நம்பும் படியில்லை அக்காட்சி அவசியமும் இல்லை, வேறு மாதிரியும் காட்சிப்படுத்தி ஈடு செய்திருக்கலாம்.
மலையாள இயக்குநர்களைச் சும்மா சொல்லக் கூடாது. ஒரே ஒரு வீட்டை வைத்து மொத்தப்படத்தையும் பரபரப்பாகக் கொண்டு செல்கிறார்கள்.
படத்தில் செலவே இல்லை ஆனால், பரபரப்பாகச் செல்கிறது. தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பின்னணி இசை செமையாக உள்ளது, படத்துக்குப் பரபரப்பைக் கொடுக்கப் பெருந்துணை புரிந்துள்ளது. ஒளிப்பதிவும் அந்த ஒரு வீட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டு சிரமப்பட்டு எடுத்துள்ளார்கள்.
யார் பார்க்கலாம்?
திரில்லர் படங்களை விரும்புபவர்கள் அவசியம் பார்க்கவும்.
உடலுறவு காட்சிகள் இருப்பதால், குழந்தைகளுடன் பார்க்க ஏற்றதல்ல.
பரிந்துரைத்தது சூர்யா. OTT யில் தற்போதைக்கு இல்லை.
Directed by Ratheesh Raghunandan
Written by Ratheesh Raghunandan
Produced by Hazeeb Malabar
Starring Indrans, Durga Krishna, Dhyan Sreenivasan
Cinematography Manoj Pillai
Edited by Nishad Yousaf
Music by William Francis
Distributed by Sree Gokulam Movies
Release date May 20, 2022 (India)
Country India
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இந்த படத்தை நான் பார்க்கவில்லை.. ஆனால் இந்த படம் குறித்து எங்கேயோ படித்ததாகவோ அல்லது ஏதேனும் காணொளி கண்டதாகவோ நினைவில் இருக்கிறது.. இந்த படத்தில் மாமனாராக வரும் நடிகர் இந்திரனை குறித்து கமல், ஏதோ ஒரு மலையாள படத்தில் இவரின் நடிப்பினை குறித்து வியந்து பேசி இருப்பார்.. கமல் பொதுவாக ரஜினியை போல் எளிதில் யாரையும் பாராட்டமாட்டார்..
அதனால் இவரே பாராட்டி இருப்பதால் நான் அந்த காட்சியை பார்த்தேன்.. அது ஒரு பழைய மலையாள படத்தின் காட்சி அது.. இந்த சமயத்தில் இந்த படத்தை குறித்து படித்ததாக நினைவு..
உண்மையில் மலையாள சினிமா வேறு உலகில் பயணித்து கொண்டிருக்கிறது.. புதிய புதிய இயக்குனர்கள், புதிய கதைக்களம், புதிய யுக்திகள்.. என சிறப்பாக இருக்கிறது.. கடைசியாக வெளிவந்த மம்முட்டியின் 3 படங்களும் தாறுமாறான ஹிட்.. இந்த மாதம் இறுதியில் வெளிவர உள்ள ஆடுஜீவிதம் படத்தை காண ஆவலாக இருக்கிறேன்..
புதிய, புதிய மலையாள படத்தை பற்றி எந்த தகவலும் தெரியாமல் பார்க்கும் பல மலையாள படங்கள் ஏமாற்றங்களை தருவதில்லை.. 80% நிறைவை மட்டும் கொடுக்கிறது..
@யாசின்
“இந்த படத்தில் மாமனாராக வரும் நடிகர் இந்திரனை குறித்து கமல், ஏதோ ஒரு மலையாள படத்தில் இவரின் நடிப்பினை குறித்து வியந்து பேசி இருப்பார்.. கமல் பொதுவாக ரஜினியை போல் எளிதில் யாரையும் பாராட்டமாட்டார்..
அதனால் இவரே பாராட்டி இருப்பதால் நான் அந்த காட்சியை பார்த்தேன்.”
இதை நீங்கள் கூறியதும் எனக்கு அலுவல் சார்ந்து ஒன்று நினைவுக்கு வருகிறது.
எங்கள் குழு எந்தத் தொழில்நுட்ப எந்தப் பிரச்னையும் வராமல், முன்கூட்டியே சரி செய்து பிரச்சனைகளே வராமல் பார்த்துக்கொள்வோம்.
பிரச்சனைகளே வராததால் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எதற்காகவும் பாராட்ட மாட்டார்கள்.
ஆனால், இன்னொரு குழுவுக்கு ஒரு பிரச்சனை வந்து பல சிக்கல்களுக்கு, Escalation க்குப் பிறகு அவர்கள் சரி செய்தால், அவர்களைப் பாராட்டிப் பலரும் மின்னஞ்சல் அனுப்புவார்கள்.
இதில் உங்களுக்கு எதுவும் புரிகிறதா? 🙂 .
“புதிய புதிய இயக்குனர்கள், புதிய கதைக்களம், புதிய யுக்திகள்.. என சிறப்பாக இருக்கிறது.”
மறுக்க முடியாத உண்மை. தற்போது மலையாளப்படங்களையே அதிகம் பார்க்கிறேன். தமிழ்ப்படங்கள் சலிப்பை தருகிறது.
இது பற்றி தனிக்கட்டுரையாக பின்னர் எழுதுகிறேன்.
“புதிய மலையாள படத்தை பற்றி எந்த தகவலும் தெரியாமல் பார்க்கும் பல மலையாள படங்கள் ஏமாற்றங்களை தருவதில்லை.. 80% நிறைவை மட்டும் கொடுக்கிறது”
எனக்கும் இது போலத் தோன்றியுள்ளது.
உங்களின் அலுவல் குறித்த நிகழ்வை புரிந்து கொள்ள முடிகிறது கிரி..