CAA சந்தேகங்கள் என்ன? [FAQ]

6
CAA

CAA செயல்படுத்தப்பட்ட பிறகு எதிர்பார்த்தது போல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

CAA

குடியுரிமை சட்டம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் சிறுபான்மையினருக்காக இயற்றப்பட்டது.

இதற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை ஆனால், இவற்றையெல்லாம் தெரிந்தும் வேண்டும் என்றே பிரச்சனை செய்கிறார்கள்.

ஆனால், 2019 ல் நடந்தது போல எதிர்ப்பு இல்லாமல் அடங்கி விட்டது. Image Credit

எதிர்ப்பு மன நிலை

இந்திய முஸ்லிகளுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு சட்டத்தை, இந்திய முஸ்லிம்களுக்கு எதோ பிரச்சனை போலச் சித்தரித்து எவ்வளவு ஆர்ப்பாட்டம்!

மாநிலத்துக்கு எந்தச் சம்பந்தமுமில்லையென்றாலும் முஸ்லீம் ஆதரவுக்காக இச்சட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று ஸ்டாலின், பினராய் விஜயன், மமதா போன்றோர் செய்வது அப்பட்டமான அரசியல் அன்றி வேறில்லை.

ஒன்றுமே இல்லாத பிரச்சனைக்கு 2019 ல் எவ்வளவு கலவரம், போராட்டம்!

2019 இச்சட்டம் கொண்டு வந்த போது நடந்த போராட்டங்கள், வன்முறைகளுக்குக் காரணம் போலி NGO க்கள் மற்றும் பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்கள்.

எனவே, இவ்வகை NGO க்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கள்ளக்குடியேறிகள் இனம் காணப்பட்டு, ஒடுக்கப்பட்டதாலே, இந்த முறை பிரச்சனைகள் எழவில்லை.

அதெப்படி வாழ்க்கை தேடி வரும் நாட்டுக்கே துரோகம் செய்ய முடிகிறது!

எதனால் அகதிகளாக வருகின்றனர்?

இம்மூன்று நாடுகளும் இஸ்லாமியச் சட்டங்களைக்கொண்ட முஸ்லீம் நாடுகளாகும். இங்கே சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறித்துவர்கள் மட்டுமே பாதிப்புக்குள்ளாவார்கள்.

அதாவது மதரீதியான பாதிப்புக்குள்ளாவது மேற்கூறியவர்களே! மத மாற்றம், கோவில்களை, மத அடையாளங்களை அழிப்பது போன்றவற்றைச் செய்வது.

இவையல்லாமல் சிறுபான்மையினரைக் கொலை செய்வது, பெண்களுக்குப் பாலியல் ரீதியான தொல்லைகள், கட்டாயத் திருமணம் ஆகியவை.

இதன் காரணமாக, இம்மக்களின் எண்ணிக்கை பெருமளவு சரிந்து, தற்போதுள்ளவர்களும் பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அடக்குமுறைகளுக்குப் பயந்தவர்களே இந்தியாக்கு அகதிகளாக வருகின்றனர்.

இவ்வாறு வந்து 15 – 20 வருடங்களுக்கும் மேலாக அங்கீகாரம் கிடைக்காதவர்களின் குற்றப்பின்னணி சோதிக்கப்பட்டு குடியுரிமை வழங்கப்படுகிறது.

இதுவே CAA (Citizenship Amendment Act) சட்டம்.

எதனால் முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை?

இச்சட்டம் மத ரீதியாகப் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு மட்டுமே!

முஸ்லீம் நாடுகளில் ஷரியா சட்டப்படி ஆட்சி நடத்தப்படுவதால், முஸ்லிம்களுக்கு மதரீதியான தாக்குதல் மேற்கூறிய நாடுகளில் நடைபெற வாய்ப்பில்லை.

உலகில் 56 முஸ்லீம் நாடுகள் உள்ளன ஆனால், இம்மூன்று நாடுகளில் வாழும் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இந்தியா மட்டுமே உள்ளது.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு ஏதாவது நடந்தால், உலகம் முழுக்க கொந்தளிக்கிறார்கள் ஆனால், அதே மேற்கூறிய நாடுகளில் சிறுபான்மையினருக்கு நடப்பதை கேட்க நாதியில்லை.

பொருளாதார ரீதியாக முஸ்லிம்கள் வந்தால்?

இம்மூன்று நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் பொருளாதாரப் பிரச்சனைகளால் இந்தியா வந்தால், மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறப்படுவது சரியா?

இவ்வாறு வந்த முஸ்லிம்களுக்கும் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது ஆனால், பெரியளவில் வழங்கப்படாது.

காரணம், இந்தியா இந்துக்கள் பெரும்பான்மையுள்ள நாடு, இங்கே முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்தால், மதரீதியான பிரச்சனைகள், நாட்டில் கலவரம், வன்முறை அதிகரிக்கும். சுதந்திரத்துக்கு முன் ஏற்பட்ட நிலையே தொடரும்.

இந்தியா பாகிஸ்தான் பிரிந்ததே மதப்பிரச்சினைகளாலே! திரும்ப ஒரு முறை இதே இந்து முஸ்லீம் பிரச்சனைகளால் பிரிந்தால், இந்தியா தாங்காது, நியாயமுமில்லை.

பிரித்த பிறகும் இங்கே வந்து பிரச்சனைகளை உருவாக்குவது நியாயமற்ற செயல். இவர்கள் பிரச்சனைகளுக்கு UN போன்ற அமைப்புகள் உதவலாம்.

Demographic Change

எடுத்துக்காட்டாக, கள்ளக்குடியேறிகளாக வந்த பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்களால் இந்தியாவில் பல கலவரங்கள் நடந்துள்ளது, நடக்கிறது.

எனவே, மக்கள் தொகை மாற்றத்தால் (Demographic Change) ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்து, மதரீதியான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

இதற்கு எடுத்துக்காட்டாக எல்லை மாநிலங்களான அசாம், வட கிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கத்தைக் கூறலாம். மணிப்பூர் கலவரங்கள் காரணிகளில் இதுவும் ஒன்று.

இந்திய எல்லைப்பகுதி அகதிகள் முகாமில் 40,000 ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

எதனால் ஆபத்தானவர்கள்?

மிக ஆபத்தானவர்கள் பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களே! அதிலும் குறிப்பாக ரோஹிங்கியா முஸ்லிம்கள்.

பங்களாதேஷ் அரசே தங்கள் மதத்தினராக இருந்தும், இனி ரோஹிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டது.

அனுமதித்ததால் ஏராளமான உள்நாட்டுப் பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளது.

ஒரு முஸ்லீம் நாடே, தனது சக முஸ்லிம்களை அனுமதிக்க மறுக்கிறது என்றால், இவர்களை இந்தியாவில் அனுமதித்தால், எந்த அளவுக்கு இந்தியாவில் பிரச்சனைகளை உண்டாக்குவார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

எண்ணங்கள் வேறு

ஒரே மதமாக இருந்தாலும், மற்ற நாடுகளின் பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் வேறு.

இந்தியாவிலேயே வட மாநில முஸ்லிம்கள், இந்துக்கள் ஒரு வகையாகவும், தென் மாநில குறிப்பாகத் தமிழக முஸ்லிம்கள், இந்துக்கள் ஒரு வகையாகவும் இருப்பதை உணரலாம்.

ஒரு நாட்டுக்குள்ளேயே இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் போது, வேறு நாட்டிலிருந்து வருபவர்கள் சிக்கலானவர்கள்.

பாலஸ்தீன முஸ்லீம் அகதிகளை, துருக்கி, எகிப்து, ஜோர்டான், அரபு நாடுகளே ஏற்க மறுக்கிறார்கள் ஆனால், இம்மூன்று நாடுகளிலிருந்து இந்தியா ஏற்க வேண்டுமா?

தற்போது பாவம் பார்த்துக் குடியுரிமை அளித்தால், எதிர்காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்களைச் சமாளிக்க முடியாது.

தற்போது ஐரோப்பா இது போன்று மனிதாபிமானம் என்ற பெயரில் அனுமதித்து இடியாப்ப சிக்கலில் உள்ளது. அதிகரித்த வன்முறை, கொள்ளை, பாலியல் குற்றங்களால் இந்நாட்டு மக்கள் விழிபிதுங்கி வருகிறார்கள்.

பொருளாதாரத்துக்காக அகதிகள் வந்தால்?

பாகிஸ்தானில் பொருளாதாரம் சீரழிந்து விடுகிறது. இதனால், அடைக்கலம் தேடி வருபவர்களைத் துரத்த முடியாது. மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.

எனவே, அவர்களை எல்லையோர அகதிகள் முகாமில் அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து, பாகிஸ்தானில் நிலைமை சரியான பிறகு திரும்ப அனுப்புவார்கள்.

குடியுரிமை வழங்கி நாட்டில் ஏற்படும், குழப்பங்கள், கலவரங்களால் ஏற்படும் இழப்புகளுக்குப் பதிலாக அகதிகளாகப் பாதுகாத்துத் திரும்ப அனுப்புவது நல்லது.

இவர்களால் இந்திய முஸ்லிம்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

ஈழத் தமிழர்களின் நிலை?

ஈழத்தமிழர்களுக்கு மத ரீதியான பிரச்சனையில்லை ஆனால், இன ரீதியான பிரச்சனை.

CAA சட்டம் மதரீதியான பிரச்சனையில் வரும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஆட்சியாளர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கும் சம உரிமை வழங்குவதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இது குறித்து இலங்கையுடன் பேசி வருகிறது.

இலங்கையில் நிலைமை சீரானால் திரும்ப அங்கேயே குடியமர்த்தப்படுவார்கள். ஏற்கனவே, பல ஆயிரக்கணக்கான வீடுகளை அங்கே தமிழர்களுக்கு இந்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது.

இந்தியாவிலேயே தொடர்பவர்களுக்கான குடியுரிமையை இந்திய அரசு பரிசீலிக்கும்.

தமிழர்களின் உரிமை

இவையல்லாமல், ஈழத் தமிழர்களை இங்கே தொடர்ந்து அனுமதித்தால், இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து தமிழர்களின் உரிமை பறிபோய்விடும்.

தமிழர்களின் எண்ணிக்கை குறைந்ததாலே, சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது.

எனவே, இலங்கை அரசுடன் இந்திய அரசு இணைந்து அரசியல், ஆட்சி உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுத்து, தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதே ஈழ மக்களுக்குச் செய்யும் நன்மை.

ஈழ மக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களுக்கான ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுத் தருவதே உண்மையான உதவி, இங்கே குடியுரிமை தருவதல்ல.

இதையொட்டியே இலங்கை அரசு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது அவர்களுக்கு உதவி செய்து, தற்போது இலங்கை வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது.

இதுவே ஒரு சக நாடு செய்யும் சரியான உதவியாகும்.

மீள்குடியேற்றம் செய்வதில் ஈழத்தமிழர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை உணராமல், உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கி அரசியல் செய்வது சரியானது அல்ல.

ஆயிரம் உதவிகள் செய்தாலும், சொந்த நாட்டில் கிடைக்கும் மதிப்பு, மரியாதை அயல்நாட்டில் அகதியாகக் கிடைக்காது.

50 வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும் Indian Origin தான்.

முஸ்லிம்களை ஏன் ஏற்கவில்லை?

முஸ்லிம்களை இந்தியா ஏன் ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு கேள்வி கேட்டுள்ளதோடு, இது நியாயமற்ற செயல் என்று கூறியுள்ளது.

பாகிஸ்தான் கூறியதையே சகிக்க முடியவில்லை, இதில் தாலிபான்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர்.

நியாயம், அநியாயம் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இவர்கள் நியாயமாக இருந்தால், சிறுபான்மையினர் எதற்கு இந்தியாக்கு அகதிகளாக வருகிறார்கள்?

அங்கே எல்லோரையும் கொடுமைப்படுத்தி நாசம் செய்து விட்டு இந்தியாக்கு பாடம் எடுக்கிறார்கள். பாகிஸ்தானில் தற்போது 2% க்கு இந்துக்கள் வந்து விட்டனர்.

இதே நிலை தான் பங்களாதேஷ் நாட்டிலும்.

ஆனால், இந்தியாவில் 6% இருந்த முஸ்லிம்கள் 15% சென்று விட்டனர். இதுவே கூறும் யார் நியாயமாக, ஜனநாயகமாக நடந்து கொள்கிறார்கள் என்று.

உலகிலேயே அதிக முஸ்லிம்களை (20 கோடிகள்) கொண்ட நாடாக இந்தியா உள்ளது. வேறு எந்த முஸ்லீம் நாட்டிலும் இவ்வளவு முஸ்லீம் மக்கள் தொகையில்லை.

சட்டங்கள் தேவை

இந்திய முஸ்லிம்களுடன் இந்துக்களுக்குப் பிரச்சனைகள் வருவதற்கு முக்கியக் காரணமே பங்களாதேஷ், ரோஹிங்கியா கள்ளக்குடியேறி முஸ்லிம்கள் தான்.

அடுத்து NRC (National Register of Citizens), NPR (National Population Register) செயல்படுத்தப்பட்ட பிறகு மதப்பிரச்சினைகள் இந்தியாவில் பெருமளவு குறையும்.

இறுதியாக, CAA என்பது குடியுரிமை கொடுப்பதற்கான சட்டமே அன்றி, குடியுரிமையை எடுப்பதற்கான சட்டமல்ல.

தொடர்புடைய கட்டுரை

ஐரோப்பாவைத் திணறடிக்கும் அகதிகள் பிரச்சனை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. முதன்முதலில் இந்த சட்டம் 2019 இல் கொண்டு வர முயற்சித்த போது இதை குறித்து முழுவதுமாக எனக்கு புரிதல் இல்லை.. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் CAA மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.. இந்த பதிவை முழுவதும் படித்து பார்க்கும் போது என் சில கேள்விகளுக்கு பதிலும்!!! கிடைத்தது..

    ஆனால் தேர்தலுக்கு முன்பு (இடையில் கொரோனா தாக்கம் காரணமாக இருந்தாலும்) இதை அரசு தற்போது கையில் எடுத்து இருப்பது?? சரியா என்று தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு சட்டம் இயற்றப்படும் போது எல்லோர்க்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும்..அது தான் சரியும் கூட..மன்னராட்சி என்றால் அங்கு கேள்வியே இல்லை…

    சிறையில் இருப்பவர்களுக்கு தான் சுதந்திரத்தின் முழு அருமை தெரியும்.. அது போல அகதிகளாக முகாம்களில் அடைப்பட்டு வாழ்பவர்களுக்கு தான் சுதந்திர காற்றின் வாசம் புரியும்.. ஒரு அகதியாக வாழ்பவனின் வலி மிகவும் கொடுமையானது.. யாரோ ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு சாமானிய மக்கள் தண்டனை அனுபவிப்பது விதியா?? சதியா? என புரியவில்லை..

    இந்த உலகம் படைக்கப்பட்ட போது காற்றின் ஓசையும், கடல் அலையின் சப்தத்தை தவிர ஏதும் இல்லை.. ஆனால் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் பொருளை அபகரித்து? இது என்னுடையது? நான் தான்? என்ற அரக்க குணம் அவனுள் வந்த போது உலக சரித்திரம் முழுவதும் மாறி போனது..

    தற்போது ஓய்வு நேரங்களில் முதலாம் / இரண்டாம் உலக போர் குறித்த பல நிகழ்வுகளை தெரிந்து கொண்டு வருகிறேன்.. அந்த தருணத்தில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது மனம் கனத்து விடுகிறது.. உண்மையில் பொது மக்கள் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்கள்..

    இறுதியாக, CAA என்பது குடியுரிமை கொடுப்பதற்கான சட்டமே அன்றி, குடியுரிமையை எடுப்பதற்கான சட்டமல்ல…. இவ்வாறு நடந்தால் நன்மையே..

  2. 2014 ற்கு அப்புறம் இந்தியாவிற்கு வந்த இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினர்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது. அவர்கள் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் என்னென்ன ? அல்லது , சொந்த நாட்டிருக்கே திருப்பி அனுப்பப்படுவார்களா ? இந்த குழப்பம் மட்டும் உள்ளது. தெளிவு படுத்தவும்

  3. @மனோஜ் நன்றி

    @யாசின்

    “தேர்தலுக்கு முன்பு (இடையில் கொரோனா தாக்கம் காரணமாக இருந்தாலும்) இதை அரசு தற்போது கையில் எடுத்து இருப்பது?? சரியா என்று தெரியவில்லை.”

    இது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி.

    “ஜனநாயக நாட்டில் ஒரு சட்டம் இயற்றப்படும் போது எல்லோர்க்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும்”

    அனைவரையும் திருப்தி செய்யும் சட்டத்தை எவராலும் கொண்டு வர முடியாது.

    மக்களின் விருப்பங்களை கேட்டு செயல்படுபவர் தலைவர் அல்ல மாறாக நாட்டு மக்களுக்கு எது நல்லதோ அதை செய்பவரே சிறந்த தலைவர்.

    “ஒரு அகதியாக வாழ்பவனின் வலி மிகவும் கொடுமையானது.. ”

    உண்மை தான் ஆனால், அதே அகதி இன்னொரு நாட்டுக்குத் தஞ்சம் புகுந்த பிறகு அங்குள்ள சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

    மாறாக எதிராக நடக்கும் போது அதற்கான விளைவுகளையும் சந்திக்க தயாராக வேண்டும்.

    ஐரோப்பாவில் அகதிகள் செய்து கொண்டு இருப்பது கொடுமையிலும் கொடுமை. ஐரோப்பா நாசமாகிக்கொண்டுள்ளது.

    “யாரோ ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு சாமானிய மக்கள் தண்டனை அனுபவிப்பது விதியா?? சதியா? என புரியவில்லை.”

    ஆட்சியாளர் மற்றும் அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களுக்கும் சம பங்குண்டு.

    “தற்போது ஓய்வு நேரங்களில் முதலாம் / இரண்டாம் உலக போர் குறித்த பல நிகழ்வுகளை தெரிந்து கொண்டு வருகிறேன்”

    எளிமையான புத்தகம் இருந்தால் கூறுங்கள். படிக்க முயற்சிக்கிறேன்.

    இது போன்ற செய்திகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது என்ன நடந்தது? எதனால் நடந்தது? போன்றவை.

    • சிறு வயதிலே ஜெர்மனி மற்றும் உலக சரித்திரம் / உலக போர் குறித்து அதிகம் ஆர்வம் இருப்பதால் இது குறித்து எந்த தகவலாக இருந்தாலும் படிப்பேன்.. தற்போது அதிகம் youtube காணொளிகளில் தான் இந்த தகவல்களை தெரிந்து வருகிறேன்.. குறிப்பிட தக்க புத்தகங்கள் ஏதும் படிக்க வில்லை.. நிறைய புத்தகங்கள் படிக்க குறிப்பெடுத்து வைத்து இருந்தாலும் அதை நிறைவேற்ற முடிவதில்லை..

  4. @unmai vilambi

    “2014 ற்கு அப்புறம் இந்தியாவிற்கு வந்த இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினர்களுக்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது. அவர்கள் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுவதற்கான சாத்திய கூறுகள் என்னென்ன ? அல்லது , சொந்த நாட்டிருக்கே திருப்பி அனுப்பப்படுவார்களா ? இந்த குழப்பம் மட்டும் உள்ளது.”

    பிற மதத்தினருக்கு (முஸ்லீம் அல்லாதோர்) குடியுரிமை வழங்கப்படும், சட்டம் அமலாக்கம் செய்யப்பட பிறகு 1250 க்கு பேர் குடியுரிமை வழங்கப்பட்டதாக செய்திகளில் வந்தது.

    முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது ஆனால், கட்டுரையில் கூறியுள்ளபடி மற்ற சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவது போல வழங்கப்படாது.

    அதோடு அப்படியே வழங்கப்பட்டாலும் குற்றப்பின்னணி (சிறுபான்மையினருக்கும் சேர்த்து) சரிபார்க்கப்பட்டே வழங்கப்படும்.

    முன்பு 11 வருடங்களாக இருந்தது தற்போது 5 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    ரோஹிங்கியா முஸ்லிம்களை ஏற்க மாட்டோம் என்று மத்திய அரசு தெளிவாக உச்சநீதிமன்றத்திடம் கூறி விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here