Sapta Sagaradaache Ello (2023 Kannada) | Side A Side B

0
Sapta Sagaradaache Ello

ன்னடத்தில் கவனிக்கத் தக்க படமாக வந்த படம் Sapta Sagaradaache Ello. Image Credit

Sapta Sagaradaache Ello

ஒரு பெரிய பணக்காரருக்குக் கார் ஓட்டுநராக உள்ள மானு, பாடகியாக உள்ள ப்ரியாவைக் காதலிக்கிறார். ப்ரியாக்கு கடலோரத்தில் வீடு வேண்டும் என்று கனவு.

மானு முதலாளி மகன் காரை ஓட்டி, விபத்தில் ஒருவர் இறந்து விடுகிறார். தனது மகனைக் காப்பாற்ற வேறு ஒருவரை குற்றத்தை ஏற்க திட்டமிடுகிறார்.

மானு தன் காதலியின் கனவை நிறைவேற்றப் பணத்துக்காக இவ்விபத்தைத் தான் செய்ததாக ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்.

முதலாளி நியாயமாகவே நடந்து கொள்கிறார். அதாவது, இது கட்டாயம் இல்லை, விருப்பப்பட்டால் வரலாம் அல்லது வேறு ஒருவரைப் பார்க்கிறேன் என்கிறார்.

அதோடு வெளியே வரவும் உதவுவதாகக் கூறுகிறார். சொன்னபடி முன்பணமாக 3 லட்சமும் கொடுத்து விடுகிறார்.

ப்ரியாக்கு இதில் முற்றிலும் உடன்பாடில்லை ஆனாலும், மானு கேட்பதில்லை.

இந்நிலையில் Bail எடுக்க வழக்கறிஞர்களையும் முதலாளி நியமிக்கிறார் ஆனால், எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.

இதன் பிறகு சூழ்நிலையே முற்றிலும் மாறி விடுகிறது. இதன் பிறகு என்ன ஆனது என்பதை Side A Side B என்று இரு பாகங்களாகக் கொடுத்துள்ளனர்.

காதல்

படம் துவங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே பயத்தைக் கொண்டு வந்து விடுகிறார்கள். எதோ ஏடாகூடமாக நடக்கப்போகிறது என்ற பயம் வருகிறது.

இது போன்று ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது நடக்குமோ என்ற பயம் உள்ளூர தோன்றுகிறது ஆனால், சொத்தையாகவும் இல்லை.

மானு, ப்ரியா காதல் ரொம்ப அழகாக, நேர்மையாக உள்ளது. ப்ரியா இக்கதாபாத்திரத்துக்கு அம்சமாகப் பொருந்தியுள்ளார்.

இருவருக்கும் உள்ள காதல் கவிதையாகத் தொடர்வது சிறப்பு. நடுத்தர வர்க்கமான ப்ரியா, மானுவுடன் பேசுவது, விருப்பத்தைக் கூறுவது ரொம்ப எதார்த்தமாக உள்ளது.

செயற்கையாக இல்லாமல், ஒரு வித இணைப்பு நமக்கும் வந்து விடுகிறது. சமீபத்தில் இது போன்ற இயல்பான நடுத்தர வர்க்க காதலை பார்க்கவில்லை.

சிறை

பல கட்டுரைகளில் கூறியுள்ளேன், சிறைச்சாலை மிகக்கொடுமையான இடம்.

அனைவரும் நினைப்பதை விட மோசமான, மிக மோசமான இடமாக இருக்கும். இப்படத்தில் கிட்டத்தட்ட உண்மைக்கு நெருக்கமாகக் காட்டியுள்ளார்கள்.

காதலைப்போலவே சிறை வாழ்க்கையும் எதார்த்தமாக உள்ளது.

வழக்கமாக திரைப்படங்களில் காட்டப்படும் சிறைச்சாலை போல அல்லாமல், உண்மையாக எப்படியிருக்குமோ அப்படிக் காட்டப்பட்டுள்ளது.

அறியாதவர்களுக்கு இதைப்பார்த்தால் அதிர்ச்சிகரமாக இருக்கும். சிறை சென்று வந்தவர்களின் பேட்டியைப் பார்த்ததை வைத்துக்கூறுகிறேன்.

சிறைச்சாலை என்பது தனி உலகம். அங்கே சென்று, சென்றது போன்றே மீண்டு வருவது எளிதானதல்ல காரணம், அங்கு நிலவும் சூழ்நிலை.

சிறையில் பல குழுக்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றில் இணைய வேண்டி வரலாம், இணைய மறுத்தால், பல்வேறு நெருக்கடிகள்.

வாழ்க்கையில் சிறைக்கு சென்று விடக் கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள் 🙂 .

திரைக்கதை

எதற்கு Side A Side B என்று வைத்துள்ளார்கள் என்று புரியாமல் முக்கால்வாசி படம் வந்த பிறகே புரிந்தது. இப்படத்தில் டேப் ரிக்கார்டர் முக்கியமானதாக வருகிறது.

எனவே, வாழ்க்கையை Side A Side B என்று பிரித்து விட்டார்கள்.

மானு, பிரியா காதல் நன்றாக இருந்தாலும், சில இடங்களில் காட்சிகள் மிக மெதுவாகச் செல்கிறது. படம் எவ்வளவு ஓடியுள்ளது என்று பார்க்க வைக்கிறது.

இரண்டாம் பாகத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் ஒரே கதையாகச் செல்வது சலிப்பை அளிக்கிறது. இறுதியில் வரும் பல்வேறு திருப்பங்கள் சுவாரசியமாக உள்ளது.

படத்தின் பலம், இயல்பாக எடுக்கப்பட்டு இருப்பது தான்.

இதற்கு ஒளிப்பதிவு பெரும் துணை புரிந்துள்ளது. எல்லாமே Live இடங்களாக உள்ளது, படத்தோடு ஒன்றிணைக்க வைக்கிறது.

இயல்புத்தன்மையைப் பிரதிபலித்ததில் ஒளிப்பதிவுக்கு முக்கிய இடம் உண்டு.

பின்னணி இசையைச் சரியாகக் கவனிக்கவில்லை. மானுவாக வரும் ரக்சித் ஷெட்டி தான் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட.

யார் பார்க்கலாம்?

Sapta Sagaradaache Ello அனைவருக்கும் பிடிக்காது காரணம், கதை மெதுவாகச் செல்வது. சில நேரங்களில் ஆவணப்படம் போலவும்.

ஆனால், இதைத்தாண்டி எதோ ஒன்று ஈர்ப்பைத் தருகிறது. அது ஒருவேளை எதார்த்தமான காதல், நடுத்தர வர்க்க வாழ்க்கை முறையாக இருக்கலாம்.

முதல் பாகம் எனக்குப்பிடித்தது ஆனால், இரண்டாம் பாகம் அவ்வளவு ஈர்ப்பாக இல்லை.

காரணம், இரண்டாம் பாதியில் ஒரே சூழ்நிலையையே முக்கால்வாசிப் படமும் எந்த முக்கியத் திருப்பமும் இல்லாமல் கொண்டு செல்கிறார்கள்.

இப்படம் கவிதையான காதலும், வன்முறையும் கலந்த ஒன்று. எனவே, மேற்கூறியதில் ஏற்புடையதாக இருந்தால், பார்க்கலாம்.

Amazon Prime ல் காணலாம். தமிழ் மொழியில் டப்பிங் நன்றாக இருந்தது.

பரிந்துரைத்தது பாபு.

Directed by Hemanth M. Rao
Written by Gundu Shetty
Hemanth M. Rao
Produced by Rakshit Shetty
Starring Rakshit Shetty, Rukmini Vasanth
Cinematography Advaitha Gurumurthy
Edited by Sunil S. Bharadwaj
Hemanth M. Rao
Music by Charan Raj
Production
company
Paramvah Studios
Distributed by KVN Productions
Release date 1 September 2023
Running time 142 minutes
Country India
Language Kannada

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!