இலவசத்தால் என்ன ஆபத்து?

2
இலவசத்தால் என்ன ஆபத்து?

லவசம் என்ற ஒன்றைக் கொடுத்து அரசியல் கட்சிகள் எப்படி மாநிலத்தை, நாட்டைச் சீரழிகின்றன என்பதைப் பார்ப்போம். Image Credit

இலவசம்

இலவசம் என்ற ஒன்று இருந்தால் அதன் பின்னே ஒரு நோக்கம் இருக்கும்.

இவற்றைக் கொடுப்பது, அவர்கள் ஆட்சியைப் பிடிக்க, தக்க வைக்கவே. மக்களும் புரிந்து கொள்ளாமல் இலவசம் கிடைக்கிறது என்று ஏமாந்து விடுகிறார்கள்.

கிடைக்கும் இலவசத்தை விட அதிக செலவு ஆகிறது என்பதை உணருவதில்லை.

எப்படி?

ஒரு அரசியல் கட்சி இலவசமாக ஒன்றைத் தருகிறது என்றால், அதற்கு நிதி எங்கே இருந்து கிடைக்கும்? ஏற்கனவே தமிழகம் கடனில் முதல் இடத்தில் உள்ளது.

எடுத்துக்காட்டுக்கு, தமிழகத்துக் கடன் 8.3 லட்சம் கோடி இருக்கையில், இலவச பேருந்து, மகளிர் உரிமைத்தொகை போன்றவற்றை எப்படித் தொடர முடியும்?

ஏற்கனவே நிதி பற்றாக்குறையென இருக்கும் போது எப்படி இலவசத்தால் ஏற்படும் செலவுகளுக்கு நிதி கிடைக்கும்?

அதற்கான நிதி, கடன் மூலம் மட்டுமே பெற முடியும் அல்லது வேறு வகையில் வருமானத்தை உயர்த்தி இருக்க வேண்டும்.

வேறு வகை என்றால்? அது தான் வரி.

என்ன நடக்கிறது?

ஒன்றைக் கொடுத்து இரண்டைப் பிடுங்குவது மக்களுக்கு தெரிவதில்லை.

மகளிர் உரிமைத்தொகை மூலம் ஒரு மாதத்துக்கு ₹1200 கோடி தமிழக அரசுக்குச் செலவாகிறது.

இதை ஈடு கட்ட என்ன கூடுதல் ஆகியுள்ளது?

  • சொத்து வரி 150% உயர்வு. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதியே உள்ளது.
  • மின்சாரக் கட்டணம் 100% உயர்வு. ₹1000 வந்து கொண்டு இருந்த வீட்டுக்கு ₹2000+ வருகிறது. அடுக்கமாக இருந்தால், பொதுப் பகுதிக்குக் கூடுதல் commercial கட்டணம். நிறுவனங்களுக்கு Peak Hours கட்டணம்.
  • ஆவின் பால், ஆவின் பொருட்கள் கட்டணம் உயர்வு.
  • பத்திரப்பதிவுக் கட்டண உயர்வு
  • பேருந்துக் கட்டணம் மறைமுகமாக உயர்ந்ததோடு பேருந்துகள் எண்ணிக்கையும் குறைந்து, நேரத்துக்குப் பேருந்துகள் வருவதில்லை, இரவில் பேருந்துகள் இல்லை.

என்னென்ன பறிக்கப்பட்டது?

மாணவிகளுக்கு ₹1000 உதவித்தொகை என்றார்கள்.

ஆனால், தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்குச் சைக்கிள், மடிக்கணினி, அம்மா உணவகம் உட்படப் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தி விட்டார்கள்.

பொங்கல் பரிசு ₹5000 கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது பேசிவிட்டு தற்போது ₹1000 மட்டுமே கொடுக்கிறார்கள்.

இதனால் என்ன பிரச்சனைகள்?

  • பேருந்துக்கு மக்களால் செலவு செய்ய முடியாதா? இதை ஈடுகட்ட மறைமுகக் கட்டணமாகிறது. பேருந்துகள் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது.
  • பெண்கள் நின்றால் பேருந்துகள் நிற்பதில்லை. சில நடத்துநர்கள் அநாகரீகமாகப் பேசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுள்ளது.
  • இலவசப் பேருந்தால், ஆட்டோ ஓட்டுநர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வருமானத்தை இழந்து விட்டார்கள்.
  • அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து, தற்போது தகுதியுள்ள பெண்களுக்கென்று மாற்றி விட்டார்கள்.
  • திமுகவைச் சார்ந்தவர்கள் என்றால், உறுதியாகக் கிடைக்கிறது. இது ஒரு மிகப்பெரிய ஊழல்.

என்ன செய்து இருக்கலாம்?

இரண்டு மாத மகளிர் உரிமைத்தொகைக்காகச் செலவு செய்யும் பணத்தில், அட்டகாசமான தரத்துடன், வசதிகளுடன் இந்தியாவிலேயே சிறந்த எய்ம்ஸ் போன்று மருத்துவமனை கட்டியிருக்கலாமே!

சென்னை, கோவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கலாம். மக்களுக்குத் தேவை அடிப்படை வசதிகளைச் செய்து தருவது தான், ₹1000 அல்ல.

குடிநீர், தரமான சாலை, மருத்துவம், மின்சாரம், சரியான நேரத்தில் பேருந்து போன்றவை பிரச்சனை இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்களா? ₹1000 ரூபாயா?

மகளிர் உரிமைத்தொகை என்பதை ஆரம்பித்து வைத்தது, கமல் தான். இவர் தேர்தல் வாக்குறுதியாகக் கூறிய பிறகே திமுக, அதிமுக கட்சிகள் பிடித்துக்கொண்டன.

ஆட்சிக்கு வராமலே தமிழகக் கடன் அதிகரிக்கக் கமல் வழி செய்து விட்டார்.

கர்நாடகா

ஏராளமான இலவசங்களை அறிவித்து, ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வரியையும் உயர்த்தி வருகிறார்கள். இவை மக்களுக்குச் சுமையைத் தருவதோடு மறைமுகமாகப் பணவீக்கத்தையும் அதிகப்படுத்துகிறது.

இதனால் பொருட்கள், சேவைக் கட்டணம் உயரும்.

தாங்கள் அறிவித்த இலவசத் திட்டத்துக்குப் பணம் இல்லாததால், மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும் என்று பேசி வருகிறது காங் அரசு.

இது எந்த வகையில் நியாயம்? வாய்க்கு வந்த தேர்தல் வாக்குறுதியைக் கொடுத்து விட்டு, அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றால் எப்படி சரி?

வரி உயர்வு

காங் 2024 தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு வருடத்துக்கு 1 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது.

ஏற்கனவே உள்ள செலவல்லாமல் புதிய செலவு எனும் போது இதற்கான நிதி எங்கே இருந்து கிடைக்கும்?

இதற்கான பதிலை ராகுலின் அரசியல் ஆலோசகர் Sam Pitroda பேட்டியில் கூறுகிறார்.

நாங்கள் வரியை உயர்த்துவோம். நடுத்தர மக்கள் சுயநலமாக இருக்கக் கூடாது. அவர்கள் கொஞ்சம் பணத்தை வரியாகக் கொடுக்கலாமே!‘ என்று.

புரிகிறதா?! காங் இவ்வாறு கொடுத்த இலவசத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறிக்கொண்டுள்ளது.

செய்ய முடியாது

பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி, ஹிமாச்சலில் ஆட்சிக்கு வந்த பிறகு அதைச் செயல்படுத்த நிதி இல்லாமல் செய்வதறியாது விழித்துக்கொண்டுள்ளது.

இலவசங்களுக்கு ஒரே தீர்வு வரி உயர்வு. இதைத்தான் காங் செய்து வருகிறது.

இது போன்று வாக்குறுதி கொடுத்து மாநில பொருளாதாரத்தை அழித்தார்கள், தற்போது கொடுக்கப்படும் வாக்குறுதி நாட்டை அழிக்கத் துணை புரியும்.

ஒரு ஆறுதல், இவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது.

திமுக

இதையே தான் திமுகவும் செய்து வருகிறது.

மத்திய அரசிடம் சமீபமாக ‘நிதி கொடுங்க நிதி கொடுங்க’ என்று கேட்டுக் கொண்டே இருப்பதற்குக் காரணம், வெள்ள நிவாரணத்துக்காகக் கிடையாது. அதை வைத்து மற்ற செலவுகளைச் சமாளிப்பதற்கு.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வளர்ச்சி நிதியை இலவசத் திட்டத்துக்காகத் தமிழக அரசு செலவழித்ததற்காகச் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புக் கேள்வி கேட்டது.

பொய் வாக்குறுதிகள்

தமிழக அரசிடம் நிதி இல்லை ஆனால், ஏராளமான இலவசத் தேர்தல் வாக்குறுதிகளைத் திமுக கொடுத்தது.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கல்விக்கடன் ரத்து இல்லை, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை, எரிவாயு ₹100 குறைக்கப்படவில்லை.

பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் விலை குறைக்கப்படவில்லை, பெட்ரோல் விலை கூறியபடி முழுமையாகக் குறைக்கப்படவில்லை.

கேட்டால் ‘தேதி சொன்னோமா‘ என்பார்கள்.

சொல்லாததையும் செய்வோம் என்று மின்சாரக் கட்டணத்தை 100% உயர்த்தி விட்டார்கள்.

2021 – 2024 காலங்களில் ₹3 லட்சம் கோடி அதிகரித்து இந்தியாவிலேயே அதிக கடனை (₹8.3 லட்சம் கோடி) பெற்ற மாநிலமாக (2024 March) தமிழகம் உள்ளது.

உச்சநீதிமன்றம்

தமிழகம் அறிவித்த மகளிர் உரிமைத்தொகை புற்று நோய் போல மற்ற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

ஆட்சியைத் தக்க வைக்க, ஆட்சிக்கு வரக் கட்சிகள் இது போன்ற போட்டியால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து வருகின்றன.

உச்சநீதிமன்றம் இது போன்ற தேர்தல் நேர இலவசங்களுக்குத் தடை விதிக்காமல் தொடர்ந்து சாக்குப் போக்கு சொல்லி வருவது கவலையை ஏற்படுத்துகிறது.

எவ்வளவோ விஷயங்களில் கடுமையைக் கடைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம், பொதுநல வழக்கு தொடரப்பட்டும் இதற்குத் தடை விதிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆட்சிக்கு வந்த பிறகு நிதி நிலையைப் பொறுத்து ஒரு கட்சி சலுகைகள் கொடுப்பது, அவர்களது திறமை ஆனால், ஆட்சிக்கு வருவதற்காக இலவச வாக்குறுதி கொடுப்பதை அனுமதிக்கக் கூடாது.

இலவசம் என்பது மாயை! அதுவொரு ஏமாற்று! இதை நம்பி மக்கள் வாக்களிப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குச் சமம்.

தொடர்புடைய கட்டுரை

இலவசப் பேருந்து | விளைவுகள் என்ன?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. எல்லா கட்சியும் well fare schemes கொடுக்குறாங்க என் திமுக காங்கிரஸ் கொடுக்கற schemes மட்டும் ஆபத்து.

    திமுக மட்டும் வரி ஏத்துன மாதிரி சொல்றிங்க பாஜாக ஏத்தலையா?

  2. @மலர்

    நீங்க கூறுவது சரி தான்.. அதாவது எல்லா கட்சியும் தானே நலத்திட்டங்கள் கொடுக்கிறாங்க ஆனால், வித்தியாசம் இருக்கு.

    1000 ரூபாய் உரிமை தொகையும் ஒரு திட்டம் தான், முத்ரா கடனும் ஒரு திட்டம் தான்.

    இரண்டுமே பணம் சார்ந்தது. எது சிறந்தது?

    பாஜக அரசின் எந்த நலத்திட்டம் பொருளாதாரத்தை சீரழிப்பது போல உள்ளது? திட்டத்தின் பெயரைக் கூறுங்கள் நான் விளக்கம் அளிக்கிறேன்.

    திமுக திட்டங்களுக்கு நான் மேலே விளக்கம் கொடுத்துள்ளேன். அதில் என்ன சந்தேகம் என்று கேளுங்கள்.

    பாஜக அரசின் செயல்பாட்டில் நியாயமற்றதாக கருதுவது சுங்கச்சாவடி கட்டணம் மட்டுமே! இதை உயர்த்திக்கொண்டே செல்கிறார்கள்.

    இது மட்டுமே என் பார்வையில் நியாயமற்றதாக உள்ளது.

    பாஜக நலத்திட்டங்களில் உங்களுக்கு எது தவறு என்று கேளுங்கள்.

    என்னால் விளக்கம் அளிக்க முடியும். தவறு என்றால், ஆமாம் தவறு என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.

    ஏனென்றால், யாருக்கும் கட்டாய ஆதரவு கொடுக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. என் மனசாட்சிக்கு சரி என்று படுவதை மட்டுமே ஆதரிப்பேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!