மத்திய பாஜக அரசின் 5 சிறந்த அமைச்சர்கள்

4
4 சிறந்த அமைச்சர்கள்

த்திய பாஜக அரசின் 5 சிறந்த அமைச்சர்கள் பற்றிய கட்டுரையே இது. Image Credit

அமைச்சர்கள்

ஒரு அரசு சரியாக நடைபெற அந்த அரசை வழிநடத்தும் பிரதமரும், அவர் கீழ் பணி புரியும் அமைச்சர்களும் முக்கியமானவர்கள்.

இவர்கள் திறமையானவர்களாக இருந்தாலே நாடு வளம் பெறும்.

கடந்த 10 வருட பாஜக ஆட்சியில் பல திறமையானவர்கள் இருந்தாலும், அவர்களில் சிறந்த ஐந்து பேரைக் குறிப்பிட விரும்புகிறேன்.

அதற்காக மற்றவர்கள் திறமை குறைந்தவர்கள் என்று அர்த்தமாகாது. கடந்த 10 வருடங்களில் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூடச் சுமத்த முடியவில்லை.

1. அமித்ஷா

நாட்டின் பாதுகாப்பை கையில் வைத்துள்ள, அரசியல் சாணக்கியர் என்று போற்றப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடியின் வலதுகரமாக உள்ளவர்.

அமித்ஷா பணிகள் மற்ற துறை / அமைச்சர்களின் பணி போல வெளிப்படையாக மக்களுக்குத் தெரியாது. அப்பிரச்சனை தொடர்பான புரிதல் உள்ளவர்களுக்கே இவர் என்ன செய்தார் என்று தெரியும்.

சாதாரண பொதுமக்களுக்கு இவரின் பணிகள் புரியாது காரணம், அனைத்துமே பின்னணியிலிருந்து இயக்கப்படுபவை.

அமித்ஷா ஏராளமான சாதனைகளைச் செய்து இருந்தாலும், இன்று வரை நான் வியப்பது Article 370 செயல்படுத்தப்பட்ட விதம்.

செயல்படுத்தப்படுவதற்கு இரு நாட்கள் முன்னரே ஜம்மு காஷ்மீர் முழுக்க பாதுகாப்பை அதிகரித்து, எந்தக் கலவரமும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்.

செயல்படுத்திய பிறகும் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொன்று கொண்டு இருந்தனர், இதற்கு விமர்சனங்கள் தொடர்ந்தன.

ஆனால், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கித் தற்போது கிட்டத்தட்ட உயிர்பலிகளை தடுத்து விட்டார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தடுக்கப்பட்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டு காஷ்மீர் வளர்ச்சிப்பாதையில் உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்கள் பங்களாதேஷ், ரோஹிங்கியா முஸ்லிம்கள். இவர்கள் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு போராட்டத்தின், கலவரத்தின் பின்னும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த மணிப்பூர், உத்தரகாண்ட் கலவரங்கள் உட்பட. இவர்களை மாநில அரசுகள் கண்டறிந்தாலும், NRC அமல்படுத்தட்ட பிறகே இதற்கு தீர்வு கிடைக்கும்.

மதமாற்றம் செய்ய நிதியை வழங்கிக் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் NGO க்கள் கண்டறியப்பட்டு அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

எல்லை தாண்டி வரும் ரோஹிங்யா முஸ்லிம்கள், போதை பொருள் கடத்துபவர்களை தடுக்க மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் இருந்த ‘Free Cross Border‘ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பலருக்கு தெரியாத விஷயங்களின் பின்னணியில் இருப்பவர் அமித்ஷா.

மோடி போன்ற சிறந்த நிர்வாகிக்கு அமித்ஷா போன்ற ஈகோ இல்லாத வலது கரம் கிடைத்தது சிறப்பு. இது போன்ற combination எதிர்காலத்தில் அமைவது அரிது.

2. நிதின்கட்கரி

பாஜக ஆதரவாளர்கள் மட்டுமல்லாது மற்ற கட்சிக்காரர்கள், பொதுமக்களின் அமோக வரவேற்பைப் பெற்ற அமைச்சர் நிதின்கட்கரி.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின்கட்கரி. இந்தியத் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்து கொண்டுள்ளார்.

இவர் கூறிய ஒரு கருத்தைத் தற்போது கூறுவது பொருத்தமாக இருக்கும்.

அமெரிக்கா வளர்ந்த நாடாக இருப்பதால், சாலைகள் சிறப்பாக இல்லை. சாலைகள் சிறப்பாக இருந்ததால், அமெரிக்கா வளர்ந்த நாடாக மாறி விட்டது‘.

அதாவது, நாட்டின் வளர்ச்சிக்குச் சாலைகள் மிக அவசியமானது. மக்கள் எளிதாகப் பயணிக்க, நேரத்தைச் சேமிக்க, பொருட்களை விரைவாகக் கொண்டு செல்லச் சாலைகள் அவசியமானது.

ஒரு நாளைக்கு அமைக்கப்படும் சாலையின் நீளம் ஒவ்வொருவருடமும் திட்டங்களைப் பொறுத்து தினமும் 15 கிமீ முதல் 45 கிமீ வரை அமைக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் இவருக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கிடைப்பதால், குறிப்பாக மபி, உபி, மஹாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் இவரை முழுமையாகப் பயன்படுத்தி, தரமான சாலைகளைப் பெற்று வருகின்றன.

ஊழல் அற்ற சேவை

நிதின்கட்கரியின் மிகப்பெரிய சிறப்பு, ஊழல் அற்ற சேவை. இன்று வரை இவரது துறையில் ஒரு ஊழலைக் கூட எதிர்க்கட்சிகளால் கூற முடியவில்லை.

சிறு சிறு குறைகளை குறிப்பிட முடிகிறதே தவிர எந்த ஊழல் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை. மிகப்பெரிய ஊழல் நடக்கும் வாய்ப்புகளுள்ள துறை இது.

ஓரிரு வருடங்களுக்கு முன் IIT மாணவர்களிடம் விவாதித்து அவர்கள் மூலம் பெற்ற தொழில்நுட்பத்தில் பல ஆயிரக்கணக்கான கோடி செலவிடப்பட வேண்டிய ஒரு கட்டமைப்புக்கு மிகக் குறைவான செலவில் செயல்படுத்தியது பாராட்டைப்பெற்றது.

IIT மாணவர்களைப் பயன்படுத்தி இலாபம் அடைந்த அமைச்சராக மத்திய அரசில் நிதின்கட்கரி உள்ளார்.

இவர் கொண்டு வந்த FasTag வசதியால், பல ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்ததோடு, மிகப்பெரிய ஊழல் தடுக்கப்பட்டது.

இவர் செய்த சாதனைகளை, கட்டப்பட்ட பாலங்கள், சாலைகளைப் பட்டியலிட்டால், தலைசுற்றி விடும். வெறித்தனமாக வேலை செய்துகொண்டுள்ளார்.

Read : நிதின் கட்கரி என்ற சம்பவக்காரன்

3. நிர்மலா சீதாராமன்

இராணுவம் உட்படப் பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தாலும், நிதித்துறை அமைச்சராக வந்த பிறகு அனைவராலும் கொண்டாடப்படும் நபராக நிர்மலா சீதாராமன் மாறி விட்டார்.

இவரை நிதியமைச்சராக நியமித்த போது, பெண்கள் எப்பவுமே நிதிமேலாண்மையில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்பதால், ஆர்வமாக இருந்தேன்.

ஆனால், துவக்கத்தில் நிர்மலா சீதாராமன் மீது பல்வேறு விமர்சனங்கள், நாம் நினைத்தது தான் தவறோ என்று நினைக்கும்படியானது.

ஆனால், அதன் பிறகு அவரின் நடவடிக்கைகள் சரவெடியாக மாறி விட்டது.

குறிப்பாக, கோவிட் காலத்தில் முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட பலரும், நிதிப் பிரச்சனையைச் சமாளிக்கப் பணத்தை கூடுதலாக அச்சடிக்க வலியுறுத்திய போது, அதை மறுத்து உட்கட்டமைப்புகளுக்கு அதிக நிதியை ஒதுக்கினார்.

அதிக பணம் அடித்தால், பணவீக்கம் ஏற்படும் என்பதை உணர்ந்து செய்ததால், இந்தியா தப்பித்தது. இல்லையென்றால், மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் இந்தியா சிக்கி இருக்கும். மற்ற நாடுகள் இச்சிக்கலில் உள்ளன.

பொருளாதார வளர்ச்சி

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தற்போது 3% தாண்டவே முக்கிக்கொண்டு இருக்க, இந்தியாவோ 8.4% க்கு சென்று அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

முத்ரா கடன் அறிமுகப்படுத்தப்பட்ட போது பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். வாங்கியவர்கள் பணத்தை திருப்பிச் செலுத்த மாட்டார்கள் என்று பயமுறுத்தினர்.

ஆனால், ‘எனக்கு நடுத்தர, அடித்தட்டு மக்களின் மீது நம்பிக்கையுள்ளது‘ என்று கூறி முத்ரா கடனைப் பரவலாக்கினார்.

நிர்மலா சீதாராமன் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் பெரும்பான்மையோர் சரியாகப் பணத்தைத் திருப்பிச் செலுத்தினர்.

கந்து வட்டி வாங்குவது முத்ரா கடன் மூலம் பெருமளவில் குறைந்து விட்டது.

இது போன்று பல திட்டங்களின் வழியாக இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

தமிழக ஊடகங்கள், அரசியல்வாதிகள் அரசியலுக்காகவும், பிராமணப் பெண் என்பதாலும் இவரை வில்லி போல தமிழகத்தில் கட்டமைத்துள்ளார்கள்.

4. அஷ்வினி வைஷ்ணவ்

தொலைத்தொடர்புத் துறை & தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சராக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் தனது ரயில்வே துறையில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து வருகிறார்.

இந்திய ரயில்வே துறையில் நடைபெறும் மாற்றங்கள், இதுவரை இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து பார்த்திராத மாற்றத்தைப் பெற்று வருகிறது.

ரயில்நிலையங்கள் பொலிவு பெற்று வருகிறது, வந்தே பாரத் போன்ற புதிய இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடி வருகிறது.

IIT மாணவர் என்பதால், தனது கல்வியின் திறமையைத் தனது துறையின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தி அசத்தி வருகிறார். படித்தவர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

சரக்கு ரயில்

சரக்கு ரயிலில் கிடைக்கும் வருமானத்தைப் பெருக்க, சரக்கு ரயிலுக்கு என்றே தனிப்பாதை அமைத்து, சரக்குகளை விரைவாக கொண்டு சேர்க்கிறார்.

வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் சரக்கு ரயில் பாதைக்குப் பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதன் மூலம் சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்வது சாத்தியமாகியுள்ளது. 95% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு இலாபம் கிடைப்பதே சரக்கு ரயில் மூலமாகத்தான். பயணிகள் ரயிலில் சலுகைக் கட்டணங்களால் பெரியளவில் இலாபம் இல்லை.

சரக்கு ரயில் மூலம் கிடைக்கும் வருமானத்தால் இவை ஈடுகட்டப்படுகிறது. எனவே, சரக்கு ரயில் பாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

வட மாநிலங்களுக்கு துறைமுகம் இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை, சரக்கு ரயில் சேவை சரக்குப் பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரலாறு காணாத வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ரயில்வே துறையில் செயல்படுவதைப் போல, தொலைத்தொடர்புத் துறையான BSNL நிறுவனத்துக்கு எதிர்பார்த்த அளவுக்குச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.

ஆனால், தற்போது பல காலமாக நட்டத்தில் இருந்த BSNL இலாபத்துக்கு வந்துள்ளது என்று செய்திகள் வந்தது. இலாபம் அதிகரிக்குமா என்று பார்க்க வேண்டும்.

5. ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஜெய்சங்கர் இதற்கு முன் இந்தியத் தூதராகப் பல நாடுகளிலிருந்துள்ளார், குறிப்பாகச் சீனாவின் தூதராக இருந்துள்ளார்.

இங்கே இவரின் திறமையைக் கண்ட மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார். இவர் முன்பு பாஜகவை சார்ந்தவர் அல்ல, ஆனாலும் திறமைக்காக மோடி பதவியைக் கொடுத்தார்.

நியமிக்கும்வரை பலருக்கு ஜெய்சங்கர் பற்றித் தெரியாது ஆனால், சில காலங்களிலேயே தனது திறமையை நிரூபித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி மிகக்கடினமானது. நாட்டின் கௌரவத்தையும் விட்டுத்தராமல், அதே சமயம் மற்ற நாடுகளிடம் கெத்தையும் காட்ட வேண்டும்.

விவாதங்களில் கூறும் சிறு தவறான தகவல், கருத்து கூட உலகளவில் இந்தியாவின் மதிப்பைப் பாதித்து விடும்.

ஆனால், ஜெய்சங்கரோ தான் பங்கேற்கும் ஒவ்வொரு விவாதத்திலும் அனைவரையும் தரமாகச் சம்பவம் செய்வதோடு, இந்தியாவின் பெருமையை உலகறிய செய்து வருகிறார். பதட்டமாகாமல் நறுக்குன்னு பதில் கூறுவது இவரது சிறப்பு.

தரமான சம்பவங்கள்

இதற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான சம்பவங்களைக் கூறலாம். கத்தாரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை வீரர்களை மீட்டுக்கொண்டு வந்தார்.

அமெரிக்கா கூடவும் நட்பாக உள்ளீர்கள், அதே சமயம் ரஷ்யா கூடவும் நட்பாக இருந்து கச்சா எண்ணெய்யை மலிவாகப் பெறுகிறீர்கள்

என்று உலக முக்கியக் கூட்டத்தில் கேட்ட கடினமான கேள்விக்கு, ஜெய்சங்கர் கொடுத்த பதில் இணையத்தில் வைரலானது.

நமது அண்டை நாடுகளுக்கு ஆதரவு தருவதாகட்டும், பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பதிலாகட்டும் ஜெய்சங்கருக்கு இணை இவர் மட்டுமே!

இணையத்தில் ஜெய்சங்கருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

மேற்கூறியவர்கள் அனைவருமே அவர்கள் துறையில் Benchmark செட் செய்து விட்டார்கள். இவர்களை இன்னொருவர் தாண்டிச் சாதிப்பது கடினமான செயல்.

சிறந்த 5 அமைச்சர்களில் இருவர் தமிழர்கள் என்பது நமக்குப்பெருமை.

மாநிலங்களவை MP

இந்தியாவில் மாநிலங்களவை MP என்பது கவுரவ MP யாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அதாவது, தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாதவர்களுக்கு அரசியல் காரணங்களால் ஒதுக்கப்படும் பதவியாகப் பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை MP க்களால், பெரிய மாற்றங்கள் ஏற்படாது, இவர்களும் அதற்காகப் பெரியளவில் முயற்சிக்க மாட்டார்கள்.

எனவே, மக்களிடம் வாக்கு பெறுவதற்காக செய்ய வேண்டிய எந்த வேலையும், பேச்சையும் செய்ய வேண்டியதில்லை.

மத்திய அரசுக்குச் சிலரின் திறமை புரியும் ஆனால், அவர்களால் வாக்கு அரசியலில் வெற்றி பெற முடியாது. எனவே, அவ்வாறானவர்களை ராஜ்யசபா MP யாக தேர்ந்தெடுத்து பதவி கொடுப்பார்கள்.

அதில் பாஜக கொடுத்ததில் முக்கியமானவர் அருண் ஜெய்ட்லி. தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையில், மாநிலங்களவை MP யாக்கி நிதி அமைச்சர் ஆக்கினார்கள்.

திறமையான மாநிலங்களவை உறுப்பினர்கள்

அது போலத் தேர்தலில் நின்றால் வெற்றி பெற முடியாத அல்லது மக்களிடம் அரசியல் பேசி அவர்களைக் கவர முடியாத ஆனால், திறமையானவர்களுக்கு ராஜ்யசபா MP பதவி கொடுக்கப்படும்.

இவ்வாறு வந்தவர்களில், மேற்கூறியவர்களில் அமித்ஷா, நிதின்கட்கரியை தவிர்த்து, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ், ஜெய்சங்கர் முக்கியமானவர்கள்.

இவர்களால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது ஆனால், மற்ற வழக்கமான MP க்களை விட அறிவில், திறமையில் சிறந்தவர்கள்.

எடுத்துக்காட்டுக்கு நிர்மலா சீதாராமன் திறமையானவர் ஆனால், வழக்கமான அரசியல்வாதி போல பேசத் தெரியாது, கடுமையான பதிலைக் கொடுப்பார்.

இவ்வாறு பேசுவதை விஷயம் தெரிந்தவர்கள் பாராட்டுவார்கள் ஆனால், சராசரி மக்களைக் கவராது. எனவே, வாக்கரசியலில் வெற்றி பெற முடியாது.

நெருக்கடியில்லை

மாநிலங்களவை உறுப்பினர்களான இவர்களுக்கு வாக்கரசியலில் மக்களுக்குத் தகுந்த மாதிரி பேச வேண்டும் என்ற கட்டாயமில்லை.

அதாவது, அடுத்த தேர்தலில் வெற்றி பெற இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில்லை. காரணம், இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அல்ல.

எனவே, வாக்கரசியலில் கவனம் செலுத்தாமல் தனது பணியை மட்டுமே கவனிப்பதால், முழுத் திறனையும் நாட்டுக்காக செலவழிக்க முடிகிறது.

ராஜ்யசபா MP க்களை திறமையாக பயன்படுத்தி, அவர்களிடமிருந்து பலன்களைப் பெற்று நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது பாஜக அரசு.

இவர்கள் மூவருமே எந்த வகையிலும் துவக்கத்தில் பாஜகக்கு நெருங்கியவர்கள் அல்ல ஆனால், அடையாளம் காணப்பட்டு திறமை பட்டை தீட்டப்பட்டவர்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. நல்ல அலசல். அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு. மிகச்சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.

  இதையெல்லாம் இந்த தமிழ் மக்கள் தெரிந்து கொண்டால் எங்கே நம் வாக்கு வங்கி போய் விடுமோ என்று திராவிட அரசியல்வாதிகள் நம் மக்களை பிஜேபி உள்ளே வந்துவிடும் பிறகு அவ்ளோ தான் என்று சொல்லி முட்டாள்களாகவே வைத்துள்ளார்கள்.

  இது போல ஊழல் இல்லாத ஆட்சி மக்களுக்கான ஆட்சி தமிழகத்தில் எப்போது அமையுமோ?😤 நிச்சயம் திமுக அதிமுகவால் ஊழல் இல்லாத ஆட்சியை தரவே முடியாது. இலவச அரசியல் தான் செய்வார்கள்.

  ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை இது போல ஒரு நல்லாட்சியை தமிழ்நாட்டில் நாம் எதிர்பார்க்கவே முடியாது.

  இதையெல்லாம் படிக்கும் போது தமிழ்நாடு எப்போது இதுபோல ஒரு ஆட்சியை பார்க்க போகிறதோ என ஏக்கமாக இருக்கிறது. அதுவும் நம் காலத்தில் பார்க்க முடியுமா? கடவுளுக்கே வெளிச்சம்

 2. கிரி.. சரியாக அலசி ஆராய்ந்து, விவரங்களை சேகரித்து இந்த பதிவை எழுதி இருக்கீங்க.. அருமை.. பல தெரியாத புதிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி கிரி.

 3. @ஹரிஷ்

  “திராவிட அரசியல்வாதிகள் நம் மக்களை பிஜேபி உள்ளே வந்துவிடும் பிறகு அவ்ளோ தான் என்று சொல்லி முட்டாள்களாகவே வைத்துள்ளார்கள்.”

  உண்மை தான் ஆனால், இதையவே தொடர முடியாது. எப்போதுமே ஒரு கட்டத்தில் ஒரு சித்தாந்தம் மறைந்து புதியது துவங்கும்.

  “இது போல ஊழல் இல்லாத ஆட்சி மக்களுக்கான ஆட்சி தமிழகத்தில் எப்போது அமையுமோ?😤 ”

  அண்ணாமலை வந்தால் நடக்க வாய்ப்புள்ளது.

  “நிச்சயம் திமுக அதிமுகவால் ஊழல் இல்லாத ஆட்சியை தரவே முடியாது. இலவச அரசியல் தான் செய்வார்கள்.”

  ஆமாம்.

  “ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை இது போல ஒரு நல்லாட்சியை தமிழ்நாட்டில் நாம் எதிர்பார்க்கவே முடியாது.”

  இதுவும் மாறும்.

  “இதையெல்லாம் படிக்கும் போது தமிழ்நாடு எப்போது இதுபோல ஒரு ஆட்சியை பார்க்க போகிறதோ என ஏக்கமாக இருக்கிறது. அதுவும் நம் காலத்தில் பார்க்க முடியுமா?”

  கவலை வேண்டாம், நிச்சயம் நடக்கும்.

 4. @யாசின்

  “சரியாக அலசி ஆராய்ந்து, விவரங்களை சேகரித்து இந்த பதிவை எழுதி இருக்கீங்க.. அருமை.”

  நன்றி யாசின்.

  தொடர்ந்து இவர்களைப் பற்றி இணையத்தில் படித்து வருகிறேன். எனவே, எப்போது கேட்டாலும் இதை என்னால் சொல்ல முடியும் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here