கடந்த வாரம் அலுவலக நண்பர்கள் இணைந்து ஏற்காடு சென்று வந்தோம். நாங்க Internal IT Support Team எனவே, அனைவரும் இணைந்து செல்வது என்பது மிகக்கடினம்.
ஏனென்றால், எந்த நேரத்தில் என்ன நடக்கும்னு தெரியாது. அனைவரும் வெளியே சென்ற நேரம், ஏதாவது தொழில்நுட்ப பிரச்னை நடந்து விட்டால் Escalation ஆகி விடும்.
அப்படி இப்படித் தேதிகள் மாறி, ஒரு வழியாகக் கிளம்பும் வாரம் அப்படியும் இருவர் பல்வேறு காரணங்களால் வர முடியாமல் போனது.
ஏற்காடு
முதலில் ஏலகிரி திட்டமிடப்பட்டுப் பின்னர் ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு மாற்றம் செய்யப்பட்டது.
இரண்டு கார்களில் வெள்ளி இரவு கிளம்பி சனி காலை 7 மணிக்கு ஏற்காடு அடைந்தோம். கடுமையான பனிமூட்டம், என்னுடைய வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை.
ஊட்டி, கொடைக்கானல், மசினங்குடி சென்று இருக்கிறேன் ஆனால், இது போலப் பார்த்தது இல்லை அல்லது நான் சென்று இருந்த நேரத்தில் இது போல இல்லை.
20 அடி தொலைவில் உள்ள எதுவுமே தெரியவில்லை, வெள்ளையாக இருக்கிறது, மழைத்தூறலும் இருந்தது. இரவுப்பயணம் என்பதால், சாப்பிட்டுவிட்டு அனைவரும் ஓய்வு எடுத்தார்கள்.
பின்னர் ஏற்காடு ஏரி செல்வதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால், ஏரி, சேர்வராயன் கோவில், View Point, பூங்கா மற்றும் வெகுசில இடங்களே.
ஏரியில் நுழைய ஒருவருக்கு ₹6 கட்டணம், படகு சவாரிக்கு 8 பேருக்கு ₹500.
உண்மையில் ஏற்காடு பற்றி எழுத எனக்கு ஒன்றுமே இல்லை காரணம், அங்கே பார்க்க இடங்கள் என்று அதிகமில்லை. ஓய்வு எடுக்கலாம், குளிரை ரசிக்கலாம் அவ்வளவே!
இக்கட்டுரையை எழுதக்காரணமே முழுக்க முழுக்க இந்த ஏரியும் படகு சவாரியும் மட்டுமே!
ஏற்காடு ஏரி
ஏரிக்குள் நுழைந்ததும் ஏதோ ஐரோப்பாவில் உள்ள ஒரு நாட்டில் இருப்பது போல இருந்தது.
ஹாலிவுட் திகில் / ஹாரர் திரைப்படங்களில் வரும் கடலைப்போலப் பனி மூட்டத்துடன் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
ஒரு படகு கிளம்பி சில வினாடிகளில் பனிமூட்டத்தில் மறைந்து விடுகிறது. 20 அடிக்கு முன்னால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. எங்குப் பார்த்தாலும் வெள்ளையாக உள்ளது.
ஏரி ஓரமாக உள்ள மரங்கள் கூடப் பனிமூட்டத்தில் திகில் படங்களில் வருவது போல உள்ளது.
குளிர் ஈரத்துடன் பின்னி எடுக்கிறது. காற்று அடித்தால், உடலே விரைத்து விடும் போல உள்ளது. பலர் உடல் நடுங்கி கொண்டு இருந்தது. யப்பா! ஸ்வட்டர் அணிந்து இருந்தும் என்னால முடியல.
ஆனால், அற்புதமான உணர்வு. அனைவரும் குளிரையும், பனிமூட்டத்தையும், ஈரத்தையும் மிக ரசித்தார்கள். இன்னும் கொஞ்சம் தாமதமாகி இருந்தால், எதிரில் இருப்பவரே தெரிய மாட்டார்.
படகில் செல்லும் போது புகைக்குள் நுழைந்து செல்வது போல இருந்தது. எனக்குப் பல திரைப்படங்களின் நினைவு வந்து சென்றது 🙂 . கடலில் இருப்பது போலவே இருந்தது.
படகோட்டி, ஏரி ஆழம் 30 அடி என்றார். இங்கே பாதுகாப்பு உடைகள் இல்லை என்பது அதிர்ச்சி. எப்படி இதை அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை.
ஏரி முழுக்க ஒரு சுற்று வந்து இறக்கி விட்டார்கள். அட்டகாசமான பயணம். ஏரியை விட்டு வெளியே வரவே மனமில்லை.
மதியம் 12 முதல் 4 மணி வரை மட்டுமே ஓரளவுக்குப் பனிமூட்டம் இல்லை. அதன் பிறகு கடுமையாகி ஒன்றுமே தெரியவில்லை, குத்துமதிப்பாகத்தான் செல்ல வேண்டி இருந்தது.
நாங்கள் சென்றது சீசன் நேரம் இல்லையென்பதால், இப்படி இருந்து இருக்கும் போல ஆனாலும் நாங்கள் இந்தக் காலச் சூழ்நிலையைத் தான் அதிகம் ரசித்தோம்.
அனைவருக்கும் பரம திருப்தி.
ஏற்காடை மேம்படுத்தச் சுற்றாலத்துறைக்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன ஆனால், வழக்கம்போலப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கீழே இறங்கும் போது வழி நெடுக அசத்தலான மரங்கள். இது போல நான் எந்த மலைப்பகுதியிலும் இவ்வளவு ரம்மியமாகப் பார்த்தது இல்லை.
சும்மா எதோ சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.. அட்டகாசமாக இருந்தது. என் ரசனைக்குப் பிடித்து இருந்தது.
ஐடி துறை –> சூப்பர் மார்க்கெட்
ஓரிரு வருடங்கள் முன்பு எங்கள் குழுவில் இருந்து ஒருத்தன் விலகி அவன் அப்பாவின் மளிகைக்கடையைப் பார்க்கச் சென்று சூப்பர் மார்க்கெட்டாக மாற்றி விட்டான்.
அவன் வீடு / கடை 1 1/2 மணி நேரப் பயணத்தில் இருந்ததால், அவனையும் சென்று பார்த்துச் சென்னை கிளம்பினோம்.
ஐடி துறையில் இருந்து –> சூப்பர் மார்க்கெட் . நிம்மதியா இருக்கான் 🙂 🙂 .
கூடுவாஞ்சேரி வண்டலூர் நெரிசல்
சென்னை கூடுவாஞ்சேரி வந்த பிறகு கடுமையான போக்குவரத்து நெரிசல். ஒரு மணிநேரம் கடந்து என்னவென்று பார்த்தால், மழைக்கு ஒரு மரம் சாய்ந்து இருந்தது.
வழக்கம்போல நம்ம வாகன ஓட்டிகள் முட்டி மோதியதால் நெரிசல்.
போக்குவரத்து காவலர் வாகனங்களை ஒழுங்கு செய்து இருந்தால், 20 நிமிடங்களில் சென்று இருக்கலாம்.
இதைவிடக் கொடுமை, இந்த மரம் இதன் பிறகு மூன்று நாட்களைக் கடந்தும் எடுக்கப்படவில்லையாம்.
இதைத்தாண்டி வந்தால், அதைவிட மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் எறும்புபோல வாகனங்கள் நகர்ந்து செல்கிறது. என்னடா விஷயம் என்று பார்த்தால், வண்டலூர் பாலம் வேலை காரணமாக நெரிசல்.
இதையும் எளிதாக ஒழுங்குபடுத்தியிருந்தால், இவ்வளவு நெரிசல் ஆகி இருக்கிறது. கடும் மழை, ஞாயிறு போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும் என்று தெரிந்தும் இப்படி உள்ளது.
இரு காவலர்கள் மட்டுமே ஒழுங்குபடுத்த வந்து இருப்பார்கள் போல, கொஞ்சம் சீரானது.
அதைத்தாண்டி வந்தால், சாலையே காலியாக உள்ளது. ஒன்றுமில்லாத பிரச்சனைக்கு 3 மணி நேரம் தாமதம். 30 நிமிடங்களில் தாண்ட வேண்டிய தூரத்துக்கு 3 மணி நேரங்கள்.
கொசுறு
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து கூகுள் மேப்பில் 11 கிலோ மீட்டருக்குப் பிறகு இடது புறம் திரும்பும்படி வழிகாட்டும்.
ஆனால், நீங்கள் அதன் பிறகு 4 கிலோ மீட்டர் சென்று இடது புறம் திரும்பினால் சாலை நன்றாக இருக்கும்.
இதை அடிவாரத்தில் கட்டணம் வாங்கியவர் கூறினார். கூகுள் காட்டும் வழியில் சென்றால், 2 / 3 கிலோமீட்டர் சாலை சரியில்லை ஆனால், தூரம் குறைவு.
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். வழக்கமான சாலை தூரத்துக்கும் மலைப்பகுதி தூரத்துக்கும் கணக்கில் வித்யாசம் உள்ளதா?
ஏனென்றால், 2 கிலோ மீட்டர் என்றால், 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிட்டத்தட்ட குறிப்பிட்டுள்ள தூரத்தை விட 80% அதிகத் தூரமாக உள்ளது.
இதை இங்கே மட்டுமல்ல, கடந்த முறை ‘திம்பம்’ மலைக்குச் சென்ற போதும் உணர்ந்தேன்.
எவருக்கும் காரணம் தெரிந்தால் கூறவும்.
பரிந்துரை
கூகுள் மேப் பயன்படுத்திச் செல்பவர்கள், தாங்கள் செல்லும் இடத்தைக் குறிப்பாகச் சிக்னல் கிடைக்காத இடங்களாக இருந்தால், புறப்படும் போதே கூகுள் மேப்பை Local Download செய்து கொண்டால், இணையம் இல்லையென்றாலும் உங்களுக்கு வழி தேடுவதில் பிரச்னை இருக்காது.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி நானும் 30 வருடங்களுக்கு முன்பு சென்றது.. இதை போன்ற சுற்றி பார்க்க நெறய இடம் இல்லாததால் மற்றும் சாப்பிடுவதற்கு சரியான இடம் இல்லாததாலும் 3 மணிக்கு திரும்பி விட்டோம் அப்போது பேரூந்து சென்றோம் மற்றபடி ஊட்டி கொடைக்கானல் மாதிரி இல்லாததால் குளிர் மட்டும் அனுபவித்து விட்டு வந்து விட்டோம் … நாங்களும் மலை வாசஸ்தலத்துக்கு சென்றோம் என்ற வரையில் சந்தோஷமே ..
ப்ப்பா 30 வருடங்களுக்கு முன்பா.. இப்ப நிறைய மாறி இருக்கும். நான் 15 வருடங்களுக்கு முன்பு சென்றேன்.
சுற்றிப்பார்க்க அதிக இடங்கள் இல்லை.. குளிரை ரசிக்கலாம்.
எங்கள் பொருளாதார நிலைக்கு சரியாக இருக்கும் என்பதால் தேனிலவு பயணமாக நான்கு நாட்கள் சென்றோம். மதிய நேரத்தில் ஏரியில் பெடலிங்க் போட்டில் நானும் என் மனைவியும் மட்டும் சென்றோம். அப்போது லைப் ஜாக்கெட் கொடுத்தார்கள்.
நாலு நாட்களும் வெளி உலக தொடர்பு இல்லாமல் அமைதியாக இருந்தது ஏற்காடு டிரிப்பில் மட்டும்தான். அதன் பிறகு இரண்டு நாட்கள் கூட சேர்ந்தாற்போல் வெளியில் செல்ல நேரம் ஒதுக்க முடியவில்லை.