மோடி என்ன செய்தார்? | 5

0
மோடி என்ன செய்தார்? | 5

31.NPCI

சில்லறை விற்பனை மற்றும் இணைய வழிச் செலவு முறைகளைக் கண்காணிக்கும், முடிவு எடுக்கும் அமைப்பாக National Payments Corporation of India உள்ளது.

2008 காங் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் 2012 ம் ஆண்டு இந்திய அரசின் கிரெடிட், டெபிட்டுக்கு RuPay வசதியை அறிமுகப்படுத்தியது.

அறிமுகப்படுத்தப்பட்டாலும், பரவலாக்க முன்னெடுப்பு செய்யப்படவில்லை.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஜன்தன் திட்டத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து டெபிட் அட்டைகளும் RuPay வழியாகக் கொடுக்கப்பட்டன.

இது தொடர்ந்து அதிகரித்து மாஸ்டர், விசா நிறுவனங்களுக்குத் தலைவலியை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

இதனால் கடுப்பான மாஸ்டர் அமெரிக்காவிடம் புலம்பும் அளவுக்கு நிலை சென்றது.

இதே நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் UPI. இதன் வெற்றி, பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் NPCI பங்கு மிக முக்கியமானது.

Read : RuPay வளர்ச்சியால் கதிகலங்கும் Master & Visa நிறுவனங்கள்

32.Defence export

இராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை இறக்குமதி மட்டுமே செய்து கொண்டு இருந்த இந்தியா, தொடர்ந்து ஏற்றுமதியின் அளவை அதிகரித்துக்கொண்டுள்ளது.

பல்வேறு வகையான ஏவுகணைகள், வாகனங்கள், ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இலங்கை, ஜெர்மனி, பெல்ஜியம், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் உட்பட 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா மீது அமெரிக்கா அடிக்கடி பாய்ந்து பிறாண்டுவதற்குக் காரணம், தங்களுடைய அடிமடியில் இந்தியா கை வைத்தது தான்.

பல நாடுகளில் சண்டைகளை உருவாக்கி, அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது தான் அமெரிக்காவின் தொழில்களில் ஒன்று.

முன்பு இருந்த நிலை என்றால், இந்தியா அடங்கி இருக்கும் ஆனால், தற்போது இருப்பது புதிய இந்தியா.

33.Jan Aushadi

மத்திய அரசின் மக்கள் மருந்தகம் காங் ஆட்சிக்காலத்தில் 2008 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது ஆனால், சரியாக முன்னெடுக்கவில்லை. எனவே, திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மருந்தகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாகச் சர்க்கரை நோய் மருந்துக்காகப் பலரும் ஒவ்வொரு மாதமும் செலவழிக்கும் பல ஆயிரக்கணக்கான ரூபாய், மக்கள் மருந்தகம் மூலம் பெரிய அளவில் குறைந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பல மக்கள் மருந்தகம் கடைகள் துவங்கப்பட்டு இருந்தாலும், இன்னும் பலருக்கு இதன் அறிமுகம் சென்று சேரவில்லை.

மருந்துகளுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வரும் காலங்களில் குறையும். ஏழை, நடுத்தர மக்களுக்கு அற்புதமான வாய்ப்பு.

34.Khelo India

140+ கோடி மக்கள் இருந்தாலும், இந்தியா விளையாட்டுத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதைக்கருத்தில் கொண்டே Khelo India திட்டம் உருவாக்கப்பட்டது.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை, சத்தான உணவு, போக்குவரத்து செலவு அனைத்தையும் கொடுத்து விளையாட்டு வீரர்களைத் தயார் படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டம் ஏற்படுத்திய மாற்றங்களால், இன்று உலகப்போட்டிகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதக்கங்களைக் குவித்து வருகிறது.

இன்று இந்தியா அதிகப் பதக்கங்களைப் பெற முக்கிய காரணம் Khelo India திட்டமே.

35.ISRO

மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பிறகு இஸ்ரோ வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. விஞ்ஞானிகளுக்கு மரியாதை உயர்ந்துள்ளது.

சந்திரயான், மங்கள்யான் என்று இந்தியாவின் மதிப்பு உலகளவில் கன்னாபின்னாவென்று கூடி விட்டது.

இதோடு பல்வேறு செயற்கைக்கோள்களைத் துல்லியமாக ஏவி வருகிறது. தோல்வி என்பதே இலையெனும் அளவுக்குச் சரமாரியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

இவை எல்லாவற்றையும் விட வியாபார ரீதியில் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் அனுப்பி மிகப்பெரிய இலாபம் அடைந்து வருகிறது.

மற்ற நாடுகளை விடக் குறைந்த செலவு, பாதுகாப்பாக, துல்லியமாக செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்புவதால், பல நாடுகளின் விருப்ப தேர்வாக இந்தியா உள்ளது.

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு நபர்களைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இஸ்ரோ விண்வெளித்துறையில் சாதனை செய்து வருகிறது.

இதற்கு முக்கியக்காரணம், மோடி அவர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவு.

36.National Investigation Agency

காங் அரசால் கொண்டு வரப்பட்ட சிறப்பான துறை தேசியப் புலனாய்வு அமைப்பு.

இத்திட்டத்தை காங் பயன்படுத்தியதோ இல்லையோ ஆனால், பாஜக அரசுக்குப் பேருதவியாக உள்ளது.

இந்தியாவில் நாசவேலை செய்து வரும் தீவிரவாதிகளைக் கண்காணிக்கவும், அவர்களைப் பிடிக்கவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

NIA துறைக்கு இருக்கும் அதிகாரத்தால், மாநிலங்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் அவர்களால் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைப் பிடிக்க முடிகிறது.

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் கடந்த 10 வருடங்களில் குறைந்ததற்கு NIA மிக முக்கியக்காரணம்.

இவற்றோடு இந்தியாவின் RAW அமைப்பு அஜித் தோவல் தலைமையில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஒவ்வொருவருமாக மர்ம நபர்களால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

மர்ம நபர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் படை இந்தியாவில் உருவாகியுள்ளது.

37.Ujjwala scheme

அடித்தட்டு மக்களுக்கு மானிய விலையில் எரிவாயு வழங்கும் திட்டம், விறகை எரித்துச் சமையலைச் செய்து வந்தவர்களுக்குப் பேருதவியாகியுள்ளது.

2024 மார்ச் வரை 10 கோடி மக்கள் இதனால் பயனடைந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் ஏற்கனவே எரிவாயு பயன்படுத்துகிறார்கள் ஆனாலும், அடித்தட்டு மக்களுக்கு இவை பயனுள்ளதாக உள்ளது.

புகையால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இதனால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பல காலமாக எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு இதன் சிறப்பை உணர்ந்து கொள்ள முடியாது காரணம், புகையுடனான அனுபவத்தையே பெற்று இருக்க மாட்டார்கள்.

எனவே தான், இத்திட்டம் அடித்தட்டு மக்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளது.

38.MP recommendation seats for Navodhaya

ஒவ்வொரு MP க்கும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்கு மூன்று மாணவர்களைப் பரிந்துரைக்கும் வழக்கம் இருந்தது.

இதன் மூலம் பலர் ஓர் இடத்துக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களைப் பரிந்துரைத்துப் பள்ளியில் சேர்த்து வந்தார்கள்.

இப்பரிந்துரை ஊழலுக்கு வழிவகுக்கிறது என்று மத்திய அரசு இம்முறையைத் தடை செய்து விட்டது.

39.Atal Pension Scheme

இந்திய அரசாங்கத்தால் ஓய்வூதியம் பெறும் வகையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே அடல் ஓய்வூதிய திட்டம்.

இத்திட்டத்தின் மூலம் ₹1000, ₹2000, ₹3000, ₹4000, ₹5000 என நம் தேவைக்கு ஏற்ப 60 வயது முடிந்த பிறகு ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் பெற முடியும்.

பலருக்கு இத்திட்டம் குறித்த அறிமுகம் இல்லாததால் இதில் இணைய முடியவில்லை காரணம், இதில் 40 வயது வரை மட்டுமே இணைய முடியும்.

ஓய்வூதியத் திட்டம் என்பதால், வயதானவர்களுக்கான திட்டம் என்றாலும், இள வயதிலேயே இணைவது பங்களிப்புக் கட்டணத்தைக் குறைக்கும்.

Read : அடல் ஓய்வூதிய திட்டம் | இள வயதினர் கவனத்துக்கு

40.One India One Nation

ஒரு இந்தியா திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் இந்தியா முழுமைக்குமான திட்டமாக மாறிக்கொண்டுள்ளது.

குறிப்பாகக் குடும்ப அட்டையை இந்தியா முழுமைக்குமான திட்டமாகக் கொண்டு வந்த போது பலரும் எதிர்த்தார்கள். குறிப்பாகத் திருமுருகன் காந்தி இம்முறையையே நிறுத்தி விடுவார்கள் என்று கூறி பதற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆனால், இம்முறையால் குறிப்பிட்ட பகுதியில் வாங்கப்பட்ட குடும்ப அட்டையை வைத்துக்கொண்டு இந்தியாவின் எப்பகுதியிலும் ஆதார் துணையுடன் பொருட்களைப் பெறலாம்.

எடுத்துக்காட்டுக்கு, முன்பு கோபியில் குடும்ப அட்டை பெற்று இருந்தால், கோபியில் உள்ள கடையில் மட்டுமே பொருட்களைப் பெற முடியும்.

ஆனால், தற்போது சென்னையில் உள்ள கடையிலும் ஆதார் மூலமாகப் பொருட்களைப் பெற முடியும். பணிக்காக வேறு மாநிலம் சென்றாலும், அங்கேயும் இதே போலப் பெற முடியும்.

இது போன்று ஏராளமான சேவைகள், வசதிகள் One India திட்டத்தில் மாறியது மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தியுள்ளது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!