படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

7
Skim

மீபத்தில் “Blog” அழிந்து வருகிறதா? என்ற கட்டுரை எழுதி இருந்தேன். இதை எழுதிய பிறகு எழுத்தில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என்று யோசிக்க வைத்தது.

காலம் வேகமாகி வருகிறது எனவே அதன் வேகத்தில் நாம் கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நிலைக்க முடியும். Image Credit

Skim

எனவே, சில விசயங்களை யோசித்து அவற்றைச் செயல்படுத்தலாம் என்று நினைத்து இருக்கிறேன். அதில் ஒன்று தான் “Skim”.

நம் அனைவருக்கும் படிப்பதில் Skip தெரியும் ஆனால், அதென்ன “Skim?! 🙂 . என்னவென்று தெரியாமலே நம்மில் பலர் செய்து கொண்டு இருக்கிறோம்.

கட்டுரையில், விமர்சனத்தில் எழுதப்பட்டு இருக்கும் அனைத்தும் நமக்குச் சுவாரசியமாக இருக்கும் என்று கூற முடியாது.

ட்விட்டர் காலத்தில் கட்டுரைகளை மேலோட்டமாகவே படித்துச் செல்கிறோம். வரிக்கு வரி படிப்பதில்லை.

எனவே, பெரிய பத்தியாக எழுதப்பட்டால் மேலே கீழே வரிகள் மட்டும் படிக்கப்பட்டு நடுவில் உள்ளவை மேலோட்டமாகப் பார்வை விடப்படும். கால மாற்றம் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

இதில் புத்தகங்கள், நாவல்கள் சேராது. Blog எழுதுபவர்களுக்கும், ஃபேஸ்புக்கில் பெரிதாக எழுதுபவர்களுக்கும், செய்தித் தளங்களுக்கும் பொருந்தும்.

எனவே, எழுதும் போது பெரிய பத்தியாக எழுதினால், பலர் படிக்கச் சிரமப்பட்டு எந்தப் பத்தி சிறியதாக இருக்கிறதோ அதற்குத் தாவி விடுவார்கள் அல்லது சில வார்த்தைகளை மட்டும் படித்து விட்டு முக்கியமில்லை என்று தோன்றினால் புறக்கணித்து விடுவார்கள்.

சுருக்கமாகக் கட்டுரைகள் எவ்வளவு பெரியது என்று சோதிக்க Scroll செய்து பார்ப்பது போலப் படிப்பதை வேகமாக மேலோட்டமாகப் படித்து வருவது Skim.

அதாவது படிப்பவர்களே “எடிட்டர்” ஆகி விடும் தருணம்.

பின்வருவன இந்தக் கட்டுரை தொடர்பான உப யோசனைகள்

பெரிய பத்தி வேண்டாம்

பெரிய பத்தியாக எழுதினால் படிப்பவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்று, ஓரளவு பெரிய பத்தியாக எழுதுவதைத் தவிர்த்து வந்தேன் ஆனால், இதெல்லாம் போதவே போதாது என்பது போலக் காலம் மாறி வருகிறது.

படிப்பவர்கள் வேகமாகச் சுருக்கமாக விறுவிறுப்பாக எதிர்பார்க்கிறார்கள்.

படிப்பவர்கள் Skim செய்தாலும் இழுத்துப் பிடித்துக் கொஞ்சம் கூடுதலாகப் படிக்க வைக்கும் வித்தை தான் சிறிய பத்தி.

படிக்கக் குறைவாக உள்ளது என்றால், முழுதாக வரிக்கு வரி பொறுமையாகப் படிக்கலாம்.

ஆனால், படிக்க நிறையத் தளங்கள், செய்திகள் இருப்பதால் அனைத்தையும் படிக்கணும் என்பதால் நேரம் காரணமாக  Skim செய்து படிப்பார்கள்.

Skim செய்யும் போது முக்கியம் என்று கருதினால், அதை Bookmark செய்து பின்னர் பொறுமையாகப் படிப்பார்கள் ஆனால், பெரும்பாலும் skim தான்.

சோகத்தைப் பிழியாதீங்க 

அடுத்தது, யாரும் நம்முடைய சோகக் கதையை, சுயபுராணத்தைக் கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை உணர வேண்டும்.

நான் இவ்வளோ கஷ்டப்பட்டேன் அவ்வளோ கஷ்டப்பட்டேன் என்று நீட்டி முழக்கிக் கூறுவதை..

ஊருல யாரு தான் சிரமப்படல! நம்ம புலம்பலையும் வீர பிராதபங்களையும் கேட்கவா வருகிறார்கள்?!

பொழுது போக்கப் படிக்க வருபவர்களிடம் நம் வரலாறுகளைக் கூறி கண்ணீரும் கம்பலையுமாக இருந்தால்…. அடப்போய்யா! என்று நகர்ந்து விடுவார்கள்.

சொல்வதைச் சுருங்கக் கூறு!

துவக்கத்தில் முன்னுரை (பில்டப்) கொடுத்துத் தான் கட்டுரைக்கே செல்வேன்.

இதுவே பலருக்குக் கொட்டாவி வரவைக்க வாய்ப்பு இருக்கிறது அப்புறம் எங்கே படிக்க வைப்பது? சமீபமாக நேரடியாக விசயத்திற்கு வருகிறேன், சிறு முன்னுரையுடன்.

ஏனென்றால், படிப்பவருக்கு ஒரு புரிதலைக் கொடுக்கச் சிறு முன்னுரையாவது கட்டுரைக்கு அவசியம். நாளைக்கு இதுவே தேவை இருக்காது.

சுயபுராணமும் தன்னடக்கமும்

நான் இதைச் சொல்லக் கூடாது இருந்தாலும் சொல்றேன், எனக்கு இதெல்லாம் பிடிக்காது இருந்தாலும் சொல்றேன் என்று யாரும் ஆரம்பித்தால், எதையோ பேசி நம்மைக் கொல்லப்போறாங்க என்று அர்த்தம்.

“நானெல்லாம் அப்போது…” என்று ஆரம்பித்துத் தொடர்ந்தால், தானும் அனத்தி நம்மையும் கதற வைக்கப் போகிறார் என்று அர்த்தம் 🙂 .

சுயபுராணம் ஒரு பிரச்சனையென்றால் தன்னடக்கம் வேற மாதிரி. அதாவது, தன்னடக்கம் என்ற பெயரில் நம்மை ரொம்பவும் சோதித்து விடுவார்கள்.

கலக்கிட்டீங்க போங்க! என்றால், அட… நான் என்னங்க அப்படி பண்ணிட்டேன்!! எதோ தெரிஞ்சத!! எழுதினேன் என்று தன்னடக்கமாகப் பேசுவார்கள்.

போய்யா! மொக்கையா இருக்கு.. என்றால், உனக்குப் படிக்கத் தெரியல, எதையாவது கிறுக்கி வைத்து இருப்பானுக அதைப் போய்ப் படி! என்று பொங்குவார்கள் 🙂 .

இவற்றையெல்லாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுயபுராணத்தைக் கூடச் சகிக்க முடியும் ஆனால், இந்தத் தன்னடக்கம் ரொம்ப கஷ்டம்.

கொம்பைக் கழட்டுங்க

எழுதறவங்க பலர் படிப்பவர்களுக்கு எதுவுமே தெரியாது அதோட தனக்கு எல்லாமே தெரியும் என்றும் நினைத்துட்டு இருக்காங்க.

அப்படியெல்லாம் நினைக்காதீங்க, படிக்கிறவங்க பல விசயங்கள்ல புத்திசாலிங்க.

அவங்க தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில்லை அவ்வளவே! தலையில் கொம்போடு திரிவது ரொம்பத் தவறு.

புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்

எழுத்தாளர் சுஜாதா கூறியது.

எழுதியதைச் சில தினங்கள் விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் கோணத்திலிருந்து அதைப் பார்க்க இயலும்.

கொஞ்சம் கூடக் கருணையே காட்டாமல் அநாவசிய வார்த்தைகளையும் வாக்கியங்களையும் சிதைத்து விட வேண்டும்.

நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது; நீக்கக் கூடாது என்பதெல்லாம் மடத்தனம்.

உங்களுக்கே திருப்தி வரும்வரை திரும்பத் திரும்ப எழுதுவதிலும் திருத்துவதிலும் நீக்குவதிலும் சேர்ப்பதிலும்தான் நல்ல எழுத்து ஜனிக்கிறது.

சுஜாதா அவர்கள் கூறியது எனக்கு வேதவாக்காகி விட்டது. மாற்றுக் கருத்துகள் இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

மாற்றிக் கொள்ள என்றும் தயாராகவே உள்ளேன், அவற்றில் உடன்பாடு என்றால்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. எழுதுவதைப்பற்றி மட்டும் யோசிக்காமல் எழுதுபவர்களைப்பற்றியும் , படிக்கிறவர்கள் படும் பாடு பற்றியும் யோசித்து எழுதுயிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு

  2. கிரி, (படிக்கிறவங்க பல விசயங்கள்ல புத்திசாலிங்க. அவங்க தன்னை வெளிக்காட்டிக்கொள்வதில்லை அவ்வளவே!) சத்தியமான வரிகள்… ஒரு நபரை பார்க்கும் போதோ, அல்லது முதல் சந்திப்பிலோ அவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது..

    (நான் எழுதியதெல்லாம் மந்திரம் போல; ஒரு வார்த்தையை நீக்க முடியாது : -) அது போல ஒரு எழுத்தாளன் நினைக்கும் பட்சத்தில், அவரே எழுதி அவரே படித்து,அவர் மட்டும் ரசித்து கொள்ள வேண்டியது தான்..

    என்னை பொறுத்தவரை, உங்கள் எழுத்துகளின் அழகே எளிமை தான்..அந்த எளிமைக்கு மேலும் அழகு சேர்ப்பது நகைச்சுவை..ஒரே மாதிரியான பதிவுகளை தராமல், கலவையாக கொடுப்பது இன்னும் சிறப்பே!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. இக்கட்டுரை உங்களுக்கு அவசியம் இல்லாத தேவைப்படாத ஒன்னு ணா …

    இதெல்லாம் மத்தவங்களுக்கு தான் உங்களுக்கு இல்லை. இதை ஏற்கனவே ப்ளாக் பற்றிய இடுகையின் பின்னூட்டாத்தில் சொல்லிவிட்டேன் … உங்கள் இடுகை எப்போதும் சோடை போனது இல்லை.

    பெரிய இடுகையாக வரும் போது மட்டும் கொஞ்சம் சோதிக்கும் பட் கிரி அண்ணா எதாவது சொல்லிருப்பாரு மொக்கை போடமாட்டாரு ன்னு நான் நம்புவதால் (அசுரன் இடுகையில் நடந்தது இது )தொடர்ந்து படிக்க தோன்றும் …

    தொடர்ந்து எடிட் செய்யாமல் முழுபதிவையும் வெளியிடுங்கள் . எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் இலர். தெரிஞ்சவங்க skim செய்யட்டும்..என்னைபோல தெரியாதவர்கள் தொடர்ந்து படிப்பார்கள்….

    #உடைந்த கைக்கு மெடிகல் செக்கப் இருந்ததால் 3 பதிவுகளுக்கு பின்னுட்டம் போட முடியவில்லை .. மன்னிச்சு அண்ணா

  4. நானும் blogs எழுதி தலைகீழா தண்ணி குடிச்சு பாக்கிறேன், ஓரு நல்ல பெட்பக் வரமட்டுதே..
    -ஆரூர் பாஸ்கர்

  5. தல,
    உங்க இந்த பதிவ வெறும் “blue link” details மட்டும் முதல படிச்சு பார்த்தேன்..
    அப்படியும் கூட நீங்க சொல்ல வர்ற கருத்து புரியுது..இது தற்செயலா நடந்ததா? இல்லை fast food மாதிரி வேகமா படிச்சாலும் புரியணும் நு செஞ்சீங்களா? எப்படி பாத்தாலும் facebook status மாதிரி அட்டகாசமா இருக்கு இந்த approach

    இந்த மாதிரி ஒரு சுயபரிட்சை செய்யுறது எப்பவுமே உங்களுக்கு நல்லது தான்..அப்போ தான் காலத்தோட நாம ஒத்துபோக முடியும்… மாற்று சிந்தனைகள் எப்பவுமே உங்க வளர்ச்சி கு தான் உதவும்..

    – அருண் கோவிந்தன்

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் கலவையாக எழுதுவது படிப்பவர்களையும் எழுதும் என்னையும் சலிப்படையாமல் வைக்கும் என்று தான் இப்படி எழுதுகிறேன்.

    நகைச்சுவை அது எனக்கு இயல்பாகவே வந்த ஒரு போனஸ் 🙂

    @கார்த்தி ரொம்ம்ப உணர்ச்சிவசப்படுறானே கார்த்தி 🙂

    கார்த்தி கவலையே படாதே அனைவருக்கும் புரியும் படி தான் எழுதுவேன். அதில் உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

    எடிட் செய்வது சுவாரசியமாக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதற்காக தகவல்களை குறைத்து விடுவேன் என்பது அர்த்தமல்ல. இனி வரும் என்னுடைய இடுகைகளைப் படித்து எப்படி இருக்கிறது என்று பார். நான் சொல்வதன் அர்த்தம் புரியும்.

    பின்னூட்டம் என்பது விருப்பப்பட்டுப் போடுவது அதாவது கூறப்பட்டதில் ஏதாவது விமர்சனம் ரசிப்பு இருந்தால் கூறுவது, கட்டாயம் கிடையாது. எனவே உனக்கு தோன்றினால் பின்னூட்டம் போடு அவ்வளவு தான்.

    இன்னுமா கை சரியாகல..!!

    @பாஸ்கர் முயற்சித்தால் நிச்சயம் பலன் இருக்கும்.. காலதாமதம் ஆனாலும்.

    @அருண் சரியாப் பிடிச்சீங்க I like it 🙂

    நான் எப்படிப் படித்தாலும் புரியணும் என்று தான் இது போல எழுதி இருக்கிறேன். கடந்த சில இடுகைகளாக முயற்சித்தாலும் இந்த இடுகை தான் நான் முழுமையாக முயற்சித்தது அதில் 95% சரியாக வந்தது.

    தற்போது யாரும் பெரியதாக இருந்தால் படிக்கத் தயாராக இல்லை. Skim செய்து கொண்டு போகிறார்கள்.. இதை நானே பலருக்கு செய்கிறேன் என்பதால், என்னால் சரியாக உணர முடிந்தது.

    சமீபத்தில் ஒரு ஆங்கில தளத்தில் இது குறித்து குறிப்பிட்டு இருந்ததை படித்ததும் நானும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றி செயல்படுத்தியது தான் இது.

    தற்போது இது போல எழுதி இருப்பதைப் படிக்க எனக்கே எளிதாக இருக்கிறது எனவே நிச்சயம் படிக்கும் உங்களுக்கும் மாற்றம் தெரியும்.

    அதோடு பல தேவையற்ற எழுத்துக்களை நீக்கி சொல்ல வரும் விஷயத்தை குறைந்த எழுத்துக்களில் முடிக்க முயற்சிக்கிறேன்.

    இதை செய்ய ஆரம்பித்த பிறகு தான் எவ்வளவு எடிட் செய்யலாம் என்றே புரிகிறது. சுவாரசியமாக இருக்கிறது 🙂

  7. செம்மையான, எழுதுபவர்களுக்கு தேவையான செய்தி, சொல்வதோடில்லாமல் எழுத்திலும் தெரிகிறது அருமை அருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!