இராவணனை உயர்த்தி பிராமணர்கள், ராம லக்ஷ்மண அனுமன், இந்து மத வர்ணாசிரமத்தை விமர்சிக்கும் நாவல் அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.
ஆனால், இதில் நடந்து இருப்பது அனைத்தும் சமகாலத்திலும் நடந்து கொண்டு இருக்கக்கூடிய விசயங்கள் என்ற எண்ணத்தில் படித்தால், நிச்சயம் உங்கள் எண்ணத்தில் மாற்றம் வர வாய்ப்புண்டு.
முன் முடிவோடு படித்தால், இதை ரசிப்பது புரிந்து கொள்வது சிரமம்.
நிறையப் பகிர / தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எனவே, ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் தொடருங்கள் Image Credit
அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
“அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்” நாவல் என்னமோ நினைத்துச் சாதாரணமாக ஆரம்பித்து, சுமாராகச் சென்று பின் பட்டையக் கிளப்பி விட்டது .
ராவணன் தன் வரலாறு
இந்நாவல் ராவணன் தன் வரலாறு கூறுவது.
எந்த ஒரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கும். நம்மில் பெரும்பாலனவர்கள் ராமாயணம் படித்து / தொலைக்காட்சிகளில் பார்த்து இருப்போம்.
இதைப் பார்ப்பவர்கள் ராமன் கடவுள், மிக நல்லவன், எந்தத் தவறும் செய்யாதவன், ஒழுக்கமானவன், தேவர்கள் என்றால் நல்லவர்கள், அசுரர்கள் மோசமானவர்கள் என்ற எண்ணம் தான் இருக்கும்.
இதற்கு நம் எண்ணங்களும் பழக்கப்பட்டு இருக்கிறது.
இராவணன் சீதையைக் கடத்தினான் அதனால் பிரச்சனை ஆனது என்று தானே தெரியும், அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாதல்லவா!
அது பற்றிக் கூறுவதே இந்த அசுரன்.
இந்நாவல் இராவணன் பார்வையிலும் சாதாரணக் குடிமகனான அசுரன் “பத்ரன்” பார்வையிலும் விரிகிறது.
இருவரும் மாற்றி மாற்றித் தங்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் கூறி வருவதே இந்தப் புத்தகம்.
இராவணன் தந்தை பிரமாணர்
இராவணன் தந்தை பிரமாணர், தாய் அசுர குலம். மாற்றாந்தாய் மகனான குபேரன் இலங்கையை ஆண்டு வருகிறான்.
தனது தந்தை உடனில்லாமல் தன் தாய் தன் தம்பிகள் கும்பகர்ணன், விபீஷணனுடன் வாழ்க்கையில் சாப்பாட்டிற்குக் கூடச் சிரமப்படும் இராவணன், இந்தியா சென்று அங்கு அனைத்தையும் கற்றுப் பின்னர் இலங்கை அரசன் குபேரனை சூழ்ச்சி செய்து வீழ்த்தியதால் 20 க்கு குறைவான வயதில் இலங்கை அரசனாகிறான்.
இவ்வாறு சூழ்ச்சி செய்து அரசனானதை அவன் விரும்பவில்லை என்றாலும், அவன் விரும்பாமலே பத்ரன் மூலம் கிடைக்கிறது.
அனுபவம் இல்லா இளைஞனான இராவணன் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும், போர்களும், அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஏற்படும் மனத்தாங்கல், அவன் அவசரப்பட்டுச் செய்யும் தவறுகள் என்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இராவணன் பெரும்பாலும் சரியான முடிவுகளையே எடுக்கிறான் ஆனால், மந்திரி பிரஹஸ்தன் அதே யோசனையைக் கூறும் போது..
இவன் கூறியதை நாமும் கூறுவதா?! என்று அகங்காரத்தால் மாற்றிக் கூறி அதனால், பல சிக்கல்களை இராவணன் எதிர்கொள்ள வேண்டி வருகிறது.
முற்போக்குக் கலாச்சாரம்
அசுரர்கள் பொதுவாகவே மேம்பட்ட, முற்போக்குக் கலாச்சாரத்தைக் கொண்டு இருந்தவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
சிவனை வழிபடும் இவர்கள் தேவர்களையும் அவர்களுக்குத் துணை இருக்கும் பிராமணர்களையும் மிகவும் வெறுக்கிறார்கள்.
பத்ரன்
“பத்ரன்” என்ற அசுரன் இந்தியாவில் ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, தேவர்கள் படையெடுப்பில் இவனது குடும்பம் சூறையாடப் படுகிறது.
இவனது குழந்தை மிக மோசமாகக் கொல்லப்பட்டு, மனைவி தேவர்களால் வன்புணர்வு செய்யப்படுகிறாள்.
இதற்குப் பழிவாங்கும் வெறி அவனுள் கொழுந்து விட்டு எரிந்து அதை நிறைவேற்ற இராவணனுடன் இணைய முயற்சிக்கிறான்.
ஆனால், இராவணன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது அவனது தவறான கணிப்பால் பத்ரனை முழுமையாக நம்பக் கடைசி வரை மறுக்கிறான்.
இலங்கையில் ஆட்சி ஓரளவிற்கு நிலையான பிறகு இந்தியா மீது படையெடுத்து, அங்குள்ள பகுதிகளை இராவணன் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகிறான்.
நகரத்தில் அனைத்தையும் நாசம் செய்கிறார்கள், கொள்ளை அடிக்கிறார்கள்.
சமத்துவம்
அசுரர்கள் இடையே சமத்துவம் நிலவுகிறது. அனைவரும் சமம்.
அங்கும் ஏழைகள் பணக்காரர்கள் என்ற பிரிவும் பாகுபாடும் இருக்கிறது ஆனால், சாதிப்பாகுபாடு பழமையான எண்ணங்கள் கிடையாது.
இந்த நிலையில் அயோத்தியை அடையும் இராவணன் அங்கே பிராமணர்கள் இடையே நிலவும் சூழ்நிலையைப் பார்த்து எரிச்சலும் ஆச்சர்யமும் அடைகிறான்.
‘ஏன் மக்கள் அசுத்தமாக இருக்கிறார்கள்? நகரங்கள் ஏன் பாழடைந்து கிடக்கிறது? பெண்கள் ஏன் முக்காடு போட்டுச் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்? ஏன் சிலர் ஓரமாக நடந்து போகிறார்கள்?‘ என்று வியப்படைகிறான்.
அசுர குலத்தில் பெண்கள் சம உரிமை பெற்றவர்கள். அங்கே கணவன் இறந்தால் மறுமணம் செய்வது, மற்றவர்களுடன் கலந்து பேசுவது இயல்பானது.
இராவணன் மனைவி மண்டோதரியே இராவணனை பெயர் கூறித் தான் அழைப்பாள்.
நம்ம பெண்கள் இலங்கையில் எவ்வளவு முற்போக்காக இருக்கிறார்கள், அயோத்தி நிலையை நம் நாட்டில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே!! என்று வியப்பான்.
சீதை இராவணனின் மகள்
பெரிய திருப்பமாகச் சீதை இராவணனின் மகள் என்பதாக வருகிறது. இந்துக்கள் மதிக்கும் ராமனை ஆசிரியர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீதையின் சுயம்வரத்தில், இராவணன் ராமனைப் பார்த்து “ஐயோ! இவன் நம் மகளுக்கு (சீதைக்கு) கணவனா!!” என்று புலம்புவான்.
அதோடு “ஒரு பெண்ணை காட்சிப் பொருளாக்கி ஏலம் இடுகிறார்களே! என்ன ஒரு மோசமான செயல்!” என்று கோபப்படுவான்.
பின்னர் ராமன், பின்னாடி இருந்து வாலியைக் கொன்றதையும், போர் நெறிமுறைகளை ராமன் பின்பற்றாமல் நடந்து கொண்டதையும் வைத்து ராமன் மீது இராவணனுக்கு மிகுந்த வெறுப்பு ஏற்படும்.
‘போர் விதிமுறைகளைப் பின்பற்றாத இவன் எல்லாம் ஒரு ஆளு?!‘ என்கிற அளவில் தான் இராவணன் நினைத்துக் கொண்டு இருப்பான்.
ராம பக்தர்கள் படித்தால், ஏற்றுக்கொள்ள முடியாது.
அனுமன்
இலங்கையில் அனுமன் வாலில் தீ வைத்ததையும் அதன் மூலம் இலங்கையை அனுமன் அழித்ததையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்து சிரித்து இருப்போம்.
ஆனால், அனுமன் தீ வைத்த பிறகு அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், அதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்றவற்றைப் படிக்கும் போது அனுமன் மீது நமக்கே வெறுப்பு வந்து விடும்.
இராவணன் தேவர்களுடன் / ராமனுடன் போர் விதிமுறைகளுடன் நேர்மையாகப் போர் புரிவதாலே பல இன்னல்களை எதிர்கொள்ள நேர்கிறது.
இந்தியாவில் இராவணன் போர் செய்து கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் அனைத்தையும் இழந்து இலங்கை வருகிறான்.
அந்தச் சமயத்தில் பிராமணர்களும் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையில் நுழைகிறார்கள். அவர்களுக்கு விபீஷணன் ஆதரவாக இருக்கிறான்.
பல வருடங்களுக்குப் பிறகு அனுபவங்களைப் பெற்ற இராவணன், அனைத்து மக்களையும் சரி சமமாக நடத்த முயற்சிக்கிறான்.
சிறுபான்மையினரான பிராமணர்களுக்கு வசதிகள், கோவில்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
தீண்டாமை & சாதிப் பாகுபாடு
நிலையாகும் பிராமணர்கள் தீண்டாமை, சாதிப் பாகுபாட்டை அசுரர்களிடம் காட்டும் போது இது பற்றிக் கேள்விப் பட்டிராத அசுரர்களுக்கு எரிச்சலைத் தருகிறது.
அசுரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் கலவரமாக வெடிக்கிறது.
பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறுவதை, அசுரர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
சமத்துவம் நிலவிய இடத்தில் திடீர் என்று பிராமணர்கள் சாதி, தீண்டாமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று கிளம்பியதை அசுரர்கள் விரும்பவில்லை.
ஆனாலும், ஒரு சில அசுரர்கள் பிராமணர்களாக இருந்தால் கிடைக்கும் மரியாதைக்காக அவர்களும் பிராமணர்களாக மாறிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு மாறுபவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க முயற்சி செய்து தன் இன மக்கள் தொட்டாலே தீட்டாகக் கருதுகிறார்கள்.
இதை விளையாட்டாக நினைத்து அசுரர்கள் அவர்களைத் தொடுவதும் அவர்கள் குளிப்பதும் என்று ஒரு நாளைக்கு 10 முறை கூடக் குளிக்க வைத்து விடுகிறார்கள்.
இவர்கள் இதை விளையாட்டாகச் செய்து கொண்டு இருக்கும் நேரங்களில் பிராமணர்கள் ஆழமாக வேரூன்றி விடுகிறார்கள்.
சென்னை அனுபவம்
சென்னையில் படித்துப் பின் வேலையில் இருந்த போது நண்பர்களுடன் 10 வருடங்கள் ஒரே அறையில் இருந்தேன்.
நாங்கள் இருந்த பகுதி பிராமணர்கள் நிறைந்த மைலாப்பூர் பகுதி. எங்கள் பக்கத்து வீடே பிராமணர் தான். வயது முதிர்ந்தவர் 65+ இருக்கும்.
துணி காய வைக்கும் போது அவர் வீட்டு அருகே துணி நகர்ந்து விட்டால், கண்டபடி சத்தம் போடுவார். இதனாலே அவரை வெறுப்பேத்த என்றே ஏதாவது செய்வோம்.
எங்களைத் தொட வேண்டாம் என்பார் ஆனால், அவர் வீட்டை சுத்தமின்றிக் வைத்து இருப்பார். அதோடு அவர் செய்த சில காரியங்கள் இருக்கிறது… அது வேண்டாம்.
அசுரர்கள் செய்ததைப் படித்த பொழுது இந்தச் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.
வர்ணாசிரமம்
ராமன் இராவணனை வென்று இலங்கை அசுரர்களை வர்ணாசிரமப்படி பிரிக்கிறான்.
அதாவது விஷ்ணு தலையில் இருந்து முகம், கைகள், தொடைகள் மற்றும் கால்களிலிருந்து முறையே தோன்றியவர்கள் வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் என்று பிரிக்கிறார்கள்.
சமத்துவமாக வாழ்ந்த இவர்களுக்குத் திடீர் என்று அவர்களிடையே சாதியை உருவாக்கி மேலானவர், கீழானவர், தீண்டத் தகாதவர் என்று பிரிக்கும் போது அது அவர்களை மிகவும் காயப்படுத்துகிறது.
இக்காட்சியை வர்ணிக்கும் போது அற்புதமாக இருக்கிறது.
பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் இதைப் படித்தால், தங்களை அதில் நிறுத்திப் பார்க்காமல் இருக்கவே முடியாது.
விபீஷணன்
விபீஷணன் முன்பு இருந்தே பிராமண முறைகள் விதிகள் மீது பற்றுடன் இருப்பான்.
எனவே, ராமன் உடன் இருக்கும் பிராமணர்கள் செய்யும் அலப்பரையை விட இவன் அட்டகாசம் செய்து கொண்டு இருப்பான்.
மதம் மாறியும் பிரச்சனை
மதம் மாறுதல் அதிகமாக முஸ்லிம் கிறித்துவ மதங்களில் தான் நடக்கும்.
இந்து மதத்தில் இருந்து தீண்டாமை காரணமாக, வேறு மதம் மாறினாலும் அங்கும் இதே பிரச்சனை தான்.
அவர்களிலும் சேர்த்துக் கொள்ளாமல் தனிப் பிரிவாக வைத்து விடுவார்கள்.
இது பற்றி புத்தகமே வந்து இருக்கிறது.
உண்மையான முஸ்லிம் கிறித்துவர்கள் கூட அமைதியாக இருப்பார்கள் ஆனால், மதம் மாறி இருக்கிறவங்க பண்ணுற அட்டகாசம் இருக்கே..!
இவங்க தான் மதத்தையே உருவாக்கியவர்கள் போல நடந்து கொள்வார்கள்.
குறிப்பாகக் கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களில் இதை அதிகம் காணலாம். எனக்கு விபீஷணன் செய்வதைப் பார்க்கும் போது, இது தான் நினைவிற்கு வந்தது.
இதிலேயே இருப்பவர்கள் அமைதியாக இருக்க, இவன் தீவிரமாக இருப்பான்.
திராவிடர் கழகம்
சென்னை வந்ததில் இருந்து மைலாப்பூர் பகுதியில் தான் இருந்தேன்.
அப்போது திக காரங்க குளத்தின் அருகே பிராமணர்களை அநாகரிகமாக ஒலிப்பெருக்கியில் விமர்சித்துக் கொண்டு இருப்பார்கள், எரிச்சலாக இருக்கும்.
சங்கீதா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த ஒரு பிராமணக் குடும்பம், இதைக் கேட்டு கொந்தளித்தது இன்றும் நினைவு இருக்கிறது.
இணையத்திலும் திக / கம்யூனிச கோஷ்டி எப்பப் பார்த்தாலும் பிராமணர்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள்.
கிட்டத்தட்ட 20 வருடமாகக் கேட்டு வருகிறேன் ஆனால், என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அட! இவங்க இப்படித்தான் கத்திட்டே இருப்பாங்க என்ற எண்ணம் தான் இங்குப் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
பிராமணர்கள் மீது தவறுகள் இருக்கிறது, தீண்டாமை என்பது கொடுமையான குற்றம் எல்லாம் சரி ஆனால், அதைக் கண்டிக்க / உணர வைக்க இவர்கள் வெளிப்படுத்தும் முறை சரியானதல்ல.
இவர்கள் முரட்டுத்தனமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டி, அநாகரிகமாக நடந்து கொள்வதால், இவர்கள் கூறும் விசயம் பற்றித் தெரிந்து இராதவர்கள் இவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை.
இந்தக் கருத்துகளில் ஏற்புடையவர்கள் மட்டுமே இது குறித்து விவாதிப்பார்கள். தெரிந்தவரே அதைப் பேசுவதில் என்ன பயன்?
தெரியாதவர்களுக்கு, என்ன பிரச்சனை? என்ன நடந்தது? வர்ணாசிரமம் என்றால் என்ன? ஏன் தீண்டாமை உள்ளது? எப்படி வந்தது?
என்பதை யோசிக்க வைக்கும் எளிமையான முறையைப் பின்பற்றாமல் பிராமணர்களைத் திட்டிக்கொண்டு இருந்தால், என்ன நடக்கும்?
தீண்டாமையைப் பிராமணர்கள் மட்டுமே செய்வதில்லை, ஆதிக்க சக்தியினர் அனைவரும் செய்து கொண்டு உள்ளார்கள்.
இவர்கள் பல வருடங்களாகக் கதறியும் கேட்காத என் காது / மனது இந்த ஒரே ஒரு புத்தகம் படித்து என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திணிப்பு
இப்புத்தகம் ஒன்றை தெளிவாக விளக்கியது. எதையும் கூற வேண்டிய விதத்தில் கூறினால், கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பது.
ஆனால், உன் விருப்பை / வெறுப்பை என் மீது திணித்தால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்.
திக செய்வது திணிப்பு, இப்புத்தகம் கொடுப்பது எளிமையான விளக்கம். இப்பச் சொல்லுங்க திக கதறிக் கொண்டு இருப்பதால் என்ன பயன்?
ஓவியான்னு ஒரு திக காரர் ஓயாம பிராமணர்களை / இந்து மதத்தைத் திட்டிட்டே இருப்பாரு. யாராவது அதைக் கண்டுக்கறாங்களா?! ஏன்?
காரணம், அவரின் எண்ணங்களை மற்றவர் மீது திணிக்கிறார் எனவே, எவரும் அதைக் கண்டு கொள்வதில்லை.
இதனால் என்ன பயன்? உண்மையில் அவரின் உழைப்பு அபரிமிதமானது ஆனால், அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிறது.
பகுத்தறிவாளர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடுபவர்கள் இது போன்ற தீவிரப் பிரச்சாரங்களால் இவர்கள் நினைப்பது போல மாற்றங்களைக் கொண்டு வந்து விட முடியாது.
ஏனென்றால், இவர்கள் செய்து கொண்டு இருப்பது திணிப்பு, வெறுப்பு. முறையான வழிமுறைகள், விளக்கங்கள் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தப் புத்தகம் அதற்கு சிறப்பான உதாரணம்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்கு மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இந்து மதத்தில் இருந்து வேறு மதங்களுக்கு மாறினால் சிலர் கோபப்படுகிறார்கள்.
மாறிய பிறகு அவர்கள் எதிர்பார்த்த சமூக மரியாதை கிடைக்கிறதா? என்பது வேறு விசயம்.
நல்ல நிலையில் உள்ளவர்கள் சமூகத்தில் மரியாதையுடன் இருப்பவர்கள், மதம் மாறுபவர்கள் குறித்து எப்படி வேண்டும் என்றாலும் விமர்சிக்கலாம் ஆனால், அவமானப்பட்டவர்கள் மட்டுமே இது குறித்துக் கருத்து தெரிவிக்க உரிமையுண்டு.
எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சமூக அவமானத்தை, தீண்டாமையைத் தான் எதிர்கொண்டால் இது போலக் கூறுவார்களா! என்பதை மனசாட்சியுடன் யோசித்துப் பார்க்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்கள் மதங்களுக்கு இழுப்பது மோசமான செயல்.
இது போலச் செய்வதில் கிறித்துவர்களே முன்னணியில் இருக்கிறார்கள்.
திணிப்பு இல்லாத வர்ணிப்பு
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தீண்டாமை, சாதி, தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவற்றிக்காக எந்த இடத்திலும் வக்காலத்து வாங்கவில்லை.
ஆனால், அவர்களுக்கு ஏற்படும் வலியையும், வர்ணாசிரமத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அழகாகச் சம்பவங்களாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இராவணன் பற்றிய புத்தகம் என்றாலும் அவனை மிகவும் உயர்த்தியும் கூறவில்லை, அவன் மீதும் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
கீழ்த்தரமாக நடந்து கொண்டதை விவரிக்கிறார் எனவே, அவர் கூறும் மற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்கத் தோன்றுகிறது.
வர்ணாசிரமத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்த இடத்திலும் நியாயம் பேசாமல் அவர்கள் நிலையிலேயே கூறிக்கொண்டு போகிறார்.
எனவே, பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் அந்த நிலையில் அவர் கூறாமலே தன்னை நிறுத்திப் பார்க்க முடிகிறது. நாம் எந்த நிலை என்று யோசிக்க வைக்கிறது.
ஆனால், இது எதுவுமே திணிப்பு இல்லை.

வர்ணாசிரம விளக்கம்
இறுதிப் போரில் இராவணன் வீழ்த்தப்பட்டு விடுவான் என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து விடுவார்கள்.
இராவணன் அரசு மாறினால் இவர்கள் எதற்குப் பயப்படுவார்கள் தெரியுமா?
ராமன் / பிராமணர்கள் புகுத்தும் சாதி முறைகளுக்கும் வர்ணாசிரமத்திற்கும் தான்.
இலங்கையை வெற்றிக் கொண்ட ராமன் அங்கே கூடியிருக்கும் மக்களிடையே வர்ணாசிரமத்தை விவரிக்கும் போது அசுரர்கள் திகிலடைந்து, பிராமணர்களை எதிர் கொள்வது எப்படி என்று பயந்து இருப்பார்கள். Image Credit – asura.co.in
மலையாளம் எப்படி?
இந்நாவல் எழுதியவரும் பிராமணர் (ஐயர் – சைவம் – சிவன்) தான். கேரளாவைச் சார்ந்தவர்.
இந்நாவலில் அசுரர்கள் செண்டை மேளம் அடிப்பதாகவும், களறிச் சண்டை பயில்வதையும் குறிப்பிட்டு வருகிறது.
அதோடு ஒரு இடத்தில் ஓணம் பண்டிகையைக் குறிப்பிட்டு வருகிறது.
மலையாளம் தமிழில் இருந்து பிரிந்து சென்றது என்பது பலருக்கும் தெரிந்தது. அப்படியென்றால், அப்போதே கேரள கலாச்சாரங்கள் எப்படி அசுரர்களிடையே வந்தது?
செண்டை மேளம், களரி, ஓணம் போன்றவை தமிழுடன் முன்பே இணைந்து இருந்ததா? அல்லது இவர் கேரளா என்பதால் அவர் மாநிலத்திற்கும் சேர்த்து எழுதிவிட்டாரா?
இது புனைவு தான் ஆனால், ராமாயணம் உண்மையில் நடந்து இருக்கிறது / இல்லை என்ற முடிவில்லா சர்ச்சை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ராமன் வர்ணாசிரமத்தை வைத்து கர்ம வினை பற்றியும் கூறுவார்.
நான் 2014 ல் கர்ம வினை பற்றி எழுதி இருந்தேன். அதில் பின்னூட்டம் போட்டு இருந்த சுந்தர்ராசன் என்பவர் வர்ணாசிரம் குறித்துப் படியுங்கள் என்று கூறி இருந்தார்.
அது குறித்து அரைகுறையாகத் தெரிந்து இருந்தாலும், அதில் மேலும் படிக்க ஆர்வமில்லை ஆனால், அதை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன்.
இதைப் படிக்கும் போது சரியாக எனக்கு அவர் கூறியது நினைவிற்கு வந்தது.
நான் கூறிய கர்ம வினை விளக்கம் வர்ணாசிரமத்தைப் வைத்து இல்லை, ஒரு வினைக்குண்டான எதிர்வினை உண்டு என்பதை விளக்குவது.
அதே போல விதியின் மீது பழியைப் போட்டுக்கொண்டு தப்பித்துக் கொள்ளக் கூடாது என்பதையும் குறிப்பிட்டு இருந்தேன்.
இருப்பினும் அவர் கூறியது போல இது குறித்த புத்தகங்கள் படிப்பது மேலும் பல கேள்விகளுக்கு விடை கொடுக்கும்.
கர்மவினை என் வாழ்வில் ஒவ்வொரு சம்பவத்திலும் செயலிலும் என்னால் இன்று வரை உணர முடிகிறது.
மாற்றம் காணும் இந்து மதம்
“இந்து” மதம் ரொம்பப் பிடிக்கும். யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
தவறுகள் இருந்தால், மாற்றிக் / ஏற்றுக் கொள்வதில் கூச்சமோ பிடிவாதமோ இருந்ததில்லை.
ஏனென்றால், இந்து மதத்தை ரசிக்கிறேன் ஆனால், அனைத்திற்கும் கொடி பிடித்தல்ல.
குறைகள் இல்லாத மதம் ஏது? இந்து மதம் ஒரு Flexi மதம் என்று முன்பே கூறி இருந்தேன். எத்தனையோ பழமையான வாழ்க்கை முறைகளில் இருந்து தன்னைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்துள்ளது, மாற்றிக்கொண்டே இருக்கும்.
யாருமே தடுக்க முடியாது.
கணவன் இறந்தால், மொட்டை அடித்து முக்காடு போட்டு இருந்த பெண்கள் இன்று சகஜமாக இருக்கிறார்கள். வெள்ளைப் புடவை ஒழிந்திருக்கிறது.
கூனிக் குறுகி நின்ற தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற நிலை மாறி இருக்கிறது.
உடன்கட்டை ஏறுதல் என்ற ஒரு சம்பவம் நடந்ததா!? என்று வியப்பாகக் கேட்கும் அளவிற்குப் பெண்கள் நிலை மாறியுள்ளது.
கணவனின் பெயரை மற்றவர்களிடம் கூறவே பயப்பட்டவர்கள், இன்று உரிமையோடு அழைக்கும் அளவிற்குச் சுதந்திரம் அடைந்து இருக்கிறார்கள்.
திறமை இருந்தால் எவரும் உயர முடியும் என்ற நிலை வந்து இருக்கிறது.
சாதி மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது, இது மாறும் என்று நம்பிக்கையில்லை.
தீண்டாமை என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ளதா?
தீண்டாமை என்பது இந்து மதத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றல்ல.
வளர்ந்த நாடுகளிலும் / மற்ற மதங்களில் வேறு பெயர்களில் பழக்க வழக்கங்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
ஆனால், இந்து மதத்தில் இப்படி ஒரு அமைப்பாக இருப்பது தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எந்தக் காரணத்திற்காக ஏற்படுத்தியிருந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
Django – Unchained என்ற படத்தில் வெள்ளையர்கள் இனவெறி (1858) கொண்டு இருந்ததையும், கருப்பர்களை அடிமையாக, மிருகங்களை விட மோசமாக நடத்தியது பற்றியும் வரும்.
மேம்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்களாக நாம் நினைக்கும் வெள்ளையர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார்கள் என்பதையும் இது விளக்கும்.
இவர்களிடமும் தீண்டாமை, தாழ்த்தப்பட்டவர்கள் என்ற எண்ணம் இருந்தது ஆனால், இவர்களிடம் வர்ணாசிரமம் போன்ற அடிப்படைப் பிரிவுகள் இல்லை.
எனவே, காலப்போக்கில் தீண்டாமை அவர்களிடம் இருந்து மறைந்து விட்டன. அவ்வபோது இன்னமும் நடக்கிறது என்றாலும், ஒப்பீட்டளவில் குறைவு.
இதுவே வித்யாசம்.
Read: தீண்டாமை எப்போது ஒழியும்?
நெருக்கடி
சீதையின் கற்பை நிரூபிக்கப் பண்டிதர்கள் சீதையைத் தீக்குளிக்கக் கூறுவார்கள், சீதைக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
ராமன் எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பான். இதே போலத் தீக்குளிப்பு பிறகு ஒரு சமயத்தில் திரும்ப வரும்.
முன்பு ராமனுக்காக இராவணனிடம் வாதாடிய சீதை தற்போது ராமனின் செய்கையைப் பார்த்து மிகவும் நொந்து போய் விடுவாள்.
ராமன் கதாப்பாத்திரம் சூழ்நிலை கைதியாகவும் பெரும்பாலும் மற்றவர்களுக்காகவே வாழ்வதாகவும், தான் நேர்மையானவன் நல்லவன் என்பதை நிரூபித்தே அவன் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போவதாகக் காட்டப்பட்டுள்ளது.
அதாவது நான் அடிக்கடி கூறும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயற்சி செய்து தன் மனைவிக்குக் கூட நேர்மையாக இல்லாதவனாக ஆகி விடுகிறான்.
இயல்பான வர்ணனை
ஆசிரியர் எந்த இடத்திலும் மந்திர தந்திரங்களை புகுத்தாமல் மனிதர்களிடையே இயல்பாக நடப்பவற்றை நம்பும்படி எடுத்துக்காட்டியுள்ளது பாராட்டத்தக்கது.
சீதை தீக்குளிப்பு காட்சிகளில் என்ன செய்வார்? என்று ஆர்வமாக இருந்தேன்.
அதையும் நம்பும் விதத்தில் கொண்டு சென்று இருக்கிறார். முதலாவது தீக்குளிப்பை ஊகித்து விடலாம் ஆனால், இரண்டாவதை ஊகிக்க முடியாது.
போர் முடிந்து வர்ணாசிரம விளக்கம் மற்றும் விபீஷணன் தான் இனி இலங்கையின் அரசன் என்ற அறிவிப்பு முடிந்த பிறகு, இராவணன் கொல்லப்பட்ட நாளை அனைத்து மக்களும் இனி (தீபாவளியாகக்) கொண்டாடுவார்கள் என்று அறிவிக்கப்படும்.
இதைப் படித்து அக்கூட்டத்தில் உள்ள அசுரர்களில் ஒருவனாக எனக்கு வெறுப்புத் தான் ஏற்பட்டது.
இதுவே இப்புத்தகத்திற்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்
அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் நாவல் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் “நாகலட்சுமி சண்முகம்” என்பவரால் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் 20% க்கு மேல் 50% க்குள் இராவணன் நம்மிடம் கூறுவதாக வரும் காட்சிகளில் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
இது மொழி மாற்றம் செய்வதால் ஏற்படும் வார்த்தை நெருக்கடியாக இருக்கலாம் ஆனால், பாதிக்கு மேல் இது போலத் தோன்றாமல் சீராகச் செல்கிறது.
இதற்கு இராவணன் தன்னைப் பற்றி விவரிப்பதாக வரும் காட்சிகள் குறைந்து மற்ற சம்பவங்கள் அதிகரித்தது காரணமாக இருக்க வேண்டும்.
அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் நாவல் பெரியது என்பது பிரச்சனையல்ல ஆனால், பெரிய பத்தியாக இருப்பது படிக்கச் சிரமமாக உள்ளது.
ஒரே புத்தகத்தில் அடக்க இது போலச் செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆசிரியர் ஆனந்த் நீலகண்டன்
ஆசிரியர் ஆனந்த் நீலகண்டனுக்கு அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் முதல் புத்தகம் என்பது வியப்பளிக்கிறது.
முதல் புத்தகத்திலேயே மிரட்டி இருக்கிறார். இவருடைய அடுத்தப் புத்தகம் “துரியோதனன்” படிக்க நினைத்துள்ளேன்.
என் மனதில் நினைத்ததைப் பகிர நினைத்தேன், அதோடு நம் எண்ணங்களில் தவறு இருந்தால், திருத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை.
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வலியுறுத்துகிறேன்.
நிச்சயம் கொஞ்சமாவது உங்களை யோசிக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
ராமனை விமர்சிப்பதாக இருந்தாலும், இன்னொரு சாராரின் வலியைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக கருதினால் இப்புத்தகம் படிப்பது சிறப்பு இல்லையென்றால், வெறுப்பே மேலிடும்.
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது அவரவர் நடந்து கொள்ளும் செயல்களில் தான் இருக்கிறதே தவிர, அவர் பிறப்பில் கிடையாது. இதை நான் உறுதியாக நம்புகிறேன்.
அமேசானில் வாங்க –> அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் Link
கொசுறு
இன்று [17 பிப் 2015] அசுரர்களின் விருப்பக் கடவுளான சிவனின் விசேச நாளான “மகா சிவராத்திரி”. சம்போ மகாதேவா!
”’உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது அவரவர் நடந்து கொள்ளும் செயல்களில் தான் இருக்கிறதே தவிர, அவர் பிறப்பில் கிடையாது. இதை நான் உறுதியாக நம்புகிறேன்”’
நானும் சிலகாலம்வரை இதே எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தேன்.
தான் தாழ்த்தப்பட்டவர் என்று கூறிக்கொள்ளும் சிலர் தொலைக்காட்சிகளில் தேவையே இல்லாமல் சாதியையும் சங்கரமடத்தையும் மனுநீதியையும் நுழைப்பது எனது எண்ணங்கள் தவறானது என்கிற வேதனையை ஏற்படுத்துகிறது.
அப்படிப்பட்ட மதிமாறன் என்கிற படித்த இணைய எழுத்தாளர் ஒரு தடவை எழுதியது : ”பார்ப்பனராகிய ஒரு பல்கலைக்கழக இணைவேந்தரை சில தி.க மாணவர்கள் பின்புறமாக இறங்கிவந்து சனாதிபதி முன்னால் செருப்பால் அடித்தனர்”. இவர்களில் ஒருவராவது முதல் மாணவராக வந்திருப்பார் என்று கருதமுடியுமா. இதை எழுதிப் பெருமைப்பட்ட இந்த நபரின் படிப்புக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது.
கோபாலன்
எளிமையா சொல்லனும்னா அட்டகாசம்.
பொதுவா இந்து மத மூட நம்பிக்கைகளும் ஏற்றத் தாழ்வுகளுமே வெறுப்படைய வைக்கிறது. விரைவில் படிக்கின்றேன்.
சற்றே பெரிய விமர்சனம். ஆனந்த் நீலகண்டன் ஒரு நம்பூத்ரி பிராமணர் என்பது தெரியுமோ?
இதையும் படித்துப்பாருங்கள்.
Arjuna by
Anuja Chandramouli
—
Jayakumar
இந்த புத்தகத்தை பற்றி இதுவரை கேள்விப்பட்டது இல்லை கிரி.. புத்தகத்தை எப்போது படிப்பேன் என்று தெரியவில்லை.. நேரம் இல்லை, வேலை பளு என்று பொய் சொல்ல விரும்பல… என்னை பொறுத்தவரை எந்த புத்தகத்தை படித்தாலும் அந்த உலகத்தில் நுழைய வேண்டும்.. தற்போது மனதளவில் அந்த சூழ்நிலையில் இல்லை…
புத்தகங்கள் வாசிப்பது போல் ஒரு அலாதி இன்பம் வேறு எதிலும் இருக்குமா என்று தெரியவில்லை.. சிறு வயதில் பள்ளி பருவத்தில் “ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதியின் வரிகளை படிக்கும் போதே, ஜாதிகள் என்பது போலிகள் என்று உணர்ந்து விட்டேன்…
நேரம் இருப்பின் அ.முத்துலிங்கம் அவர்களின் புத்தகங்களை வாசிக்க முயற்சி செய்யவும்..அவரின் உரைநடை அழகு நன்றாக இருக்கும், கண்டிப்பாக விரும்புவீர்கள் கிரி..
கலா கார்த்திக்
புத்தகத்தையே படித்து விட்டது போல் ஒரு உணர்வு ஏற்பட்டு விட்டது.அருமையான அலசல்.ஒன்றே ஒன்று.பெண்கள், மற்றவர் எல்லாம் மாறி நல்ல நிலையில் வந்த பின்பும் பிராமணர் மற்றும் இன்னும் மாறவில்லை.அவர்கள் இன்னும் ஒருபடி மேலேதான் pokiraarkalகொள்கிறார்கள்.சென்னையில் வீடு தேடுவோருக்கு நான் சொல்வது புரியும்.
கார்த்திக் அம்மா
தல,
ரொம்ப வித்யாசமான book தான் இது..
உங்க விமர்சனமே book படிக்குற ஆர்வத்த தூண்டுது..இங்கிலீஷ் version
kindle ல எடுத்துட்டேன்… கொஞ்சமா படிக்க ஆரம்பிக்குறேன்
பிராமண தீண்டாமை எண்ணங்கள், தி.க வோட ஓவர் dosage, மேலைநாட்டு நிற வேற்றுமை இப்படி எல்லா விசயத்தையும் தொட்டு இருக்கீங்க.
“உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது அவரவர் நடந்து கொள்ளும் செயல்களில் தான் இருக்கிறதே தவிர, அவர் பிறப்பில் கிடையாது.” – இது ultimate..
மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்
– அருண் கோவிந்தன்
please send online book store link
செமையான பதிவு அண்ணா இது. ஆரம்பநிலை முடிவுநிலை தெளிவாக இருந்தது. இடைநிலையில் திடிரென தீண்டாமை மதமாற்றம் பற்றி வர ஜம்ப் ஆயிடலாமன்னு தோணும்போது தான் இந்த புத்தகத்திற்கும் இவற்றிற்கும் இருக்கும் தொடர்பு காண நேர்ந்தது.
நான் மகாபாரதத்தையே இப்பதான் ஏதோ கொஞ்சம் தெளிவு ஆகியிருக்கேன். அதுக்குள்ளே ராமாயணமா ம்ம்ம் அதையும் ஒரு கை பார்த்துடுவோம் …..
இப்பதிவு ராவணனை முதல் இரண்டு பாராவிலேயே ஒரு ஹீரோவாக முன்னிறுத்தி விட்டது எனக்குள். எனக்கு பல மாதங்களாகவே பல புராணங்களின் மீது நம்மிடம் முழுமையான தகவல்களை நமக்கு கொடுத்து இருக்கின்றனவா என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது. அசுரன் பற்றிய இப்பதிவு என்னை இன்னும் அறிய தூண்டுகிறது.
இந்த புத்தகமும், இவர் எழுதிய துரியோதனன் புத்தகம் எந்த வலைத்தளத்தில் கிடைக்கும் என்று கொஞ்சம் சொலுங்கள் அண்ணா . எனக்கு இன்னும் வலது கை சரியாகவில்லை என்பதால் வெளியே செல்ல இயலாது chennaishopping.com ல் தான் இதுவரை புத்தகங்களை வாங்கிக் கொண்டு இருக்கேன்.
எனக்கு என் நண்பர் ஒருவர் சர்ச் சென்று வா மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் னு சொல்ல நான் முதன் முதலில் ஒரு சர்ச்சுக்கு சென்றேன். பின்தான் தெரிந்தது அது கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியவர்கள் மட்டும் வழிபடும் சர்ச் என்று. விட்டா போதும்ண்டா சாமின்னு ஓடி வந்தேன் மறந்தும் இப்பலாம் சர்ச் பற்றிய நினைவு வருவதில்லை.
இதே போன்ற அனுபம் இஸ்லாமியரிடமும் கிடைத்து. அப்போது அம்மாவை சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்து இருந்தோம். வாரத்தில் ஒரு நாள் பிற்பகல் வேளையில் கொஞ்சம் இஸ்லாமியர்கள் 3 ருபாய் பிஸ்கட் பாக்கட்டை பெட்டுக்கு ஒன்றாய் ஒவ்வொரு வார்டிலும் உடன் நபிகள் பற்றிய சிறு குறிப்பு அடங்கிய துண்டு பிரசுரம் ஒன்றையும் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.
நான் அங்கு எல்லாரையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கி கொண்டு இருந்தவரிடம் சென்று “குர் ஆன்” தமிழில் படிக்க கிடைக்குமா என்றேன். மகா புன்னகையுடன் அவர் (பலசரக்கு வாங்கி வரும் பையில் அடுக்கி வைத்து இருந்தை பார்த்துவிட்டுத்தான் கேட்டேன்) கொடுத்தார்.
அப்புறம் கொடுத்தார் பாருங்க ஒரு லெக்சரு ..ஞாயிறு மாலை பாரிஸ் கார்னரில் இருக்கும் மசுதிக்கு வரவேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கிட்டு த்தான் விட்டாரு கூடவே செல் நம்பரையும் …. அதற்கு அடுத்த வாரம்லாம் அவிங்க வாரும்போது நான் எஸ்கேப் ஆயிடுவேன். இந்த அனுபவ நினைவுகளெல்லாம் பதிவின் இடைநிலை பாராக்களை படிக்கும் போது வந்து செம காமடியை உண்டு பண்ணின.
என்னதான் ராவணன் கொஞ்சம் முற்போக்குவாதிய நல்லவனா இருந்தாலும் அவன் அரக்கன் அரக்கனே.. இவரின் updated ரெட் சிப் பொருத்திய அரக்கர்களாக தான் இன்றைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
அண்ணா அந்த இணையதளத்தை மறந்துடாதிங்க. நானும் இத படிக்கணும் னு ரொம்ப ஆர்வமா இருக்கேன் முக்கியமா துரியோதனன். pls வெப்சைட் சொல்லுங்க அண்ணா
என்றென்றும் நன்றியுடன்
—–நான் கார்த்திகேயன்
உடன் பிறந்தோரே நம்பவைத்து கழுத்தை அருத்ததால் நான் கூட துரியோதனன் பக்கம் தான். மற்றபடி ராவணனும் அந்த வகையில் சேர்த்துகொள்ளலாம் என்பதை பதிவை படித்து தெரிந்து கொண்டேன். சீதை ராவணனின் மகளாக ஒரு படம் கூட வந்தது.
என்னதான் நடுநிலையாலராய் இருந்தாலும் பார்ப்பனியம் என்ற வார்த்தையை ஓவராக ஒப்பாரி வைக்கும் (ஒவ்வொரு செய்திகளிலும் பார்ப்பனிய அல்லது இந்து நபரை தேடும்) பத்திரிக்கைகளை கண்டாலே எரிச்சல் வருகிறது.. நீங்க சொன்ன மாதிரி ஓவர்டோஸ் தான் காரணம். இதற்கு வினவும் ஒரு உதாரணம். இந்தக்காலத்துல யார் பிராமணீயத்தை தூக்கி பிடித்து வைத்திருக்கிறார் ? சிறு பான்மையினர் எவரும் முன்னுக்கு வரவில்லையா அல்லது சட்டங்கள் தான் தடுத்து வைத்திருக்கிறதா ..
ஒரு குறிப்பிட்ட வரிகளை சொல்லிவிட்டாலே மதத்தில் சேர்ந்துவிடலாமின்னு என்னை சொல்ல சொன்னார் ஒரு நபர்.. சொன்னேன்.. மாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை.. எங்கள் மத புத்தகத்தை வேற்று மதத்தினர் தொடக்கொடாது என்று சொன்னார் ஒருவர் .. நெட்டில் டவுன்லோடு செய்து படித்தேன்.. ஏண்டா படிச்சோமின்னு வருந்துகிறேன்.
இப்படியே மேற்கொண்டு சென்றால் அது மதபிரச்சினை ஆகிவிடும்..
சில அரசியல் / (அல்லாத சங்கங்களும்) கட்சிகள் சிறுபான்மையினரை கவர்ந்தால் அரசை வென்று விடலாம் என்று இப்போது இல்லாத பார்ப்பனீய எதிர்ப்பை தூக்கி பிடிகின்றனர். இப்படியிருக்க எங்கள் ஊர் கோவில் அர்ச்சகர் பிராமணர் அல்ல, எந்த கோவிலுக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம்.. எந்த தெருவிலும் சுதந்திரமாய் சுற்றி வரலாம் (எங்கும் NO GO ZONE இதுவரை இல்லை அதுவரைக்கும் ஆண்டவனுக்கு நன்றி), எந்த ஏரியாவிலும் பணம் இருந்தால் நிலம் வாங்கலாம், எங்கும் யாரும் குடியிருக்கலாம்.
ஹிந்து மதம் மூட நம்பிக்கை நிறைய உள்ள மதமல்ல. நாம் தான் மூடர்களாக இருந்து கொண்டு மதத்தை பார்க்கிறோம். ராவணன் ப்ராம்மணர்களை வெருத்தான் என்பது இந்நூலின் ஆசிரியரின் வெறுப்பை அவன் மூலமாக தீர்த்துக் கொள்கிறாரே தவிர ராவணன் ப்ராம்மணர்களை வெறுக்க வில்லை. ஏனெனில் அவன் ப்ராம்மணர்களை பூஜித்ததாக ராமாயணம் செல்கிறது. ராமாயணத்தை நம்ப மாட்டோம் என்பார்கள் ஆனால் ராமாயணத்தில் செல்லப்பட்ட ராமனை மட்டும் நம்புவார்கள் ராமனை திரட்டுவதற்காக….
*ராமனை திட்டுவதற்காக…
@கோபாலன் “உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது அவரவர் நடந்து கொள்ளும் செயல்களில் தான் இருக்கிறதே தவிர, அவர் பிறப்பில் கிடையாது” இது அனைவருக்கும் பொருந்தும் தானே! உயர்ந்தவர் தாழ்த்தப்பட்டவர் என்று எந்த பிரிவும் இல்லை. யார் அநாகரீகமாக நடந்தாலும் அது தவறு தான்.
@சதீஷ் முருகன் மூட நம்பிக்கைகள் கூட கால மாற்றத்தில் மாறிக்கொண்டு வருகின்றன. இதில் சில அறிவியல் பூர்வமான உண்மைகள் இருந்தும் அவை பற்றி தெரியாததாலும் அவை மூட நம்பிக்கைகளாக கருதப்படுகின்றன.
ஏற்ற தாழ்வுகள் பேச்சே இல்லை. மறுக்க முடியாத உண்மை.
@ஜெயக்குமார் படிக்க வாய்ப்புக் கிடைக்கும் போது அவசியம் படிக்கிறேன்.
@அ.முத்துலிங்கம் அவர்களின் புத்தகங்களை படிக்க முயற்சிக்கிறேன் ஆனால், இது நான் ஊருக்கு வரும் போது தான் நடக்கும் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே ஒருமுறை நீங்கள் கூறி இருந்ததாக நினைவு.
@கார்த்திக் அம்மா உண்மை தான்.
@அருண் புத்தகம் படித்தீர்களா? உங்களால் படிக்க முடிந்ததா 🙂
@சிவா நீங்கள் இங்கே வாங்கலாம்
http://www.amazon.in/Asura-Tale-Vanquished-Anand-Neelakantan/dp/8183224385/
@கார்த்தி உன்னோட மருத்துவனை நிகழ்ச்சி செம்ம நகைச்சுவை 🙂
“ஞாயிறு மாலை பாரிஸ் கார்னரில் இருக்கும் மசுதிக்கு வரவேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கிட்டு த்தான் விட்டாரு”
🙂 🙂
புத்தகம் இங்கே வாங்கலாம்
http://www.amazon.in/Asura-Tale-Vanquished-Anand-Neelakantan/dp/8183224385/
@ராஜ்குமார் வாங்க வாங்க ரொம்ப நாளா ஆளைக் காணோமே!
வினவு போன்றவர்கள் தொடர்ந்து இதையே கூறிக்கொண்டு இருப்பது எரிச்சலையே உண்டு பண்ணுகிறது. இவர்கள் கூறுவதில் உண்மைகள் இருந்தாலும் அதை கூறும் வழிமுறைகள் தவறானது.
இந்த பார்ப்பனியம் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சனை மிகப்பெரியது. இதைப் பற்றி பேசினால் அதற்கு முடிவே இல்லை. மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல இரு புறமும் பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
@பிரகாஷ் எந்த மதமும் நல்ல மதமே! அதைப் பிரச்சனைக்குள்ளாக்குவது அதில் உள்ளவர்களே!
ராமாயாணம் யார் கூறுவது சரி தவறு என்று யாராலும் நிர்ணயிக்க முடியாது. ஒரு புதினத்தில் ஒரு சாராரை வில்லன் போல சித்தரிக்க ஒருவர் முயலும் போது மற்றவர் அதை எதிர்த்து வேறு விதமாக கூறுவது தவறாகத் தோன்றவில்லை.
இது இன்னமும் இருக்கா இல்லையா என்று தான் அனைவருக்கும் கேள்வியாக இருக்கிறது. எனவே புதினம் என்ற அளவில் எடுத்துக்கொண்டால் இரு வேறு மாற்றுக் கருத்துகள் கூறப்பட்டன என்று படித்து நகர்ந்து கொள்ள வேண்டியது தான்.
இதுல எல்லோருமே புத்தகத்தைப் படிக்காமல் அதன் விமரிசனத்தைப் படித்துக் கருத்திட்டுள்ளார்கள். இந்தப் புத்தகத்தை 4 மாதங்களுக்கு முன்பு சென்னை விமான’நிலையத்தில் ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வாங்கினேன். மதத்தையோ அல்லது ராமாயணத்தையோ மனதில் ஸ்டிராங்கா நிலை நிறுத்தியிருந்தால், இந்தப் புத்தகத்தை அனுபவிக்க முடியாது. இப்போ நிறைய கிராமத்துக் கோயில் தெய்வங்கள், பூர்வத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர்கள். இப்போது தெய்வமாகவே எண்ணி வணங்குபவர்கள், அவர்களை மனிதர்களாகக் கற்பனை செய்யக்கூடத் துணியமாட்டார்கள் (தெய்வக் குத்தம் என்று). எனக்கு ஆரம்பத்தில் படிக்கும்போது, நம் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறதே, படிப்பது தவறோ என்று தோன்றத்தான் செய்தது. ஆனால், ‘இப்படி நடந்திருந்தால்’ என்ற மன நிலையோடுதான் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
நூலாசிரியர் திரு நீலகண்டன் அவர்கள், மகாபலி, கேரளா சம்பந்தமான பகுதிகளை எழுதும்போது, அவர் ‘மலையாளி’ என்ற வட்டத்திலேயே எழுதியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது. அந்தப் பகுதிகள், சிறிது செயற்கையாக முளைத்ததுபோல் இருக்கின்றன.
மனிதன் எப்போதும் செல்ஃபிஷ் மிருகம்தான். (எக்ஸப்ஷனலை விட்டுவிடுங்கள்). அவனுக்கு அடுத்தவனைவிடத் தான் மேலே இருக்கவேண்டும் என்ற தணியாத ஆசை இருக்கும். வகுப்பறையிலேயே, கடைசி பெஞ்ச் பையன்னா உருப்படாதவன், படிக்காதவன் என்றும், முதல் வரிசை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், படிப்பாளிகள், ஆசிரியரை மதிக்கிறவர்கள் என்றும் ஒரு இமேஜ் இருக்கும். நடு பெஞ்ச் மாணவர்கள் மத்தியவர்க்கம். இந்த க்ரூப் அடுத்த க்ரூப்போடு நட்போடு (எப்போதும்) இருக்காது. இந்தமாதிரி ஒரு சமூகம் பிரிவு படும்போது, அது, தகுதியை வைத்து அவ்வாறு பிரிவது இயல்பு. ஆனால் அது ‘பிறப்புரிமை’ என்று ஆனதும், அடுத்த பிரிவு தன்னோடு சேர்வதற்குத் தகுதியில்லை (தீண்டாமை) என்று ஆனதும்தான் வெறுப்புக்குக் காரணம். பிராமணர்கள்தான் தங்கள் சுயனலத்தின் காரணமாக, இத்தகைய பிரிவுக்குக் காரணம் என்று மனதில் பதிந்ததால் பிராமண எதிர்ப்பு களைகட்டுகிறது. சமூகம் இப்போதும் அப்படி இருப்பதற்கு (தன் வகுப்புக்குக் கீழ் உள்ளவரிடம் ஆதிக்க மனப்பான்மை காட்டுவது) மனிதர்களின் சுயனலமே காரணம். இதை தலித்துகளைத் தவிர, வேறு யாரும் வெளிப்படுத்த மாட்டார்கள். தலித்துகள், இப்போதும் எல்லா ஜாதியினராலும் அடக்கப் படுகிறார்கள். அவர்கள் மேலே வருவது அவர்களுக்கு மேலே என்று இனம் காணப்பட்ட ஜாதியினருக்குப் பிடிப்பதில்லை. இன்றைய சூழலில் எனக்குத் தெரிந்து ஊருக்கு இளைத்தவன் என்று பிராமண எதிர்ப்பு உருவாகிறது.
புத்தகம் ரொம்ப இன்டரஸ்டிங்காக இருக்கும். படிக்க சிபாரிசு செய்கிறேன்.
எளிய எதார்த்தமான பார்வையில் ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் எழுதப்பட்ட விதம் கவர்ந்தது. நான் கார்த்திகேயன் எழுதிய சம்பவத்தைப் போல நானும் பல வற்றை சந்தித்துள்ளேன்.
@நெல்லைத் தமிழன் “மதத்தையோ அல்லது ராமாயணத்தையோ மனதில் ஸ்டிராங்கா நிலை நிறுத்தியிருந்தால், இந்தப் புத்தகத்தை அனுபவிக்க முடியாது.”
ரொம்பச் சரி. இதைத் தான் நான் முன் குறிப்பிலும் கூறி இருந்தேன்.
விரிவான விமர்சனம் 🙂 எனக்கு இந்தப் புத்தகம் துவக்கத்திலேயே கிடைத்தது சந்தோசம்.
@ஜோதிஜி 🙂 🙂 நல்லவேளை.. இல்லைனா ஜோதிஜி பெயர் வேற மாதிரி மாறி இருந்து இருக்கும். சர்ச்சை IAS அதிகாரி மாதிரி ஆகி இருப்பீங்களோ 🙂
அசுரன் வாசிப்பு ஆவலைத் தூண்டுகிறது. பதிப்பாளர் முகவரி மற்றும் கைப்பேசி எண் யாரேனும் கொடுத்து உதவினால், மகிழ்ச்சி
இந்த புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் .இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் இப்போதைய சூழ்நிலைக்கும் இலங்கையில் நடந்த விஷயத்திற்கும் பொருந்தும் என்பதை நான் உணர்ந்தேன் உங்களது கருத்துக்களும் உங்களது அலசல்களும் மிகவும் அற்புதமாக இருக்கிறது இந்த புத்தகத்தை ஆடியோ வடிவில் எனது யூடூப் பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன்
லிங்க் இதோ
https://www.youtube.com/megaminfos
youtube
https://www.youtube.com/playlist?list=PLsxITKuaYuYgwpoYa9I68pmlYNVWmvd7x