கோவிலில் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்கள் ஆனால், எனக்குப் புரியாத புதிர் பொதுத் தொலைபேசி அதிகம் இல்லையென்பது தான்! வெளியே உள்ளது என்றார்கள் ஆனால், என் கண்களில் தட்டுப்படவில்லை.
ஏனென்றால், உள்ளே செல்லும் போது மொபைல் வாங்கி வைத்து விடுகிறார்கள். கூட்டத்தில் உடன் வந்தவரைத் தவறவிட்டால், கண்டுபிடிப்பது என்பது எளிதல்ல. பொதுத் தொலைபேசி இருந்தால், அதன் மூலமாக அழைத்து நம் இடத்தைத் தெரிவிக்க முடியும்.
குழுவைத் தவற விட்ட பெண்
இராஜஸ்தானில் இருந்து குழுவாக 60 பேர் வந்ததில், ஒரு பெண் மற்றவர்களைத் தவற விட்டு விட்டார். வெளியே நான்கு மணி நேரமாக நின்று கொண்டு இருப்பதாகக் கூறினார்.
அவருக்கு யாருடைய தொலைபேசி எண்ணும் நினைவில் இல்லை என்பதால், எவரையும் அழைக்க முடியவில்லை. Image Credit – https://oneday.tours/
பின் அவரை அறிவிப்பு அறைக்குச் செல்லக் கூறி அங்கே விவரங்களைத் தெரிவிக்கக் கூறினோம். பார்க்கப் படித்தவராக, ஓரளவு விவரமானவராகவே இருந்தார் ஆனால், இப்படி மாட்டிக்கொண்டார். இப்பெண் பதட்டம் இல்லாமல் இருந்தது வியப்பை அளித்தது.
கோவிலை விட்டுப் பல வழிகளில் (Exits) வெளியே வர முடியும் என்பதால், எந்த வழியாக இவர் வந்தார்? மற்றவர்கள் எந்த வழியில் இருக்கிறார்கள்? என்பதை அறிவது, தொடர்பு கொள்வது எளிதல்ல. இதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை.
நாங்கள் வாகனத்தில் சென்றதால், அனைத்தையும் வாகனத்திலேயே வைத்துச் சென்று விட்டோம். இது போல வருபவர்களின் நிலை பரிதாபம், மொபைல் எடுக்க முடியாது.
முன்னரே வாகனம் எங்கே நிறுத்தப்படும் என்பதைத் தீர்மானிக்கவில்லை என்றால், வாகனத்தைக் கண்டுபிடிப்பது கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆகி விடும். ஏனென்றால், மொபைல் இல்லாமல் ஓட்டுநரை தொடர்பு கொள்ள முடியாது.
என்னுடைய பரிந்துரை, தேவஸ்தானம் மிக முக்கியத் தேவையான இலவச பொதுத் தொலைபேசி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இலவசமாக எத்தனையோ சேவைகளைச் செய்கிறார்கள், முக்கியத்தேவையான இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இருந்தால், இதனுடைய எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மக்கள் கோவிலை விட்டு வெளியே வரும் இடங்களில் இந்த வசதியை வைக்க வேண்டும்.
காகிதத்தில் குறித்து வைக்க வேண்டும்
கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு, உடன் வந்தவர்களின் தொலைபேசி எண்களைக் காகிதத்தில் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.
ஏனென்றால், நாம் உடன் வந்தவர்களைப் பிரிந்தாலும், இதை வைத்து யாரிடம் இருந்தாவது மொபைல் வாங்கி மற்றவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இது போல மொபைல் எண் தெரியவில்லை என்று விழித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. காரணம், தற்காலத்தில் எண்ணை யாரும் நினைவு வைத்து இருப்பதில்லை.
ஸ்மார்ட் ஃபோன்
ஸ்மார்ட் ஃபோன் வந்தவுடன் எண்களை நினைவில் வைத்து இருப்பது அறவே நின்று விட்டது. எனவே, திருப்பதி செல்பவர்கள் இப்பிரச்சனையைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
மொபைலை வாங்கி வைத்து விடுவதால் ஒரு மிகப்பெரிய நன்மை, யாரும் அதை நோண்டிக்கொண்டு இருக்க முடிவதில்லை. மொபைல் இருந்தால், சத்தமாகப் பேசுவது, செல்ஃபி எடுப்பது என்று கோவிலுக்குண்டான மரியாதையையே நாசம் செய்து விடுவார்கள்.
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்பது போல, எல்லாத்தையும் வாங்கி வைத்து விடுவதால், கூட்டத்தில் நம்மிடம் இருந்து திருட ஒன்றுமில்லை. வேட்டியை மட்டும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் 🙂 .
பிரசாதம் வாங்க, காணிக்கை செலுத்த மட்டுமே கொஞ்சம் பணம் வைத்துக்கொள்ளலாம்.
இதன் தொடர்ச்சி அடுத்த இறுதிப் பகுதியில்…
தொடர்புடைய கட்டுரை
திருப்பதி பயணக் குறிப்புகள் – 1