எதனால் சீமான் ஆபத்தானவர்?

5
சீமான்

ர்ச்சையாகப் பேசுவது, பிரிவினைக் கருத்துகளைத் தமிழ் தேசியம் என்ற பெயரில் வைப்பது சீமான் வழக்கம். தற்போது பாரத அன்னையையும் இழிவுபடுத்தியுள்ளார்.

சீமான்

தமிழ் தேசியம், பிரபாகரன் என்று தனது கட்சியைப் பலருடன் ஆரம்பித்தார் ஆனால், இன்றோ கட்சியைத் தனதாக்கி மற்றவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டார்.

துவக்கத்தில் பகுத்தறிவு பேசி அனைத்து இந்துக்கடவுள்களையும் மிகவும் கேவலமாகப் பேசி வந்தார். இது தற்போது பலருக்குத் தெரியாது. Image Credit

பின்னர் பகுத்தறிவிலிருந்து விலகி முருகனை பிடித்துக்கொண்டு பாட்டன் பூட்டன் என்று பேசி, காலம் காலமாக இருக்கும் முருகன் வடிவமைப்பையே மாற்றுகிறார்.

இவையல்லாது, இன்று ஒன்று பேசுவார், நாளையே அதை மாற்றிப் பேசுவார். நிருபர் எவரும் கேள்வி கேட்டால், மரியாதைக்குறைவாக விமர்சிப்பார்.

பிரிவினை

எப்போது ஜெ காலமானாரோ அன்று முதல் பிரிவினைவாதிகளுக்குக் கொண்டாட்டமாகி விட்டது. ஜெ இருந்தவரை அனைத்தையும் பொத்திக்கொண்டு இருந்தவர்கள், இன்று ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.

தமிழ்த்தேசியம் என்ற பெயரில் தமிழகத்தை பிரிப்பது, இந்தியாக்கு எதிரான கருத்துகளைக் கூறுவது என்று தொடர்ந்து பிரிவினைப் பேச்சைப் பேசி வருகிறார்.

இதுவரை எந்தக் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திமுகவே பிரிவினைப் பேசும் போது அவர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை.

பாரத அன்னையை இழிவுபடுத்திப் பேசுகிறார் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, கடுப்பாக உள்ளது.

பிரிவினைப் பேசுபவர்களுக்கு ஒருவருடச் சிறை என்று செயல்படுத்தினாலே அடங்குவார்கள். இல்லையென்றால், இது போன்று வாய்க்கு வந்ததை பேசுவார்கள்.

எதனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது?

இளையோர்

சீமானின் பலமே உணர்ச்சிவசப்படும் இளையோரே. வழக்கமாக இளையோரில் பெரும்பாலானவர்களுக்கு அனுபவமின்மை காரணமாக, புரிதல் இருக்காது.

எனவே, சீமானின் பேச்சில் பலரும் விட்டில் பூச்சிகளாக விழுந்து விடுகிறார்கள்.

சீமானின் பலமே அவரது வாய் தான். உணர்ச்சிகரமாகப் பேசுவதை உண்மையென நம்பி ஏராளமான இளையோர் ஏமாந்து கொண்டுள்ளார்கள்.

எப்படி இது போல முட்டாள்தனமாகப் பேச முடியும் என்று தோன்றும் அளவுக்குப் பேசுகிறார், அதையும் ஒரு கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன், சுற்றுலா கைடுக்கு மாதம் ஒரு லட்சம் சம்பளம், படிக்கலைனாலும் அரசு வேலை என்று மனம் போன போக்கில் பேசி வருகிறார். இவற்றோடு பிரிவினைவாதத்தையும் விதைத்து வருகிறார்.

சிந்திக்க தெரியாத ஒரு முட்டாள் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டுள்ளார்.

இவ்வளவு பேசும் சீமான், தனது மகனை நன்கு படிக்க வைக்கிறார் ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு முட்டாள் கூட்டம் இவர் பேசுவதை நம்பி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டுள்ளது.

சின்னம்

இவருக்குச் சின்னம் கிடைக்காததுக்கு மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டுள்ளார்.

இவர்களைப் போல முட்டாள்களை எங்கும் காண முடியுமா? தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்று நடைமுறையே புரியாமல் கத்திக்கொண்டுள்ளார்கள்.

ஒரு கட்சியின் சின்னம் என்பது எவ்வளவு முக்கியமானது! அதைத் தக்கவைக்க எவ்வளவு முன்னேற்பாடாக இருக்க வேண்டும்?! ஆனால், அப்போது கண்டுகொள்ளாமல் இருந்து தற்போது குதிப்பதால் என்ன பயன்?

ஜனவரியில் செய்ய வேண்டியதை மார்ச் வரை செய்யாமல் தூங்கி விட்டு, தற்போது எங்களை அடக்குக்கிறார்கள் என்று ஒப்பாரி வைத்துக்கொண்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு மேல் எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்ததால், தேர்தல் ஆணையத்திடம் கேட்டவருக்கு கொடுத்து விட்டார்கள்.

இந்தியா முழுக்க ஆயிரம் கட்சிகள் உள்ளது. இவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து உங்களுக்கு திரும்ப வேண்டுமா என்று கேட்பது தான் தேர்தல் ஆணையம் வேலையா?

தேர்தலில் போட்டியிடாத கமல் கூடச் சரியான நேரத்தில் விண்ணப்பித்து அவரது கட்சி சின்னத்தைப் பெற்றுள்ளார்.

எளிமையாகப் புரிந்து கொள்ளச் சிறு எடுத்துக்காட்டு

இத்தளத்தின் முகவரி https://www.giriblog.com, குறைந்தபட்ச காலம் ஒரு வருடம். நாம் வாங்கும் டொமைன் நிறுவனத்தைப் பொறுத்து நீட்டிப்பு செய்யலாம்.

ஆனால், அந்த நேரத்தில் நீட்டிக்க மறந்தால், முகவரியை 10 வருடங்களாக வைத்து இருந்தேன் அதனால் திரும்பக் கொடுங்கள் என்றால், முடியாது.

போனால் போனது தான், 10 வருடங்களாக உழைத்தது அனைத்தும் வீண் தான். என்ன கதறினாலும் திரும்பக் கிடைக்காது.

அடிப்படை

சீமான் மேற்கூறியதையே செய்துள்ளார். செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் தற்போது கதறி என்ன செய்வது?

கட்சி சின்னம் என்பது அடிப்படையான தேவை. அதையே இவரால் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால், இவர் தான் நாட்டைப் புரட்டிப்போடப் போகிறாரா?

இச்சின்னத்தை வைத்துப் பதாகைகள், பேனர்கள் அதிகம் வைத்து இருப்பார்கள். இவற்றை இனி பயன்படுத்த முடியாது, புதிய சின்னத்துக்குக் கூடுதல் செலவாகும்.

இப்பிரச்சினைக்கு முழுக்க முழுக்க சீமான் மட்டுமே காரணம், வேறு யாரும் அல்ல. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்கள்.

எதனால் சீமான் ஆபத்தானவர்?

பிரிவினைவாதம் பேசுவது, இளையோர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி சிந்திக்க விடாமல் செய்வது, சாத்தியமே இல்லாததைக் கூறி ஏமாற்றுவது என்று மூளைச்சலவை செய்துகொண்டுள்ளார்.

இவரை நம்பி இளையோர்கள் வாழ்க்கையைத் தொலைத்து, 10 / 15 வருடங்களுக்கு பிறகே உணர்ந்து, அதன் பிறகு ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.

சுருக்கமாக, தனக்கு இணையாக ஒருவர் கட்சியில் வளர்வதைச் சீமான் விரும்புவதில்லை. இது எப்போது இளையோர்களுக்குப் புரியும்?

இவர்கள் தங்கள் இளமைக்காலத்தைத் தொலைத்து, முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு வரும் வேளையில் (தோராயமாக 30 – 40 வயது), நீ எனக்குத் தேவையில்லை என்று கட்சியிலிருந்து விலக்கி விடுவார்.

இதுவரை உழைத்த உழைப்பு, செலவழித்த பணம்?! அனைத்தும் போச்சு.

மூளைச்சலவை 

தற்போது சீமானை விமர்சிப்பவர்கள் எல்லோருமே இதுபோலப் பாதிக்கப்பட்டவர்கள் தான், அதாவது 40 வயதைக் கடந்தவர்கள். வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.

என்னவொரு கசப்பான உண்மை என்றால், தற்போது இவற்றை இளையோரிடம் என்ன கூறினாலும், புரிந்து கொள்ள மாட்டார்கள்.

காரணம், அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். அடிபட்டுத் தான் திருந்துவார்கள் ஆனால், வாழ்க்கையைத் தொலைத்து இருப்பார்கள்.

ஒரு கட்சியிலிருந்து விலகுபவர்கள் முன் இருந்த கட்சியை விமர்சிப்பது, பல்வேறு காரணங்களைக் கூறுவது வழக்கம் ஆனால், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுபவர்கள் கூறும் காரணம் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

சீமானுக்கு தனது கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமில்லை. இப்படியே தன்னைச்சார்ந்து மட்டுமே கட்சி, தொண்டர்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்‘ என்ற சந்தேகம் பல நாட்களாக உள்ளது.

இக்காணொளியில் கூறுவதைக் கேட்கும் போது உறுதியாகிறது. இக்காணொளியை அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. சரித்திரத்தை புரட்டி பார்த்தோமானால், எந்த கட்சியும் தனி நபர் ஒருவரை மட்டும் சார்ந்து இருக்குமானால்.. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதன் சரிவு படிப்படியாக தொடங்கும். கட்சியின் அடிப்படை கொள்கைகள் சரியாக இருக்க வேண்டும்.. தலைவன் இல்லையென்றாலும் அதை சரியாக வழிநடத்த முறையாக கட்டமைப்பு இருக்க வேண்டும்.. நான் மட்டும் தான் – என்ற எண்ணம் இருக்க இது ஒன்றும் மன்னராட்சி அல்ல.. அப்படி எண்ணம் இருந்தால் அந்த தலைவன் இறக்கும் போது ,அவனுடன் சேர்ந்து கட்சியையும் புதைக்க வேண்டியது தான்..

  எல்லாவற்றிக்கும் மேல் 20/30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் சூழல் தற்போது கிடையாது.. ஆனால் இளைய தலைமுறை இந்த அரசியல்வாதிகளை தற்போது அணுகும் முறை முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளது.. இங்கு அரசியல் செய்ய சமூக ஊடகங்கள் மிக முக்கிய கருவியாக இருக்கிறது.. இவற்றை சரியாக கையாள வேண்டியது ரொம்ப முக்கியம்.. இதனால் நீங்கள் வெகு வேகமாக வளரலாம்.. அதே சமயம் விழவும் செய்யலாம்..

 2. நான் எப்போதுமே சீமானை ஏற்றுக்கொள்ள மாட்டேன். மிகவும் முட்டாள்தனமாக கத்தி பேசிவிட்டால் அது உண்மையாகி விடும் என்று பேசுகிறார். ஆனால் இந்த சின்னம் விஷயத்தில் அவர் ஒரு விஷயத்தை சொன்னார். அதில் அர்த்தம் உள்ளதாகவே எனக்கு பட்டது. அது என்னவென்றால் தேசிய பறவை, விலங்கு இப்படி எதுவெல்லாம் தேசியமாக உள்ளதோ அதை எல்லாம் சின்னமாக தரமாட்டோம் என்றார்கள். ஆனால் தேசிய மலர் தாமரையை எப்படி பிஜேபிக்கு சின்னமாக கொடுத்தார்கள் என கேட்டார். இதற்கு இதுவரை பிஜேபியிடம் இருந்து பதிலே இல்லை. இது சரியான கேள்வியாகவே எனக்கு பட்டது. ஆனால் இந்தியாவில் இவ்வளவு பெரிய கட்சி சின்னத்தை இனி முடக்கி பிஜேபிக்கு வேறு சின்னம் கொடுக்க வைப்பது எல்லாம் நடக்காத காரியம். அதை நீதிமன்றம் வழியாக செய்வேன் என சீமான் சொல்கிறார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என நான் நினைக்கிறேன். ஆனால் அவர் கேட்ட அந்த கேள்விக்கு பிஜேபியில் இருந்து யாரும் பதில் சொல்லவேயில்லை. இது எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இருந்தாலும் சீமான் சரியான நேரத்தில் விண்ணப்பிக்காமல் போனதில் பிஜேபி மீது பழி போட்டார். ஆனால் அவர் கேட்ட கேள்வியில் அர்த்தம் இருந்ததாகவே எனக்கு பட்டது அந்த கேள்விக்கு யாரும் பதில் கூறாததால்.

 3. @யாசின்

  “சரித்திரத்தை புரட்டி பார்த்தோமானால், எந்த கட்சியும் தனி நபர் ஒருவரை மட்டும் சார்ந்து இருக்குமானால்.. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதன் சரிவு படிப்படியாக தொடங்கும்.”

  மிகச்சரி, பின்னர் ஒரு கட்டுரை எழுதத் திட்டமிட்டுள்ளேன், அதில் இவை எல்லாம் உள்ளது.

  “தலைவன் இல்லையென்றாலும் அதை சரியாக வழிநடத்த முறையாக கட்டமைப்பு இருக்க வேண்டும்.”

  சின்னம் போனதுக்கு காரணமே இது தான். எல்லாத்தையும் நானே பார்ப்பேன் என்று இருப்பதால் தான், இந்த நிலைமைக்கு வந்தது.

  இதற்கென்று குழு, அவர்களுக்கென்று அதிகாரம் இருந்தால், இந்நிலை ஏற்பட்டு இருக்காது.

  “நான் மட்டும் தான் – என்ற எண்ணம் இருக்க இது ஒன்றும் மன்னராட்சி அல்ல.. அப்படி எண்ணம் இருந்தால் அந்த தலைவன் இறக்கும் போது ,அவனுடன் சேர்ந்து கட்சியையும் புதைக்க வேண்டியது தான்..”

  100% சரி.

  சீமானுக்கு பிறகு கட்சி இருக்காது, அதைத்தான் அவரும் விரும்புகிறார்.

 4. @ஹரிஷ்

  “நான் எப்போதுமே சீமானை ஏற்றுக்கொள்ள மாட்டேன். மிகவும் முட்டாள்தனமாக கத்தி பேசிவிட்டால் அது உண்மையாகி விடும் என்று பேசுகிறார்”

  அதை நம்பித்தான் பலரும் ஏமாறுகிறார்கள்.

  “தேசிய பறவை, விலங்கு இப்படி எதுவெல்லாம் தேசியமாக உள்ளதோ அதை எல்லாம் சின்னமாக தரமாட்டோம் என்றார்கள். ஆனால் தேசிய மலர் தாமரையை எப்படி பிஜேபிக்கு சின்னமாக கொடுத்தார்கள் என கேட்டார்.”

  1984 என்று நினைக்கிறன், அப்போது தான் தேர்தலுக்கு வந்தார்கள். அப்போது காங் அரசு தான் ஆட்சியிலிருந்தது .

  அப்போது ஒருவேளை தற்போதுள்ள கட்டுப்பாடுகள், வரைமுறைகள் இல்லாமல் சென்று இருக்கலாம்.

  ஒருவேளை பாஜக அப்போது சிறு கட்சி என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து இருக்கலாம்.

  இவையெல்லாம் ஊகம் தான், உண்மை என்னவென்று தெரியவில்லை.

  “இதற்கு இதுவரை பிஜேபியிடம் இருந்து பதிலே இல்லை. ”

  அண்ணாமலையை கேட்டால் பதில் கூறுவார் ஆனால், பதில் அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையம், பாஜக அல்ல.

  “அவர் கேட்ட கேள்வியில் அர்த்தம் இருந்ததாகவே எனக்கு பட்டது அந்த கேள்விக்கு யாரும் பதில் கூறாததால்.”

  எனக்கும் எப்படி கொடுத்தார்கள் என்று புரியவில்லை. கொடுத்து இருக்கக் கூடாது ஆனால், முன்னரே கூறியபடி அப்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here