மறைந்து வரும் கொங்கு சடங்குகள்

2
மறைந்து வரும் கொங்கு சடங்குகள்

கால மாற்றத்தில் பண்டைய பழக்க வழக்கங்கள் அனைத்து இடங்களிலும் மறைந்து வருவதைப் போலக் கொங்குப்பகுதியிலும் மறைந்து வருகிறது. Image Credit

கொங்குப்பகுதி சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால், இதைக்கூறுகிறேன்.

திருமண சடங்குகள்

கொங்குப்பகுதியில் திருமணச் சடங்குகள் ஏராளம் இருக்கும். இவை பெரும்பாலும் உறவுகளை மேம்படுத்தவும், ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்கவும், உதவிக்கொள்ளவும், உறவுகள் தொடரவும் ஏற்படுத்தப்பட்டது.

திருமணம் என்பது இரு நபர்களுக்கிடையே நடைபெறும் சம்பவம் என்றாலும், அதையொட்டி ஏராளமான உறவுப் பிணைப்பு நிகழ்வுகள் உள்ளன.

முன்பு பெரியவர்களுக்கு அனைத்து நடைமுறைகளும் தெரியும் என்பதால், அவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். அவர்களுக்கு வயதான பிறகு அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுத்து வழி நடத்தினார்கள்.

தொடர்ந்து தலைமுறைகள் மாறி வருவதால், பலருக்கு சடங்குகள் தெரிவதில்லை அல்லது எப்படி பின்பற்றுவது என்று அறிவுறுத்த ஆட்கள் இல்லை.

எனவே, பலரும் கொஞ்சம் கொஞ்சமாக சடங்குகளைக் குறைத்து வருவது தெளிவாகத் தெரிகிறது. எதிர்காலத்தில் திருமணம் மட்டும் நடக்கும் சடங்குகள் எதுவும் இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும்.

பொருளாதார உயர்வு

இன்னொன்று அதைச் செய்வதற்கான ஆட்களும் பொருளாதார மாற்றங்களால் வேறு பணிக்குச் செல்வதாலும், சடங்குகள் குறைந்து வருகிறது.

தற்போது இருப்பவர்கள் 95% வயதானவர்கள்! இவர்களுக்குப் பிறகு தொடர அடுத்த தலைமுறை இல்லை, அதை எதிர்பார்க்கவும் முடியாது.

காரணம், படிப்பு, பொருளாதார உயர்வு போன்ற காரணங்கள்.

எங்கள் சமூகத்திலும் பெண்கள், ஆண்களுக்கு இது குறித்த புரிதல் குறைந்து வருகிறது காரணம், பலரும் நகரத்துக்கு இடம்பெயர்ந்து விட்டார்கள்.

பலருக்குப் பங்காளிகள் யாரென்றே தெரியவில்லை, திருமணங்களுக்கு வரும் போது மட்டுமே யார் பங்காளி என்று அறிமுகம் கிடைக்கிறது.

குறிப்பாகத் தற்கால தலைமுறைக்கு யார் பங்காளிகள் என்றே தெரியவில்லை. பங்காளிகள் மிக முக்கியமானவர்கள், இவர்கள் உறவை இழக்கக் கூடாது.

Read: திருமணமும் பங்காளிகளும்

என்னென்ன திருமணச் சடங்குகள்?

நாள் தண்ணீர், கல்யாண தண்ணீர், மாப்பிள்ளை பிள்ளையார் கோவில் செல்வது, பெருங்கூடை எடுத்தல், பொம்பூட்டுதல், மாப்பிள்ளை அழைப்பு, கட்டில் ஏற்றுதல்.

கங்கனம் கட்டுதல், வெத்தலை பாக்கு மரியாதை, மங்கள வாழ்த்து, அருமனை எடுத்தல், தாரை வார்த்து கொடுத்தல், கை கோர்வை, பரியம் செலுத்துதல்.

மேற்கூறியவை அனைத்தும் முகூர்த்தத்துக்கு முதல் நாள் நடக்கும் சீர்களும் (சடங்குகளும்), முகூர்த்தம் அன்று நடக்கும் சீர்களுமாகும்.

இவையல்லாது எங்கள் பகுதியில் ‘தெரட்டி’ என்று கூறப்படும், பூப்பு நன்னீராட்டு விழாவுக்கும் இதே போன்று சீர்கள் ஏராளம் உள்ளன.

இறப்பு சடங்குகள்

திருமணத்தைப் போலவே இறப்புக்கும் ஏராளமான சடங்குகள் உள்ளன. இவற்றிலும் தற்போது செய்வதற்கு ஆட்கள் இல்லாததால் குறைந்து விட்டன.

காரணம், மேற்கூறியதே!

ஒருவகையில் இறப்பில் சடங்குகள் குறைவதை வரவேற்கிறேன் குறிப்பாக பெண்களுக்கு. அந்தக்காலத்தில் ஏராளமான சடங்குகள் பல்வேறு காரணங்களுக்காக இருந்தது ஆனால், அவை தற்போது தேவையில்லை.

திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் சடங்குகள் அதிகமிருந்தால், அவை வரவேற்கப்படும் ஆனால், துக்க நிகழ்வில் அவ்வாறு இல்லை.

அப்பா காலமான போது அம்மாக்கு செய்ய வேண்டிய சில சடங்குகளைச் செய்ய நான் அனுமதிக்கவில்லை, இதைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.

எந்த இறப்பிலும் அதிகம் அழும் பெண்கள் அழுகை கூடக் குறைந்து விட்டதாக உணர்கிறேன். சம்பிரதாயத்துக்கு அழுது விட்டு, அமைதியாகி விடுகிறார்கள்.

வழக்கமாக மோளம் அடிப்பவர்கள் அனைவருமே மிக வயதானவர்கள். இத்தலைமுறைக்குப் பிறகு மோளம் அடிக்கவும் யாரும் இருக்க மாட்டார்கள்.

இதையும் வரவேற்கிறேன். இதற்கு தற்போதே பலரும் பழகி விட்டார்கள். சிலர் ஒருபடி மேலே சென்று மோளத்தை தவிர்க்கிறார்கள்.

இன்னும் சிலர் இறக்கும் முன், ‘தான் இறந்த பிறகு தனக்கு மோளம் வேண்டாம்‘ என்று வேண்டுகோளும் வைக்கிறார்கள்.

இது போன்ற நிலையில் மிகவும் அமைதியாக, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முடிந்து விடுகிறது. இதை முழு மனதோடு வரவேற்கிறேன்.

கோவில் சடங்குகள்

கோவில் சடங்குகளிலும் இப்பிரச்சினைகள் இருந்தாலும், மோசம் என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது. அர்ச்சகர், பூசாரி கிடைப்பது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

அறம் கெட்ட துறை கோவில் பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்ட பிறகு கோவில் சடங்குகள், கொண்டாட்டங்களில் மிகப்பெரிய மாற்றம், வளர்ச்சி பெறும்.

இதன் பிறகு இருக்கும் மாற்றங்கள், இக்காலத் தலைமுறை காணாததாக இருக்கும். ஆன்மீகத்துக்குப் பலரைக் குறிப்பாக, இளையோர்களை இழுத்து வரும்.

எதிர்காலத்தில் இளையோர் கையில் ஆன்மிகம் செல்லும், புதிய மாற்றங்கள், விழிப்புணர்வு ஏற்படும்.

திருவிழாக்கள் இதுவரை காணாத அளவுக்குச் சிறப்பாக, முக்கியமாகச் சுதந்திரமாகக் கொண்டாடப்படும். பலரும் தங்கள் பங்களிப்பை கொடுப்பார்கள்.

அறம் கெட்ட துறை விலகும் நாளுக்காக இலட்சக்கணக்கானோர் காத்துக்கொண்டுள்ளார்கள்.

சுருக்கமாக, தனிப்பட்ட நிகழ்வில் சடங்குகள் குறையவும், ஆன்மீகத்தில் வழிமுறைகள் விழிப்புணர்வு பெறவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

கொசுறு

மேற்கூறியவை எங்கள் பகுதி, சமூகம் சம்பந்தப்பட்ட நிகழ்வு என்பதால் கூறினேன் ஆனால், அனைத்துச் சமூகங்களிலும், மதங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

இவற்றைத் தவிர்க்க, தடுக்க முடியாது காரணம், இதுவொரு Organic மாற்றம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. படிக்கும் போது உண்மையில் ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கிறது.. இத்தனை வகையான சடங்குகள் கொங்கு பகுதியில் இருந்தது என்பதை படிக்கும் போது, நம் முன்னோர்களின் அறிவையும் / உறவுகளை அவர்கள் எவ்வாறு பேணி நடந்தார்கள் என்பதும், அவர்கள் மேல் இன்னும் அதிகதிகம் மரியாதையை தருகிறது..

    பதிவை முழுவதும் படித்து முடித்தவுடன் மனது ஒரு சில நிமிடம் கணக்கிறது.. ஏதேதோ நவீன மாற்றங்களினால் நம் முன்னோர்கள் நமக்கு முறையாக கட்டமைத்து கொடுத்த பழக்க வழக்கங்களை, நம் சுயநலத்துக்காக பல நூறாண்டுகளாக இருந்ததை நம் தலைமுறையிலே சீரழித்து விட்டோம். இதை தவறு என்று நாம் ஒப்புக் கொள்ளப் போவதில்லை, மாறாக அவரவருக்கான நியாயங்களை மட்டும் கூறுவோம்..காலம் தான் பதில் கூற வேண்டும்..

  2. @யாசின்

    “இத்தனை வகையான சடங்குகள் கொங்கு பகுதியில் இருந்தது என்பதை படிக்கும் போது”

    தற்போதும் உள்ளது ஆனால், எதிர்காலத்தில் மறையலாம் என்பதையே கூறியுள்ளேன்.

    “இதை தவறு என்று நாம் ஒப்புக் கொள்ளப் போவதில்லை, மாறாக அவரவருக்கான நியாயங்களை மட்டும் கூறுவோம்.”

    இதைத்தவறு என்று கூற முடியாது காரணம், இதுவொரு ஆர்கானிக் மாற்றம்.

    இதைத்தடுக்க முடியாது.

    பசங்கள் முன்பு வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள், தற்போது எதனால், வீட்டினுள் அடைந்து கிடக்கிறார்கள்.

    இதற்கான பதிலே மேற்கூறியது. கால மாற்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here