கடந்த வார சீனப் புத்தாண்டு விடுமுறையில் மலேசியாவில் உள்ள “மலாக்கா” என்ற யுனெஸ்கோவால் புராதான நகராக அறிவிக்கப்பட்ட நகருக்குச் சென்றோம்.
கடந்த முறை போலவே இந்த முறையும் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே இருந்ததால், பெரும்பாலான இடங்கள் செல்ல முடியவில்லை.
வெள்ளி காலை 10.30 க்கு புறப்பட்டு மாலையில் மலாக்கா சென்றடைந்து, சனி “பத்து மலை” சென்று பின் ஞாயிறு காலையில் கிளம்பி விட்டோம்.
ரொம்பக் குறுகிய நேரம் என்பதால் மலாக்காவில் இரண்டு இடங்கள் மட்டுமே சென்றோம்.
இத்தளத்தைப் புதிதாகப் படிப்பவர்களுக்கு – நான் சிங்கப்பூரில் வசித்தேன்.
மூன்று நண்பர்கள்
காரில் செல்லலாம் என்று முடிவு செய்து நான் உட்பட மூன்று நண்பர்களாகக் கிளம்பினோம்.
மலேசியா தாண்ட வேண்டும் என்றால், நான்கில் மூன்று பங்கு பெட்ரோல் இருக்க வேண்டும், இல்லையென்றால் 500$ அபராதம்.
காரணம், மலேசியாவில் பெட்ரோல் கட்டணம் மிகக் குறைவு. எனவே, அங்கே சென்று பெட்ரோல் போட்டுக்கொள்கிறார்கள் என்பதற்காக.
வரும் போது எவ்வளவு வேண்டும் என்றாலும் போட்டுக்கொள்ளலாம்.
500$ அபராதம் என்றாலும் ரொம்பக் கடுமையான சோதனை இல்லை. எப்போதாவது திடீர் என்று சோதனை செய்வார்கள் என்று கூறினார்கள்.
காரை விட்டு இறங்காமலே சுங்கச் சோதனை முடித்துச் சென்று விடலாம்.
தற்போது சிங்கப்பூர் மலேசியா இரு அரசாங்கங்களும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மலேசியா நெடுஞ்சாலை பற்றித் தனியாகவே ஒரு பதிவு எழுதலாம். அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும். இரு புறமும் இயற்கையை ரசித்துக்கொண்டே செல்லலாம்.
இயற்கை வளம் நிறைந்த அற்புதமான நாடு.
மலேசியா நெடுஞ்சாலைகள்
சாலைகள் புத்தம் புதியது போல சீராக அழகாக உள்ளது. இது போன்ற சாலைகள் இருந்தால், சுங்கவரி கொடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறேன்.
வேலையே இல்லை என்றாலும் இதில் சும்மாவது சென்று வரலாம் போல, அந்த அளவிற்கு அட்டகாசமாக அதுவும் இயற்கை சூழ்ந்து இருக்கிறது.
இதில் காரில், இரு சக்கர வாகனத்தில் பயணித்தால் சலிப்பே தெரியாது.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா தலைநகரான கோலாலம்பூருக்கு கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர் தூரம்.
இந்த இடைப்பட்ட பயணத்தில் பெரிய கிராமமோ நகரமோ இல்லாமல் இருப்பது பெரிய ஆச்சர்யம்.
இரு மருங்கிலும் மிகப்பெரிய காடுகள் சமவெளிகள் என்று இருப்பது, எனக்குக் கன்னா பின்னாவென்று பொறாமையைக் கொடுத்தது.
இங்கே சாலையின் இரு புறமும் மிக மிகச் சிறப்பாகப் புற்களை, மரங்களைப் பராமரித்து இருக்கிறார்கள்.
ஒரு இடம் விடாமல் அவ்வளவு தூரமும் இதே போல பராமரிக்கப்பட்டு இருந்தால், வியப்பாகத் தானே இருக்கும்!
நம்ம ஊர் நெடுஞ்சாலை இது போல இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வந்து செல்லாமல் இல்லை.
சாலையின் குறுக்கே மனிதர்களோ, நாயோ, மிருகங்களோ செல்வதில்லை, செல்வதில்லை என்று கூறுவதை விட செல்ல வாய்ப்பில்லை.
ஏனென்றால், சாலைகளின் அருகே வீடுகள், கடைகள், கிராமங்கள் எதுவுமே இல்லை.
இரு புறமும் எப்போதாவது இளைப்பாற வரும் கடைகளைத் தவிர்த்து (அவையும் புறவழிச் சாலை) வேறு எந்த நடமாட்டமும் இல்லை.
350 கிலோமீட்டர் இது போல இருந்தால்…! நினைத்துப் பாருங்கள்.
அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று அறிவிப்புக் கூறுகிறது.
100 ல் சென்றால் கூட 60 ல் செல்வது போல இருக்கிறது ஆனாலும் சிலர் 110 வேகத்தையும் தாண்டிச் செல்கிறார்கள். 110 என்பது மிகக் குறைவான வேகம்.
இவ்வளவு குறைவாக இருப்பதற்கு எதுவும் காரணம் இருக்கிறதா? என்று தெரியவில்லை.
மலேசியா நெடுஞ்சாலைகளில் 200 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் எளிதாகக் கடக்கலாம்.
கார் நன்றாக இருந்தால், 1.30 மணி நேரங்களில் சென்று விடலாம்.
போக்குவரத்து விதியை மீறுபவர்கள் பெரும்பாலும் மலேசியர்கள் தான்.
திடீர் என்று தடம் மாறி வேறு தடம் செல்வது, Service lane லும் பயணம் செய்வது என்று திகில் ஏற்படுத்துகிறார்கள்.
விபத்து நேர்ந்தால், வாகனம் பழுதானால் நெடுஞ்சாலை வாகனப் பிரிவை சார்ந்தவர்கள் உதவிக்கு வருகிறார்கள்.
மலாய் மொழி
மலேசியா எல்லையில் நுழைந்து விட்டாலே ஆங்கில அறிவிப்புகளைக் காண்பது அரிது. அனைத்து அறிவிப்புகளும் மலாய் மொழியில் தான் இருக்கும்.
மலாய் மொழியும் கிட்டத்தட்ட ஆங்கிலம் போலவே இருப்பதால், கொஞ்சம் சிரமம் குறைகிறது. உதாரணம் Taksi, Ekspress.
நாங்கள் சென்றது என்னவோ மூன்று பேர் என்றாலும் எங்களுடன் இணை பிரியாமல் வந்தவர் அண்ணன் கூகுள் 🙂 .
எவ்வளவோ இடங்கள் சென்றோம் ஆனால், ஒருவரிடம் கூட வழிக்காக உதவி கேட்கவில்லை.
இடத்தை கூகுள் வழிகாட்டியிடம் கூறி விட்டால், அதுவே சிறப்பாக வழி காட்டுகிறது. நெரிசல் இருந்தால், மாற்று வழி கூறுகிறது.
இரவில் கூட எந்த பயமும் இல்லாமல் எங்கும் செல்ல முடியும், கூகுள் வழிகாட்டி இருந்தால்.
மலாக்கா நகரம்
மலாக்கா நகரம் பிரம்மாண்டமான கட்டிடங்களையும், வணிக வளாகங்களையும், சாலைகளையும் கொண்டுள்ளது.
இந்நகரம் ஆங்கிலத்தில் Malacca என்றும் மலாய் மொழியில் Melaka என்றும் அழைக்கப்படுகிறது.
சுதந்திரம் அடையும் முன்பு முதலில் போர்த்துக்கீசியர்கள் வசமும் பின், டச்சு, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் வசம் இருந்துள்ளது.
இந்நகரம் யுனெஸ்கோ அமைப்பால் “World Heritage City” யாக ஜூலை 7 2008 ல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பழைய காலத்துத் தெருக்கள், வீடுகள் அதன் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன.
உணவு மற்றும் தங்கும் விடுதிகளாக வீடுகள் மாற்றம் பெற்றுள்ளன.
பழமை மாறாமல் இருக்கும் வீடுகளைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் அழகை சீர்குலைக்காமல் புதுப்பித்து இருக்கிறார்கள்.
சைனா டவுனில் பிரபலமான ஜோங்க்கர் தெரு (Jonker Street) கூட்டத்தில் திணறிக்கொண்டு இருக்கிறது.
நம்ம சென்னை ரங்கநாதன் தெரு போலவே கூட்டம் என்றால், கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்பட்டதல்ல. நண்பன் இதையே கூட்டம் குறைவு என்றான்.
தமிழர்கள்
தமிழர்கள் அதிகம் கடை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மசால் வடை வாங்கிச் சாப்பிட்டார்கள் 🙂 .
தமிழர்களை அதிகம் காண முடிந்தது. தமிழர்கள் இல்லாத நாடு இல்லை, தமிழர்களுக்கென்று ஒரு நாடில்லை.
சீனர்கள், மலாய், வெளிநாட்டினர், தமிழர்கள் என்று அந்த இடமே கலக்கலாக இருந்தது.
வெளிநாட்டினர் அதிகம் இருந்தார்கள். இங்கே வெளிநாட்டுப் பொண்ணுக அட்டகாசம் தாங்க முடியவில்லை.
ஏடாகூடமாக உடை அணிந்து வந்து எங்கள் இதயத் துடிப்பை எகிற வைத்துக் கொண்டு இருந்தார்கள் 🙂 . எப்படித்தான் இவ்வளவு அழகாக இருக்காங்களோ!
மலாக்காவில் கைவிடப்பட்ட கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன. யாரும் வராததால் அப்படியே இருப்பதாக மலேசியா நண்பி ஒருவர் கூறினார்.
சில இடங்கள் பந்த் போல இருந்தன, நான் முதலில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் காரணமாக என்று நினைத்தேன்.
போர்த்துக்கீசியர் காலத்து நினைவுகளைக் கொண்டுள்ள சிறு மலை (குன்று) பிரபலமானது.
இதன் அடிவாரத்தில் அலங்கார விளக்குகளைக் கொண்ட ரிக்க்ஷாக்கள் பாடல்களை ஒலிக்க விட்டு பட்டையைக் கிளப்பிக்கொண்டு செல்கின்றன.
இதற்குச் செம கூட்டம். பல வண்டிகளில் தமிழ்ப் பாடல்களும் ஒலித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
அதில் கத்தி படத்தில் இருந்து செல்ஃபி புள்ள, சிறுத்தை படத்தில் இருந்து நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல, காதல் அழிவதில்லை (சிம்பு) படத்தில் இருந்து என் மனசில் நீயே தானா! பாடல் மற்றும் ஒரு இந்திப் பாடலும் பாடியது.
மலேசியாவில் தமிழ் பெரிய விசயம் இல்லையென்றாலும், இன்னொரு நாட்டில் வந்து நம் பாடல்களைப் பொது இடங்களில் கேட்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தனி தான்.
“அட! பார்ரா தமிழ்ப் பாட்டுப் பாடுது!!” என்று உற்சாகமாக இருக்கும்.
புதுமண ஜோடிகள் அங்கே திறந்தவெளியில் / சாலையில் நிழற்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள், அவர்களை வெளிநாட்டினரும் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
நாங்கள் எடுக்கும் முன்பே நகர்ந்து விட்டதால், பின்புறத்தைத் தான் எடுக்க முடிந்தது 🙂 (முதல் படம்).
அடுத்த இடுகையில் பஞ்சாபி உணவு விடுதி, உணவுக் கட்டணங்கள், பத்து மலையோடு நிறைவு செய்கிறேன், படங்களையும் பகிர்கிறேன்.
அதிக இடங்கள் செல்ல முடியாததால் மலாக்கா பற்றிய சுவாரசியமான தகவல்களைக் கொடுக்க முடியவில்லை.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
அனுபவி ராஜா அனுபவி. நம்ம கண்ணுக்கு எல்லாப் பொண்களுமே அழகாய்த்தான் தெரிவாக. வயசு கூடுதுல்ல.
மலேசியா பயணம் நல்லா தான் இருக்கு!!!பகிர்வுக்கு மிக்க நன்றி…
மலர்
கிரி, மலேசியா நாட்டோட இயற்கை அழகை பற்றி படித்தாலே ரெ.கார்த்திகேசு அவர்கள் எழுதிய “காதலினால் அல்ல” என்ற புத்தகம் நினைவுக்கு வரும்.. மிகவும் சுவாரசியமான ஒரு காதல் கதையை பற்றிய புத்தகம்.
இது 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதபட்டது.. தற்போது புத்தகங்கள் நீங்கள் வாசிப்பதால், படிக்க விருப்பம் இருப்பின் கூறவும் மின் அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்… பகிர்வு நன்றி கிரி..
பதிவும் படங்களும் சூப்பர். நானும் மூன்று முறை சிங்கப்பூர் வந்திருக்கிறேன் ஆனால் மலேசியா செல்ல முடிய வில்லை.
மலேசியாவில் சொல்வதற்கு நிறைய உள்ளது. பாராட்டுவதற்கு பல விசயங்கள் உள்ளது. ஆனால் திட்டமிட்ட இனவாதம், மொழிவாதம், மதவாதம் மூன்று நீக்கமற நிறைந்துள்ளது. பாதிக்கப்படுவது முழுவதும் அங்குள்ள தமிழினமே. ஆனால் அவர்களின் நோக்கம் முழுக்க தமிழ் நாட்டில் உள்ளவர்களைப் போல திரைப்பட மோகம் தொடங்கி தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்தி சிறைச்சாலையை நோக்கி நகர்வது தான் வாடிக்கையாக உள்ளது. அரசாங்கமும் இது குறித்து அதிக அளவு அலட்டிக் கொள்வதில்லை. கேரள வம்சத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற மகாதீர் கூட தமிழர்களை ஒதுக்குவதில் முன்னணியில் இருந்தார் என்பது கடந்த கால செய்தி. இதையும் தாண்டி தமிழர்கள் இன்னமும் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதே ஆறுதல் செய்தி.
மற்றபடி சிங்கப்பூர் மலேசியாவில் நான் பார்த்தவரைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் நேர்த்தியாக ஒழுங்காக சுத்தமாக உள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
@நெல்லைத் தமிழன் ஹலோ பாஸ் என்னை சேர்க்காதீங்க ஹா ஹா 🙂
@மலர் நன்றி
@யாசின் நான் புத்தகமாக வாசிக்கவே விருப்பபடுகிறேன். இதையும் அனுப்புங்கள் படிக்க முயற்சிக்கிறேன். காதல் எனக்குப் பிடிக்கும் 🙂
@பிரகாஷ் அடடா! அடுத்த முறை முயற்சி செய்யுங்கள். மலேசியா செலவு குறைவு. சிங்கப்பூரில் அனைத்தும் விலை அதிகம்.
@ஜோதிஜி நீங்கள் கூறியதில் ஒன்று நிச்சயம் உண்மை மற்றது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. நம்மவர்கள் குற்றச் செயல்களில் அதிகம் மாட்டுகிறார்கள்.
செயற்கை இருப்பது உண்மை தான் ஆனால், அது தவிர்க்க முடியாதது.