ஏலகிரி செல்லும் வழியில் நண்பன் பங்குதாரராக உள்ள வாணியம்பாடி தோல் தொழிற்சாலை நிறுவனத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
நான் கோவை, கோபி பகுதியைச் சேர்ந்தவன் என்பதால், பெரும்பாலான பயணங்கள் விழுப்புரம், சேலம், கோபி, கோவை என்றே முடிந்து விடும்.
ரொம்ப வருடங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வந்துள்ளேன் ஆனால், நினைவில்லை.
கடந்த இடைத்தேர்தலில் முஸ்லீம் வாக்குகள் இங்கு அதிகம் என்று பேசப்பட்ட போது ‘ஓ! அப்படியா’ என்ற அளவிலேயே என் புரிதல் இருந்தது.
இந்த முறை ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி சென்ற பிறகு தான் முஸ்லீம் மக்கள் எவ்வளவு பேர் இங்கே இருக்கிறார்கள் என்பதே எனக்குத் தெரிந்தது.
எங்கே பார்த்தாலும் இம்மக்களே! இவ்வளோ பேரை ஒரே சமயத்தில் இங்கே தான் பார்க்கிறேன் 🙂 .
ஆற்காடு நவாப் காலகட்டத்தில் இருந்தே இவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறினார்கள்.
வட மாநிலத்தில் நிறைய இடங்கள் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய பல கால விருப்பம் ஆனால், தமிழ்நாட்டுக்குளேயே நிறைய இடங்கள் செல்ல வேண்டியது உள்ளது போல இருக்கு.
வாணியம்பாடி தோல் தொழிற்சாலைகள்
இப்பகுதி முழுக்கவே தோல் தொழிற்சாலைகள் தான்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டைக்குச் சென்றால், எப்படிச் சிறு சிறு அளவில் தொழிற்சாலைகளைக் காண முடியுமோ அதுபோல ஏராளமாக இருந்தது.
தோல் தொழிற்சாலை என்றாலே அதனுடைய கழிவு நீர் பற்றி அறியாமல் இருக்க முடியாது காரணம், தோல் பணிக்கான நீர் தேவை என்பது அதிகம். அதுபோல அவை வெளியேற்றும் நீர் கழிவுகளும் அதிகம். இவை சுற்றுப்புற சூழ்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவை.
தற்போது இக்கழிவுகள் அனைத்துத் தொழிற்சாலைகளில் இருந்தும் ஒரே குழாய் வழியாகக் கொண்டு செல்லப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
முன்பை விடத் தற்போது இதில் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளதாகக் கூறினார்கள்.
ஏராளமான சிறு தொழிற்சாலைகளை இங்கே காண முடிந்தது. இதில் பல நிறுவனங்கள் GST வருகையால் பாதிக்கப்பட்டுள்ளன.
30 நிமிடங்கள் மட்டுமே அங்கே இருந்ததால், அதிகம் விசாரிக்க முடியவில்லை. வெளியே வந்த பிறகே விரிவாக விசாரித்து இருக்கலாம் என்று தோன்றியது.
ஏலகிரி செல்லும் மனநிலையில் இருந்ததால், இங்குத் திடீர் என்று வந்த திட்ட மாறுதலால், நான் மனதளவில் தயாராகவில்லை. முன்னரே திட்டமிட்டு இருந்தால், இதற்குத் தகுந்த மனநிலையோடு வந்து பல விவரங்களைச் சேகரித்து இருப்பேன்.
இந்த இயந்திரம் உற்பத்தி செய்யப்பட்டத் தோலை ‘stretch’ செய்ய உதவுகிறது.
தோலுக்குச் சாயம் அடிப்பதையும், சாய வேலை முடிக்கப்பட்ட தோல் வெளியே வரும் காணொளிகளையும் இணைத்துள்ளேன். இதன் பிறகு பல்வேறு நிலைகளைக் கடந்தே நமக்கு இவை Bag, Shoe மற்றும் பல்வேறு பொருட்களாகப் பயன்பாட்டுக்கு வருகிறது.
இரு நிலைகளை மட்டுமே காணொளிகளாக இணைத்துள்ளேன். தோல் எப்படியோ போய் நமக்கு எப்படியோ வருகிறது 🙂 . இதன் பின்னணி உழைப்பு அபரிமிதமானது.
தொடர்புடைய கட்டுரைகள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, கல்லுரியில் படிக்கின்ற காலம் முதலே என்னை பொறுத்தவரை ஒரு தொழிற்சாலையை காண்பது ஒரு பிரமாண்டம்!!! அதுவும் உற்பத்தி செய்யும் தொழிற்ச்சாலை என்பது பிரம்மாண்டத்தின் உச்சம்.. அதில் பெரியது சிறியது என்ற பாகுபாடு இல்லை..
படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த போதும் கூட மார்க்கெட்டிங், கால் சென்டர், கொரியர் என சில வேலைகள் கிடைத்தாலும், உள்ளூரில் 5000 ரூபாவிற்கு வேலை கிடைத்த போதும் உதறி தள்ளி 2500 சம்பளத்துக்கு கோவையை நோக்கி பயணப்பட்டதன் ஒரே காரணம் “அந்த தொழிற்ச்சாலை ஒரு இரும்பு உருக்கு ஆலை என்ற ஒற்றை காரணம் மட்டுமே!!!
பணியோ அலுவலகத்தில் ஆனால் முழுநேரமும் சுற்றி கொண்டு இருப்பது உற்பத்தி மையத்தில்.. சக்தியுடன் நட்பு ஏற்பட்ட போது பணி நேரமும் அதிகமானது.. நிறைய விவரங்களையும் கற்று கொள்ள உதவியது.. FOUNDRY MANAGER க்கு தெரியாத எல்லா விவரமும் அன்று தினமும் எனக்கு தெரியும்.. அது ஒரு மாய போதை கொண்ட உலகம்.. நான் முழுவதுமாக மூழ்கி கிடந்தேன்.. என்னை மூழ்க வைத்ததில் முக்கால் பங்கு சக்தியை சேரும்..
திண்டுக்கல்லில் பணிபுரிந்த இடம் ஒரு நூற்பாலை.. மொத்த பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய உருவம்.. நிறுவன பொது மேலாளரை விட பொறுப்பும், பணியும் அதிகம் இருப்பது ஸஃபின்னிங் மாஸ்டர் க்கு தான்.. அவரிடம் நான் கற்றது ஒன்றும் இல்லை.. ஆனால் அவரை பார்த்தது வியந்த தருணங்கள் பல உண்டு.. அவ்வளவு பெரிய நூற்பாலையில் என்காலடி படாத இடங்களையே இருக்காது.. ஓவ்வொரு இயந்திரம் என்னை பார்க்கும் போதும், என் மனதில் ஏற்படும் துள்ளலை வார்த்தைகளால் சொல்ல முடியாது..
நிச்சயம் இந்த தொழிற்ச்சாலை அனுபவம் ஒரு புது விதமாக இருந்து இருக்கும்.. கோவையில் பயணம் மேற்கொள்ளும் போது பல மூடிய தொழிற்சாலைகளின் சிதிலங்களை காணும் போது, மனதின் ஓரத்தில் ஏற்படும் வலியை சொல்ல முடியாது.. எத்தனை நிறுவனங்கள்.. கணக்கில் அடங்காது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
நான் இதுவரை பெரிய தொழிற்சாலை பார்த்துள்ளேன் என்றால், அது சக்தி சர்க்கரை ஆலை. சர்க்கரை எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை நேரில் கண்டேன்.
நீங்க கூறியபடி பிரம்மாண்டமாக இருந்தது 🙂 .
அடுத்ததாக நான் செல்லப்போகும் இடம் நீங்கள் விரும்பிய இடம். அக்னி இரும்பு தொழிற்சாலை. பல காலமாகச் செல்ல வேண்டும் என்று இருந்து பல்வேறு காரணங்களால் செல்ல முடியவில்லை.
தற்போது உரிமையாளர்களில் ஒருவரான தங்கவேல் உடல்நிலை சரி இல்லாமல் இருந்து தற்போது தேறி வருகிறார். அவர் சரியானவுடன் அவருடன் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
அங்கே சென்று அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்பது பல வருட விருப்பம்.