திருப்பதி என்றால் லட்டு & மொட்டை தான். துவக்கத்தில் லட்டை கைகளால் உருட்டிச் செய்து கொடுத்தார்கள் ஆனால், நாளடைவில் தேவையானது கட்டுக்கடங்காமல் சென்றதால், இயந்திரம் மூலம் செய்கிறார்கள்.
எனவே, சுவை நன்றாக இருந்தாலும், அதனுடைய அளவு குறைந்து விட்டது, வடிவமைப்பும் இளகி விட்டது. எனவே, விரைவில் உடைந்து விடுகிறது. Image Credit – https://newswen.in/
லட்டை கொடுக்க மட்டும் 60 க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் உள்ளன ஆனால், அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இவ்வளவுக்கும் நாங்கள் சென்ற நாள் கூட்டமில்லை.
முக்கியமான நாளில் சென்றால், லட்டு வாங்கி வெளியே வரும் போது அது பூந்தியாகத் தான் இருக்கும் 🙂 . நெரிசலில் நம்மைப் பிதுக்கி எடுத்து விடுவார்கள்.. யம்மாடி!
சாதாரண நாளில் ஒரு நாளைக்குக் குறைந்தது 50,000 – 1,00,000 பேர் வருகிறார்கள். அனைவரும் குறைந்தது இரண்டு லட்டு வாங்குவார்கள்.
ஒரு நாளைக்குத் தோராயமாகக் குறைந்த பட்சம் 2,00,000 என்றால் அதற்குத் தேவைப்படும் மூலப்பொருள், செய்யத் தேவைப்படும் பணியாளர்கள், இவையல்லாமல் மற்ற உணவுப் பொருட்கள் என்று கணக்கு போட்டால் கிறுகிறுக்கிறது.
பணியாளர்கள் எண்ணிக்கை
இவ்வளவு பேரை எப்படிச் சமாளிக்கிறார்கள்? எப்படிப் பணியாளர்கள் அனைவரையும் வழி நடத்துகிறார்கள்? என்று கணக்கு போட்டால், மலைப்பாக உள்ளது. இதைப் பற்றி எழுதினாலே பல கட்டுரைகள் எழுதும் அளவுக்குத் தகவல்கள் உள்ளது.
ஒரு மாதம் பணியாளர்களுக்கு மட்டுமேயான ஊதியமே பல கோடிகளில் இருக்கும்!
திருப்பதியில் பெருமாளைப் பார்க்கத்தான் கூட்ட நெரிசல் என்றால், உண்டியலில் காணிக்கை செலுத்தவும் அடிதடியாக உள்ளது 🙂 .
அனைத்து இடங்களிலும் குடி தண்ணீர் உள்ளது, கழிவறைகள் உள்ளது. இவை முக்கியத்தேவை என்பதை உணர்ந்து அனைத்து இடங்களிலும் செயல்படுத்தி இருக்கிறார்கள்.
கோவிலின் உள்ளே வரிசையில் செல்லும் போது, அங்குள்ள ஒலிப்பெருக்கிகளில் ஒருவர் ‘கோவிந்தா‘ கோஷம் சொல்கிறார். அதைத் தொடர்ந்து பக்தர்களும் சொல்கிறார்கள். தமிழ் உட்பட பல மொழிகளில் கூறுகிறார், இவ்வாறு அறிவிப்பு செய்பவரின் குரல் நன்றாக இருந்தது.
தமிழில் ‘சத்தம் போட்டுச் சொல்லுங்க.. சந்தோசமா சொல்லுங்க..‘ கோவிந்தா கோவிந்தா என்கிறார் 🙂 . தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், தமிழ் அறிவிப்புகள் அனைத்துப் பகுதிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
அன்னதானம்
அன்னதானம் தொடர்ந்து அனைவருக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான பேருக்கு வழங்கினாலும் தரம் மோசமில்லை என்று கூறினார்கள். நான் சாப்பிட்டு பார்க்க விரும்பினேன் ஆனால், நேரம் ஒத்துழைக்கவில்லை.
₹300 கட்டண நுழைவாயிலில் பால், காஃபி, டீ கொடுக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதில் பால் சுவை நன்றாக இருந்தது. கொடுக்கப்படும் காகித கோப்பை சில ஓட்டையாக உள்ளதால், பால் சிந்துகிறது ஆனாலும், அதையும் துடைத்துக்கொண்டே தான் உள்ளார்கள்.
சென்னையில் இருந்து திருப்பதி 150 கிமீ தூரத்தில் தான் உள்ளது ஆனால், மோசமான சாலை காரணமாகத் தூரமாகச் செல்வது போல உணர்வு.
மொழி வாரியாகப் பிரித்த போது திருப்பதி தமிழ்நாட்டுடன் இணைய இருந்ததாகக் கேள்விப்பட்டதுண்டு. நல்லவேளை திருப்பதி தப்பித்தது.
விமர்சனங்கள் இருந்தாலும், சிறப்பாகப் பராமரிக்கும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு பாராட்டுகள். சேவைகளை மேலும் சிறப்பாகக் கொடுக்க வாழ்த்துகள்.
திருப்பதி செல்ல ₹300 கட்டணத்தில் செல்ல விரும்புவர்கள் https://www.tirumala.org/ தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தங்குவதற்கும் முன்பதிவு செய்யலாம், கட்டணம் மிகக்குறைவு. கூட்டம் அதிகம் என்பதால், ஓரிரு மாதங்கள் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.
இரு பாகங்களாகத்தான் எழுத நினைத்தேன் ஆனால், தற்போது பெரிய கட்டுரைகளைப் படிக்கப் பலரும் விரும்புவதில்லை என்பதால், படிக்க எளிதாக இருக்க பயண அனுபவங்களை நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொண்டேன்.
நான்கு பகுதிகளையும் முழுதாகப் படித்தவர்களுக்கு நன்றி 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
திருப்பதி பயணக் குறிப்புகள் – 1
திருப்பதி பயணக் குறிப்புகள் – 2
திருப்பதி பயணக் குறிப்புகள் – 3
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பயனுள்ள பல குறிப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். முந்தைய பாகங்களையும் வாசித்தேன். 4 முறைகள் சென்றிருக்கிறேன். இந்த வருடம் போகும் ஆசை உள்ளது.
நான் கடந்த மாதம் 20ஆம் தேதி சென்றேன். தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடியும் நேரம் என்றால் கூட்டம் மிகவும் குறைவு என்றார்கள். அதனால் நானும் தப்பித்தேன்.
நீங்கள் குறிப்பிட்ட கோவிந்தா என்று சொல்லச் சொல்லி உற்சாகப்படுத்துபவரின் குரல் நன்றாக உணர்ந்ததை நானும் உணர்ந்தேன்.
ஒரு குழுவாக முன்பதிவு செய்து அதில் மற்றவர்கள் வர முடியாமல் போய்விட்டது. நான் மட்டும் சென்று வந்த பிறகு,
எனக்கு ரயில் டிக்கட், தரிசன டிக்கட் போட்டுக் கொடுத்ததுடன் செலவுக்கு கணிசமாக பணமும் கொடுத்து அனுப்பியவர் ‘‘இத்தனை பேரில் உன் ஒருத்தனை மட்டும்தான் பெருமாள் கூப்பிட்டிருக்கார்’’ என்று சீரியசாகவே சொன்னார் அந்த நண்பர்.
மத்த கோயிலுக்கெல்லாம் நீங்க நினைச்சா போயிடலாம். ஆனா திருப்பதிக்கு மட்டும் அவர் கூப்பிட்டதாத்தான் போகமுடியும் என்று எனக்கு தெரிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
புதிதாக திட்டமிடுபவர்களுக்கு உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
@ராமலக்ஷ்மி போயிட்டு வாங்க. திட்டமிட்டு சென்றால், அலைச்சல் இல்லாமல் இருக்கும்.
@திருவாரூர் சரவணன் நான் வெகு காலத்துக்குப் பிறகு திருப்பதி சென்றேன். திட்டமிட்டு சென்றோம், அனைத்தும் சரியாக அமைந்தது.
நன்றி
நான் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி திருப்பதி சென்று வந்தேன். தரிசனம் முடிந்து வெளியில் வந்ததும் நான் கவனித்தது. பெருமாளை சுற்றி கட்டப்பட்ட கருங்கல் சுவரில் பெரும்பபாலன கற்களில் தமிழ் எழுத்துக்கள் காண முடிந்தது. கிரி நீங்கள் சென்ற சமயம் இதைக் கவனித்தீர்களா. இந்த கோயில் கட்டும் சமயம் தமிழகத்தின் வசம் தான் இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இல்லைங்க.. நான் கவனிக்கலை.
ஆமாம். பிரிக்கும் முன் சென்னை மாகாணத்தை சார்ந்ததாக திருப்பதி இருந்தது.
திருப்பதி சென்னையில் இருந்து 150 கிமீ க்கும் குறைவான தூரத்தில் தான் உள்ளது.