தமிழகத்தில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் பலருக்குத் தெரியவில்லை. எனவே, மோடி என்ன செய்தார்? என்று என்னால் முடிந்தவரை மக்களுக்கு கொண்டு செல்ல எழுத நினைத்ததே இத்தொடர். Image Credit
படிக்கும் பலருக்கு இவ்வளவு நலத்திட்டங்கள், சாதனைகள் உள்ளதா என்று வியப்பாக இருக்கலாம். பெரும்பாலானவை பலருக்குத் தெரிந்து இருக்கும் ஆனால், இப்படி வரிசையாகப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கலாம்.
மோடி
பலருக்கு பாஜக ஆதரவாளனாகத் தான் என்னைத் தெரியும் ஆனால், 2014 க்கு முன்பு வரை அப்படியொரு எண்ணத்தில் இல்லை என்றால் நம்ப கடினமாக இருக்கலாம்.
2014 ல் கூட காங் அரசின் ஊழலைக் கண்டு வெறுத்து, மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில் மோடியை ஆதரித்துக் கட்டுரை எழுதினேன்.
அக்கட்டுரையில், நான் உட்படக் கருத்திட்ட பலரும் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று நினைத்தோம். அதோடு அது தான் சரியென்றும் நினைத்தேன்.
காரணம், தனிப்பெரும்பான்மை பெற்றால், மோடி அரசு கட்டுப்பாடற்றதாக மாறி விடும் என்ற எண்ணத்தில் ஆனால், தனிப்பெரும்பான்மை இருந்தாலே பல திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது என்பதைத் தற்போது உணர முடிகிறது.
2014 ல் ஒரு மாற்றுக் கட்சியாக பாஜகவைக் கருதிய என்னை, பாஜகவை விட்டால், வேறொரு சிறந்த கட்சி இந்தியாக்கு இல்லையெனும் அளவுக்குத் தனது செயல்பாடுகளால் கடந்த 10 வருடங்களில் மோடி ஈர்த்து விட்டார்.
1st Term 2014 – 2019
மோடியை மிக மிகக் குறைத்து மதிப்பிட்டு விட்டேன்.
துவக்கத்தில் இந்தியை அதிகம் நுழைத்து எரிச்சலைச் சம்பாதித்தார், அதோடு பல அரசு இந்தி விளம்பரங்கள் செய்தித்தாளில் வந்து கடுப்பைக் கிளப்பியது.
இவையல்லாமல், சில இடங்களில் பக்குவம் இல்லாமல் நடந்து கொண்டார். இதனாலும், அவசரப்பட்டு ஆதரித்து விட்டோமோ என்று நினைத்தேன்.
ஆனால், இவையெல்லாம் முதல் 6 அல்லது 10 மாதங்கள் தான்.
அதன் பிறகு ஆரம்பித்த அதிரடியை மோடி இன்றுவரை நிறுத்தவில்லை, இவருடைய முன்கூட்டிய செயல்திட்டங்களின் யோசனை பிரமிக்க வைக்கிறது.
முதலில் அவர் கொண்டு வந்த ஜன்தன் வங்கிக்கணக்கு, இந்தியாவின் நிதி கணக்குகளை முறைப்படுத்த எடுக்கப்பட்ட ஆகச்சிறந்த செயல் வடிவம். இன்றைய டிஜிட்டல் இந்தியாவின் முன்னோடி.
அதன் பிறகு அவர் கையில் எடுத்தது ஆதார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு கட்டாயமாக்கினார். கடும் எதிர்ப்புகள், சர்ச்சைகள் இருந்தாலும், செயல்படுத்தினார்.
UPI டிஜிட்டல் இந்தியாவின் மைல் கல்லானது. நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை GST மூலம் தடுத்து, வெளிப்படைத்தன்மைக்குக் கொண்டு வந்தார்.
செயல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பல போலி நிறுவனங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது, வருமானவரி + GST புதிய எழுச்சியை பெற்றது.
ஆதார் மூலம் 10 கோடி போலிக் கணக்குகள் நீக்கப்பட்டன.
அடிப்படையே தவறாக இருந்தால், எந்தத் திட்டங்களையும் நேர்மையாக, மக்களுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல முடியாது.
எனவே, முதல் ஐந்து வருடங்கள் இந்தியாவின் அடிப்படை நிர்வாகப் பிரச்சனைகள், நிதிப்பிரச்னைகள் முறைப்படுத்தப் பட்டது.
2nd Term 2019 – 2024
முதல் ஐந்து வருடங்களில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக, நிதி சீர்திருத்தங்கள் வாயிலாக மக்களுக்கான பயன்கள் நேரடியாக சென்றடைந்தன.
இதன் பிறகு செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான நிதி இடைநிலையில் யாரும் திருடாமல் முழுப்பணமும் மக்கள் வங்கிக்கணக்கை சென்றடைந்தது.
Make In India திட்டம் (2014) அறிமுகப்படுத்தட்ட போது பலரால் கிண்டலடிக்கப்பட்டது, எனக்கும் பெரிய நம்பிக்கையில்லை. காரணம், பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை ஆனால், 2nd Term ல் அசுர வளர்ச்சி.
இந்தியாவின் வளர்ச்சியையே Make In India திட்டம் புரட்டிப்போட்டு தொழில் வளர்ச்சியைப் பல மடங்கு உயர்த்தி விட்டது.
உலகமே கோவிட் பிரச்சனையில் திணறித் தவித்த போது இந்தியா அதைத் திறம்பட சமாளித்தது. இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, மேலும் 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியது.
இதை இன்றும் பல நாடுகள் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றன.
கோவிடால் பொருளாதாரம் சிக்கலான போது முன்னாள் RBI ஆளுநர் ரகுராம் ராஜன் உட்படப் பலரும் ரொக்கத்தை அச்சிட வலியுறுத்திய போது அந்த யோசனையை மறுத்து உட்கட்டமைப்புக்குச் செலவு செய்தது அரசு.
இதன் மூலம் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தியதோடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்கி வருகிறது.
பொருளாதார சாதனைக்கு காரணமானவர் நிர்மலா சீதாராமன்.
சிறப்பான வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் அதைச் சிறப்பாகக் கொண்டு செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களால், இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.
தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறப்பட்ட Article 370, CAA போன்றவற்றைச் செயல்படுத்தி பாதுகாப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டது.
உட்கட்டமைப்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டது இக்காலத்தில் தான். நெடுஞ்சாலை, ரயில்வே துறை மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டது.
3rd Term 2024 – 2029
நிதி நிர்வாகத்தை (ஜன்தன், UPI, ஆதார், GST) சீர்படுத்தியாகி விட்டது, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு (Make Ind India) வெற்றிகரமாக முதலீடுகளைப் பெற ஆரம்பித்து விட்டது.
உட்கட்டமைப்பான போக்குவரத்து (சாலை, ரயில்) துறையில் ஏராளமான மாற்றங்கள். இராணுவத்தில், ISRO துறைகளில் வியத்தகு சாதனைகள்.
அப்படியென்றால், 3rd Term என்னவாக இருக்கும்?
உண்மையிலேயே மிக ஆர்வமாக இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகளைச் சரி செய்து, பொருளாதாரத்தை உயர்த்தி விட்டார்கள்.
பொருளாதாரத்தில் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது. கற்பனை செய்தியல்ல, செய்திகளின் அடிப்படையிலே கூறப்பட்டுள்ளது.
பின் வரும் செயல்பாடுகளை 3rd Term ல் எதிர்பார்க்கிறேன்.
- பிரிவினைவாதிகளுக்கு எதிரான கடுமையான சட்டம், நடவடிக்கைகள்.
- UCC அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துவது.
- கள்ளப்பணத்தைத் தடுக்க ₹500 நோட்டை தடை செய்ய நடவடிக்கை எடுப்பது.
- நதிநீர் இணைப்புத்திட்டம் செயல்படுத்துவது.
- NRC, NPR காலதாமதம் இல்லாமல் செயல்படுத்தப்படுவது.
- உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துதல்.
- ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைத்து மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிப்பது.
- நீதித்துறை சீர்திருத்தம்.
- மத ரீதியாக இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் அந்நிய நாடுகளின் செயல்களை மேலும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்குவது.
- அரசுச் சேவைகளை 100% மின்னணு மயமாக்குவது.
மோடியின் முன்கூட்டிய திட்டங்கள்
மோடி அரசு பல காலங்களுக்கு பின்னால் தேவைப்படும் திட்டங்களை முன் கூட்டியே யோசித்து செயல்படுத்துகிறது.
எளிமையாக புரிந்து கொள்ள ஜன்தன் வங்கிக்கணக்கை கூறலாம்.
2014 ஆண்டு கட்டுரையில் கருத்திட்டவர் “2025-ல் முதல் புல்லட் ரயில் ஓடும் என்கிறார்கள். லாலு ஊழல்வாதி என்று சொனாலும் அவர் ரயில்வேயை எப்படி லாபகரமாக நடத்தினார்?’ என்று விமர்சித்து இருந்தார்.
Page Experience காக சில கட்டுரைகளை நீக்கிய போது இக்கட்டுரையும் நீக்கப்பட்டு விட்டது ஆனால், அவர் கருத்திட்ட மின்னஞ்சல் உள்ளது.
இன்று இது நிஜமாகப்போகிறது. எப்படி 10 வருடங்களுக்கு முன்பே கூறினார்கள்? திட்டமிட்டார்கள்?! திட்டமிட்டதோடு அதைச் செயல்படுத்தவும் போகிறார்கள்.
2025 ல் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் உண்மையாகவே ஓடப்போகிறது.
தொடர்
இனி வரும் கட்டுரைகள் இதுவரை மோடி அல்லது காங் கொண்டு வந்த திட்டங்களை மேம்படுத்தியது தொடர்பாகச் சிறிய விளக்கத்துடன் எழுதுகிறேன்.
புள்ளி விவரங்களைத் தவிர்க்கிறேன் காரணம், இது அறிமுகம் மட்டுமே!
சீரான இடைவெளியில் புள்ளி விவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, அதை ஒவ்வொரு முறையும் இங்கே புதுப்பிப்பது எளிதல்ல.
எனவே, என்னென்ன நலத்திட்டங்கள், சாதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான அறிமுகத்தொடர் மட்டுமே!
இந்தியாவின் மாற்றத்துக்கு, வளர்ச்சிக்கு உதவிய திட்டங்களை மேலும் பலருக்குக் கொண்டு செல்வது தார்மீகக் கடமையாகக் கருதுகிறேன்.
நான் எழுதுவதில் எந்த மிகைப்படுத்தலும், பொய்யும் இல்லையென்று உறுதியளிக்கிறேன்.
ஒருவேளை தவறு சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக்கொள்கிறேன். Let’s start!
தொடர்புடைய கட்டுரைகள்
மோடி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன்! ஏன்? (2014)
மோடியை குறைத்து மதிப்பிடாதீர்கள்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
சில அறியாத தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின்
மேலும் சில தகவல்களை அடுத்த பாகங்களில் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.