Dhootha (2023) Series | ஏன்? எப்படி? எதனால் நடக்கிறது?

3
Dhootha

துப்பறியும் கதையில் பேயும் கலந்து பயணிப்பதே Dhootha. Image Credit

Dhootha

செய்தியாளரான நாக சைதன்யா, பிரியா பவானி ஷங்கர் கணவன் மனைவி. ஒரு நிகழ்ச்சியில் கலந்து வீட்டுக்குத் திரும்புகையில் காரில் பெட்ரோல் தீர்ந்து விடுகிறது.

இதனால், காரை நிறுத்தி உதவிக்கு நண்பரை அழைக்கிறார்கள். இந்நேரத்தில் அருகிலிருக்கும் கடைக்குச் செல்லும் நாக சைதன்யா காத்திருக்கும் நேரத்தில் ஒரு செய்தி துண்டுக் காகிதம் கண்ணில் படுகிறது.

ஒரு ஆர்வத்தில் அதைப்படிக்க, அதில் சைதன்யா காரில் ஒரு லாரி மோதி, அதிலிருக்கும் நாய் இறந்து விடும் என்று தேதி, நேரம், நொடி, கடையின் பெயர் முதற்கொண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அதிர்ச்சியாகும் நாக சைதன்யா நேரத்தைப் பார்க்க, சில நொடிகளே இருக்கும் நிலையில் தடுக்க முயலும் போது கார் மோதி விடுகிறது.

தனக்கு நடக்கப்போவது எப்படி முன் கூட்டியே செய்தியில் வந்தது என்று குழம்பும் போது தொடர்ச்சியாக இது போன்று சம்பவங்கள் நடைபெறுகிறது.

எதனால், இவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆராயும் போது இறுதியில் அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது.

இறுதியில் என்ன ஆனது என்பதே Dhootha.

நாக சைதன்யா

செய்தியாளரான நாக சைதன்யா, நீதி நேர்மை எல்லாம் கிடையாது. பணத்துக்காக எதையும் எழுதக்கூடியவர், எழுதாமல் தவிர்க்கக்கூடியவர்

ஆனால், பல இளையோருக்கு விருப்ப ஊடகவியலாளர்.

இவர் வளர்ச்சி, பல நிறுவனங்களை உடனுக்குடன் தாண்டி, அரசியல்வாதிகள், பெரிய நிறுவனங்களைக் கைக்குள் போட்டுக்கொள்வது என்று செயல்படுபவர்.

நாக சைதன்யா வயதானாலும், சித்தார்த் போல வயது குறைவானவர் போலவே இருப்பது இக்கதாபாத்திரத்துக்கு ஒரு குறையாக உள்ளது.

பேசும் போது அப்படியே அவர் அப்பா நாகார்ஜுனாவை நினைவுபடுத்துகிறார்.

தனக்கு மட்டும் தான் இப்படி நடக்குது என்று நினைத்தால், இன்னொருவருக்கும் இதே போல நடப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார்.

தனது காரின் மீது விபத்தை ஏற்படுத்தியவரை காவல்துறையில் விசாரிக்க அழுத்தம் கொடுக்க, அது பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகி விடுகிறது.

இதை விசாரிக்க வரும் அதிகாரியாக பார்வதி (மலையாள நடிகை), எடை கூடி ஆளே மாறி விட்டார். அலட்டிக்கொள்ளாமல் விசாரணை நடத்துவது ரசிக்கும் படியுள்ளது.

பரபரப்பு இல்லாமல் விசாரிக்கும் இவரை வேறு எந்த மேல் அதிகாரியும் எந்தக் கேள்விகளும் கேட்பதில்லை, இவர் மட்டுமே விசாரணை செய்துகொண்டுள்ளார்.

ப்ரியா பவானி சங்கரும் செய்தியாளர் ஆனால், அவர் பகுதி எதுவும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

திரைக்கதை

ஆரம்பித்ததிலிருந்து இறுதி வரை ஒவ்வொரு பாகமும் பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் சம்பவம் எப்படி முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது என்ற குழப்பம் இறுதி வரையுள்ளது, அந்த ஆர்வத்தை கடைசிவரை கொண்டு சென்றது சிறப்பு.

இதை ஏன் செய்யவில்லை? இதற்காகச் செய்து இருக்கலாமோ! என்ற கேள்விகள் இறுதிவரை வந்து கொண்டே உள்ளது.

இறுதியில் உண்மை தெரிந்தும் நாக சைதன்யா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற சில விடை தெரியாத கேள்விகள்.

ஒரு வாரத்தில் நடக்கும் சம்பவம் போல எடுக்கப்பட்டுள்ளது, ஒரு வாரம் முழுவதும் மழையிலே எடுத்துள்ளார்கள். எப்படி எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

மழை பெய்யும் காலத்தில் எடுத்து விட்டார்களா? கிராபிக்ஸ் செய்து விட்டார்களா? என்ற சந்தேகம். செயற்கை மழை என்றால், இதற்கு தான் செலவே ஆகி இருக்கும்.

பார்க்கும் போது நமக்கே குளிருகிறது 🙂 .

பசுபதி பிளாஷ்பேக் காட்சிகள் நன்றாக உள்ளது, ஒளிப்பதிவில் காட்சியமைப்புகளில் பழைய காலத்தைச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்கள் வாகனங்கள் உட்பட.

பாதிக்கப்படுபவர்கள் எல்லோருமே ஊடகத்துறையாக இருப்பார்கள். அதற்குக் காரணமாக இருக்கும் பேய், நம்ம தமிழகத்தில் ஒரு சுற்று வந்தால் நன்றாக இருக்கும்.

யார் பார்க்கலாம்?

த்ரில்லர், துப்பறியும் படங்களை விரும்புபவர்கள் பார்க்கலாம். கர்ப்பமாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

படங்கள் வரிசையாகத் தோல்வி அடைந்த வந்த வேளையில், நாக சைதன்யாக்கு இது வெற்றியாக அமைந்ததில் மகிழ்ச்சியாகி இருப்பார்.

பரிந்துரைத்தது ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.

Amazon Prime ல் காணலாம், தமிழிலும் உள்ளது.

Created by Vikram Kumar
Written by Vikram Kumar, Venkat D. Pati, Poorna Pragna, Sripal Reddy, N. G. Thomas, Venkatesh Dondapati
Directed by Vikram K. Kumar
Starring Naga Chaitanya, Srikanth Murali, Parvathy Thiruvothu, Prachi Desai, Anish Kuruvilla, Tharun Bhascker, Rohini, Tanikella Bharani, Priya Bhavani Shankar, Pasupathy
Composer Ishaan Chhabra
Country of origin India
Original language Telugu
No. of seasons 1
No. of episodes 8
Cinematography Mikolaj Sygula
Editor Naveen Nooli
Running time 43–53 Minutes
Original release Network Amazon Prime Video
Release 1 December 2023

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. பையனுக்குத் தேர்வு என்பதால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொலைக்காட்சியே பார்க்கவில்லை.

    தற்போது குடும்பத்தினர் விடுமுறையில் ஊருக்குச் சென்று விட்டதால், இனி அதிக படங்களைப் பார்க்கலாம்.

    அதையொட்டி விமர்சனங்களும் அதிகம் வரும் 🙂 .

  2. கிரி.. தனிப்பட்ட முறையில் எனக்கு நாகசைதன்யா / சித்தாத் இருவரின் நடிப்பின் மீது ஈர்ப்பு மிகவும் குறைவு.. நாகசைதன்யாவின் மிக குறைவான படங்கள் மட்டும் பார்த்து இருக்கிறேன்.. இருவர் முகத்திலும் expressions இயல்பாக இருக்காது.. குறிப்பாக சிதார்த்.

    ஆனால் ரங் தே பசந்தி படத்தில் தான் கதாபாத்திரத்தை நன்றாக செய்து இருப்பார்.. இன்னும் இவர் சில காட்சிகளை காணும் போது பாய்ஸ் படத்திலிருந்து இன்னும் வெளியில் வரவில்லை என்றே தோன்றும். வெகு சமீபத்தில் chai with chitra இவரின் நேர்காணலை காணும் போது ” எப்பா முடியல??”..

    பொதுவாக ஹாரர் படங்களின் மீது ஈடுபாடு மிகவும் குறைவு.. அதிலும் குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் உள்ள படங்களை முற்றிலும் தவிர்த்து விடுவேன்.. இந்த படத்தை வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்க முயல்கிறேன்..

    அதையொட்டி விமர்சனங்களும் அதிகம் வரும் – உங்கள் விமர்சனத்துக்குக்காக காத்திருக்கிறோம் கிரி.

  3. @யாசின்

    “தனிப்பட்ட முறையில் எனக்கு நாகசைதன்யா / சித்தாத் இருவரின் நடிப்பின் மீது ஈர்ப்பு மிகவும் குறைவு”

    எனக்கும்.

    “இருவர் முகத்திலும் expressions இயல்பாக இருக்காது.. குறிப்பாக சிதார்த்.”

    சரியாக கூறினீர்கள். இவருடைய சமீபத்திய படம் சித்தா நன்றாக இருப்பதாக கூறினார்கள், நான் பார்க்கவில்லை.

    “வெகு சமீபத்தில் chai with chitra இவரின் நேர்காணலை காணும் போது ” எப்பா முடியல??”..”

    நான் பார்க்கவில்லை.. தன்னை புத்திசாலியாக நினைத்துப் பேசுவார். அது தான் பிரச்சனை.

    “பொதுவாக ஹாரர் படங்களின் மீது ஈடுபாடு மிகவும் குறைவு.”

    வழக்கமாக ஹாரர் படங்கள் என்றால், பேய் படங்களையும் சேர்த்தே கூறுவார்கள் ஆனால், எனக்கு ஹாரர் படம் என்றால், Hostel மாதிரியான படங்கள். பேய் படங்கள் Ghost movies என்றே பிரித்துப் பார்ப்பேன்.

    எனக்கு ஹாரர் படங்களில் ரொம்ப விருப்பம்.

    “குறிப்பாக கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் உள்ள படங்களை முற்றிலும் தவிர்த்து விடுவேன்.”

    எனக்கும் இதில் ஆர்வம் இருந்ததில்லை.. அவதார் போன்று சில படங்கள் தவிர்த்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here