மகளுக்கு வில்லியாகும் அம்மாக்கள்

5
மகளுக்கு வில்லியாகும் அம்மாக்கள்

மீபமாகத் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கியக்காரணமாகப் பெண்ணின் அம்மாக்கள் மாறி வருகின்றனர். Image Credit

திருமண முறிவு

திருமண முறிவு என்பது ஒன்றுமில்லாத சப்பை காரணங்களுக்காகக் கூட நடைபெறுகிறது. சில காரணங்களைக் கேட்டால், கிறுகிறுத்து விடும்.

இதற்கெல்லாமா விவாகரத்து செய்வார்கள்! என்று யோசிக்கும் அளவுக்குச் சில விவாகரத்து காரணங்கள் உள்ளன.

இவை பற்றி இன்னொரு கட்டுரையில் பின்னர் காண்போம். தற்போதைய காரணமாக உள்ள பெண்ணின் அம்மாக்கள் பற்றிக் காண்போம்.

பெண்ணின் அம்மா

கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது. இதைக்கடக்காத எந்த ஒரு தம்பதியும் இருக்க மாட்டார்கள்.

ஆனால், பண்டை காலம் முதல் குற்றச்சாட்டாகக் கூறப்படுவது, மகளுக்கு அதையும் இதையும் கூறி மகளின் மனதை கெடுக்கும் அம்மாக்கள்.

சுருக்கமாக, இயல்பாக இருந்தவர் அம்மா வீட்டுக்குச் சென்று வந்த பிறகு அவரின் நடவடிக்கையில், பேச்சில் சில நாட்களுக்கு மாற்றம் இருக்கும்.

இது சரியாக ஓரிரு வாரங்கள் ஆகும்.

கணவனைக் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும், இதைச் செய்ய விடாதே, இப்படி நடந்து கொள் என்று கூறி மகளின் மனதைக் கெடுத்து விடுவார்கள்.

இதற்கு ஒரு காரணம், இக்காரணங்களால் இவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம், அதனால் தன் மகளும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

ஆனால், ஒரு பிரச்சனை என்று வந்தால், மகளிடம் பக்குவமாகக் கூறி சமாதானம் செய்து அனுப்புவதே நல்ல அம்மாக்கு அழகு ஆனால், இவர்கள் அதில் பெட்ரோல் ஊற்றி விடுகிறார்கள். விதிவிலக்குகள் இதில் வராது.

மகளின் மனதைக் கெடுத்து, நீ விட்டுத்தரக் கூடாது என்று அவரது மனதில் ஈகோவை வளர்த்து, பிரச்சனையைப் பூதாகரமாக்கி விடுகிறார்கள்.

எனக்குத் தெரிந்தே பலரின் மணமுறிவுக்குப் பெண்ணின் அம்மாக்கள் தான் வில்லியாக இருந்துள்ளார்கள்.

பொருளாதாரக் காரணம்

முந்தைய காலத்தில் மகளுக்குப் போட்டுக்கொடுத்து பிரச்சனை வளரச் செய்தவர்கள், தற்காலத்தில் விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம், பொருளாதாரம்.

திருமணம் நடந்த பிறகு பெற்றோருக்கு மகளிடமிருந்து வரும் வருமானம் நின்று விடுவதால், தங்களை பார்த்துக்கொள்ள முடியாது என்பதாலும் இது போன்று சிலர் செய்கிறார்கள்.

முன்பு பலர் விவசாயத்தில் இருந்தனர், கூட்டுக்குடும்பமாக இருந்தனர். எனவே, இதுவொரு பிரச்சனையாக இல்லை ஆனால், தற்போது சூழல்கள் மாறி விட்டது.

வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள மகள் வேண்டும் என்பதற்காகவும் பிரிவை ஏற்படுத்தி விடுகிறார்கள் அல்லது ஏதாவது காரணம் கூறி மகளைத் தங்களுடனே வைத்துக்கொள்கிறார்கள்.

தவறான வழிகாட்டல்

அவன் இல்லைனா என்ன? நீ சம்பாதிக்கிறாய், உன்னால் சமாளிக்க முடியும் என்று மகளின் மனதைக் குழப்பி விவாகரத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

தன் நல்லதுக்குத் தானே சொல்கிறார்கள் என்று மகளும், தன் வாழ்க்கையைத் தொலைத்துப் பல காலங்களுக்கு பிறகே தான் செய்தது தவறு என்று உணர்கிறார்கள் ஆனால், காலம் கடந்ததாகி விடுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மகன் திருமணமாகிச் சென்று விட்டால், எப்படிச் சமாளிப்பது என்று திருமணத்தைத் தள்ளிப்போடும் பெற்றோரின் கொடுமையும் நடக்கிறது.

வயது காரணமாகப் பின்னர் பெண் கிடைப்பது சிக்கலாகி விடுகிறது. இதனால் தள்ளிச் சென்று வயது காரணமாக, திருமணமே கனவானவர்களும் உள்ளனர்.

இவற்றை மிகைப்படுத்தப்பட்ட செய்தியாக நினைத்து விடாதீர்கள். பலரின் உண்மைக்கதை இது.

இயல்பானதே

தம்பதியினரிடையே மனத்தாங்கல், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது. இப்பிரச்சனை உலகம் முழுக்க நடப்பதே!

எனவே, இதில் மூன்றாம் நபரை அனுமதிக்காமல் இருப்பது நல்லது, அல்லது இவர் கூறினால் சரியான அறிவுரையாக இருக்கும் என்று கருதும் நபரிடம் ஆலோசனை கேட்கலாம்.

அனைவரும் நினைப்பது போலச் சிக்கல்கள் இல்லை, சிலரது விதிவிலக்காக இருக்கலாம், அதை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

ஈகோ, பிடிவாதம் மற்றும் கோபம் தான் பலரின் வாழ்க்கை சீரழிவதற்குக் காரணம். உசுப்பேற்றும் நண்பர்களையும் தவிர்ப்பது நல்லது.

அனைவருக்கும் பெற்றோர் முக்கியம் தான் ஆனால், அவர்களே வில்லன்களாகும் தருணமும் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து கொள்வது நல்லது.

புரிதலைக் கொடுங்கள்

முதல் மூன்று / ஐந்து வருடங்களைக் கடந்து விட்டால், வாழ்க்கையில் புரிதல்கள் கிடைக்கும். இதுவே பழகி விடும் என்று கிண்டலாகக் கூறப்பட்டாலும், இதில் பெருமளவு உண்மை அடங்கியுள்ளது.

துவக்கத்தில் அனைவருக்குமே எதோ ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்து விடலாம் என்று தோன்றியிருக்கும் ஆனால், கால மாற்றத்தில் நாம் நினைத்தது எவ்வளவு முட்டாள்தனமானது என்று புரியும்.

ஆனால், பெரும்பாலானவர்கள் இப்புரிதல் கிடைக்கும் மூன்று / ஐந்து வருடங்களுக்கு முன்பே பிரிந்து விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

பிரச்சனைகள் இல்லாத வீடில்லை. எனவே, அனுசரித்துச் சென்றால் மட்டுமே வாழ்க்கை. சிறு பிரச்சனைக்கு, சண்டைக்குக் கூட விவாகரத்து என்று செல்வது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

மேற்கூறியவை இயல்பான பிரச்சனைகளுக்கு மட்டுமே! சிலருக்கு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சனைகளாக இருக்கலாம், அவற்றுக்கு மனநல ஆலோசனை, சகிப்பைத் தாண்டி விவாகரத்து தவிர்க்க முடியாததாக இருக்கும்.

கொசுறு

ஒருவர் வந்து எதோ மன ஆறுதலுக்காக உங்களிடம் அவரது கஷ்டத்தைக் கூறினால், அதை மேலும் உசுப்பேற்றி அவரது வாழ்க்கையை நாசமாக்கி விடாதீர்கள்.

மனம் விட்டுப் பேசினாலே பல பிரச்சனைகள் சரியாகி விடும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. கிரி.. பதிவை முழுவதும் படித்த பிறகு என் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை நான் பகிர விரும்புகிறேன்..

    ஒரு கட்டத்தில் திருமணமே வேண்டாம்.. வாழ்க்கையை இப்படியே தனியாவே வாழ்ந்து விடலாம் என்ற போக்கில் தான் சில ஆண்டுகள் இருந்தேன்.. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த போது, ஒரே ஒரு விஷியத்தில் மட்டும் உறுதியாக இருந்தேன்.. திருமணம் செய்ய போகும் பெண்ணுடன் கண்டிப்பாக நிச்சயத்துக்கு முன் பேச வேண்டும் (காரணம் என் நண்பர்கள் வட்டத்தில் (கல்லூரி, உறவினர்) திருமணமாகி சில நாட்களிலே கருத்து வேறுபாட்டால் சில குடும்பத்தில் பிரச்சனையாகி இருந்தது..அதிலும் குறிப்பாக என் நெருங்கிய நண்பனுக்கும் திருமணமாகி இதே பிரச்சனை..

    ஒரே காரணம் என்னை பற்றி முழுமையாக பெண்ணிடம் கூற வேண்டும்.. கடந்த காலம், நிகழ்காலம் எல்லாவற்றையும்.. அது போல பெண்ணை பற்றியும் எனக்கு தெரியவேண்டும்.. இருவரும் ஓகே என்றால் தான் திருமணம்.. இல்லை ஏதாவது பழைய லவ் கிவ்க்கு இருந்தால், நம்ம கை காச போட்டாவது கல்யாணத்த செஞ்சி வச்சிடலாம், (இத்தனை வருடங்கள் லைப் ல பெரிய அளவில் சந்தோஷம் இல்லனாலும் தனியா நிம்மதியா இருக்குறன்.. இந்த நிம்மதியும் போயிடுச்சினா, லைப் ல எல்லாம் ஜீரோவாகி போயிடும் என்பதால்) ஒரு நிபந்தனையில் உறுதியாக இருந்தேன்..

    எங்கள் உறவினர் இல்லாத தெரியாத குடும்பத்தில் வெகு தொலைவில் ஒரு பெண்ணை பார்க்க போகிறோம் என்று கூறி கிளம்பி போன என் குடும்பம் & உறவினர்கள், பெண்ணை ஓ.கே செய்து விட்டு தான் என்னிடமே கூறினார்கள்.. நான் பெண் பார்க்க தானே போனனீங்க??? இப்ப ஓகே ஆகிடுச்சினு சொல்லறீங்கன்னு!!! என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தெரியாத சூழலில், குழப்பத்தில் எனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறி விட்டேன்.. வீட்டில் எல்லோர்க்கும் அதிர்ச்சி. நம்ம சொந்தக்கார பய புள்ளைங்க, சோத்துல வேற கைய வச்சிட்டு வந்துட்டாங்க வேற!!!

    (ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க செல்லும் போது, இன்பமாக இருந்த மனநிலை பெண்ணை முடிவு செய்து விட்டேன் என்ற போது துன்பமாகி போனது.. என் நிபந்தனை தான் காரணம்).. வேறு எந்த பெண்ணை பார்க்கும் மனநிலையில் வீட்டில் யாரும் இல்லை.. எனக்கும் திருமணமே வேண்டாம் என்ற எண்ணத்தில் நானும் வந்து விட்டேன்..

    இப்படியே 4 / 5 மாதம் சென்ற நிலையில், மிகவும் நெருங்கிய நண்பனின் (நாங்க ரெண்டு பேரும் தான் இந்த நிபந்தனை வேணுமுன்னு பேசி வச்சி இருந்தோம்) திருமணம் முடிவான போது, நான் SHORT விடுமுறையில் அவன் திருமணத்தில் கலந்து கொள்ள ஊருக்கு சென்றேன்.. நான் ஏன் என் திருமணதிற்கு சம்மதிக்கவில்லை (பெண்ணை நிராகரித்த காரணத்தை) என் நிலைப்பாட்டை என் பெரியப்பா பையனிடம் (அவனுக்கு திருமணமாகி இருந்தது) கூறி இருந்தேன்.. இது ஒரு சப்பை மேட்டர்னு, அவன் உடனே என் நண்பனின் தந்தையிடம் கூறி மீண்டும் முன்பு பார்த்த பெண்ணை திருமணம் செய்ய நான் ஓகே என்று சொல்லி விட்டேன் என்று சொல்லி விட்டான்..

    அவர் என்னிடம் விசாரித்து என் முடிவை கேட்ட போது (குழப்பமான மனநிலையில்,நானும் பெரிய தியாகி போல) தற்போது வரை அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்தேன்.. நிபந்தனை காற்றில் கரைந்து போனது… பல நாட்களாக மனதில் ஒடி கொண்டிருந்த என்ன ஓட்டங்கள் எல்லாம் ஒரு நொடியில் போனது போல ஒரு எண்ணம்.. அதே சமயம் இது தான் வாழ்கையையோ?? என்று தோன்றியது.

    பின்பு பெண் வீட்டில் கேட்ட போது (இன்னும் பெண்ணுக்கு திருமணமாகாததால்) மிகவும் இறுக்கமான சூழலில், அவர்கள் என்னை பார்க்க வருவதாக கூறினார்கள்.. அவர்கள் வந்த போது எந்த பகட்டுமில்லாமல்,(என் தாத்தா,அம்மா, சித்தி, நண்பனின் தந்தை, சில உறவினர்கள்) முன்னிலையில் (குடும்ப நிலையையும், பொருளாதாரத்தையும் குறித்து) உள்ளதை உள்ள படி கூறினேன். அவர்களும் சில தினங்களில் ஓகே கூறி.. உடனே நிச்சயத்துக்கு தேதி குறித்தார்கள்.. அந்த விடுமுறையிலே நிச்சயம் நடந்தது.. அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் என்று முடிவெடுக்கப்பட்டது.. பின்பு எல்லாம் இனிதே நடைபெற்றது.

    திருமணம் நடந்து முடிந்து சில நாட்களில் இவ்வளவு பிரச்சனைகள் போது, என்னை எவ்வாறு உங்கள் வீட்டில் ஓகே செஞ்சீங்க என்று மனைவியிடம் கேட்ட போது, எங்க வீட்டில் யார்க்கும் பெரியதா? அந்த சமயத்தில் உடன்பாடு இல்லை.. ஆனால் எங்க அம்மா (மாமியார்) மட்டும் நீங்கள் அன்றைய தினம் ஓபன் ஆகா பேசியதும், வந்தவர்களிடம் நடந்து கொண்ட விதமும், எல்லாவற்றிக்கும் மேல் நீங்களே வந்தவர்களுக்கு பாய் எடுத்து போட்டு, எல்லா வேலையையும் செய்ததை பார்த்த போதே எங்க அம்மா முடிவு செய்து விட்டார்கள்னு மனைவி கூறினார்கள்.. எங்க வீட்டில் என் தம்பிகள் ஒரு துரும்பை கூட நகர்த்த மாட்டார்கள் என்றார். சில சூழலில் தற்போது வரை மனைவிக்கு புரிய வைப்பதே அவரின் அம்மா தான்..

    இங்கு நான் குறிப்பிட வந்த விஷியம், கணவன் / மனைவி இடையில் வரும் சிறு உரசல்களுக்கு மனைவியின் அம்மா சரியாக இருந்து விட்டாலே 80% பிரச்சனை இருக்காது.. நீங்கள் சொல்வது போல் அம்மாக்கள் சாவி கொடுக்கும் போது தான் பிரச்சனை இன்னும் அதிகரிக்கிறது.. இவர்கள் சரியாக இருந்தால் எந்த பிரச்சனைகளும் இருக்காது.. உண்மையை சொல்ல போனால் 10 / 15 / 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை.. நீங்கள் குறிப்பிடுவது போல பொருளாதார நிலையில் பெண்களும் மேலோங்கி விட்டார்கள்..

    கணவன் / மனைவி பிரச்சனையில் 3 ஆவது நபர்களை என்றுமே அனுமதிக்க கூடாது.. அவர்கள் நமக்கு உதவுவது போல தோன்றினாலும், நாம் சேர்ந்தே விட கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள்.. 3 வது நபரின் சொந்த குடும்பத்திலே வில்லனாக இருப்பார்கள்.. ஆனால் மற்றவர்களின் பிரச்சனையும் போது ஜென்டில்மேன் போன்ற பிம்பத்தை காண்பிப்பார்கள்..

    விரும்பினாலும், விரும்பா விடினும் திருமணம் முதல் காதலை போல நம்மை நோக்கி வரும் என்பது தவிர்க்க இயலாதது.. அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பது அவரவர் கையில் தான் உள்ளது.. உங்களுக்கனான அதே பிரச்சனை எனக்கு ஏற்படாது.. என்னை போல அடுத்தவர்களுக்கு ஏற்படாது.. இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்டாலே வாழ்க்கை வெற்றி தான்!!!!

    தற்போதைய இளைய தலைமுறை வாழ்க்கையை தொடங்கி, அது என்ன வென்றெ புரியும் முன்னரே பிரச்சனை, விவாகரத்து என்று தடம் மாறி விடுகின்றார். கூட்டு குடும்பமாக இல்லாமல் போனதும், நல்ல ஆலோசனைகளை அளிக்க யாரும் இல்லாமல் போனதும் ஒரு காரணமாகும்.. GOOD NIGHT படத்தில் அவர்களின் திருமணம் முடிந்து வரும் காட்சிகளை இயக்குனர் அருமையாக காட்சிபடுத்தி இருப்பார்.. நாயகன் / நாயகி இருவரும் இயல்பாக நடித்து இருப்பார்கள்.. இது வரை பார்க்க வில்லை என்றால் பார்க்கவும் கிரி..

  2. மீண்டும் அருமையான வலைப்பதிவு. யாசினின் கருத்தும் குறிப்பிடத்தக்கது

  3. @யாசின்

    உங்களுடைய அனுபவம் பலருக்கு இருக்கும். அதாவது மறுத்த பெண்ணையே திரும்பத் திருமணம் செய்ய வேண்டிய நிலை 🙂 . இது இருவருக்குமே பொருந்தும்.

    அப்பாவுக்கு கடன் இருந்ததால், எனக்கு பொண்ணே யாரும் கொடுக்க மறுத்து விட்டார்கள். அதனால், நான் தேர்வு செய்யும் நிலையில் இல்லை.

    எல்லாம் முடிந்த பிறகே கூறினார்கள்.

    நானும் உங்களைப்போல மனைவியிடம் பேசினேன். பின்னர் புரிந்தது, அப்போது கேட்பது சம்பிரதாயமாக தான் இருக்கும் உண்மையான பதிலாக இருக்காது என்று.

    யார் என்ன நினைத்தாலும், கடவுள் போடும் முடிச்சு தான் இறுதி.

    “சில சூழலில் தற்போது வரை மனைவிக்கு புரிய வைப்பதே அவரின் அம்மா தான்..”

    இது போன்றவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

    என் மாமியார் அப்படிப்பட்டவர் தான். என் அம்மா அப்படிப்பட்டவர் தான். அக்காக்கள் ஏதாவது கருத்து வேறுபாடு கூறினால், அவர்களுக்கு புரிய வைப்பார்.

    பக்குவமாக எடுத்துக்கூறுவார்.

    ஆனால், கட்டுரையில் கூறியுள்ளதும் உண்மை. இது போன்றவர்களும் உள்ளார்கள். காரணம், நான் பார்த்ததையே எழுதி உள்ளேன்

    “இங்கு நான் குறிப்பிட வந்த விஷியம், கணவன் / மனைவி இடையில் வரும் சிறு உரசல்களுக்கு மனைவியின் அம்மா சரியாக இருந்து விட்டாலே 80% பிரச்சனை இருக்காது.”

    சரியாகக் கூறினீர்கள்.

    “தற்போதைய இளைய தலைமுறை வாழ்க்கையை தொடங்கி, அது என்ன வென்றெ புரியும் முன்னரே பிரச்சனை, விவாகரத்து என்று தடம் மாறி விடுகின்றார். ”

    தற்போது படுமோசமாகி விட்டது.

    GOOD NIGHT பார்த்து விட்டேன் நல்ல படம். இப்படத்தில் நடித்த நாயகிக்கு சமீபத்தில் திருமணமானது 🙂 .

    @மனோஜ் நன்றி

  4. Good Day Giri
    After a long time visited your site.. marked your site in what’sup but could not follow regularly.
    I have seen people here in Bots who could not marry and they are 40 and their probability of getting married is almost near to zero. And the instances you quoted it happens here also. Sad that things go worse… Lucky got married and still things are going fine in a way blessed.
    Dong’t guess my age withmy email id.
    Keep blogging and smiling
    Kameswara Rao

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here