கோவிலில் குறைந்தபட்சம் 1000 – 1500 பணியாளர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பக்தர்களை ஒழுங்குபடுத்துகிறார்கள், கோவிலைப் படு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள்.
24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் வரிசையில் இருப்பதால், எப்படி மக்கள் வரிசையுள்ள இடங்களைப் பராமரிக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது.
நான் IT Support பிரிவில் இருப்பதால், Downtime வாங்குவது எவ்வளவு சிரமம் என்று புரிகிறது.
எனவே, 24 மணி நேரமும் மக்களால் பயன்படுத்தப்படும் இடத்தில் எப்படிப் பராமரிப்பை செய்கிறார்கள் என்ற இயல்பான கேள்வி தோன்றியது.
ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும், பழுதை சரி செய்ய வேண்டும், புதிய கருவியைப் பொருத்த வேண்டும் என்றால், அலைமோதும் கூட்டத்தில் எப்படிச் செய்வார்கள்? வேறு வழியில் பக்தர்களை மாற்றி விடும் வாய்ப்பு உள்ளதா?
₹300 கட்டணத்தில் செல்பவர்களுக்குப் பால், காஃபி, டீ இலவசமாகக் கொடுக்கிறார்கள்.
அதை விட அத்தனை மக்கள் அவற்றைப் பயன்படுத்திச் சிந்தினாலும், துடைத்து ‘ஈ’ இல்லாமல் சுத்தமாக வைத்துள்ளார்கள்.
கோவிலின் உள்ளே பல கட்ட பரிசோதனை செய்தார்கள்.
கூட்டம் அலைமோதுகிறது, ஒழுங்குபடுத்துபவர்கள் முரட்டுத்தனமாகத் தள்ளி விட்டு எரிச்சலை கிளப்புகிறார்கள்.
செம்ம காண்டாகிறது ஆனால், இவை தவிர்க்க முடியாதது என்றும் புரிகிறது. விட்டா நம்ம ஆளுங்க, நகராமல் அப்படியே நின்னுட்டு இருப்பாங்க.
அப்படி என்ன போய் வெங்கடாஜலபதியைப் பார்க்க வேண்டும்?! அதற்கு நம்ம ஊரிலேயே பார்த்துக்கலாமே! என்ற எண்ணம் தான் எனக்கு வருகிறது. எனக்குக் கூட்டம் பிடிக்காது.
திருப்பதி செல்ல விருப்பம் ஆனால், கூட்ட நெரிசலில் செல்ல விருப்பமில்லை.
எனவே, ‘அடுத்த முறை வந்தால் நான் வெளியே சுற்றிட்டு இருக்கேன், நீங்க உள்ளே பெருமாளைப் பார்த்துட்டு வாங்க!‘ என்று நண்பர்களிடம் கூறினேன் 🙂 .
ஏனென்றால், கோவிலைச் சுற்றி அனைத்து இடங்களும், மரங்களும் அட்டகாசமாக உள்ளது. அவற்றை ரசித்துக்கொண்டு இருந்தாலே, நேரம் போய் விடும்.
வேட்டி புடவை சுடிதார்
கோவிலினுள் வேட்டியுடன் மட்டுமே அனுமதி, பெண்கள் புடவை, சுடிதார் அணியலாம், லெக்கின்ஸ் அணிந்து வரக் கூடாது.
வேட்டி கட்டியிருந்ததால், நெரிசலில் வேட்டியை உருவி ஜட்டியோடு வெளியே அனுப்பிவிடுவார்களோ! என்ற திகில், கோவிலை விட்டு வெளியே வரும் வரை இருந்தது 🙂 . யப்பா.. என்னா தள்ளு தள்ளுறானுக! பிழிந்து எடுத்துட்டானுக.
‘வடா தோசா’ காரனுகளும், ஆந்திரா மக்களும் முரட்டு நபர்களாக இருக்கிறார்கள். கூட்டத்தில் இதையெல்லாம் எதிர்பார்க்க கூடாது என்றாலும், கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை.
எனக்கு இந்தக் கூட்டமே முடியலை, இதெல்லாம் 10% கூட இல்லையென்ற போது திகிலாகி விட்டது. இனி இந்தப்பக்கம் வரக் கூடாது என்றாகி விட்டது 🙂 .
இரண்டு பசங்களையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எனக்கு மிகப்பெரிய சாதனையாக இருந்தது. கொஞ்சம் கை விட்டாலும், தவறி விடுவார்கள்.
நான் பார்க்கிறேன் என்று மற்றவர்களும், மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்று நானும் எண்ணி தவற விட்டுவிடக் கூடாது என்பதால், நானே பொறுப்பேற்றுக்கொண்டேன்.
பெருமாளைப் பார்க்கக் கோவிலின் உள்ளே செல்லும் போது விட, வெளியே செல்லும் போது நெரிசல் அதிகமாக உள்ளது. உள்ளே, வெளியே செல்ல ஒரே கதவு தான்.
நாங்கள் சென்ற ‘கிறிஸ்துமஸ்’ நாளில் வழக்கமான கூட்டமில்லை. எனவே, இரண்டு மணி நேரங்களில் பெருமாளைப் பார்த்து வெளியே வந்து விட்டோம். உடன் வந்து இருந்தவர்கள் பலரும் இது போல விரைவில் வெளியே வந்ததே இல்லையென்றார்கள்.
அடுத்த நாள் சூரியகிரகணம் என்பதால், கோவில் நடை சாத்தி விட்டார்கள்.
நல்லவேளை.. Jus escape 🙂 .
இதன் தொடர்ச்சி அடுத்தப் பகுதியில்…
தொடர்புடைய கட்டுரைகள்
திருப்பதி பயணக் குறிப்புகள் – 1
திருப்பதி பயணக் குறிப்புகள் – 3
திருப்பதி பயணக் குறிப்புகள் – 4
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).