CBSE தேர்வு முறையில் உள்ள பாகுபாடுகள் குறித்த கட்டுரையே இது. Image Credit
CBSE தேர்வு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில், NCERT பாடத்திட்டத்தில் CBSE வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகளும் இப்பாடத்திட்டத்தின் வழியே மனப்பாடம் செய்து எழுதும் படியில்லாதது இதன் சிறப்பு.
அதாவது முழு புத்தகத்தையும் படித்தாலே தேர்வு எழுத முடியும், முக்கியமான கேள்விகளை மட்டும் படித்துத் தேர்வு எழுதி விட முடியாதபடி கடினமாக இருக்கும்.
பொதுத் தேர்வில் SET 1 SET 2 SET 3 என்று மூன்று பிரிவுகள் உள்ளது என்றே தற்போது தான் தெரியும். காரணம், பையன் 10 ம் வகுப்புத் தேர்வு எழுதியதால்.
SET
அறிவியல் தேர்வு எழுதி முடித்த பிறகு மனைவி, அவரது நண்பியிடம் SET 1 SET 2 SET 3 என்று பேசிக்கொண்டு இருந்தார், எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் நினைத்தது, மூன்று SET கேள்வி வினாத்தாள் இருக்கும், அதில் ஒன்றை வெளியிடுவார்கள் என்று ஆனால், பின்னரே தெரிந்தது ஒரே தேர்வுக்கு SET 1 SET 2 SET 3 இருக்கும், அவை ஒரு வகுப்பு மாணவர்களுக்கே இருக்கும் என்று.
ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுதினால், அனைவருக்கும் SET 1, SET 2, SET 3 என்று பிரித்துக் கேள்வித்தாள்கள் வரும்.
எடுத்துக்காட்டுக்கு, SET 1 கேள்வித்தாள் உள்ள மாணவனுக்கும் SET 2 கேள்வித்தாள் உள்ள மாணவனுக்கும் வேறு வேறு கேள்விகள் இருக்கும்.
வினாத்தாளின் தன்மை வேறு
இதில் ஏதாவது ஒரு SET மற்றவற்றை விடச் சிறிது எளிமையாக, நடுத்தரமாக, கடினமாக இருக்கும். இந்த SET அடுத்தடுத்த தேர்வில் மாறும்.
அதாவது, அறிவியலுக்கு SET 2 கடினம் என்றால், சமூக அறிவியலுக்கு SET 1 கடினமாக இருக்கலாம். எனவே, ஒரே SET கேள்வித்தாளே தொடர்ந்து வர வாய்ப்பில்லை.
ஒரு வினாத்தாள் கடினமாக இருந்தாலும், அதற்காக மிகக் கடினமாக இருக்காது. ஒப்பீட்டளவில் சிறிது கடினமாக இருக்கலாம்.
இவர்கள் SET 1 SET 2 SET 3 பேசிக்கொண்டு இருந்த போது நான் நினைத்தது, என் பள்ளிக்காலத்தில் இதே போன்ற 3 SET வைத்து இருப்பார்கள் என்று கூறுவார்கள்
கேள்வித்தாள் LEAK ஆகி விட்டால், மற்றதிலிருந்து ஒன்றை மாணவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள் ஆனால், எல்லோருக்கும் ஒரே கேள்வித்தாள் தான்.
ஆனால், CBSE தேர்வில் இது போன்று மாறி மாறி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
நியாமா?
ஒரே வினாத்தாளை வைத்தே அனைவருக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டும், அதுவே சரியான தேர்வு வழிமுறை. அதிர்ஷ்டம் இல்லாத மாணவருக்கு அனைத்துமே கடினமான SET வந்தால் என்ன செய்வது?
நன்றாக படிக்கும் மாணவனுக்கு எளிதான கேள்வித்தாளும், சுமாராகப் படிக்கும் மாணவனுக்குக் கடினமான கேள்வித்தாளும் வந்தால், கிடைக்கும் மதிப்பெண் எப்படி சரியானதாக, நியாயமானதாக இருக்கும்?
இது மொத்த மதிப்பெண்ணில் உறுதியாக வேறுபாட்டைக் கொடுக்கும்.
ஒரு மாணவனுக்கு இன்னொரு SET ல் வந்த கேள்வி எளிதாக இருக்கலாம், தனக்கு வந்தது கடினமாக இருக்கலாம். இது மாணவனுக்கு மாணவன் மாறும்.
‘அடடா! அந்த SET தனக்கு வந்து இருந்தால், சிறப்பாக எழுதி இருக்கலாமே!‘ என்ற ஆதங்கம் நிச்சயம் இருக்கும்.
எளிதோ, கடினமோ அனைவருக்கும் ஒரே கேள்விகள் இருக்க வேண்டும்.
கடினமாக வரும் வினாத்தாளுக்குத் தளர்வாக திருத்துவார்கள் என்று கூறப்படுகிறது ஆனால், நடக்குமா என்பது உறுதியில்லை.
எதற்கு இந்த நிலை?
அனைவருக்கும் ஒரே மாதிரி இருந்தால், யார் திறமையாளரோ அவர் மதிப்பெண் வாங்கப்போகிறார்!
அதிர்ஷ்டத்தால் ஒரு தேர்வு நடப்பதை எப்படி நேர்மையான தேர்வாகக் கருத முடியும்?
ஒரு தேர்வு அறையில் 2 தேர்வர்கள் உள்ளனர். எப்படி பார்த்து எழுத முடியும்? அப்படியும் மாணவர்கள் பார்த்து எழுதுகிறார்கள் என்றால், கேள்விகளை SHUFFLE செய்து கொடுக்கலாம்.
விரலைக்காட்டி விடையைக் கூற முடியாதபடி செய்யலாம்.
என்னங்க! இப்படியொரு தேர்வு முறை? என்று தெரிந்தவர்களைக் கேட்டால், ‘அப்படித்தான் கிரி! பலகாலமாக இப்படித்தான் நடைபெறுகிறது‘ என்கிறார்கள்.
‘தேர்வு முடிந்து வந்தவுடன் ஆளாளுக்கு என்ன SET என்று தான் விசாரித்துக்கொள்வார்கள்‘ என்றார்.
இத்தேர்வு முறையில் எனக்கு உடன்பாடில்லை. அதிர்ஷ்டத்தால் ஒரு மாணவனின் மதிப்பெண் தீர்மானிக்கப்படக் கூடாது.
மேற்கூறியதில் என் புரிதல் தவறு என்றால், தெரிந்தவர்கள் விளக்கவும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி.. இந்த பதிவை ஒன்றிற்கு மூன்று முறை படித்த பிறகு தான் எனக்கு முழுவதும் புரிந்தது.. சிலவற்றை சுருக்கமான கூற விரும்புகிறேன்..
1. CBSE தேர்வு முறை நியாயமானதா? –
எனக்கு கல்லூரியை முடித்து விட்டு வெளியில் வந்த பிறகு கூட இந்த மெட்ரிக் / ஸ்டேட் போர்டு இதற்கான பதில் தெரியவில்லை..
2. SET 1 SET 2 SET 3 :-
இதுவரை கேள்விபட்டத்திலை.
3. SET : –
உங்கள் விளக்கம் எளிமை & அருமை..
4. வினாத்தாளின் தன்மை வேறு : –
நல்லவேளை இந்த பாடத்திட்டத்தில் படிக்க வில்லை.. படித்து இருந்தால் இன்னும் அரியர் தேர்வு எழுதி கொண்டிருப்பேன்.. இல்லையென்றால் படிப்பை தொடர்ந்து இருக்க மாட்டேன்..எனக்கும் இந்த முறையில் உடன்பாடு இல்லை..
5. நியாமா? & எதற்கு இந்த நிலை?
10 / 12 வகுப்பில் தொடர்ந்து 3/4 eassay படிச்சி இருப்போம்.. எப்படியும் 3/4 இல் ஒன்று நிச்சயம் இறுதி தேர்வில் வந்து விடும்.. இந்த technic கை தான் என்னுடைய சீனியர் மாணவர்கள் கற்று கொடுத்தார்கள்.. நான் என் ஜூனியர் மாணவர்ளுக்கு கற்று கொடுத்தேன்..
உங்களின் நிலை தான் என் நிலையும்.. வருடம் முழுவதும் ஒரே வகுப்பில் ஒரே பாடத்தை படித்து விட்டு, தேர்வு தாள் மட்டும் வேறு மாதிரி என்றால்? எதற்காக இந்த பாகுபாடு..? ஒரே மாதிரியாக நடத்தப்படும் தேர்வில் தான் மாணவர்களின் திறன் வெளிப்படும்.. இது சரியா? தவறா? என்று ஆராயும் அளவிற்கு இதை பற்றி முழுமையான தெளிவில்லாததால் என்னால் கூற இயலவில்லை..
கடந்த வாரம் அலுவக நண்பர் ஒருவரிடம் கல்லூரி பருவத்தை பற்றி பேசி கொண்டிருக்கும் போது, நான் படித்தது மெட்ராஸ் யூனிவர்சிட்டி – NON-செமஸ்டர்..(ஆண்டிக்கு ஒரு முறை மட்டும் இறுதி தேர்வு).. அவர் படித்தது பாரதிதாசன் யூனிவர்சிட்டி – செமெஸ்டர் (ஆண்டிற்கு இரு முறை இறுதி தேர்வு).. அவர் படிக்கும் போது முதலாம் செமஸ்டர் தேர்வு வந்த போது, ஏதோ மாத தேர்வு என்று எண்ணி தான் தேர்வை எழுதினாராம்.. தேர்வு முடிவுகள் சரியில்லை.. தேர்வு முடிவுகள் வந்த போது தான் தெரிந்ததாம் , இது தான் முக்கிய தேர்வு என்று..
உண்மைய சொல்ல போனால் அந்த பருவத்தில் நிறைய கல்லூரி மாணவர்களின் நிலை இவ்வாறு தான் இருந்தது.. என்னுடைய இளங்கலை இறுதி ஆண்டில் MBA ENTRANCE காகா ஒரு சில மாணவர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் போது அது என்ன வென்றெ தெரியாமல் நாங்கள் சுற்றி கொண்டிருந்தோம்.. இது தான் எங்களின் நிலை அன்று..
@யாசின்
“நல்லவேளை இந்த பாடத்திட்டத்தில் படிக்க வில்லை.. படித்து இருந்தால் இன்னும் அரியர் தேர்வு எழுதி கொண்டிருப்பேன்.”
அப்படி கூற முடியாது யாசின். ஒருவேளை மேலும் உங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டு இருக்கலாம்.
“10 / 12 வகுப்பில் தொடர்ந்து 3/4 eassay படிச்சி இருப்போம்.. எப்படியும் 3/4 இல் ஒன்று நிச்சயம் இறுதி தேர்வில் வந்து விடும்.. இந்த technic கை தான் என்னுடைய சீனியர் மாணவர்கள் கற்று கொடுத்தார்கள்.. நான் என் ஜூனியர் மாணவர்ளுக்கு கற்று கொடுத்தேன்.”
பிரச்சனையே இது தான் யாசின்.
இதனாலே முழு பாடப்புத்தகத்தையும் படிக்காமல், முக்கியமான கேள்விகளை மட்டும் படித்துச் சென்று விடுகிறோம்.
பெரும்பாலும் மக்கப். புரிந்து படிப்பதில்லை ஆனால், CBSE ல் புரிந்து படித்தாலே தேர்வு எழுத முடியும்.
“இளங்கலை இறுதி ஆண்டில் MBA ENTRANCE காகா ஒரு சில மாணவர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் போது அது என்ன வென்றெ தெரியாமல் நாங்கள் சுற்றி கொண்டிருந்தோம்.. இது தான் எங்களின் நிலை அன்று..”
தற்போது பாடத்திட்டங்கள் மாறி விட்டது.
CBSE பாடத்திட்டம் கொஞ்சம் கடினமானது ஆனால், படிக்க முடியாதது அல்ல.
இப்பாடத்திட்டத்தை முன் வைத்தே எதிர்கால தேர்வுகள் உள்ளன என்பதால், CBSE பாடத்திட்டம் முக்கியமானதாக உள்ளது.
எடுத்துக்காட்டுக்கு CBSE பாடத்திட்டத்தில் (NCERT) இருந்தே NEET கேள்விகள் வருகிறது. இதையொட்டி தமிழக பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.