மோடி என்ன செய்தார்? | 2

0
மோடி என்ன செய்தார்? | 2

முன்னரே குறிப்பிட்டபடி இத்தொடர் மோடி அரசின் சாதனைகள், நலத்திட்டங்களின் அறிமுகம் மட்டுமே, மாறாக புள்ளிவிவரம் கிடையாது. Image Credit

திட்டங்கள் என்ன உள்ளன? என்னென்ன குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

1.Railways

இந்தியாவின் உட்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவதில் இந்திய ரயில்வே மிக முக்கியப்பங்காற்றி வருகிறது.

குறிப்பாக அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியூஸ் கோயல் ரயில்வே துறைக்கு இட்ட அடித்தளத்தை அஸ்வினி மேலும் உயர்த்தியுள்ளார்.

ஆத்ம நிர்பர் திட்டத்தில் ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு, முன்னர் இருந்த நிலைக்குத் தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முக்கிய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வந்தே பாரத் அறிமுகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 2025 ல் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் வரப்போகிறது.

Read : வந்தே பாரத் ரயில் பயண அனுபவங்கள்

Read : மத்திய பாஜக அரசின் 5 சிறந்த அமைச்சர்கள்

2.GST

நிறுவனங்கள் முறையாகக் கணக்குகளைக் காட்ட, குழப்பமான பல்வேறு வரி முறைகளை ஒருங்கிணைத்து GST கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் இந்தியா முழுவதும் மாதம் எவ்வளவு வரி கிடைக்கிறது என்ற வெளிப்படைத்தன்மை கிடைத்துள்ளது.

GST யால் நட்டம் என்று விமர்சனம் செய்த மாநிலங்களுக்குத் தற்போது முன்பை விட அதிகளவு வரி கிடைத்து வருகிறது.

நிறுவனங்கள் ஏமாற்றுவது குறைந்ததால் அல்லது ஏமாற்ற முடியாததால், மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம்.

புதிய வரிவிகித முறையால் துவக்கத்தில் அனைத்து நிறுவனங்களும் சிரமப்பட்டாலும், ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டு குறைகள் களையப்பட்டு தற்போது GST ஆகச்சிறந்த முறையாக மாறி வருகிறது.

பொருட்களைக் கொண்டு செல்லும் போது சரியான GST ரசீது வைத்து இருந்தால், வழியில் யாருக்கும் பயப்படாமல் பொருட்களைக் கொண்டு செல்ல முடிவது, நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாகியுள்ளது.

நாள்கணக்கில் லாரிகள் மாநிலங்களின் எல்லையில் நிற்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளதால், பொருட்களை விரைவாகக் கொண்டு செல்ல முடிகிறது.

Read : ஜிஎஸ்டி சாதித்தது என்ன?

3.Aadhaar

ஆதார் திட்டத்தைக் கொண்டு வந்த காங் அரசால் செயல்படுத்த முடியவில்லை

எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்ப்பைத் தொடராமல் மிகச்சிறந்த சேவையாக மாற்றி விட்டது.

போலிக்கணக்குகளைக் கண்டறியப் பேருதவியாக ஆதார் உள்ளது. 10 கோடி போலிக் கணக்குகளைக் கண்டறிய ஆதார் உதவியுள்ளது.

இதன் மூலம் மக்களின் வரிப்பணம் பல லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

முன்பு எதைப் பதிவு செய்ய வேண்டி இருந்தாலும், பல்வேறு அடையாள அட்டைகள் தேவையாக இருந்தது ஆனால், தற்போது ஆதார் ஒன்று இருந்தால் போதுமானது.

ஆதார் கட்டாயத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மக்கள் நெருக்கடியைச் சந்தித்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், இன்று நிலை என்ன?

சாதாரண நபரின் வாழ்க்கையை எளிமையாக்கி விட்டது. மோடி என்ற உறுதியான தலைவராலே இது சாத்தியமானது.

அனைத்துக்குமே எதிர்ப்பு இருக்கும், சிரமங்கள் இருக்கும். அதற்காகத் தள்ளிப்போட்டால், தவிர்த்தால் என்றுமே எத்திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

அன்றைய கஷ்டம் இன்றைய வசதி. மறுக்க முடியுமா?

Read : ஆதார் கட்டாயம் என்பது சரியா?!

4.Make In India & PLI Scheme

மேற்கூறிய திட்டங்களின் மூலம் மொபைல் இறக்குமதி பெருமளவு குறைந்து, ஏற்றுமதி வரைமுறையே இல்லாமல் அதிகரித்துச் செல்கிறது.

மேலும் பல புதிய நிறுவனங்கள் வரப்போகின்றன. ஆப்பிள் நிறுவனம் iPhone உற்பத்தியை மேலும் அதிகரிக்கப்போகிறது.

Semiconductor என்று அழைக்கப்படும் Chip உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கப்போகின்றன. இவற்றின் உற்பத்தி இந்தியாவின் வளர்ச்சியைத் தாறுமாறாகக் கொண்டு செல்லப் போகிறது.

எடுத்துக்காட்டுக்கு, தைவான் என்ற சிறிய நாட்டின் ஏற்றுமதி மதிப்பு இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பை விட அதிகம் காரணம், semiconductor.

உலகளவில் பொம்மைக்குள்ள தேவையால், உற்பத்தியை அதிகரித்து, 50% இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியைப் பல மடங்கு அதிகரித்ததால் ஏராளமான அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளவாட ஏற்றுமதி பில்லியன்களில் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வெளிநாட்டு நிறுவங்களுக்கு சலுகைகள் கொடுத்துத் தொழில் துவங்க அனுமதி கொடுத்தது மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம், வேலைவாய்ப்பு பெருகியதோடு, ஏற்றுமதியின் அளவு உயர்ந்துள்ளது.

5.Rupee International transaction

டாலர் ஆதிக்கத்தால், இறக்குமதிக்கு இந்தியாக்கு டாலர் அதிகம் தேவைப்படுகிறது. அந்நிய செலாவணி அதிகளவில் தேவைப்படுகிறது.

டாலரின் தேவையைக் குறைக்க மற்ற நாடுகளுக்கு ரூபாய் வழியாகப் பரிவர்த்தனையை அதிகரிக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

இதனால், டாலரின் தேவையைக் குறைக்க முடியும்.

இது போன்று ரஷ்யாக்கு ரூபாயில் இறக்குமதி செய்த போது, ரஷ்யாவால் கைவசம் இருந்த ரூபாய் செலவழிக்க முடியாமல் தேங்கி இருந்தது.

இதற்காக இந்தியாவில் ரஷ்யா நிறுவனங்கள் தொழில் துவங்கி ரூபாய் தேக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதே போல Vostro கணக்குகளின் மூலம், நேரடிப் பணப்பரிவர்த்தனையைச் செயல்படுத்தி, உடனடியாகப் பணத்தைக் கணக்கில் இருப்பு வைக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றோடு சவூதி மற்றும் அமீரக நாடுகளிடம் ரூபாயில் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு டாலருக்கான தேவையைக் குறைத்து வருகிறது.

RBI அறிமுகப்படுத்திய டிஜிட்டல் கரன்சி (CBDC) பல்வேறு வகையில் Advanced என்பதால், எதிர்காலத்தில் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கும்.

Read : அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?

Read : டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன? | FAQ

6.Debt Recovery Tribunal

கார்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் பணத்தைக் கொள்ளையடித்துச் செல்ல மத்திய அரசு உதவுகிறது என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது.

ஆனால், Debt Recovery Tribunal மேம்படுத்தப்பட்ட சட்டம் வந்த பிறகு இதுவரை ஏமாற்றிய அனைத்து பெரிய மனிதர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை பலரும் கடனை வாங்கி விட்டு, செலுத்தாமல் தப்பித்து வந்தனர். இதனால், வங்கிகளுக்கு வராக்கடன் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.

ஆனால், தற்போது எவரும் தப்பிக்க முடியாது. அவர்கள் அடமானம் வைத்த சொத்தின் மூலம் திரும்ப வசூலிக்கப்படுகிறது.

விஜய் மல்லையா இதுபோன்ற சிக்கலில் லண்டனில் பதுங்கி உள்ளார், விரைவில் சட்ட சிக்கல்கள் சரி செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்போவதோடு மீதியுள்ள பணமும் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திவால் அறிக்கை கொடுத்துத் தப்பிக்க முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தப்பித்தவர்களைப் பிடிக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

பல வங்கிகள் வராக்கடனால் நட்டத்தில் இருந்த நிலை மாறித் தற்போது இலாபத்துக்கு வந்துள்ளன. 11% வராக்கடனாக இருந்தது தற்போது 2% கீழே வந்துள்ளது.

Read : Waive-off Write-off வித்தியாசம் என்ன?

7.Law changes

பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு காலாவதியான சட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இனி வரும் காலங்களில் மேலும் சட்டங்கள் மேம்படுத்தப்படும்.

தற்போது மாறிய சட்டத்தின் படி, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டால், மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் செல்ல முடியாது.

அதாவது ஜனாதிபதி முடிவே இறுதியானது.

8.Digital India

டிஜிட்டல் இந்தியா அறிமுகத்தின் போது, பலரும் கிண்டலடித்தார்கள் ஆனால், இன்று டிஜிட்டல் இந்தியா இல்லாமல் எவருமில்லை எனும் நிலைக்கு வந்து விட்டது.

ஜன்தன் கணக்கு, UPI, DigiLocker, ஆதார் சேவைகளின் மூலம் மக்களின் வாழ்க்கை எளிமையாக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் கவனம் டிஜிட்டல் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.

கோவிட் சமயத்தில் இந்தியா சேகரித்து தொகுத்த https://www.cowin.gov.in/ தளம் உலகில் மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக விளங்கியது.

வெளிநாடுகளுக்குச் செல்லும் போது இச்சான்றிதழ் இந்திய மக்களுக்குப் பேருதவியாக இருந்தது.

வங்கிகளில் கணக்கு துவங்க இருந்த பல்வேறு வழிமுறைகள் மாறி, ஆதார், பான் எண், வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதும் என்ற நிலையாகி விட்டது.

இது போன்று ஒவ்வொரு நிலையிலும் மக்களின் வாழ்க்கை எளிமையாகி விட்டது.

Read : டிஜிட்டல் இந்தியா சாதித்தது என்ன?

9.Swachh Bharat

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், இந்தியாவைத் தூய்மைப்படுத்த முயற்சி எடுக்கப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை விற்று அதன் மூலம் பல ஆயிரம் கோடி வருவாயை அரசு ஈட்டியுள்ளது என்றால், நம்ப முடிகிறதா?!

ரயில்களில் Bio கழிவறை கொண்டு வந்தது ஆகச்சிறந்த மாற்றம்.

இத்திட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழக்கம் போல இல்லை அதோடு சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் இதைத் திறமையாகச் செயல்படுத்தவில்லை.

நோக்கம் சரியாக இருந்தாலும், பராமரிப்பு முக்கியம்.

வட மாநிலங்களில் ஒரு சில நகரங்கள் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகின்றன. எடுத்துக்காட்டு, மத்திய பிரதேச மாநிலம், இந்தூர்.

தூய்மை இந்தியா திட்டம் மூலம் கழிவறை இல்லாத வீடுகளுக்குக் கழிவறை கட்டித்தரப்படுகிறது.

இதற்காக வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, கௌரவம் காப்பாற்றப்பட்டுள்ளது.

10.PM Kisan

நேரடி வங்கி பணப்பரிமாற்றம் மூலம் விதிமுறைகளுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 வருமான ஆதரவு.

உலகளவில் உரத்தின் விலை அதிகரித்தும், இதற்காக மத்திய அரசு பணம் ஒதுக்கி மானிய விலையில் விவசாயிகளுக்கு உரம் வழங்கி வருகிறது.

பயிர்க்காப்பீடு திட்டம் மூலம் இயற்கைப் பேரிடரால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இவற்றோடு சோலார் அமைக்க உதவுகிறது.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!