எங்கள் குடும்பமும் நண்பர்கள் குடும்பமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று திருப்பதி சென்று வந்தோம். நான் கிட்டத்தட்ட 15+ வருடங்களுக்குப் பிறகு செல்கிறேன்.
மூன்று மாதங்களுக்கு முன்பே ₹300 தரிசனத்துக்கு இணையத்தில் முன்பதிவு செய்து விட்டோம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால் தான் கிடைக்கும். 12 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்குக் கட்டணமில்லை.
அனைவருக்கும் ஆதார் கட்டாயம்.
ஒவ்வொருவருக்கும் இரண்டு லட்டுகள் கொடுப்பார்கள், கூடுதலாக வேண்டும் என்றால், முன்பதிவின் போதே எண்ணிக்கையைச் சேர்த்துக்கொள்ளலலாம்.
அப்போதே என்றால் ₹25, கோவிலுக்கு வந்த பிறகு என்றால் ₹50.
சமீப வருடங்களில் நான் சென்ற மிக மோசமான சாலை, சென்னை –> திருப்பதி சாலை. குறிப்பாக ஆந்திரா பகுதி படு மோசம், ஏகப்பட்ட வேகத்தடைகள்.
எதற்கு இவ்வளவு வேகத்தடைகளை வைத்துள்ளார்கள் என்பது புரியலை.
திருப்பதி
ஆந்திராவில் நுழைந்தவுடன் நம்மை வழி நெடுக வரவேற்பது MLA ‘ரோஜா’ பேனர்கள் தான். தமிழ்நாட்டுப் பேனர்களை விட இவர்கள் பேனர்கள் அதிகம்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் விழா பேனர்கள் என்றாலும், ரோஜா தான் முதன்மையாக இருந்தார் 🙂 .
காலையில் சாப்பிட எங்காவது ஓரமாக நிறுத்தலாம் என்றால், சாலையே மொட்டையாக உள்ளது. சாலையோர மரங்கள் மிகக்குறைவு.
பிறகு ஒரு இடத்தை ஓட்டுநர் கண்டு நிறுத்திச் சாப்பிட்டோம். வழி நெடுக ஏகப்பட்ட கும்பகோணம் டிகிரி காஃபி கடைகள்.
திருப்பதி இவ்வளவு பிரபலமாக இருந்தும், நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகள் வளர்ச்சி அடைந்தது போலவே இல்லை.
இதுபோலப் பிரபலமான ஊர் தமிழ்நாட்டில் இருந்தால், அந்த நகரத்தின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருந்து இருக்கும்.
திருப்பதி நகரத்தில் (கீழே) ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாலம் வேலை காரணமாக சாலை நெடுக பராமரிப்பு பணிகள் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் உள்ளது.
அலமேலு மங்கா கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, மலைக்குக் கிளம்பினோம்.
இக்கோவிலின் அருகே காந்தியடிகள் போல ஒருவர் சில்வர் வண்ணத்தை உடல் முழுவதும் பூசி சிலை போல நின்று கொண்டு இருந்தார்.
பலர் இவருடன் நின்று நிழற்படம், செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.
சோதனைச்சாவடி

கீழே வாகன பரிசோதனை, சுங்கச்சாவடிகள் மிகச்சிறப்பாக இருந்தன.
சாலைகள் அகலமாகவும், தரமானதாகவும், நவீன முறையிலும் இருந்தது. எனக்கு இது சிங்கப்பூர் – மலேசியா எல்லைப்பகுதி சுங்கச்சாவடியை நினைவுபடுத்தியது.
ஒரு சுங்கச்சாவடி எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் பராமரிக்கப்பட வேண்டும்? என்பதற்கு முன் மாதிரியாக இருந்தது.
மலைப்பகுதி சாலையும் மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு இருந்து. மேலே செல்வதற்கு, இறங்குவதற்குத் தனித்தனி சாலைகள்.
சுற்றிலும் மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமையாக இருந்தது. இங்கே உள்ள மரங்கள் இவர்கள் வைத்து வளர்ந்தது தான் அதிகம் என்றார்கள்.
அதாவது Man Made Forest என்பது போல.
மலைக்கு வாகனத்தில் செல்லும் போது அனுமதிக்கப்பட்ட வேகத்தில் செல்லத் தவறினால், அபராதம் விதிக்கப்படும்.
சிலர் வேகமாகச் சென்று, வழியில் காத்திருந்து பின்னர் எல்லையை அடைவதும் வழக்கம். வழியில் நின்று பார்க்கக்கூடிய இடங்களும் உள்ளன.
மலையில் வாகன நிறுத்த இடங்கள், மரங்கள், இலவச பேருந்துகள், தங்கும் அறைகள், உணவகங்கள், உணவு எடுத்து வந்தால் சாப்பிட இடங்கள், குப்பைத்தொட்டிகள், பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கக் காப்பகங்கள், முக்கியமாக ஏராளமான கழிவறைகள் உள்ளன.
திருப்பதி தேவஸ்தானம் செய்து கொடுத்துள்ள வசதிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில்…
தொடர்புடைய கட்டுரைக
புதிதாக செல்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் திருப்பதியில் அறைகள் முன்பதிவு செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
தேவா நான்காம் பாகத்தில் விவரங்கள் உள்ளது.
2020 புத்தாண்டில் எனக்கு நானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு நல்லாருப்போம்… நல்லாருப்போம்… எல்லாரும் நல்லாருப்போம் என்று வலைப்பூவின் முகப்பு பக்கத்தில் பேனர் வைத்து தொடங்கியிருக்கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இனிமேல் முகத்துக்கு பவுடர் போட வேண்டாம் என்று முடிவு செய்து தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.
இந்த ஆண்டு வேற எதுவும் முடிவுசெய்யவில்லை. நீங்கள் குறிப்பிட்டதைப்போல் எப்போது தோன்றுகிறதோ அப்போதே செயல்படுத்திவிடுவதுதான் சௌகர்யமாக இருக்கிறது.
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் திரைப்படம் தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் திரைப்படம் பற்றிய எனது எண்ணங்களை தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து ௨௦௨௦ல் தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.