சிங்கப்பூரும் கோயம்புத்தூரும்

10
சிங்கப்பூரும் கோயம்புத்தூரும்

ற்போது அனைத்து நாடுகளும் தன் மக்களை மட்டுமே வைத்து முன்னேறுகிறது / முன்னேற முடியும் என்ற கட்டத்தை தாண்டி விட்டது.

உலகம் முழுக்க உள்ள நாடுகளில் பல்வேறு நாட்டு மக்களின் பங்கும் இருக்கிறது.

சிங்கப்பூரும் கோயம்புத்தூரும்

அரசாங்கங்களும் தங்கள் வளர்ச்சிக்காக கீழ் / உயர் மட்ட வேலைகளுக்கு உள் நாட்டு மக்களின் தேவை போதாததால் வெளிநாட்டுப் பணியாளர்களின் திறமையையும் வேண்டி நிற்க வேண்டியுள்ளது.

எனவே எந்த வளர்ந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் அதில் மற்ற நாட்டு பணியாளர்களின் உழைப்பும் அடங்கி உள்ளது.

முந்தைய காலத்தில் உள் நாட்டு மக்களே நாட்டை முன்னேற்றி வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருப்பார்கள்.

அதே நிலை வரும் காலங்களில் தொடர்வது என்பது நடைமுறையில் சிரமமான ஒன்று. Image Credit

வளர்ந்த நாடுகளில் மக்களின் பொருளாதாரம் உயரும் போது கீழ் மட்ட வேலைகளுக்கான நபர்கள் குறைந்து கொண்டே வருவார்கள்.

இந்த நிலை நாளுக்கு நாள் உயர்ந்து, உடல் உழைப்பு அதிகம் உள்ள பணிகளுக்கு செல்பவர்கள் குறைந்து, அறிவைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் வேலைக்கு அதிகம் ஆகி விடுவார்கள்.

இது தான் உலகம் முழுவதும் நடக்கும் இயல்பான நிகழ்வுகள்.

சிங்கப்பூர்

தற்போது நான் இருக்கும் சிங்கப்பூரில் மக்களின் பொருளாதாரம் உயர்ந்ததால் உடல் உழைப்பிற்கான பணிகளை விட மற்ற பணிகளுக்கு மக்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

குறிப்பாக எதில் சம்பளம் / வருமானம் அதிகம் கிடைக்கிறதோ அதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இதன் காரணமாக உடல் உழைப்பு சார்ந்த கட்டிடப் பணி, சாலை அமைப்பது, கழிவறை சுத்தம் செய்வது, செடி / மரங்களை சீரமைப்பது போன்ற பணிகளுக்கு செல்ல விரும்புவதில்லை.

இதில் உடல் உழைப்பு அதிகம் என்பதோடு வருமானமும் குறைவு.

நான் கூறுவது இதில் நேரடியாகப் பணி புரிபவர்களை, உயர் அதிகாரியாக இருப்பவர்களை அல்ல.

பற்றாக்குறை

எனவே, இது போன்ற பணிகளுக்கு செல்லாமல் கணினித் துறை, தொழில்நுட்பத் துறைகள் மற்றும் மருத்துவத் துறைகள் போன்றவற்றுக்கு செல்லும் போது மேற்கூறிய பணிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதைச் சரிகட்ட அரசாங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களை எதிர் நோக்க வேண்டியது உள்ளது.

உள் நாட்டில் பணியாளர்கள் குறையும் போது வெளிநாட்டுப் பணியாளர்களின் தேவைகள், பற்றாக்குறை இடங்களை நிரப்ப அவசியமாகிறது.

இது போன்ற வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை வருடாவருடம் குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கு அதிக குழந்தைகள் பெற்றால் கூடுதல் சலுகை என்றெல்லாம் அரசாங்கம் அறிவித்து இருந்தாலும், பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் பணியாளர் பற்றாக்குறை அனைத்துப் பிரிவு பணிகளுக்கும் ஏற்படும் சூழல் உருவாகிறது.

இதை சமாளிக்கவும் தொழில்நுட்ப வேலைகளுக்கும் மற்ற நாட்டின் திறமையாளர்களை வரவேற்கிறது.

தவிர்க்க முடியாதது

பொருளாதாரத்தில் நாட்டை சீராக வைக்க இவை போன்றவை பிடிக்கிறதோ இல்லையோ தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

ஆனால், நாட்டின் மீது அன்பு கொண்டவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

நாட்டை நிறுவனம் போல நடத்துகிறார்கள் என்று கோபப்படுகிறார்கள். இவர்கள் கோபத்தில் உண்மையில்லாமல் இல்லை.

இது போல மற்ற நாட்டின் மக்கள் இங்கு வரும் போது இங்குள்ள கலாச்சாரத்தில், பழக்கவழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

இங்குள்ளவர்களுக்கு வெளிநாட்டினரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

இதில் தவறு எதுவும் காண முடியாது ஆனால், வேறு வழியில்லை என்பதும் உண்மை.

கலாச்சார வேறுபாடுகள்

தங்கள் நாடுகளில் இருப்பது போல இங்கும் பலர் இருக்க முயற்சிப்பது இங்குள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை.

உதாரணத்திற்கு சிங்கப்பூரர்கள் பொது இடங்களில் அதிக சத்தம் போட மாட்டார்கள்.

ஆனால், அதே இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ், சீன நாட்டைச் சார்ந்தவர்கள் அதிகம் சத்தம் போடுவார்கள்.

சில வெள்ளையர்களும் இது போல நடந்து கொள்வார்கள். இவை இவர்களுக்குப் பிடிக்காது. இதைப் பார்க்கும் போது இயல்பாக உள்ளூர் மக்களுக்கு கோபம் வருவது சகஜம்.

மற்ற பின்தங்கிய நாடுகளில் இருந்து சம்பாதிக்க சிங்கப்பூர் வருவது போல, சிங்கப்பூரில் உள்ள மக்கள் இதை விட அதிக சம்பளம், வசதியை எதிர்பார்த்து ஆஸ்திரேலியா செல்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க சிங்கப்பூரர்கள் வாழ்கின்றனர்.

பொருளாதரத்தில் பண மதிப்பில் சிங்கப்பூரை விட ஆஸ்திரேலியா உயர்ந்து இருக்கிறது.

எனவே, வருமானம் எங்கே கிடைக்கிறதோ அங்கே மக்கள் இடம் பெயர்வது உலக வழக்கு ஆகி விட்டது.

இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு வளர்ந்த நாட்டிலும் அந்த நாட்டு மக்கள் என்றில்லாது மற்ற நாடுகளின் மக்களும் இணைந்து இருக்க வேண்டி வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அப்படித்தான் உள்ளது.

தமிழ்நாடு

இந்தி பேசினால் பணம் கொழிக்கும் என்று இங்கே பலர் கற்பனை செய்து கொண்டு இருந்தாலும், உண்மை நிலை வேறாக இருக்கிறது.

வட மாநிலங்களை விட தமிழ்நாடு மேம்பட்டதாகவும் பொருளாதாரத்தில் உயர்வு பெற்றதாகவும், வன்முறை / மதச் சண்டைகள் குறைந்ததாகவும் இருக்கிறது.

சுருக்கமாக, இங்கே வந்தால் பிழைத்துக் கொள்ளலாம், சம்பாதிக்கலாம் என்ற நிலை இருக்கிறது.

அதே போல தமிழக மக்களும் பொருளாதாரத்தில் உயர்ந்து வருவதால் மேற்குறிப்பிட்ட அதே பிரச்சனை இங்கும் எழுந்துள்ளது.

இங்கே விவசாயக் குடும்பங்களில் இருந்து வந்த பிள்ளைகள் விவசாயத்தை தேர்ந்தெடுக்காமல் வருமானம் வரும் தொழில்நுட்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலேயே அறியலாம்.

நானே ஒரு உதாரணம். என் அப்பா விவசாயி ஆனால், நான் தொழில்நுட்பத் துறையில் பணி புரிகிறேன்.

ஆட்கள் பற்றாக்குறை

இது போல மாற்றங்களால் விவசாயத்துறை, கட்டிடத்துறை போன்றவற்றிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதில் ஒரு முரண்பாடு, என் அப்பா அப்பவே BE படித்து இருந்தும் விவசாயம் செய்தார், நான் கல்லூரி செல்லாமல் தொழில்நுட்பத் துறையில் இருக்கிறேன்.

அப்பா “விவசாயம் வேண்டாம், தொழில்நுட்பத் துறைக்குத் தான் எதிர்காலம்” என்று என்னை இதில் நுழைத்தார்.

எனக்குப் படிக்கும் போது எதில் செல்வது என்று குழப்பம் இருந்தது.

இது போல கடந்த (1970 / 1980 பிறந்தவர்கள்) தலைமுறையில் இருந்து விவசாயத்தில் இருப்பவர்கள் வேறு துறைக்கு மாறி வருகிறார்கள்.

இதனால் விவசாயம் போன்ற துறைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

வேலைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் ஆனால், அதிக சம்பளம் கேட்கிறார்கள்.

எனவே, கட்டுபடியாகததால் குறைந்த சம்பளத்தில் வட மாநிலப் பணியாளர்கள் கிடைப்பதால், அவர்களைப் பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.

இவர்கள் இங்கே வந்த பிறகு குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

இதைப் பார்க்கும் போது நம்மவர்கள் என்ன செய்தாலும் சகித்துக்கொள்ளும் நாம், வெளி மாநிலத்தில் இருந்து ஒருவன் வந்து பிரச்சனை செய்தால், கொதித்து எழுந்து விடுகிறோம். இது மனித இயல்பு.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் கொங்கு மண்டல மக்கள் இயல்பிலேயே மரியாதையானவர்கள், அன்பாக நடந்து கொள்பவர்கள்.

இருந்தும், இங்கு வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் நடந்து கொள்ளும் செயலால் ஒட்டு மொத்த வட மாநிலத் தொழிலாளர்களையும் விரோதியாக சிலர் பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

என் தளத்தை நீங்கள் தொடர்ந்து படிப்பவராக இருந்தால், எனக்கு வட மாநிலத்தவரை பிடிக்காது என்பதை அறிந்து இருப்பீர்கள்.

ஆனால், நமக்கு பிடிக்கிறது பிடிக்கலை என்பது ஒரு விஷயம் என்றாலும் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்.

நானும் கோயம்புத்தூர்க்காரன் தான்.

நடைமுறை எதார்த்தம்

நிறுவனத்தை நடத்த, கட்டிடத்தைக் கட்ட, விவசாய வேலை செய்ய ஆள் போதவில்லை என்றால், நட்டம் ஆனாலும் பரவாயில்லை, எனக்கு வட மாநில நபர் வேண்டாம் என்று முறுக்கிட்டு இருக்க முடியுமா?!

எனவே சிங்கப்பூராக இருந்தாலும் கோயம்புத்தூராக இருந்தாலும், நம் தேவைகளுக்கு பிறரை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், அதை நடைமுறை எதார்த்தம் என்று ஏற்றுக் கொள்வது தான் நல்லது.

ஏனென்றால், நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ காலத்திற்கு ஏற்ப நாம் மாறித்தான் ஆக வேண்டும்.

இதில் நாடு, மாநிலம் என்ற எந்த வித்யாசமும் இல்லை.

சிங்கப்பூராக இருந்தாலும் சரி! கோயமுத்தூராக இருந்தாலும் சரி! சதவீத அளவில் வேறுபாடுகள் இருக்கலாமே தவிர, பிரச்சனை ஒன்று தான்.

பொருளாதார முன்னேற்றம் ஒரு பகுதியில் ஏற்படும் போது இந்தச் சிக்கல்களும் உடன் வரும், தவிர்க்கவே முடியாது.

எதிர்கால உலகம் என்பது அனைவரும் கலந்து தான் செயல்பட முடியும் என்ற அளவில் இருக்கும்.

“நானே” அனைத்தையும் பார்த்துப்பேன் என்றால், எந்த வளர்ச்சியும் இல்லாமல் தனித்து விடப்பட்ட நாடாக / மாநிலமாகத் தான் இருக்க முடியும்.

கொசுறு

சீனா நம்மை விட வளர்ச்சியில் உயர்ந்து இருந்தாலும், அவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு நமக்கு உள்ளது.

சீனாவில் ஒரு குழந்தை திட்டத்தால் அங்கே இளைஞர்களை விட வயதானவர்களே வரும் காலத்தில் அதிகரிக்கப் போகிறார்கள்.

இந்தியா இளமையான இந்தியாவாக இருக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கப் போகிறது.

வல்லுனர்கள் எச்சரிக்கையால் சீனா தற்போது ஒரு குழந்தைத் திட்டத்தை தளர்த்தி இருக்கிறது. இது எந்த அளவிற்கு பயனளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

கடந்த வாரம் அலுவலக நண்பன் சீனாவின் ஷாங்காய் நகருக்கு சென்று வந்தான்.

நான் இந்த வருட இறுதிக்குள் இங்கே அலுவலக ரீதியாக செல்ல வேண்டி இருந்தாலும் இருக்கலாம் என்பதால், இங்கே சென்றால் மொழிப் பிரச்சனை, அங்குள்ள சூழ்நிலை பற்றி விசாரித்தேன்.

விமானத்தில் சந்தைக் கடை போல இருந்ததாகவும் ஆனால், விமான நிலையம் பிரம்மாண்டமாக மிகச் சிறப்பாக இருந்ததாகக் கூறினான்.

சாலைகள் மற்றும் கட்டமைப்பு பிரமிக்க வைப்பதாகவும் “நான் பார்த்தது கொஞ்ச இடம் தான் எனவே, இதை வைத்து முழுமையும் எடை போட முடியாது” என்பதையும் குறிப்பிட்டான்.

அதோடு நம் நாடு, மக்கள் தொகையைக் காரணம் காட்டி சுத்தம், வளர்ச்சி போன்றவற்றில் முன்னேற்றம் காணாமல் உள்ளது.

ஆனால், மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா, நம்மை விட பல மடங்கு வளர்ச்சியிலும் கட்டமைப்பிலும் முன்னேறி உள்ளது என்றான்.

என்ன செய்வது? நமக்கு வாய்த்த அரசியல் தலைவர்கள் அப்படி, அரசியல்வாதிகளுக்கு வாய்த்த அடிமைகளான நாம இப்படி.

நம் நாட்டில் அனைத்து வளமும் இருந்தும் அவை யாவும் நாட்டை முன்னேற்றப் பயன்படாமல், அரசியல்வாதிகளின் சொத்துக்களை வளர்க்கவே உதவிக் கொண்டு இருக்கிறது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

  1. சீனா போக போறீங்களா கிரேட் …
    But be carefull anna …அங்க போயி நீங்க நண்டு சூப் கேட்டா ஆமை சூப் தருவாங்களாம் …
    and முடி வெட்ட சொல்லவே வேண்டாம் குறைந்தது 300 டாலர் கேட்பாங்களாம் (2350ரூ). so எல்லாத்துக்கும் ready ah போங்க அண்ணா …Year end only ryt ..அதுக்குள்ள prepare ஆயிடலாம் 🙂
    Details credit : Mr .ராஜ்குமார் 🙂

  2. சீனா ல ஒரு குழந்தை திட்டத்தை தளர்த்தினாலும் தளர்த்தினாங்க..மக்கள் அவங்க சந்ததிகளை பெருக்க ரொம்ப தீவிரமா இறங்கிட்டாங்க.. 🙂 now even 40 years ,40+ ladies carrying babies ..
    முடியல..இவங்களோட.. 🙂

    advance welcome to சீனா கிரி 🙂

    மக்கள் தொகை பெருக்கம் அதிகமா இருந்தாலும் கட்டமைப்பு, சாலைகள் வசதிகள் செய்றதுல இவங்கள நாம முந்தவே முடியாது போல எப்பவும்..இது சீன நகரங்களில் மட்டும் தான். சீன கிராமங்கள் நிலைமை நம்ப ஊர் கிராமங்கள விட வசதிகள்ள பின் தங்கி தான் இருக்கு.சீனாவோட இந்த இன்னொரு முகம் வெளிய அவ்வளவா தெரியறதில்ல..

    • சங்கி மங்கிஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்றதுல கூட சந்தோஷம் இருக்கு…அதும் chinese food na எனக்கு உயிர் …china ke போயி chinese food சாப்டறவங்க (அகிலா)..சாப்ட போறவங்க(கிரி) எல்லாம் ரொம்ப lucky 🙂

  3. கிரி.. இந்த பதிவு ஒரு புதுமையான பதிவாக இருக்கும் என எண்ணுகிறேன்.. நான் கோவையில் பணிபுரிந்த போது இரும்பு உருக்கு ஆலை மற்றும் அது தொடர்புடைய கடினமான தொழிற்சாலைகளில் பணிபுரிந்தது அனைத்தும் வட இந்தியர்களே!!! குறிப்பாக பீகார் / ஒடிசா மாநிலங்களை சேர்ந்தவர்களே..

    இன்றும் அந்த நிலை தான் உள்ளது.. அவர்களின் பொருளாதார சூழ்நிலையை கணக்கில் கொண்டு, இவர்களை நிரந்தமாக இங்கே தக்க வைக்க நிறுவனமும் முயற்சி எடுப்பதின் விளைவே, அவர்களின் எண்ணிக்கையும், குற்றம் அதிகரிப்பின் காரணமும்..
    ====================================
    “நானே” அனைத்தையும் பார்த்துப்பேன் என்றால், எந்த வளர்ச்சியும் இல்லாமல் தனித்து விடப்பட்ட நாடாக / மாநிலமாகத் தான் இருக்க முடியும்… நிச்சயமாக, தனித்து எந்த காரியத்தையும் செயல்பட்டு வெற்றி காண்பது கடினமான ஒன்று..
    ====================================
    கிரி, ஒரு சின்ன சந்தேகம் கோயம்முத்துரா இல்லை கோயம்புத்துரா?? பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

  4. சீனா ரயில்வே பத்தி கேள்வி பட்டீங்களா.? நமக்கு பின்னாடி இருந்தவங்க இப்ப எங்கயோ போய்ட்டாங்க. நம்ம இன்னும் “தண்டவாளம் ரொம்ப அடி வாங்கிருச்சே” லெவல்ல தான் இருக்கோம்.

    சீனா போய் பாம்பு, பல்லி, பூரான் சூப் லாம் ஒரு பிடி பிடிச்சிட்டு வாங்க.

  5. சுருங்கக்கூறின் குறைந்த வருமானம் உள்ளவர்கள் (ஏழைகள்) இல்லாவிடில் அதிக வருமானம் உள்ளவர்கள் (பணக்காரர்கள்) பிழைப்பது முடியாது அல்லது மிகக் கடினம்.

    தானியங்கி தேவை அதிகளவில் விவசாயத்திற்கு தேவை ஆனால் அதற்கு பணம் போட நிறைய செலவாகும் அதற்கு விவசாயிகளால் முடியுமா?

  6. //நமக்கு வாய்த்த அரசியல் தலைவர்கள் அப்படி, அரசியல்வாதிகளுக்கு வாய்த்த அடிமைகளான நாம இப்படி. நம் நாட்டில் அனைத்து வளமும் இருந்தும் அவை யாவும் நாட்டை முன்னேற்றப் பயன்படாமல், அரசியல்வாதிகளின் சொத்துக்களை வளர்க்கவே உதவிக் கொண்டு இருக்கிறது.//

    கவலைப்படவேண்டாம் உங்கள் அமோக ஆதரவு பெற்ற மோதி பிரதமர் ஆகிவிட்டார், 5 ஆண்டுகளுக்கு அவர் ராசாங்கம் தான். மோடிமஸ்தான் வித்தைகளை இனி காண்பீர்கள் 😉

  7. //நமக்கு வாய்த்த அரசியல் தலைவர்கள் அப்படி, அரசியல்வாதிகளுக்கு வாய்த்த அடிமைகளான நாம இப்படி. நம் நாட்டில் அனைத்து வளமும் இருந்தும் அவை யாவும் நாட்டை முன்னேற்றப் பயன்படாமல், அரசியல்வாதிகளின் சொத்துக்களை வளர்க்கவே உதவிக் கொண்டு இருக்கிறது.//

    உங்கள் அமோக ஆதரவு பெற்ற மோதி பிரதமர் ஆகிவிட்டார் 5 ஆண்டுகளுக்கு அவர் இராசாங்கம் தான். மோடிமஸ்தான் வேலை செய்து நாட்டை சரி செய்துவிடுவார் கவலை வேண்டாம். 😉

  8. உங்கள் சிங்கப்பூரைப் பற்றி சுவையான ஒரு தகவல்…

    சிங்கப்பூர் சின்னஞ்சிறிய தீவு 640 கி.மீ. பரப்புதான் போக்குவரத்து, இடவசதி பற்றாக்குறையை நீக்க 22 ச.கி.மீ. கடலைத் தூர்த்து சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூரில் குடிப்பதற்குத் தண்ணீர், இல்லை. மலேசியாவிலிருந்து தண்ணீர் வருகிறது. பால், டென்மார்க்கிலிருந்து வருகிறது. தேயிலை, இலங்கையிலிருந்து வருகிறது. சர்க்கரை, பிஜி தீவிலிருந்து வருகிறது. பிஸ்கட்டுகள், தாய்லாந்திலிருந்து வருகின்றன. பாத்திரங்கள் சீனாவிலிருந்து வருகின்றன. இருந்தாலும் முன்னணி நாடாகத் திகழ்கிறது.

  9. @ஜானகி அவர் கூறியது ஹாங்காங் என்று நினைக்கிறேன். அதோட நான் போனால் அதிகபட்சம் 4 நாட்கள் இருக்கலாம் அவ்வளோ தான். முடி வெட்டும் அளவுக்கு நீண்ட நாட்கள் இருக்க மாட்டேன் 🙂

    @அகிலா போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் மீண்டு தடை போட்டு விடுவார்கள் போல இருக்கே 🙂 ஒரே வருடத்தில் 10% கூடுதல் மக்கள் தொகை ஆகிடும் போல.

    @ஜானகி சைனீஸ் உணவு நான் சாப்பிட இங்கேயே முடியுமே! இங்கேயே இவர்கள் உணவு தான்.

    @யாசின் கோயம்பத்தூர் என்பதே சரி ஆனால், பேச்சு வழக்கில் கோயமுத்தூர் என்றே குறிப்பிடுவோம்.

    @அரிகரன் “நம்ம இன்னும் “தண்டவாளம் ரொம்ப அடி வாங்கிருச்சே” லெவல்ல தான் இருக்கோம்.” ஹா ஹா செம 🙂

    @குறும்பன் அமெரிக்காவில் இது போல அனைத்துக்கும் கூலி அதிகம் என்பதால் எல்லோரும் அவரவரே இதை செய்ய பழகிக் கொண்டதாக படித்தேன். கிண்டலாக, அமெரிக்க பையனை திருமணம் செய்து கொண்டால் பிரச்சனையே இல்லை.. சமையல் வீட்டு வேலை முதல் அனைத்தும் நன்றாக தெரிந்து வைத்து இருப்பான் என்று கூறுவார்கள் 🙂 இது போல இங்கேயும் மாறி விடும். இருந்தாலும் சாலை அமைப்பது கட்டிடம் போன்றவற்றுக்கு நீங்கள் கூறுவது போலத் தான்.

    விவசாயம் எதிர்காலத்தில் அமெரிக்கா போல பெரிய தலைகள் மட்டுமே செய்ய முடியும். சிறு அளவில் செய்வது கட்டுபடியாகாது. எனவே பல நிலங்களை இணைத்து பெரிய அளவில் விவசாயம் செய்வார்கள்.

    மோடி பற்றிய உங்கள் கிண்டலுக்கு ஏற்கனவே நான் கட்டுரை எழுதி விட்டேன். விரைவில் வெளியிடுகிறேன்.

    @ஸ்ரீநிவாசன் தகவல்களுக்கு நன்றி சிங்கப்பூரில் தற்போது ஏரிகளில் தண்ணீர் சேமித்து வருகிறார்கள் ஆனால், இன்னமும் மலேசியாவில் இருந்து தான் தண்ணீர் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here