Laapataa Ladies (2024 Hindi) | மாறிய ஜோடி

0
Laapataa Ladies

பெண்களுக்கான படிப்பு, சுதந்திரம், பழமை, டௌரி ஆகியவற்றை வைத்து Laapataa Ladies எடுத்துள்ளார்கள். Image Credit

Laapataa Ladies

திருமணமான இரு ஜோடிகள் ரயிலில் பயணிக்கும் போது புடவையால் முகத்தை மறைத்து இருந்ததால், திருமணப் பெண் மாறி விடுவர்.

இதனால் ஏற்படும் கலாட்டாவே Laapataa Ladies.

வட இந்தியா

வடஇந்தியாவில் பெண்கள் பலர் முகத்தை மறைத்து இருப்பார்கள் அல்லது தலை மீது சேலையை மூடி முகத்தை மறைக்காமல் இருப்பார்கள்.

வட மாநில இந்து, ஜெயின் சமூகத்தில் இது போன்று காணலாம்.

பலருக்கும் தெரிந்தது போல, வடஇந்தியாவில் இன்னும் வளர்ச்சியடையாத, விவரம் தெரியாத ஏராளமான மக்கள் உள்ளார்கள்.

அதிலும் பெண்கள் நிலை பரிதாபம் தான். அவர்களின் உலகம், வாழ்க்கை மிகக்குறுகிய இடத்திலேயே முடிந்து விடும்.

இதை நகைச்சுவை கலந்து கூறி உள்ளார்கள்.

மாறிய ஜோடி

தீபக் மற்றும் பூல் குமாரிக்குத் திருமணமாகி இருக்கும் நிலையில், இன்னொரு ஜோடி புதுப்பெண்ணான ஜெயாக்கு திருமணத்தில் விருப்பம் இருக்காது.

எனவே, ரயிலில் இருட்டில் அவசரமாகக் கிளம்பும் போது, தூங்கும் நேரத்தில் மாற்றி ஜெயாவை தீபக் அழைத்துச் சென்று விடுவார்.

பிடிக்காத திருமணம் என்பதால், ஜெயா அமைதியாகச் சென்று விடுவார்.

இந்நிலையில் வேறு ரயில் நிறுத்தத்தில் பூல் குமாரி இறங்கி தன் கணவரைக் காணாது விழிப்பார். ஜெயா படித்த பெண், புத்திசாலி. பூல் குமாரி படிக்காத விவரம் தெரியாத அப்பாவிப் பெண்.

தீபக், பூல் குமாரி இருவரும் செமையாக நடித்துள்ளார்கள். அதிலும் தீபக் விவரம் தெரியாதவராக அப்பாவியாக நன்றாகப் பொருந்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது சில நிமிடங்கள் தான் இருக்கும் ஆனால், இறுதியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி டாப் டக்கர் 🙂 .

சொன்னால் நம்ப மாட்டீர்கள், பார்த்தால் உணர்வீர்கள்.

நகைச்சுவை

பெண்களின் சிரமங்கள், அவர்களுடைய கடினமான வாழ்க்கையை மெல்லிய நகைச்சுவையுடன் கூறி உள்ளது ரசிக்கும் படியுள்ளது.

அதாவது, வெறுப்புணர்வாகவோ, புரட்சியாகவோ இல்லாமல் எதார்த்தமாக உள்ளது.

லஞ்சம் வாங்கும் காவல் அதிகாரியாக வரும் மனோகர் கதாபாத்திரத்தை இறுதியில் வேறு மாதிரி கொண்டு சென்றாலும், அவர் பாணியிலேயே முடித்தது சிறப்பு.

என்ன ஒரே ஒரு கடுப்பு என்றால், பீடா போட்டு இவர் பேசுவதைப் பார்க்கும் போது நமக்கே எங்காவது துப்ப வேண்டும் போல உள்ளது தான்.

தீபக் தன் மனைவியைத் திருமண நிழற்படத்துடன் தேடிக்கொண்டு இருப்பார்.

ஆனால், திருமண நிழற்படத்தில் முகத்தை மூடி இருக்கும். ஒரு கடையில் விசாரிக்கும் போது, கடைக்காரர் ‘முகம் தான் எல்லாமே! முகத்தை மூடி அடையாளத்தையே மறைக்கிறீர்களே‘ என்று முற்போக்காக அறிவுரை கூறுவார்.

அப்போது உள்ளே இருந்து அவரது மனைவி புர்கா அணிந்து வந்து அவரிடம் “டீ” என்பார், செம நகைச்சுவையாக இருக்கும் 😀 .

அப்பெண் ‘டீ’ என்று கூறி கணவரைப் பார்ப்பதும், அதற்குப் பின்னணி இசையும் அட்டகாசம். அப்பெண்ணின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும்.

தீபக் அக்காட்சியைச் சாதாரணமாகக் கடந்து செல்வான். அதாவது அவனுக்கு அக்காட்சி புரியாது ஆனால், நமக்குப் புரியும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று.

தீபக் வீட்டுப்பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்வது, அவர்களது விருப்பங்கள், ஏமாற்றங்கள் இயல்பாகவும், நகைச்சுவையாகவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

படிப்பு

பெண்களுக்குப் படிப்பு, தைரியம், சுதந்திரம் தேவை என்பதை முன்னிறுத்தியுள்ளது ஆனால், நாமே புரிந்து கொள்ளும்படியான கதையமைப்பு.

காணாமல் போன பூல் குமாரி, ரயில்நிலையத்திலேயே கடை வைத்துள்ள ஒரு பெண்ணின் உதவியுடன் இருப்பார்.

உதவும் பெண்ணுக்கு தீபக் மீது கோபம் இருக்கும், பெண்ணை ஏமாற்றி விட்டான் என்று ஆனால், பூல் குமாரி தனது கணவன் மீது மிகுந்த அன்பு வைத்து இருப்பதுடன் நேர்மறையாக இருப்பார்.

இறுதியில் தைரியமாக பூல் குமாரியைத் தனியாக அனுப்புவதும், இரு பெண்களின் எண்ணமும் சரியானதாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டுமே நன்றாக உள்ளது. அதிலும் பின்னணி இசையிலேயே ஒரு சில காட்சியில் நகைச்சுவையைக் கூடுதலாக்கியுள்ளார்கள்.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம், பார்க்க வேண்டும்.

படம் பார்க்கும் போது இதைச் செய்து இருக்கலாமே, அதைக் கேட்டு இருக்கலாமே என்று தோன்றும் ஆனால், அதைத்தவிர்த்து பார்த்தாலே ரசிக்க முடியும்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Kiran Rao
Written by Original Story: Biplab Goswami
Screenplay & Dialogues: Sneha Desai
Additional Dialogues: Divyanidhi Sharma
Produced by Aamir Khan. Kiran Rao. Jyoti Deshpande
Starring Nitanshi Goel, Sparsh Srivastav, Pratibha Ranta, Abhay Dubey, Chhaya Kadam, Ravi Kishan
Cinematography Vikash Nowlakha
Edited by Jabeen Merchant
Music by Ram Sampath
Distributed by Yash Raj Films
Release date 8 September 1 March 2024
Running time 124 minutes
Country India
Language Hindi

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here