நவீன சிங்கப்பூரின் தந்தை திரு “லீ குவான் யூ”

19
நவீன சிங்கப்பூரின் தந்தை திரு "லீ குவான் யூ" Modern singapore prime minister

 வீன சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் “லீ குவான் யூ” கடந்த திங்கள் (23-March-2015) அதிகாலை 3.18 க்கு காலமானார். பிப்ரவரி மாதம் முதலே நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த சில வாரங்களாகவே திரு லீ அவர்களின் உடல்நிலை மோசமாக இருந்தது. எனவே, இறப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. Image Credit

சுதந்திரம்

 

சிங்கப்பூர் போராடிச் சுதந்திரம் பெற்ற நாடல்ல, உலகிலேயே வலுக்கட்டாயமாகச் சுதந்திரம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நாடு. மலேசியாவில் இருந்து பிரிந்த போது சிங்கப்பூர் மிக மோசமான நிலையில் இருந்தது.

நாட்டை உயர்வு நிலைக்குக் கொண்டு வர அனைவருடனும் இணைந்து முயற்சிகளை எடுத்தார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ.

தமிழர்கள்

சிங்கப்பூரின் துவக்கத்தில் தமிழர்களுக்கும் மிக முக்கியப் பங்குள்ளது.

சிங்கப்பூர் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் தமிழர்களின் உழைப்பும் பங்கும் இருந்ததாலே இன்றும் தமிழர்கள் பாரம்பரியமாகச் சிங்கப்பூரில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் 10 சதவீத மக்களைக் கொண்ட இந்தியர்களுக்கு மதிப்பு அளித்து ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழுக்கு இடம் கொடுத்தவர் திரு லீ.

நவீன சிங்கப்பூரின் தந்தை

திரு லீயைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு நாட்டை உயர்ந்த இடத்திற்கு 30 வருடங்களில் கொண்டு வருவது எளிதானதல்ல.

இதன் பின்னால் கடுமையான உழைப்பும், விடா முயற்சியும், நம்பிக்கையும் உள்ளது.

மோசமான நிலையில் இருந்த சிங்கப்பூரை முன்னேற்ற மென்மையான நடவடிக்கைகள் உதவாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ பல கட்டுப்பாடுகளை, சட்டங்களை இயற்றினார்.

மக்களும் சிங்கப்பூரை முன்னேற்றக் கடுமையாக உழைத்தார்கள்.

கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் திரு லீ சர்வாதிகாரி போலவே எண்ணப்பட்டார். இதுகுறித்துப் பல எதிர்மறையான கருத்துகள் உண்டு.

இன்றும் சமூகத் தளங்களில் திரு லீயை திட்டுபவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் கிடையாது.

இது திரு லீ க்கும் பொருந்தும்.

“சிங்கப்பூரை நிறுவனம் போல நடத்துகிறார்கள்” என்பது உட்படப் பல குற்றச்சாட்டுகள் உண்டு என்றாலும் அனைவருக்கும் நல்லவராக இருக்க நினைத்து இருந்தால், சிங்கப்பூரை முன்னேறிய நாடாக நிச்சயம் மாற்றி இருக்க முடியாது.

கட்டுப்பாடான சுதந்திரம்

சிங்கப்பூர் ஜனநாயக நாடாக இருந்தாலும், இந்தியா போல முழுமையான ஜனநாயக நாடாக இல்லாமல் கட்டுப்பாடுள்ள சுதந்திர ஜனநாயக நாடாக இருக்கிறது.

இங்கே அனைத்துமே செய்ய முடியும் ஆனால், கட்டுப்பாடான சுதந்திரத்தோடு.

தான் இறந்த பிறகு தன்னுடைய வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்று கூறி இருந்ததாக நினைவு. அந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குச் சிரமம் கூடும் என்று.

நினைவுச் சின்னங்களில் திரு லீக்கு உடன்பாடில்லை.

மரணம்

வயதான பிறகு அனைவரும் எதிர்கொள்ளும் நிலை தான் மரணம்.

நாட்டை முன்னேற்றி, மற்ற நாடுகளுக்குத் தன் நாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு வந்த திரு லீ, சாதித்த பிறகே தனது 91 வயதில் காலமாகி இருப்பதால் வருத்தம் கொள்ள எதுவுமில்லை.

50 வது தேசிய தினம்

இருப்பினும் இன்னும் சில மாதங்களில் சிங்கப்பூர் தனது 50 வது தேசிய தினத்தை (ஆகஸ்ட் 9) கொண்டாட இருக்கும் நேரத்தில், அதைக் காணாமலே சென்று விட்டாரே! என்பது மட்டுமே அனைவருக்கும் வருத்தமளிக்கும் விசயம்.

நம்ம வீட்டில் ஒரு தாத்தாவோ பாட்டியோ பேரன் / பேத்தியின் திருமணத்திற்குக் கொஞ்ச மாதங்கள் முன்பு காலமானால் எப்படியொரு வருத்தம் இருக்குமோ அது போன்றது.

உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் அனைத்தும் திரு லீயின் இறப்பிற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வைத்தே அறியலாம், இவர் எந்த அளவிற்குப் பாகுபாடு இல்லாமல் உலக மக்களைக் கவர்ந்து இருக்கிறார் என்று.

உதவி

என்னைப் போலப் பலரின் கடன்களை அடைக்க இந்தச் சிங்கப்பூரே உதவியது. சிங்கப்பூரை உருவாக்கிய திரு லீ, சம்பந்தமே இல்லாத மற்ற நாட்டு மக்களுக்கும் மறைமுகமாக உதவி செய்து இருக்கிறார்.

இந்தியாவின் ஏதோ ஒரு தமிழக கிராமத்தில் திரு லீ க்கு இரங்கல் பேனர் வைக்கிறார்கள் என்றால், அது விளையாட்டல்ல. சிங்கப்பூர் என்ற நாட்டால் வளர்ச்சி அடைந்ததின் நன்றி கடன்.

சிங்கப்பூர் இல்லையென்றால் இன்னொரு நாட்டிற்குப் போய் இருப்போம் என்றாலும், அங்கு நம் ஊர் போல உணர்வு, தமிழ், அருகாமை, பாதுகாப்பு இருந்து இருக்குமா! என்பது சந்தேகமே.

அஞ்சலி

திங்கள் செவ்வாய் இரு நாட்கள் முக்கியத் தலைவர்களுக்கும், புதன் முதல் சனி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, திரு லீயின் உடலைப் பார்க்கப் பொதுமக்களை அனுமதித்து இருந்தார்கள்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், பார்வை நேரத்தை 24 மணி நேரமாக மாற்றி இருக்கிறார்கள்.

எக்காரணத்தினாலும் தாமதத்தாலும் திரு லீ அவர்களைப் பார்ப்பதை தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். நேற்று (வியாழன் 26-March-2015) சென்று இருந்தேன்.

வரிசை மிக மிக மெதுவாக நகர்ந்தது, சில நேரங்களில் அப்படியே இருந்தது.

வழியில் வெயில் கொடுமையால் குடை, விசிறி, நிழலுக்கு ராணுவ டென்ட், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் மற்ற உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குச் சிறப்பு வசதி செய்யப்பட்டு இருந்தது.

மதியம் 2.45 க்கு வரிசையில் நின்று இரவு 7.15 க்கு திரு லீ வைக்கப்பட்டு இருந்த பெட்டியை அடைந்தோம். என் அலுவலக நண்பர்களுடன் சென்று இருந்தேன். 

பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

சிங்கப்பூர் பாராளுமன்றம்

சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் திரு லீ உடல் வைக்கப்பட்டு இருந்தது. மிக மிக அமைதியான இடத்தில், வணங்கிச் செல்ல அனுமதித்து இருந்தார்கள்.

அஞ்சலி செலுத்தி வெளியேறிய பிறகு எனக்குப் பின்னே ஒரு தாத்தா அழக் கூடத் திராணி இல்லாமல் அழுது கொண்டு வந்தார், 85 வயதிற்கு மேல் இருக்கும்.

கைத்தாங்கலாக அவரது பேரப் பிள்ளைகள் அழைத்து வந்தார்கள்.

திரு லீயுடன் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்றவராக இருந்து இருக்க வேண்டும். அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அஞ்சலி

“லீ குவான் யூ” வாழ்ந்த காலத்தில் நானும் சிங்கப்பூரில் இருந்தேன், அவரின் உடலைப் பார்வைக்கு வைத்து இருந்த போது நானும் சென்று பார்த்தேன் என, நாளைய வரலாற்றில் நானும் ஓரத்தில் நிற்கிறேன் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை.

இதயப்பூர்வமான அஞ்சலியை நவீன சிங்கப்பூரின் தந்தை திரு லீ அவர்களுக்கு என்னுடைய தளத்தின் மூலம் சமர்பிக்க வாய்ப்புக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். Image Credits – Singapore News Media

திரு லீ அவர்களே! தாங்கள்  மறைந்தாலும் தாங்கள் உருவாக்கிய நாடான சிங்கப்பூரும், தங்கள் உழைப்பும், தங்களால் பயன்பெற்றவர்கள் இருக்கும் வரை இந்த உலகம் தங்கள் பெயர் கூறிக்கொண்டு இருக்கும்.

அஞ்சலி செலுத்திய போது அங்கு இருந்த அமைதியும், 4.30 மணி நேரம் நின்ற களைப்பும் என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை ஆனால்,  “தங்களால்  பயன்பெற்றவர்கள் இருக்கும் வரை” என்பதை எழுதும் போது அழுது விட்டேன்.

உலகம் போற்றும் ஒரு மாமனிதருக்கு என்னுடைய இறுதி அஞ்சலியை நேரில் செலுத்திய மன நிறைவுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

19 COMMENTS

  1. இருவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து இருக்கின்றேன் என்பது எனக்குப் பெருமை. ஒருவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். மற்றொருவர் லீ குவான் யூ. இருவருமே மகத்தான, போற்றத்தக்க மனிதர்கள்.

    விமர்சனங்களைத் தாண்டி காலம் கடந்து தமிழர்களின் மனதில் வாழக்கூடியவர்கள்.

    தமிழகத்தில் லீ குவான் யூ அவர்களுக்கு வைத்த கண்ணீர் அஞ்சலி ப்ளக்ஸ் போர்டுகள் போல இங்கு எவருக்கும் வைத்ததே இல்லை. தமிழகத்தில் ஆதாயத்தின் அடிப்படையில் தான் கண்ணீர் அஞ்சலி முதல் காவடி தூக்குதல் வரைக்கும் நடந்து கொண்டிருக்கின்றது.

    ஆனால் இவருக்கோ தன்னெழுச்சியான உணர்வு பூர்வமான அஞ்சலி. தங்கள் குடும்பத்தில் ஒருவர் இருந்து இறந்தது போல.

    இந்தப் பதிவு மிகத் தெளிவாக அழகாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளது நன்றி.

  2. தலைவர் ஒருமுறை திரு. லீ அவர்களை பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.அதற்கு முன்னர் அவர் யார் என்று எனக்கு தெரியாது.அதன் பின்னர் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது .

    ஏதோ சிறு சிறு செய்தியை மட்டும் அவரை பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது .

    ஆனாலும் அவற்றை படிக்கும்போது இவரை போன்ற தலைவர் அணைத்து நாடுகளுக்கும் கிடைத்து விட்டால் இன்று உலகம் சந்தித்து வரும் தீவிர வாதம்,மதவாதம்,வகுப்பு வாதம் ,வறுமை,ஊழல் .etc இவை யாவும் முற்றிலும் இருக்காது என்பது மட்டும் உறுதி.

    “கட்டுபாடற்ற ஒரு சுதந்திரம் அந்த நாட்டுக்கு கேடு விளைவிப்பதாகும் “என்று இவர் கூறிய அந்த வார்த்தை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் உணர முடியும் .

    கிரி தங்களுக்கு ஒரு வேண்டுகோள் திரு .லீ அவர்களை பற்றிய ஒரு நீண்ட கட்டுரை தாங்கள் எழுத வேண்டும்.

  3. பல இலட்சம் பேரின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றத் தலைவருக்கு சிறப்பானதொரு அஞ்சலிப் பதிவு.

  4. True. If there is no Singapore I am not in this position today. I am also one in million people who came to Singapore For work and opportunity.

    I broken while reading this blog.

  5. நானும் சென்று இருந்தேன் அனால் முகத்தை பார்க்க இயலாத மாதிரி தூரத்தில் உடல் வைக்க பட்டு இருந்தது ஏமாற்றமே.

  6. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் இறையூர் கிராமத்தில் ப்ளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு காவல் துறை அனுமதி தரவில்லை, பிறகு கெஞ்சி 10*10 என்ற அளவில் வைக்க சொன்னார்கள், அந்த காவல் நிலைய அதிகாரி இவர் பெரிய தேச தந்தையா என்று பல்வேறு சகிக்க முடியாத வார்தைகளால் பேசி அனுமதி கொடுத்தனர்.

    அதை நேற்று இரவு 1 மணிக்கு கிராமத்தில் இருக்கும் கூட்டுறவு வங்கியின் ஓரத்தில் (அந்த ப்ளக்ஸ் போர்டுகள் இருக்கும் இடத்திற்க்கும் அந்த வங்கி கட்டடதிற்கும் சம்பந்தமே இல்லை) வைத்தோம், பிறகு இன்று 10 மணி அளவில் சென்று பார்த்தால் அந்த ப்ளக்ஸ் போர்டு நார்நாராக கிழிக்க பட்டுருக்கு…..

    விசாரித்து பார்த்தால் அந்த கூட்டுறவு வங்கி மேலாளர், அவர் ஒரு மாற்று திறனாளியாய் இருந்தும் கூட, கூப்பிட்டு சொல்லமால் அவரே பிளடு கொண்டு கிழித்துள்ளார்.

    கேட்டதற்கு??? வங்கியை மறைப்பது போன்று உள்ளது, அவரும் இவரு யாரு, இவருக்கு ஏன் எங்கள் வங்கி முன் ப்ளக்ஸ் போர்டு கட்டுகிறீர்கள்? கட்டினால் நானே கிழிப்பேன் என்று கீழ்தரமான மனநிலையில் பேசுகின்றார்………..

    மனிதர்களில் பல விதம்…….. அதில் இவர்கள் எல்லாம் கேடுகெட்ட விதம்.

  7. கிரி,
    கடனை கௌரவமா அடைக்க உதவி செய்பவன் என்னை பொறுத்த வரைக்கும் கடவுள் கு சமம்…”தங்களால் பயன்பெற்றவர்கள் இருக்கும் வரை ” – இந்த வார்த்தைகளின் வலியினை என்னை மாதிரி கடன் அடச்சவங்களுக்கு நல்லாவே தெரியும் தல…

    திரு லீ அவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வ அஞ்சலி…எனக்கு முதல்ல இவர superstar ரஜினி ஒரு பேட்டி ல சொல்லும் போது தான் தெரியும்…

    – அருண் கோவிந்தன்

  8. உலகின் உன்னதமான தலைவருக்கு உணர்வுகளை உருக்கும் பதிவு கிரி. எங்கள் தஞ்சாவூர் / மன்னார்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீட்டுக்கு ஒருவராவது பிழைப்புக்காக சிங்கப்பூரில் கால் வைத்து தங்களின் குடும்பத்தை தலைநிமிர வைத்தவர்.

    நான் கல்லூரி படிக்கும் காலங்களில் US கனவு எல்லாம் இல்லை கிரி. என் தந்தை / சித்தப்பா / மாமாக்கள் அனைவருக்கும் தங்கள் குடும்ப தேவைகள் நிறைவேற காரணமான நாட்டின் வணங்க தக்க தலைவருக்கு எங்களின் இதயபூர்வ அஞ்சலி.

    உலக வரைபடத்தில் ஓர் புள்ளியாக உள்ள தேசம், அடுத்த வல்லரசு நாங்கள் தான் என்று வாயில் வடை சுடும் நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவியாக (இருந்தது) இருந்துவருகிறது.

  9. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை நாடுகளை வென்றான்; எத்தனை தூரம் பயணித்தான்; எவ்வளவு சொத்துகள் சேர்த்தான்; இதுவல்ல அவன் வாழ்நாளின் வெற்றி.. மாறாக அவன் மரணத்திற்கு பின்பு, இறுதி சடங்கில் எத்தனை பேர்கள் கலந்து கொண்டர்கள், எத்தனை பேர்கள் அவனுக்காக கண்ணீர் சிந்தினார்கள் “இது தான் அவன் வாழ்நாளின் வெற்றி”..

    அந்த வகையில், திரு லீ அவர்கள் இறுதி சடங்கை பார்க்கும் போதே தெரிகிறது அவர் மிக சிறந்த மாமனிதர் என்று…இனி வரும் காலத்தில் உலக சரித்திரத்தில் நேர்மையாக மக்களுக்காக உழைக்கும் உண்மையான தலைவர்களை காண்பது மிக அரிது…

    (அஞ்சலி செலுத்திய போது அங்கு இருந்த அமைதியும், 4.30 மணி நேரம் நின்ற களைப்பும் என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை ஆனால், கடந்த பாராவில் “தங்களால் பயன்பெற்றவர்கள் இருக்கும் வரை”) – உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது… மரணம் என்பது உடலுக்கு தானே தவிர, ஆன்மாவிற்கு இல்லை..பகிர்வுக்கு நன்றி கிரி…

  10. தன் இறப்பிற்கு பின் உலகம் முழுதும் மிகவும் பிரபலமான மாமனிதர் லீ அவர்கள்.நம் நாட்டு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இவரிடம் கற்க வேண்டியது ஏராளம்.சாதாரணக் கல்லை ( சிங்கப்பூர்) உலகம் போற்றும் பளிங்கு சிற்பமாய் மாற்றிய திரு.லீ அவர்களுக்கு எங்களின் அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம்..

  11. பதிவுக்கு நன்றி கிரி..திரு.லீ அவர்களின் வாழ்க்கை, சிங்கப்பூரின் வளர்ச்சி நிலைகள் குறித்த விரிவான பதிவையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்

  12. இவரை போன்ற ஒரு தன்னலமற்ற தியாகி இந்தியாக்கு இன்றைய காலகட்டத்திற்கு வேண்டும்.

  13. Bro..I didnt knw the person who have that name Lee Kuan Yew .After his death only i came to know about this Great person. I saw some pictures and news about him.

    Then only i decided that i should read his history as soon as possible. Still now i collecting his information’s wherever i gets. Now from you i got some information’s.

    Mr.Lee Legends never die.They just Living forever in people’s Heart.. In Tamilian’s Heart.

    Great Salute .. RIP

  14. மனிதனாக பிறந்த எவருக்கும் நன்றி உணர்வு கட்டாயம் இருக்க வேண்டும். அது அவர்களுடைய வாழ்க்கையில் பல வித நன்மைகளையும் உயர்வுகளையும் தரும்.

    இதை பல சுய முன்னேற்ற நூல்களில் படித்திருக்கிறேன். மேலும் “நன்றி மறவாமை” பற்றி வள்ளுவர் எழுதி உள்ளதை நாம் அறிவோம்.

    அந்த வகையில்,கிரி தங்களுக்கு “நன்றி உணர்வு” மிகவும் நன்றாகவே இருக்கிறது. இதைத் தங்களின் பதிவுகளை நன்கு படித்த பிறகுதான் சொல்கிறேன்.

    இதோடு கடமை, அன்பு, நட்பு, மனித நேயம், பாசம், நேர்மை, உண்மை இவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளீர்கள் என்பதற்கு தங்களின் பல பதிவுகளே சான்றாகவுமுள்ளது.

    இதுவே நான் தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து படிக்க காரணமாகவும் ஆகிறது.

    எல்லோராலும் தங்களின் எண்ணங்களை எழுத்தில் வடிக்க முடிவதில்லை.அதற்கு காரணம் பலவுள்ளது. இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமையை அவர்களுக்குள் வைத்தே படைக்கிறான்.(பல திறமைகளையும் ஒருங்கே கொண்டு பிறப்பவர் லட்சத்தில் ஒருவரே.)

    இப்படி செய்வதன் மூலம் அவர்கள் தங்களுக்குள்,உதவிக்கொளளவும் இணக்கமாக வாழவும் வழி வகை செய்கிறான்.

    ஒருவர் தங்களின் எண்ணங்களை வேறு ஒருவரின் மூலமாக, அதாவது தங்களைப் போன்றவர்களின்
    மூலமாக எழுத்தில் படிக்க நேரும் போது மன நிறைவும், மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

    இறைவன் அப்படித்தான் படைத்திருக்கிறான். பலரால் வெளிப்படுத்த முடியாதவர்களின் எண்ணங்களை ஒரு சிலர் மூலமாக வெளிப்படுத்த வைத்து அதை அவர்களின் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக ஆக்குகிறான்.

    ஒரே மன அலைவரிசையில் உள்ளவர்கள் பலரும் தங்களின் பதிவுகளில் தாங்கள் அளிக்கும் விமர்சனத்தின் மூலம் தங்களை இன்னார் என்று வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். இப்படித்தான் தங்களின் எழுத்து பலரின் மன உணர்வுகளுக்கு வடிகாலாகவும், வாழ்வில் அனைவரையும் ஒன்றிணைப்பதாகவும் அமைகிறது

    இப்படி ஒன்றிணைவது அவர்களுக்குகிடையே ஒற்றுமையையும் இணக்கமாக வாழ வழியை ஏற்படுத்துவதாகவும் அமைகிறது. இது அவர்கள் தங்கள் வாழ்வில் பல நன்மைகளை அடைய வழி வகுக்கும்.இதுவே மனிதப்பிறப்பின் நோக்கமும் ஆகும்.

    இப்படி பல நன்மைகளை தரும் விதமாக தங்களின் பதிவு காரணமாக இருப்பது பற்றி தாங்கள் பெருமகிழ்வு கொள்ளலாம்.இறும்பூது எய்தலாம்.

    என்னை இப்படி எழுத வைத்ததும் தங்கள் எழுத்தின் சக்தியே. இதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் வணக்கம் பல.

    அன்புடன்
    சு விபுலானந்தன்

  15. தலைவருக்கு அஞ்ச‘லீ’!
    —————————————
    ‘கம்போங்’ என்றழைக்கப்பட்ட கிராமங்கள் நிறைந்திருந்த ஒரு தேசத்தை, 30 ஆண்டுகளுக்குள் வளர்ந்த நாடாக மாற்றிக் காட்டிய தொலைநோக்கு சிந்தனை மிக்க தலைவர் திரு லீயின் இழப்பு, சிங்கப்பூரில் உள்ள முதியவர் முதல் இளையர் மனங்கள்வரை ஆழ்ந்த துக்கத்தை விதைத்திருக்கிறது.

    மலேசியாவோடு இணைந்து, அதன் ஒரு பகுதியாக இருப்பதே சிங்கப்பூரின் சுபிட்சத்துக்கு நல்லது என்று அழுத்தமாக நம்பியவர் லீ குவான் யூ. ஆனால், 1965ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டபோது, அதன் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு லீ உதிர்த்த வார்த்தைகளைக் கொண்ட வீடியோ இன்றும் இணையத்தில் பிரசித்தம்.

    இயற்கை வளம் இல்லை, மனித வளம் இல்லை, ஏன், நல்ல தண்ணீர் வளம்கூட இல்லை – இதுதான் 1965-ல் சிங்கப்பூரின் நிலை. ஆனால், திரு லீயிடம் 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய கனவும், தெளிவும், திட்டங்களும் இருந்தன. அதன் முழுமை பெற்ற வெற்றிகரமான வடிவம்தான் இன்றைய சிங்கப்பூர்.

    1965ஐ ஒட்டிய தொடக்க காலம், சவால்கள் நிறைந்ததாக இருந்ததைச் சொல்கிறது சரித்திரம். சீன, மலாய், இந்திய இனங்களுக்கிடையிலான சமத்துவம், இருமொழிக் கொள்கை, பிரிட்டிஷ் இராணுவம் வெளியேறிய பிறகு தனது பாதுகாப்பைத் தானே பார்த்துக் கொள்ளவேண்டிய சூழல், ஊழலற்ற நிர்வாகம், உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறத்தக்க நிலையை உருவாக்குவது – இப்படி பல சவால்கள். இவற்றையெல்லாம், தம் தேசத்தை மேம்படுத்தும் வழிகளைக் காணும் வாய்ப்பாகப் பார்த்தவர் லீ. ‘எண்ணித் துணிக கருமம்’ என்பதற்கு இவரன்றி வேறு யாரும் சரியான உதாரணமாக இயலாது. ‘இதனை இதனால் இவன் முடிப்பான்’ என்றாயும் திறன் அவரிடம் இருந்தது. அதன் பலனை இன்றைய தலைமுறை அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

    அவரது பன்முகத்தன்மை கொண்ட தலைமைத்துவம் எப்போதும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தும் ஒன்று. பொருளாதார வளமிக்க நாடாக சிங்கப்பூரை மாற்றுவதுதான் முக்கிய இலக்கென்றாலும், மொழி, பண்பாடு, மதிப்பீடுகளைக் கட்டிக்காப்பதில் அவர் காட்டிய அக்கறையின் ஒரு கூறுதான், தமிழும் சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக இருக்கும் அழகு.

    திரு.லீயைப் பற்றித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் சிங்கப்பூர்த் தமிழ் நாடகக் கலைஞரான சுப்ரமணியன் கணேஷ், ‘வெறுப்-பவர்கள் இருந்தார்கள், சந்தேகப்படுபவர்கள் இருந்தார்கள், நம்பிக்கையில்லாதவர்கள் இருந்தார்கள்.. அவர்கள் நினைப்பெல்லாம் தவறு என்று நிரூபித்த நீங்களும் இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் – நாங்கள், நாங்கள் இல்லை!’ பொருளாதாரம் மட்டுமே முக்கியமென்று இருந்துவிடாத, பன்முகத்தன்மை கொண்ட, திரு. லீ உருவாக்கிய சிங்கப்பூர் தேசக் கலைஞரின் குரல் இது.

    ‘மரணப்படுக்கையில் இருந்தாலும், எங்காவது தவறு நடக்கிறதென்றால், எழுந்து வந்து, சரி செய்வேன்’ என்றவர் திரு லீ. எழுந்து வந்து சரி செய்யத்தக்கத் தவறுகள் நேராத ஒரு தேசமாக இன்று சிங்கப்பூர் உருவாகி இருப்பதே அவரது கனவுகள் சரியானவை என்பதற்குத் தக்க சாட்சி!

    –கல்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!