ஜிகர்தண்டா (2014)

14
ஜிகர்தண்டா Jigarthanda movie

 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிப் பெரும் வெற்றி பெற்ற “பீட்சா” க்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்து இருக்கும் படம் ஜிகர்தண்டா.

படம் வெளியாகும் முன்பே ஏகப்பட்ட சர்ச்சைகளைச் சந்தித்த படம். Image Credit

A Dirty Carnival என்ற கொரியப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

ஜிகர்தண்டா

குறும்படப் போட்டியில் கலந்து கொண்ட கார்த்திக்கு (சித்தார்த்) படத்தயாரிப்பாளர் வாய்ப்புத் தருகிறார்.

ஆனால், வித்யாசமான படமாகக் கேங்ஸ்டர் படங்களின் DVD க்களை கொடுத்து இது போல ஒரு படம் எடுக்கக் கூறுகிறார்.

இதற்காக நிஜமான கேங்ஸ்டர் தேடி மதுரை சென்று அங்கே பிரபலமாக உள்ள ஒரு கேங்ஸ்டர் சேதுவை பின் தொடர்ந்து அவன் வாழ்க்கைக் குறிப்புகளை உண்மைச் சம்பவங்களின் தகவல்களைத் திரட்டுகிறான்.

கார்த்திக் இவ்வாறு செய்வதை தெரிந்து கொள்ளும்  சேது, கார்த்திக்கை பிடித்து விடுகிறான். இதன் பிறகு என்ன ஆகிறது என்பது தான் படம்.

A Dirty Carnival

தயாரிப்பாளர் கொடுக்கும் DVD யில் “A Dirty Carnival” DVD யும் இருந்து இருக்கும் போல! இந்தச் சர்ச்சை வந்தவுடனே நான் A Dirty Carnival படம் பார்த்து விட்டேன்.

ஜிகர்தண்டா படம் மாற்றங்களுடன் A Dirty Carnival படத்தில் இருந்து சில காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.  சுருக்கமாகப் படத்தின் மூலம் இது தான் ஆனால், அப்படியே அல்ல.

உண்மையில் ஜிகர்தண்டா மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது.

அருமையான திரைக்கதை ஆனால், சில காட்சிகள் ஒரிஜினலிலிருந்து எடுத்தது எனும் போது கொஞ்சம் கடுப்பு இருக்கவே செய்கிறது.

தமிழில் நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்து இருக்கிறது ஆனால், அதில் தரமான படம் என்றால் இன்றளவும் “புதுப்பேட்டை” படம் தான் முன்னணியில் இருக்கிறது.

Read : புதுப்பேட்டை [2006] “The King Of Gangster Movies”

ஜிகர்தண்டா முழுமையான கேங்ஸ்டர் படமாகக் கருத முடியாது.

அதோடு படம் முழுவதும் வன்முறையும் நகைச்சுவையும் இணைந்தே பயணப்பட்டு இருக்கிறது ஆனால், எந்த இடத்திலும் அது படம் பார்ப்பவர்களைக் குழப்பவில்லை.

கத்தி மீது நடக்கும் போன்ற விசயத்தில் மிகச் சிறப்பாகத் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.

கொஞ்சம் ஏமாந்தாலும் படம் என்ன மாதிரியான படம் என்று குழம்பி விட அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

பாபி சிம்ஹா

படத்தின் நாயகன் சித்தார்த் என்றாலும் உண்மையான நாயகன் (வில்லன்) சிம்ஹா தான். படம் முழுக்க பட்டையக் கிளப்பி இருக்கிறார்.

இவர் வில்லனாக நடித்த “நேரம்” படத்தில் பலரும் இவரின் வில்லன் நடிப்பை பாராட்டி இருந்தார்கள் ஆனால், அதில் வில்லனுக்கே உரிய முதிர்ச்சியான முகம் இல்லை என்பதால் என்னால் அவரை வில்லனாக ஜீரணிக்க முடியவில்லை.

இதில் துவக்கத்திலேயே இவருக்குச் சின்ன வயது, 38 தான் இருக்கும் எனும் படியாகக் கூறி விடுகிறார்கள்.

அதோடு இவருக்கு அமைக்கப்பட்டு இருக்கும் ஒப்பனை அவரின் கதாப்பத்திரத்தை நியாயப்படுத்துகிறது.

இதை எல்லாத்தையும் விடச் சேதுவாக அவரின் நடிப்பு!

எவருக்குள் என்ன திறமை இருக்கும் என்று யாருக்குமே தெரிவதில்லை. இது போல விஸ்வரூபம் எடுக்கும் போது படம் பார்ப்பவர்களை மிரட்டி விடுகிறார்கள்.

படத்தில் குறிப்பிடப் படவேண்டிய இன்னொரு விசயம் இதில் அடியாட்களாக வருபவர்கள். ஒவ்வொருவரும் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்தில் அதில் துணை நடிகர்களாக வரும் பலர் நம்மை ரொம்பக் கவர்வார்கள் அதே போல இதில் வருபவர்களும் ஈர்த்து இருக்கிறார்கள்.

அதிலும் Porn படங்களைப் பார்ப்பவராக வருபவர் அட்டகாசமான நடிப்பு.

சிம்ஹா ஒரு காட்சியில் அவர்கள் இடையே உள்ள இன்னொரு கும்பலின் நபரைக் கண்டுபிடிக்கச் செய்யும் உத்தியும், கண்டு பிடித்த பிறகு அவரின் சிரிப்பும் மிரட்டலாக இருக்கிறது.

சித்தார்த்

இயக்குநராக நடித்து இருக்கும் சித்தார்த் அதே வழக்கமான அப்பாவி கலந்த முக பாவனை. இவர் இதை மாற்றவே மாட்டாரா!

எப்பப் பார்த்தாலும் பாவமான, அதிர்ச்சி கலந்த, ஏமாந்த முகபாவனை.

சித்தார்த் இந்தப் படத்தில் நடிப்புப் பயிற்சியாளரை வைத்துப் பலருக்கு நடிப்பு பயிற்சி அளிப்பார். பயிற்சி எடுக்க வேண்டியது சித்தார்த் தான்.

சித்தார்த் தயவு செய்து ஒரே மாதிரி முகத்தை வைத்து நடித்துக் கடுப்பைக் கிளப்பாதீர்கள்.

சிம்ஹாக்கு பிறகு நடிப்பில் பலரின் வயிற்றை பதம் பார்ப்பது கருணாகரன். இவர் வீட்டில் தான் சித்தார்த் தங்கி சேது குறித்த விவரங்களைச் சேகரிப்பார்.

கருணாகரன் படம் முழுக்க இறுதி வரை கதையோடு ஒன்றி வருவதால், படத்தில் வன்முறை இருந்தாலும், இவரின் நகைச்சுவையும் வில்லன்களின் நகைச்சுவையும் இணைந்து, கொலை செய்யும் காட்சிகளில் கூடசிரிப்பு வருகிறது.

சித்தார்த் எடுக்கும் படத்தில் இரண்டாவது நாயகன் என்று கூறியதால், சரக்கைப் போட்டுட்டு இவர் செய்யும் அலப்பரைக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது.

லக்ஷ்மி மேனன்

சித்தார்த் சிம்ஹாவை பற்றியத் தகவல்களைத் திரட்டப் புடவை திருடியாக வரும் லக்ஷ்மி மேனனை பயன்படுத்திக் கொள்கிறார். லஷ்மி மேனன் ரொம்ப சுமார் மேனனாக இருக்கிறார்.

துணை நடிகைபோலத் தான் பார்க்க இருக்கிறார் ஆனால், இந்தக் கதைக்கு அப்படித்தான் வேண்டும் என்பது வேறு விஷயம்.

மதுரையில் புடவை திருடியாக வெகுசாதாரண பெண்ணாக இருக்கும் இவர் இறுதிக் காட்சிகளில் பேசும் போதெல்லாம் கதாநாயகிக்கு உண்டான முகமாக உடல்மொழியாக மாறி விடுவது உறுத்தல்.

கிராமத்துப் பெண், திருடி எப்படி பேசுவார் அவரது உடல் மொழி எப்படி இருக்கும் என்பதில் இன்னும் கவனமெடுத்து இருக்கலாம்.

லஷ்மி மேனன் அம்மாவாக அம்பிகா. கொஞ்சக் காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும் கதாப்பாத்திரம்.

சங்கிலி முருகன்

சிக்கியவர்களை பேசியே கழுத்தை அறுக்கும் நபராகச் சங்கிலி முருகன் நடித்து இருக்கிறார்.

இவருக்கும் இறுதியில் ஒரு முக்கியமான காட்சியைக் கொடுத்துப் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுத்து விட்டார்கள்.

ஒரு காட்சியில் சித்தார்த்க்கு கூறும் அறிவுரை ரொம்ப எதார்த்தமாகவும், பல உதவி இயக்குனர்களின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் உள்ளது.

பெரும்பகுதி டம்மி நபராக வரும் சங்கிலி முருகன் இறுதியில் திருப்பமாக ஆகி விடுவது ரசிக்கும் படி இருக்கும். ஒரு மரியாதையை கொடுத்தது போலவும் இருந்தது.

விஜய் சேதுபதியும் நட்புக்காக நடித்து இருக்கிறார்.

இவர் வரும் போது பலத்த கை தட்டல். கூடுதலாக உடம்பு போட்டு இருக்கிறார்.

படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம். சில காட்சிகளை வெட்டி நீளத்தை குறைத்து இருக்கலாம்.

படத்தின் நீளம் ரொம்ப சலிப்பாக இல்லாத அளவிற்கு படத்தின் திரைக்கதை இருப்பதால் இதைப் பெரிய குறையாகக் கூற முடியாது.

பின்னணி இசை

படத்தில் இசைக்கு முக்கியப் பங்கு உள்ளது. பின்னணி இசை ரொம்ப நன்றாக உள்ளது. ஒளிப்பதிவும் குறை கூற ஒன்றும் தோன்றவில்லை.

படத்தின் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட திருப்பங்கள்.

சும்மா எதோ வைக்க வேண்டும் என்று இல்லாமல் படத்தோடு இயல்பாக வருவதால், படம் பார்ப்பவர்களைப் பெரிதும் கவர்ந்து உள்ளது.

பெரும்பாலான காட்சிகள் ஊகிக்க முடியாததாக இருந்தாலும், இன்னும், பில்டப் கொடுத்துப் பயந்து கதவைத் திறக்கும் போது எதிரில் இருப்பவர் சாதாரணமானவர் என்ற காட்சிகளும் இருக்கிறது.

யார் என்று காட்டப்படும் முன்பே படம் யார் என்று கூறி விடுகிறார்கள்.

இறுதிக் காட்சிகள் ரொம்ப நன்றாக இருக்கிறது. பல திருப்பங்கள் அதோடு அவை ரசிக்கும் படியும் இருக்கின்றன என்பது படத்தின் வெற்றி.

படம் முழுக்க சிம்ஹாவே ஆக்கிரமித்து இருக்கிறார். கோபம், சந்தோசம், வன்முறை, பெருமை, பாசம் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.

வன்முறைக் காட்சிகள் இருந்தாலும் நகைச்சுவையும் இணைந்து வருவதால், ரசிக்கவே செய்தார்கள்.

இந்தப் படத்தில் நகைச்சுவை என்பது படத்தோடு ஒன்றி வருவது, வடிவேல் சந்தானம் போலத் தனித்துத் தெரிவதல்ல.

காட்சிகளில் வன்முறையே சுத்தமாகப் பிடிக்காதவர்களுக்கு, குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு (Porn DVD பற்றி வருவதால்) ஏற்றப் படமல்ல.

படத்தில் சுவாரசியமான காட்சிகள் நிறைய உள்ளது, அவற்றைப் பற்றி நான் எதுவுமே கூறவில்லை.

Directed by Karthik Subbaraj
Produced by Kathiresan
Written by Karthik Subbaraj
Starring Siddharth, Lakshmi Menon, Bobby Simha, Karunakaran
Music by Santhosh Narayanan
Cinematography Gavemic U Ary
Edited by Vivek Harshan
Production company Five Star Films, SMS Pictures
Distributed by Sun Pictures
Release date(s) August 1, 2014
Running time 171 minutes
Country India
Language Tamil

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. தரமான விமர்சனம் கிரி.. Dirty carnival நான் பார்க்கவில்லை. அந்தப் படத்தில் வில்லனிடம் அடியாளாக இருக்கும் நாயகன் தன் நண்பன் இயக்கும் படத்திற்காக வில்லனுடைய வாழ்க்கை கதையை கொடுத்து உதவுவதாக உள்ளது என ஒரு விமர்சனத்தில் படித்து இருக்கிறேன்.

  2. சார், அந்த நடிப்பு சொல்லி கொடுப்பவரை பற்றி
    நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே

  3. பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி… இந்த மாத இறுதிக்குள் எப்படியும் பார்ப்பேன் என நினைக்கிறேன்..

  4. டார்ட்டி கார்னிவல் – மாதிரி முதல் பாதி?
    படத்த நீங்க இன்னொரு தடவ நல்ல பாருங்க 🙂

  5. @சரத் நீங்கள் கூறும் கதை சரி தான்.

    @கோபி அனைவரையும் கூறினால் ஜிகர்தண்டா படத்தை விட பெரியதாக சென்று விடும் 🙂 நீங்கள் கூறும் நபர் கலக்கி இருக்கிறார் என்பது உண்மை தான்.

    @யாசின் பாருங்க..! ரொம்ப நன்றாக இருக்கிறது.

    @Naanthaan நீங்கள் கூறுவது போல முதல் பாதி அப்படியே எடுக்கப்படவில்லை ஆனால், முக்கிய ஆரம்பமான / மூலமான வில்லனை வேவு பார்த்து படம் எடுப்பது, தயாரிப்பாளர் இது போல ரியலிஸ்டிக்கான படத்தை எடுக்க இவரிடம் கூறுவது போன்ற காட்சிகள் வருகிறது. அதோடு இரண்டாம் பாதியிலும் சில காட்சிகள் உள்ளது. முதல் பாதி என்று நான் கூறி இருக்கக் கூடாது ஆனால், சில முக்கியக் காட்சிகள் மற்றும் கதையின் மூலம் இதில் இருந்து தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.

    A Dirty Carnival படம் விரைவில் விமர்சனம் எழுதுவேன் அதில் இவை பற்றி விரிவாக குறிப்பிடுகிறேன்.

  6. அண்ணா படம் இன்னும் பார்க்கவில்லை . நான் சென்னையில் இருந்து உங்கள் ஊர் கோவைக்கு வந்துவிட்டேன். இந்நிலை வரை நான் கோவையில் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். இந்த ஊர் செமையா இருக்குனா. ப்பா வாய்ப்பே இல்லை. வெயிலே தெரியல. எப்பவும் ஒரு குளிர்ச்சி இருந்துகிட்டே இருக்கு. மாலை 5 மணிக்கெல்லாம் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துகொள்கிறது.

    சென்னையில் வெளியில் வாடி வதங்கிய எனக்கு கோவை சொர்க்கம் மாதிரி இருக்கு அண்ணா. எனக்கு சென்னையை விட கோவை தான் ரொம்ப பிடிச்சிருக்கு . நன்றி என்னிடம் அன்பு காட்டிகொண்டு வரும் வேலன் மெஸ் அக்கா , பேக்கரி கடைக்காரர், பேருந்து நடத்துனர், ஊர் மக்கள் , வீட்டு ஓனரின் மனைவி ஆகியோர்களுக்கு ….

  7. அப்படியே எனக்கு கோவையில் எனக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த நண்பனுக்கும், கோவை பற்றி அடிக்கடி சொல்லி என்னை இது வரை பொறாமை பட வைத்த வழிகாட்டி “கிரி” அண்ணா வுக்கும் நன்றி

  8. செல்போனை வைத்துகொண்டு நம்மாட்கள் செய்யும் அலம்பல் பத்தி கொஞ்சம்
    எழுதுங்க

  9. @ காமேஷ் தல பாருங்க நல்லா இருக்கு.. இதை திரையரங்கில் பார்த்தால் தான் நன்றாக இருக்கும்…உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

    @கார்த்தி செம்மொழி மாநாடு நடத்தும் முன்பு தற்போது இருந்த மரங்களை விட 60% அதிகமாக இருந்தது.. அப்போது இன்னும் குழுமையாக இருந்தது. இந்த மாநாட்டிற்கு பிறகு வெப்பத்தின் அளவு கூடி விட்டது. ஏன்டா இந்த மாநாடு இங்க வந்தது என்று கடுப்பாக உள்ளது.

    நீ கூறியது போல எங்கே சென்றாலும் அனைவரும் அன்பாக பழகுவார்கள்.

    @கோபி இது பற்றி எழுத நாட்கள் ஆகும். ஏனென்றால் இது கொஞ்சம் நெருக்கடியான தலைப்பு.. நானே கைத்தொலைபேசி அதிகம் பயன்படுத்துகிறேன். பந்தாக்கு அல்ல..இதன் மூலம் கிடைக்கும் பயனுக்காக. பார்ப்போம்.. பின்னாளில் எழுதுகிறேன். நன்றி

  10. கிரி படம் பார்த்து விட்டேன். படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

  11. கிரி,

    படம் பார்த்தேன்…. மிக நன்றாக இருந்தது… முக்கியமாக கிள்ய்மாக்ஸ் .. enjoyed the movie after a long time.. watched VIP also … Sathuranga vettai too… continuously movies for a while now….

    Kamesh

  12. அருமையான விமர்சனம் கிரி. நேற்று தான் தியேட்டரில் சென்று பார்த்தோம். ஹவுஸ் ஃபுல். செவ்வாய்க்கிழமை மட்டும் $5 டிக்கெட். இந்த வாரம் அஞ்சான் ரிலீஸ் ஆவதால் இன்றுதான் இந்தப் படம் கடைசி.

    இந்தப் படத்தின் நாயகன் சித்தார்த் சென்ற வாரம் இங்கு தான் இருந்தார். ஒரு மெல்லிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!