நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

12
நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

விலைவாசி உயர்வு, நமது அதிகரிக்கும் தேவைகளால் ஆகும் செலவுகளைப் பார்த்து நம்முடைய தேவைகளை உற்று நோக்கும் போது நம் சிரமத்திற்குக் காரணம் நாம் தான் என்பது உறுதியாகிறது.

இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் நன்றாகச் சம்பாதிப்பவரும் இதையே கூறுகிறார் குறைவாகச் சம்பாதிப்பவரும் இதையே கூறுகிறார்.

நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

அடிப்படைப் பிரச்சனை என்னவென்று பார்த்தால், புத்தர் கூறிய “ஆசை” தான்!

ஆசைப் படுவதில் தவறில்லை ஆனால், ஆசை பேராசையாகி முற்றும் இல்லாமல் தொடர்ந்தால் அதற்குண்டான “விலையையும்” கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். Image Credit

கடந்த சில வருடங்களாகப் பல விசயங்களை நண்பர்களிடையே, என் குடும்பத்திடையே, மற்றவர்களின் அனுபவங்களைக் கவனித்ததில், தினமும் செய்திகளைப் படிப்பதில் உணர்ந்து கொண்டது, பிரச்சனை வேறு எங்கும் இல்லை நம்மிடையே தான் என்பது.

ஆசை என்று எதற்குக் கூறுகிறேன் என்றால், மனிதன் மனம் எப்போதுமே எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் திருப்தியடையாது.

தேவைகளை அதிகரித்துக்கொண்டு அதற்காகச் சம்பாதிக்க வேண்டும் என்ற போராட்டத்தில், நமது நிகழ்கால வாழ்க்கையை வீணடித்து விடுகிறோம்.

நமது தேவையை அதிகரிக்க அதிகரிக்க அதற்காக நாம் போராடுவதும் அதிகரிக்கிறது. இது இயல்பாகவே நமது நிம்மதியை குறைக்கிறது.

எப்போதும் ஒரு பற்றாக்குறை / கடன் நிலையிலேயே நம்மை வைத்து இருந்து “எப்போது இதெல்லாம் சரியாகும்!” என்று ஏங்க வைத்து விடுகிறது.

இதற்குக் காரணமே நாம் தான் என்பதை உணராமலே நாம் வாழ்க்கை முழுவதும் புலம்புகிறோம்.

எதிர்கால பாதுகாப்பு

நம்மவர்கள் முடிவே இல்லாமல் தங்களது தேவைக்கு மேல் “பாதுகாப்பு” என்ற பெயரில் சொத்துக்களை (நிலம் / வீடு) வாங்கிக் குவித்துக்கொண்டே செல்வதால், அவசியமாகத் தேவைப்படுகிறவர்களுக்கு அது கிடைக்காமல் சென்று ஒரு பற்றாக்குறையை போலியாக ஏற்படுத்தி விடுகிறது.

விளை நிலங்கள் குறைய இது போன்ற மக்களின் பேராசையே காரணம். எத்தனை இடங்கள் வாங்கினாலும் மனம் முழுமையடையாது.

இதெல்லாம் என்றுமே சரியாகாத நடைமுறைப் பிரச்சனை.

முதலில் அடிப்படைப் பிரச்சனைகளைச் சரி செய்ய முயற்சி, சரி செய்த பின் வீடு வாங்குவது. இது வரையான நிகழ்வுகள் நியாயமானதாகத் தோன்றுகிறது.

இந்தத் தேவைகளை முடித்த பிறகு, இடம் வாங்குவது, இன்னொரு வீடு வாங்குவது, கார், அடுத்து இன்னொரு வீடு, இடம் என்று தொடர்கிறது.

இத்தனையையும் யாரும் நமக்கு இலவசமாகக் கொடுத்து விடப்போவதில்லை.

இதற்காக நாம் தான் சம்பாதிக்க வேண்டும்.  கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், பல இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.

சுருக்கமாக, எதிர்கால பாதுகாப்பு / சொகுசு என்பதை மனதில் வைத்து மனம் மேலும் மேலும் தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இது லாஜிக்காக நமக்கான நெருக்கடிகளையும் அதிகரிக்கிறது.

நல்லா சம்பாதிப்பவரும் இதே போலப் புலம்புகிறார், நடுத்தரத்தில் உள்ளவர்களும் இதே புலம்புகிறார்கள்.  

இழுத்துப் பிடித்துச் செய்யப்படும் செலவுகள் என்றுமே நிம்மதியைத் தராது.

என் ஒரு சில முடிவுகளில் அனுபவமின்மையால் தவறுகள் நேர்ந்து இருக்கிறது ஆனால், தெரிந்தே சென்று மாட்டியதில்லை.

வாங்கும் திறன்

சமீபமாக விலைவாசி உயர்ந்து வருகிறது. இருந்தும் மக்களின் வாங்கும் திறன் கொஞ்சம் கூடக் குறையவில்லை மாறாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

விலை உயர்ந்ததால், அடிப்படைச் செலவுகளைத் தவிர்க்க முடியாது ஆனால், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க முடியும் ஆனால், அப்படி நடப்பது போல எனக்குத் தோன்றவில்லை.

மக்கள் செய்யும் செலவுகளைப் பார்த்தால், எப்படி இவ்வளவு பணம் அனைவரிடமும் புழங்குகிறது? எப்படி செலவுகளைச் சமாளிக்கிறார்கள்? என்று எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

நாளுக்கு நாள் விலைவாசி கண்டபடி உயர்ந்து செல்கிறது ஆனாலும், மக்கள் செய்யும் செலவுகள் குறைவது போலத் தெரியவில்லை.

என்னால் இவற்றை எல்லாம் நினைத்தே பார்க்க முடியவில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோர் உணர்த்துவது போலத் தெரியவில்லை.

கட்டண உயர்வு

எடுத்துக்காட்டுக்கு நான் முன்பு கோபி / கோவையில் ஹோட்டல் சென்றால் உணவுடன், பழச்சாறு, ஐஸ்கிரீம், காஃபி, வடை போன்றவற்றை சாப்பிடுவதுண்டு.

அனைத்தையும் ஒரே சமயத்தில் அல்ல அந்தந்த நேரத்தைப் பொறுத்து ஆனால், என்னால் தற்போது உணவைத் தவிர வேறு எதையும் வாங்கவே பீதியாக இருக்கிறது.

இவற்றை எல்லாம் வாங்குவதையே நிறுத்தி விட்டேன்.

விலை அதிகம் என்பதை விட அந்தப் பொருளுக்கான மதிப்பை விட மிக மிக அதிகமான விலையாக இருக்கிறது.

சாப்பாடு 80 ருபாய் என்றால் பழச்சாறு 50 ருபாய் என்று இருக்கிறது. ஐஸ்க்ரீம் 50 ருபாய் என்று அலற வைக்கிறார்கள்.

அடிப்படைச் செலவான சாப்பாட்டிற்கு 80 ருபாய் கொடுக்க முடியும் ஆனால், கொஞ்சமும் நியாயமே இல்லாத விலையில் இருக்கும் இவற்றிக்கு எப்படித் தருவது?

அதிகரிக்கும் தேவைகள்

கூடுதல் வீடு, கார், நிலம் என்று மேலும் நமது தேவைகளை / சொத்துகளை அதிகரிக்க முயற்சிக்கும் போது வாழ்க்கை முழுவதும் அதற்கான போராட்டத்திலேயே முடிந்து விடுகிறது.

வாழ்ந்த வாழ்க்கை என்னவென்று பார்த்தால், வாழ்க்கை முழுவதும் கடனைக் கட்டப் போராடிக்கொண்டு இருந்தோம் என்பதைத் தவிர இறுதியில் ஒன்றுமே இருக்காது.

கொஞ்ச நாள் முன்னாடி “கோபிநாத்” பேசிய விசயம் தான் நான் கூற வரும் கருத்தின் மொத்த உருவம்.

இவர் கூறுவது முக்கியமாகப் படிப்பை மனதில் வைத்து என்றாலும், நம் அனைவரது வாழ்க்கைக்கும் பொருந்தும்.

இதில் கோபி கூறிய சில விசயங்கள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.

வெளிநாடு சென்றவர்கள்

சிறந்த எடுத்துக்காட்டுயார் என்றால் கடனை அடைக்க வேண்டும் என்று வெளிநாடு சென்றவர்கள்  தான்.

கடனை அடைத்து இருப்பார்கள் ஆனால், குடும்பத்தினர்  நண்பர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.

அதை வாங்கு இதை வாங்கு இடத்தை வாங்கு என்று உசுப்பேத்தி விடுவார்கள். இங்குள்ளவர்களும் அதை வாங்கிய பிறகு அதற்கான கடனை அடைக்க மேலும் முக்கிக்கொண்டு இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் பலர் ஊருக்கு வர நினைத்தும் வர முடியாமல் தாமதமாகிக்கொண்டே இருப்பதற்கு காரணங்களே இவை (ஆசை) தான்.

எதிர்காலப் பாதுகாப்பு என்ற புலி வாலைப் பிடித்தக் கதையாக, எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்குச் செலவு ஊரில் தயாராக இருக்கும்.

எத்தனை வருடம் இருந்தாலும் தேவைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். முடிவில்லாத்  தேவை. நாமாக நிறுத்தினாலொழிய இந்தப் பிரச்னைக்குத் தீர்வில்லை.

மக்கள் கேள்வியே இல்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழகி விட்டார்கள்.

நிறுவனங்களும் “இவங்க எவ்வளோ அடித்தாலும் தாங்கும் நல்லவர்கள்” என்று கட்டுப்பாடே இல்லாமல் விலைகளை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.

கவலைப்படாத மக்கள்

விலை அதிகம் என்றால், புறக்கணிக்கப் பெரும்பாலனவர்கள் நினைப்பதில்லை.

எனவே, தயாரிப்பாளர்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் கொடுக்கும் விலைக்கு எந்தத் தகுதியுமில்லாத பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

விலை உயர்கிறது என்று மக்கள் அதைப் புறக்கணித்தால், தானாக விலை குறையும் ஆனால், நடப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும்.

இது சரியாகக்கூடிய பிரச்சனை இல்லை. ஏனென்றால் இதெல்லாம் ஓரிருவர் சம்பந்தப்பட்ட பிரச்சனையில்லை.

அந்நிய முதலீடு என்று ஏகப்பட்டதை இறக்கி விட்டார்கள்.

மக்களும் அவர்கள் கொடுக்கும் கவர்ச்சி விளம்பரத்தில் மயங்கி, தங்களால் முடியவில்லை என்றாலும் EMI அப்படி இப்படி என்று அந்தப் பொருளால் பயனுள்ளதோ இல்லையோ வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எந்த மாலுக்குச் சென்றாலும், மக்கள் கூட்டம் கூட்டமாகப் பணத்தை தண்ணீராக (இதுவே தற்போது விலையுயர்ந்ததாகி விட்டது, இனி இந்த எடுத்துக்காட்டு பயன்படாது) செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பார்க்கவே திகிலாக இருக்கிறது!

அனைவரும் கடனில்

லட்சங்களில் சம்பாதிப்பவரும் கடனில் இருக்கிறார், ஆயிரங்களில் சம்பாதிப்பவரும் கடனில் இருக்கிறார்.

சம்பளக்காரர்களை மனதில் வைத்தே இதை எழுதி இருக்கிறேன், வியாபாரிகளை அல்ல.

நம் அடிப்படைத் தேவைகள் நிறைவாகி, ஆசைகள் ஒரு கட்டத்தில் குறையவில்லை என்றால், “பாதுகாப்பு” என்ற ஒரு காரணத்தைக் காட்டி வாழ்க்கை முழுவதும் கடனைக் கட்டி நெருக்கடியிலேயே இருக்க வேண்டியது தான்.

எனக்கு இந்த எண்ணம் ஒருவருடத்திற்கு முன்பு வந்தது. கொஞ்சம் முன்னாடியே வந்து இருந்தால், நன்றாக இருந்து இருக்கும். இப்பவும் ரொம்பத் தாமதமில்லை.

இதில் என்ன முக்கியச் சிக்கல் என்றால், இந்த எண்ணத்திற்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒத்துழைக்க வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.

எனக்குப் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும், குடும்பத்தினரின் ஆதரவும் அவர்களின் புரிந்துணர்வும் இருப்பதால், வேறு எதுவுமே எனக்குப் பிரச்சனையாகத் தோன்றுவதில்லை / தோன்றியதில்லை.

உண்மையான பணக்காரர் யார் என்றால், கடனில்லாத வாழ்க்கை வாழ்பவரும் அன்பான குடும்பத்தினரை பெற்றவருமே! 

மற்ற எந்த வசதியும் சொகுசும் இதற்கு ஈடாகாது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

12 COMMENTS

  1. வேணாம் கிரி போதும் நிறுத்துங்க!!! இல்லாட்டி அழுதுடுவேன்!!! என் மனதில் ஓடி கொண்டு இருந்த எண்ணங்களை சரியான தருணத்தில்பிரதிபளித்தமைக்கு நன்றி…
    ================================================================
    40/50 ஆண்டுகளுக்கு மேல் வாடகை வீட்டில் வசித்த தாயின் விருப்பத்திற்கு இணங்க சொந்த வீடு கட்ட ஆரம்பித்து 2 மாதம் தான் ஆகுது, ஆரம்பிக்கும் முன் கையில் இருந்த இருப்பு குறைவு என்பது எனக்கு மட்டும் தெரியும். பிளான் போடும் போதே,

    உறவினர்களும், நண்பர்களும் மேல ஒரு அடுக்கு, கிழே ஒரு அடுக்கு, நடுவுல ஒரு அடுக்கு போட்ட வாடகை விடலான்னு ஆளுக்கு ஒவ்வொறு யோசனை சொன்னாங்க!!! எல்லாத்தையும் புறக்கணித்து விட்டு என்னோட சொந்த முடிவுல போதும் என்ற எண்ணத்தில், தேவைக்கு ஏற்ப ஒரு வீட்டுக்கு வேலை இப்ப போகிட்டு இருக்கு…
    ================================================================
    கடைசியில எல்லாம் சொன்னது இவன் யார் சொன்னாலும் கேட்கமாட்டான் என்று… (உண்மை தான்…) சிறு வயதில் தாய் கொடுத்த முழு சுதந்திரத்தின் விளைவாக என்னுடைய வாழ்கையின் பாதையை தீர்மானிப்பது நான் மட்டுமே (லாபமும் எனக்கே நட்டமும் எனக்கே)..
    ================================================================
    (எனக்கு காசோட அருமை தெரியாம இருக்கலாம், ஆனால் அது இல்லாத இருக்கும் போது ஏற்படும் வலி எனக்கு தெரியும்) – சொல்லாததும் உண்மை புத்தகத்தில் படித்து… சத்தியமான வரிகள்… என் வாழ்க்கைக்கு பொறுத்தமான வரிகள்… பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

  2. //விலை உயர்ந்ததால், அடிப்படைச் செலவுகளை தவிர்க்க முடியாது ஆனால், ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க முடியும்

    ரொம்ப சரியா சொன்னிங்க அண்ணா . வில் ஸ்மித் quotes ரொம்ப நல்லா இருந்தது …பட் அதுக்கு பதிலா உங்க போட்டோ போட்டு கிரி quotes னு உங்க quotes போட்டு இருந்தா நல்லா இருந்து இருக்கும். why can ‘t u try this …..இவ்ளோ அழகா இந்த டாபிக் பற்றி எழுதறப்போ u have enough experience to give quotes to your readers …photo add பண்றது டூ மச் னு தோனுச்சுனா அட்லீஸ்ட் quotes banner மட்டும் போட்டு…image கிரெடிட் கிரி ப்ளாக் குடுங்க..

  3. சிறந்த உதாரணம் யார் என்றால் கடனை அடைக்க வேண்டும் என்று வெளிநாடு சென்றவர்கள் தான். கடனை அடைத்து இருப்பார்கள் ஆனால், குடும்பத்தினர் நண்பர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதை வாங்கு இதை வாங்கு இடத்தை வாங்கு என்று உசுப்பேத்தி விடுவார்கள். இங்குள்ளவர்களும் அதை வாங்கிய பிறகு அதற்கான கடனை அடைக்க மேலும் முக்கிக்கொண்டு இருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பலர் ஊருக்கு வர நினைத்தும் வர முடியாமல் தாமதமாகிக்கொண்டே இருப்பதற்கு காரணங்களே இவை (ஆசை) தான். எதிர்காலப் பாதுகாப்பு என்ற புலி வாலைப் பிடித்தக் கதை”

    நிதர்சனம் … அப்படியான புலி வாலை பிடித்து தான் அரபு நாடுகளில் இன்னும் இருக்கிறோம் .வெறும் உடலினை மட்டும் கொண்டு….. மனம் இல்லாமல் …

  4. ***அந்நிய முதலீடு என்று ஏகப்பட்டதை இறக்கி விட்டார்கள். மக்களும் அவர்கள் கொடுக்கும் கவர்ச்சி விளம்பரத்தில் மயங்கி தங்களால் முடியவில்லை என்றாலும் EMI அப்படி இப்படி என்று அந்தப் பொருளால் பயனுள்ளதோ இல்லையோ வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். எந்த மாலுக்குச் சென்றாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை தண்ணீராக (இதுவே தற்போது விலையுயர்ந்ததாகி விட்டது, இனி இந்த உதாரணம் பயன்படாது) செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். பார்க்கவே திகிலாக இருக்கிறது!***

    தல: இதில் பொறுப்பில்லாமல் இருக்கது பெண்கள்தான் என்கிற உண்மையை நீங்க சொல்லாமல் மறைத்து விட்டீர்கள்.

    இதில், அம்மா, அக்கா, தங்கை, காதலி, மனைவி எல்லோருமே அடங்குவார்கள்.

    கருணாநிதி தன் மனைவியை சாய்பாபவை வணங்குவதை தடுக்க முடியவில்லை என்பதை கேலி பண்ணுவதை விட, தன் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்து, அவரை தான் சொல்லுவதுபோல்தான் கேக்கணும் என்று அடிமையாக் ட்ரீட் பண்ணவில்லைனு சிந்திக்க கத்துக்கொள்ளணும்.

    அதேபோல் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளது. சம்பாரிக்கும் பெண்களை கேட்கவே வேண்டாம்.

    நான் பெண்களைத்தான் இந்த விசயத்தில் 90% குறை சொல்லுவேன். ஆண்கள் இந்த விசயத்தில் ஓரளவுக்கு “வைஸ்”தான். ஆனால் பெண்கள் மனங்கோணாமல் நடந்து கொள்ளுகிறேன் என்று மனதுக்குள் கவலைப் பட்டுக்கொண்டே இந்த முட்டாள்த்தனமான ஆடம்பரத்தை கட்டுப் படுத்த முடியாமல் பரிதவிக்கிறார்கள்.

    பெண்க் சுதந்திரம்னா, பார்லர் போறது, ரெஸ்டாரண்ட்ல சாப்பிடுறது, சினிமா பார்க்கிறது, மாலில்போயி கண்டதையும் அள்ளிக்கொண்டு வருவதுணு ஆயிப்போச்சு. பொறுப்பில்லாமல் இந்திக்காமல், பண வேல்யு தெரியாமல் இப்படி ஊதாரியா இருப்பதுதான் பெண் சுதந்திரமா?

    ஆவது பெண்ணால் அழிவதும் பெண்ணால். இப்போ அழிந்து கொண்டிருக்கிறோம், பொறுப்பில்லாத நவ நாகரீக தாய்க்குலங்களால்!

  5. என் தாத்தா அவர் காலத்திலேயே சொத்துக்களை அழித்து விட்டதால் எனது தகப்பனார் பத்து வயதிலிருந்தே அநாதை ஆனார், அதனால் தான் என்னவோ அன்றாட வாழ்விற்கே போராடி போராடி சொத்து என்று எதையும் சேர்த்து வைக்கவில்லை. என் மற்றும் என் தம்பி முயற்சியில் 2005க்கு அப்புறம் நிலம் வாங்கி 2011ல் என்னுடைய 35ஆவது வயதில் திருமணம் செய்து பலநாள் கழித்து 2013 வீடு கட்ட ஆரம்பித்து தற்போது 15 லச்சரூபாய் கடன் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பே சொந்த வீடு இருக்கவேண்டுமென்று நினைத்தேன்.. கடந்து வந்த பாதைகளை நியாபக படுத்துகிறீர்கள் கிரி.
    என் ஊர் டவுன் அளவில் இருந்தாலும் ரெண்டு பேருக்கு (பெற்றோருக்கு) பத்தாயிரம் செலவாகிறதாம்.. ஊருக்கு திரும்ப ரொம்பவே பயமாய் இருக்கு. பத்து ரூபாய்க்கு ஐந்து புரோட்டாவில் ஒரு நாளையே ஓட்டியிருக்கிறேன். இப்போ விடுமுறை என்று சென்றால் செலவுக்கு பயந்து 15 நாளிலே திரும்பிவிடுகிறேன். (வீட்டினர் செய்யும் செலவு அப்படி) சர்வ சாதாரணமாக 80 ரூபாய்க்கு ஜீஸ் / மதியத்துக்கு 150 ரூபாய்க்கு பிரியாணி ஆர்டர் செய்கிறார்கள்.
    சொந்த ஊரில் வீடு கட்டியும் அங்கே சென்று குடியிருக்க முடியாமல் இங்கே (வெளிநாட்டில்) சிறு இடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தினமும் என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
    கடன் அடைக்க மூன்று வருடம் டார்கெட் நானே வைத்துகொண்டாலும், இதற்க்கு அடுத்து என்ன என்ற டார்கெட் என் குடும்பத்தினர் கையில் இருக்கிறது.
    பத்தாததுக்கு உறவினர் கடன் கேட்பது, நகை செலவு, திருமணம், கோவில், மருத்துவம் போன்றவற்றுக்கு கேட்காமலே செலவு செய்து மாத இறுதியில் போன் செய்யும்போது செலவு கணக்கு சொல்வார்களே.. அதை கேட்கும்போது இதயத்திலிருந்து ரத்தம் கசிகிறது.
    (அடுத்த 20 நாளைக்கு சீனா செல்கிறேன் சீன தடை இருந்தாலும் பதிவுகளை படிக்க முயற்சி செய்கிறேன்)
    முடியல..

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் வீடு கட்டுவது பற்றிக் கூறியதால் என்னுடைய அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் கூடுதலாக மேலே ஒரு அடுக்கு கீழே ஒரு அடுக்கு என்று கட்டினால் அதற்கு ஆகும் செலவு 15 – 20 லட்சம் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் சம்பாதிக்க கூடுதலாக தோராயமாக இரு வருடம் ஆகலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு இரண்டு வருட வட்டியை கணக்கு செய்து கொள்ளுங்கள்.

    பின் உங்கள் பகுதியில் வீட்டு வாடகை எவ்வளவு போகிறது என்று பாருங்கள். கிராமம் என்றால் 2500-3000 ஓரளவு நகரம் என்றால் 4000 – 7000 செல்லலாம். இதற்கு நீங்கள் செய்யும் முதலீடு 15-20 லட்சம். இதை வங்கியில் போட்டால் வட்டியே 15000 வரும். வீடு கட்டினால் சொத்தாக இருக்கும். எனவே பொறுமையாக யோசித்து அவசரப்படாமல் முடிவு எடுங்கள்.

    ரம்ஜான் வாழ்த்துகள்

    @ஜானகி நான் இது குறித்து முன்பே யோசித்து இருக்கிறேன் ஆனால், இங்கே அல்ல என்னுடைய FB Page ல் போடும் படங்களுக்கு. எதையும் செய்தால் கொஞ்சம் நன்றாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இதிலும் சில படங்கள் எடிட்டிங் சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால், எனக்கு அதில் அனுபவம் இல்லை எனவே அப்படியே இருக்கிறது. முயற்சிக்கிறேன், ஆலோசனைக்கு நன்றி 🙂 .

    @வருண் வாங்க எப்படி இருக்கீங்க?

    இந்தக் கட்டுரை என்ன நடக்கிறது என்ன பிரச்சனை என்பதைக் கூறவே! யாரையும் குறிப்பிட அல்ல. அதே போல பெண்களை மட்டுமே மொத்தமாகக் கை காட்டி விட முடியாது. சதவீத அளவில் வேறுபாடுகள் இருக்கலாம் அவ்வளவே.

    இந்த விசயத்தில் கலைஞரை எல்லாம் உதாரணமாக எடுக்க முடியாது. ஏனென்றால் இவர் வீட்டில் ஒரு மாதிரி வெளியில் ஒரு மாதிரி.

    @ராஜ்குமார் நாமெல்லாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செலவதால், சீரான விலை உயர்வை உணராமல் திடீர் என்று அதிகமாகப் பார்க்கும் போது இந்தப் பிரச்சனை வருகிறது. அங்கேயே இருப்பவர்களுக்கு இது பழகி விடுகிறது. நீங்கள் சொல்வது போல ஹோட்டல் சென்றால் எனக்கும் திக்கென்று தான் இருக்கிறது.

    செலவு கணக்கு உண்மையில் வெளிநாட்டில் உள்ளவர்களின் பலரின் நிலை இது தான்.

    சீனா எப்படி இருக்குனு வந்து சொல்லுங்க 🙂

  7. அண்ணா இந்த பதிவை படித்ததும் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது அது என்னவென்று புரியவில்லை . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் திரும்ப திரும்ப ஞாபகத்தில் வந்து போகிறது அது தேவையானதை மட்டும் வாங்கு அவசியமற்றதை வாங்காதே. விலை அதிகமாக விற்கும் அவசியம் இல்லாத பொருட்களை தவிர்த்திடு .. உங்களிடம் இப்போதைக்கு இந்த பதிவின் மூலம் கற்றுக்கொண்டேன் அண்ணா நன்றி

  8. ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்க வேண்டிய எல்லோருக்குமே ஒரு நேரத்தில் வரும் எண்ணம்.
    35 வயதில் வரக்கூடிய mid – life crisis ம் ஒரு காரணி. தெளிவாக கடந்து செல்ல ஆசிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!