சபரிமலை பயணம்

1
Sabarimalai சபரிமலை பயணம்

ந்தியா சென்ற பொழுது அம்மாவின் வேண்டுதலுக்காகச் சபரிமலை பயணம் சென்று வந்தேன். ஏற்கனவே 9 முறை சென்று வந்து இருந்தேன் இது 10 வது முறை.

சபரிமலை பயணம்

சபரிமலையில் ஏற்கனவே கூட்டத்தில் சிக்கி வெறுத்து போன அனுபவம் இருந்ததால் வழக்கமான டிசம்பர் மாதமாக இல்லாமல் சித்திரை மாதம் சென்றேன்.

அதுவும் கேரள விஷு வருடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்று திரும்பி விட்டேன். கூட்டம் அதிகம் இருக்கும் என்று.

ஏன் இப்படி கூட்டத்திற்கு பயப்படுகிறேன் என்றால், ஒரு முறை சீசன் நேரத்தில் சென்று 8 மணி நேரம் தொடர்ந்து வரிசையில் நின்ற அனுபவம் தான், எறும்பு கூட எங்களை விட வேகமாகச் சென்று இருக்கும்.

மிக மெதுவாக வரிசை சென்றது இடையில் நுழைகிறவர்கள், தள்ளி விடுபவர்கள், காலை மிதிப்பவர்கள் என்று அனைவரையும் சமாளிக்க வேண்டும்.

அந்த முறை பொறுமை போய்ச் சாமியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் வீட்டிற்கே திரும்பப் போய் விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

8 மணி நேரம்

பின்னர் எப்படியோ ஐயப்பனை பார்த்தாகி விட்டது அப்போது தொடர்ந்து 8 மணி நேரம் நின்றதால் இடுப்புக்கு கீழே உணர்ச்சியே போய் விட்டது.

அப்புறம் கொஞ்சம் ஓய்வு எடுத்த பிறகே பழைய நிலைமைக்கு வந்தேன்.

இறங்கும் போது, அதுவரை இனி சபரிமலைக்கே ஒரு பெரிய கும்பிடு என்று நினைத்துக் கொண்டு இருந்த நான், மறுபடியும் கண்டிப்பாக வர வேண்டும் என்று நினைத்தேன். அது தான் கடவுளின் மகிமையோ என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இந்த மாதிரி சீசன் நேரத்தில் வரக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.

எங்கள் ஊர் கோபியிலிருந்து 12 மணி நேர பயணத்தில் பம்பையை அடைந்தோம், காரில் சென்று இருந்தோம் நால்வராக.

தகவல் பலகை

பொதுவாக வேன் அல்லது பேருந்தில் சென்று வந்ததால் எனக்கு வழி பிரச்சனை தெரியவில்லை.

இப்பொழுது வண்டியை நிறுத்திக் கேட்டுக் கேட்டுச் சென்றோம், கேரளாவில் மிகக் கொடுமையான விஷயம் ஊர் தகவல் பலகை (sign board).

ரொம்ப அநியாயங்க ஒரு இடத்தில் கூட உருப்படியாக இல்லை, சில இடத்தில் 150 கிலோ மீட்டர் என்று இருக்கும் 20 கிலோ மீட்டர் சென்ற பிறகு வரும் எதாவது பலகையைப் பார்த்தால் அதே இடத்துக்கு 160 கிலோ மீட்டர் என்று இருக்கும்.

சில இடங்களில் 30-40 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு தகவல் பலகை கூட இருக்காது, கேரளாவில் 9 மணி ஆனாலே சாலையில் நடமாட்டம் குறைந்து விடுகிறது.

9.30 மணிக்கு எல்லாம் கடையை மூடி விடுகிறார்கள்.

ஒரு வழியாக 12 மணி நேர பயணத்தில் நிற்காமல் சென்று பம்பையை அடைந்தோம்.

இந்த முறை சென்றபோது பம்பையில் தண்ணீர் மிகக் குறைவாக இருந்தது, படுத்தால் மட்டுமே உடல் முழுவதும் நனையும் படி நீர் இருந்தது.

கூட்டம் இல்லாததால் சிரமமாகத் தெரியவில்லை. இல்லை என்றால் தண்ணீர் நாறிப் போய் இருக்கும், கூட்டத்தில் நாமும் சுத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதிக சிரமம் இல்லாமல் ஐயப்பனை தரிசித்து விட்டு உடனே திரும்பி விட்டோம்.

டோலி

வரும் வழியில் அதிக எடையைத் தூக்கி சர்வசாதாரணமாக வந்தவர்களைப் பார்த்து நிழற்படம் எடுத்த பொழுது என்னைப் பத்திரிக்கை நிருபர் என்று நினைத்து எங்க கஷ்டங்களைப் பேப்பரில் போடுங்க என்று ஒருவர் கூறினார் 🙂 .

சபரிமலையில் “டோலி” வசதியின் மூலம் வயதானவர்கள் நடக்க முடியாதவர்களிடம் 1000 அல்லது 1200 கொடுத்தால் (அவர்களது எடைக்குத் தகுந்த படி மாறும்) பிரம்பு நாற்காழியில் உட்கார வைத்துத் தூக்கி கோவிலில் சென்று விடுவார்கள்.

 பிறகு திரும்ப வரும் போது இதே போல் வந்து கொள்ளலாம்.

கேரளாவில் ஒரு சில சாலைகள் மிகச் சிறப்பாக இருந்தன. பாலம் கட்டிக்கொண்டு இருப்பதால் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

மரங்கள் அடர்ந்து பசுமையாக இருந்ததால், காரில் பயணம் செய்யச் சுகமான அனுபவமாக இருந்தது. Gods own country னு சரியா தான் கூறி இருக்காங்க.

எல்லாம் முடிந்து கோயம்புத்தூர் வந்த பிறகு நினைத்தேன், 1000 சொல்லுங்க நம்ம ஊரு நம்ம ஊரு தான் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

சபரிமலை போராளிகள்

சபரிமலையும் பெண்கள் உரிமையும்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. “””பொதுவாக நான் வேன் அல்லது பேருந்தில் சென்று வந்ததால் எனக்கு வழி பிரச்சனை தெரியவில்லை. இப்பொழுது வண்டியை நிறுத்தி கேட்டு கேட்டு சென்றோம், கேரளாவில் மிக கொடுமையான விஷயம் ஊர் அறிவிப்பு பலகை (sign board).””

    பத்து வருடங்களில் கூகிளின் வளர்ச்சி எப்படிபட்டது பார்த்தீர்களா!! இன்று நீங்கள் சபரிமலை போக வேண்டும் என்றால் மேப் திறந்து சேரும் இடத்தை போட்டால் போதும் நம்மளை சரியாக கொண்டு போய் சேர்த்து விடுகிறது. வளர்கிறது விஞ்ஞானம் கூகிள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here