கோடை விடுமுறையில் குடும்பத்தினருடன் சுற்றுலா முடிவெடுத்து தேனி மேகமலை, மூணாறு சென்று வந்தோம்.
மேகமலை
சின்னமனூர் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றதால், போக்குவரத்தைத் திருப்பி இருந்தார்கள் ஆனால், நாங்கள் சென்ற போது அனுமதித்தார்கள்.
அங்கே நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களின் எண்ணிக்கையை வைத்துத் திருவிழா மிகப்பிரம்மாண்டமானதாக இருக்கும் என்று உணர்ந்து கொள்ள முடிந்தது.
சின்னமனூரிலிருந்து கிளம்பி திராட்சை தோட்டங்களைக் கடந்து சென்றால், சிறிது நேரத்திலேயே மேகமலை அடிவாரத்தை அடைந்து விடலாம். சின்னமனூரில் வறட்சியே வந்தது இல்லை என்றார்கள்.
மேகமலை வருகிறவர்கள் அடிவாரத்தில் முருகன் கோவிலுக்குச் சென்று வணங்கிய பிறகு செல்வதாகக் கூறினார்கள், நாங்களும் வணங்கி விட்டுச் சென்றோம்.
18 கொண்டை ஊசி வளைவு கொண்ட மலைப்பாதை, சாலை தரமானதாகவே இருந்தது.
மேகமலையின் சிறப்பு என்று எதுவும் இல்லை, அப்படியே தேயிலை எஸ்டேட் வழியே சென்று மணலாறு பாலம் வரை சென்று பார்வையிடலாம்.
அப்பகுதியில் வாகனத்தை நிறுத்தி நிழற்படம் எடுத்துக்கொள்ளலாம்.
மேகமலையின் அடையாளமாக ஒரு View Point உள்ளது. மேகமலை என்று தேடினால் மேலே உள்ள படமே அதிகம் தென்படும்.
மற்றபடி இங்கே பார்க்கவும், வாகனங்களை நிறுத்தி ரசிக்கவும், ஓய்வு எடுக்கவும் எந்த இடமும் ஏற்படுத்தப்படவில்லை.
சுற்றுலாவை மேம்படுத்தும் எந்த யோசனையும், முயற்சியும் இல்லாமல், வாய்ப்பிருந்தும் தேமே என்று இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
இதே மலை கேரளா வசம் இருந்தால், இந்நேரம் இதை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக்கியிருப்பார்கள்.
கூடுதல் விவரங்கள்
அங்கே டீ கடையில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்த போது கிடைத்த தகவல்கள்.
- கடந்த ஆறு மாதமாக மழை இல்லை. கடந்த ஐம்பது வருடங்களில் கடந்த இரு வருடங்களாக மழைப்பொழிவு குறைவு.
- இதனால், அணைகள், நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் இல்லை.
- மேகமலையிலிருந்து 20+ கிமீ சென்றால் வரும் மகாராஜா மெட்டு சென்றால், பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன.
- சபரிமலை ஜோதி நாளில், இங்கே இருந்தே ஜோதியைப் பார்க்க முடியும். இந்நாளில் குறைந்தது 50 வாகனங்களுக்கு மேல் இங்கே செல்லும்.
- வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் மேகமலையில் கூட்டம் அதிகம் இருக்கும். அப்பகுதி நண்பர்கள், காதலர்கள் பைக்கில் வந்து செல்லும் இடமாக உள்ளது.
யார் செல்லலாம்?
இயற்கைக் காட்சிகளைப் பார்வையிட விரும்புபவர்கள், குளிரை அனுபவிக்க விரும்புபவர்கள் சீசன் காலங்களில் செல்லலாம்.
அக்டோபர் முதல் மார்ச் வரை சிறந்த காலம். மழை பொழிவைப் பொறுத்துக் கூடக் குறைய இருக்கலாம்.
தங்குவதற்கு Resort உள்ளன ஆனால், இங்கே தங்க திட்டமிடுவது Worth ஆனது இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
மலையில் தங்கவில்லை என்றால், மாலை 5.30 க்குள் மலையை விட்டு இறங்க அறிவுறுத்துகிறார்கள். எனவே, மகாராஜா மெட்டு செல்வதாக இருந்தால், மதியத்துக்குள் அடிவாரத்தை அடைந்தால் சரியாக இருக்கும்.
ஒவ்வொருவரின் இயற்கையை ரசிக்கும் நேரத்தைப் பொறுத்து நேர அளவு மாறலாம்.
வாகனத்தை நிறுத்தி ரசிக்கும் வகையில் ஒரு இடம் கூடச் சுற்றுலாத்துறை அமைக்கவில்லை, வழியிலேயே நின்று பார்த்துக்கொண்டால் மட்டுமே உண்டு.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
வணக்கம் கிரி.. எப்படி இருக்கீங்க? கடந்த ஒரு மாதமாக விடுமுறையில் இருந்ததால் எந்த பதிவுகளையும் படிக்கவில்லை.. விடுமுறையில் நானும் குடும்பத்துடன் (25 பேர்) மூணாறு சென்று இருந்தோம்.. குழந்தைகள் / பசங்க / பெண்கள் அதிகம் இருந்ததால் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இருப்பினும் சுற்றுலா சிறப்பாக முடிந்தது.. மேகமலை பற்றி தற்போது தான் கேள்விப்படுகிறேன். இதுவரை சென்றதில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
நலம் யாசின். உங்கள் விடுமுறை சிறப்பாக முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
25 பேரா! இத்தனை பேரைச் சமாளித்து, அனைவரையும் ஒரு இடத்தில் திரட்டி நிற்க வைப்பதே சாதனையாக இருக்கும் 🙂 .
நாங்களும் மூணாறு சென்றோம். அது பற்றி விரைவில் எழுதுகிறேன்.