சபரிமலையும் பெண்கள் உரிமையும்!

6
சபரிமலையும் பெண்கள் உரிமையும்

அனைவருமே கடவுளின் படைப்பு என்கிற போது, எப்படி வேறுபாடு ஏற்படும். பக்தர்களிடம், ஆண் – பெண் என, வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது. வழிபாடு செய்வது, அனைவருக்கும் உள்ள சட்ட உரிமை. Image Credit

குறிப்பிட்டவர்களைக் கோவிலுக்கு வரக் கூடாது எனக் கூறுவது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதை மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது

என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்துக் கேரள அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது..

சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே, கேரள அரசின் நிலைப்பாடு. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும், மனு தாக்கல் செய்து உள்ளோம்.”

தேவஸ்தானம் அமைப்பு “பெண்களை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளது.

வீம்பு

நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம், இவன் “வீம்புக்குன்னே பண்ணுறான்” என்று. அதே தான் சபரிமலை பிரச்சனையிலும் சில நபர்களால், அமைப்புகளால் நடந்து கொண்டுள்ளது.

சபரிமலையில் பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றுப்பட்டு வரும் நடைமுறையை, வம்புக்குனே கையைப் பிடித்து இழுப்பது விதண்டாவாதமன்றி வேறு எதுவுமில்லை.

கட்டுப்பாடுகள் என்ன?

10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள சிறுமிகளுக்கு / பெண்களுக்கு அனுமதியில்லை.

பூப்பெய்திய சிறுமிகளுக்கு அனுமதியில்லை.

இதில் எங்கே பெண்களுக்கு எதிராக உள்ளது? பெண்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது?

பெண்களையே அனுமதிக்கவில்லை என்றால் கேட்பதில் ஒரு நியாயம் உள்ளது ஆனால், பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்களே! அப்புறம் என்ன?

ஏன் அனைவரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள்?

ஐதீக ரீதியாகக் காரணம் தெரியாது ஆனால், நடைமுறை பிரச்சனைகள் தெரியும், 10 முறை சபரிமலை சென்று வந்துள்ளேன், பெண்களுக்கான சிரமங்கள் புரியும்.

சில வழக்கங்கள் பெண்களுக்கு நடைமுறை சங்கடங்களைக் கொண்டு வரும். இதை விலாவரியாக விளக்க விரும்பவில்லை.

திருப்பதி போலப் பெரும் கூட்டத்தைச் சமாளிக்க கூடிய பூலோக அமைப்பு, ஒழுங்கு வரிசை முறை, பாதுகாப்பு சூழ்நிலை சபரிமலையில் இயற்கையாகவே இல்லை.

ஏற்கனவே, சபரிமலை சுற்றுலாத்தலம் போல மாறிவருகிறது என்று குற்றச்சாட்டைப் பெற்று வருகிறது. “சாமிகள்” விரதங்களைப் பின்பற்றுவதில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.

பெண்களையும் அனுமதித்தால் தேவையற்ற குழப்பங்களை, பிரச்சனைகளை, அத்து மீறல்களைக் கொண்டு வரும். பின்னர் இதை வைத்து இன்னும் பல புதிய பிரச்சனைகள் உருவாகும், விரும்பத் தகாத செய்திகளைக் கேட்க / படிக்க நேரிடும்.

இந்தியாவில் பெண்களுக்கு மட்டுமேயான கோவில்கள் உள்ளது தெரியுமா?

இந்தியாவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள, பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கோவில்கள், திருவிழாக்கள் உள்ளன.

இங்கே சென்று “ஆண்களையும் அனுமதிக்க வேண்டும், அது எங்கள் உரிமை, அரசியல் சாசனம்” என்று கேட்பது எவ்வளவு அபத்தமான செயலோ அது போலத்தான் சபரிமலையும்.

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா?!

இந்தியாவில் சபரிமலை தவிர அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் பெண்களும் ஆண்களும் எப்போதும் செல்ல முடியும், எந்தத் தடையுமில்லை.

சபரிமலையிலும் பெண்கள் செல்ல முடியும் அவர்களுக்குண்டான காலம் வரும் போது, யாரும் தடுக்கப்போவதில்லை.

அக்கா சிறு வயதில் சபரிமலை சென்று வந்துள்ளார்கள், அம்மா சென்று வந்துள்ளார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? இவர்கள் எல்லாம் தடுக்கப்பட்டார்களா?

நடைமுறை எதார்த்தம், இதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் விதண்டாவாதமாகப் பேச மாட்டார்கள்.

பெண்கள் பலரும், பெண்களுக்கு மட்டும் அனுமதியுள்ள கோவிலை உதாரணம் காட்டி, “இது தவறான உரிமை கோரல்” என்று விமர்சித்துள்ளார்கள்.

பெண்கள் உரிமை

பெண்களுக்கு உரிமை என்பதெல்லாம் சரி! அதை யாரும் மறுக்கவில்லை ஆனால், வீம்புக்கென்றே பிரச்னையைக் கிளப்புவர்களை ஒதுக்கித்தள்ள வேண்டும்.

சிறுமிகள், பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை, தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனையில்லை. குற்றம் செய்தவர்கள் எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள்.

போராளிகள் போராட வேண்டியது நம்முடைய உளுத்துப் போன சட்டங்களை எதிர்த்துதானே தவிர, ஏற்கனவே அனுமதியுள்ள கோவிலுக்கு அனுமதி வேண்டி செய்யும் போராட்டமல்ல.

சிம்பு “Beep” பாடலுக்காக அவ்வளவு தீவிரமாகச் சாணி எல்லாம் எடுத்துப் போராடிய பெண்கள், சமீப சென்னை சிறுமி பிரச்சனைக்காக இது போலப் போராடினார்களா?!

இது தான் இவர்களுடைய பெண்களுக்கான உரிமைப் போராட்டம்!

போராட்டம் என்பது உண்மையான, சரியான காரணத்துக்கான போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர விளம்பரத்துக்காக, வீம்புக்காக இருக்கக்கூடாது.

கேரளா தேவஸ்தானம் அமைப்பு தன் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும், பழைய முறையையே தொடர வேண்டும். இது நிச்சயம் ஆணாதிக்க சிந்தனையல்ல.

தொடர்புடைய கட்டுரை

சபரிமலை பயணம் [2008]

கொசுறு

சபரிமலை சென்றுள்ளீர்களா? உங்களுடைய கருத்தென்ன?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. அன்புள்ள கிரி ,

    “அனைவருமே கடவுளின் படைப்பு என்கிற போது, எப்படி வேறுபாடு ஏற்படும். பக்தர்களிடம், ஆண் – பெண் என, வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது. வழிபாடு செய்வது, அனைவருக்கும் உள்ள சட்ட உரிமை.

    குறிப்பிட்டவர்களைக் கோவிலுக்கு வரக்கூடாது எனக் கூறுவது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதை மறுப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது“

    என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    << மேற்கண்ட நீதிபதிகள் கருத்து குறித்தது தங்கள் விமர்சனமென்ன ?
    இந்த கருத்தில் ஏதேனும் தவறு உள்ளதா ?

    தேவஸ்தானம் அமைப்பு “பெண்களை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளது.

    வீம்பு

    நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம், இவன் “வீம்புக்குன்னே பண்ணுறான்” என்று. அதே தான் சபரிமலை பிரச்சனையிலும் சில நபர்களால், அமைப்புகளால் நடந்து கொண்டுள்ளது.

    சபரிமலையில் பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றுப்பட்டு வரும் நடைமுறையை, வம்புக்குனே கையைப் பிடித்து இழுப்பது விதண்டாவாதமன்றி வேறு எதுவுமில்லை.

    << இதில் வீம்பு எங்கே உள்ளது ??
    << விதண்டாவாதம் எங்கு உள்ளது ?

    கட்டுப்பாடுகள் என்ன?

    10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள சிறுமிகளுக்கு / பெண்களுக்கு அனுமதியில்லை.

    பூப்பெய்திய சிறுமிகளுக்கு அனுமதியில்லை.
    இதில் எங்கே பெண்களுக்கு எதிராக உள்ளது? பெண்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது?
    << அப்போது தங்கள் கருத்துப்படி இது பெண்களுக்கு எதிராக இல்லை – பூப்பெய்வத்துக்கு எதிராக உள்ளது – சரியா 🙂

    << அப்படி பூப்பெய்வத்துக்கு எதிராக உள்ளது சரியா 🙂 ??

    ஆனால், நடைமுறை பிரச்சனைகள் தெரியும், காரணம் நான் 10 முறை சபரிமலை சென்று வந்துள்ளேன், பெண்களுக்கான சிரமங்கள் புரியும்.

    சில வழக்கங்கள் பெண்களுக்கு நடைமுறை சங்கடங்களைக் கொண்டு வரும். இதை விலாவரியாக விளக்க விரும்பவில்லை.

    << பெண்களை ஒரு விஷயத்தை செய்ய கூடாது – அப்படி செய்வதால் பெண்ணுக்கு சங்கடங்கள் வரும் – அதனால் தவிர்க்க வேண்டும் என்று எண்ணுவது சரியா ?

    << சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட பல காலமாக அனுமதி இல்லை – ஒரு பேச்சுக்கு ஏதோ ஒரு நடைமுறை பிரச்சனை காரணமாக இதை அனுமதிக்கவில்லை என்று சவூதி அரசாங்கம் கூறினால் எவ்வளவு அபத்தமானது ?? – இந்த விஷயத்தோடு நீங்கள் பொருத்தி பார்க்க வேண்டும்.

    பெண்களையும் அனுமதித்தால் தேவையற்ற குழப்பங்களை, பிரச்சனைகளை, அத்து மீறல்களைக் கொண்டு வரும். பின்னர் இதை வைத்து இன்னும் பல புதிய பிரச்சனைகள் உருவாகும், விரும்பத்தகாத செய்திகளை கேட்க / படிக்க நேரிடும்.
    << 🙂 – so , நீங்கள் பெண்ணுக்கு உதவ நினைக்கிறீங்க ?
    << இந்த கட்டுரையை படியுங்கள் – Article removed

    நடைமுறை எதார்த்தம், இதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் விதண்டாவாதமாகப் பேச மாட்டார்கள். பெண்கள் பலரும், பெண்களுக்கு மட்டும் அனுமதியுள்ள கோவிலை உதாரணம் காட்டி, “இது தவறான உரிமை கோரல்” என்று விமர்சித்துள்ளார்கள்.

    << நடைமுறை எதார்த்தம் – எது இப்போது நடக்கிறதோ அது நடைமுறை –
    அது மாற்றப்பட்டு வேறு ஒன்று நடந்தால் அது நடைமுறை 🙂

    << நியாயத்தை புரிந்து கொள்ளும் பெண்கள் –
    இதில் என்ன நியாயம் உள்ளது என்று எனக்கு புரியவில்லை

    சிறுமிகள், பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை, தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனையில்லை. குற்றம் செய்தவர்கள் எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள்.

    << உண்மை – ஆனால் அதற்காக அவர்களின் உடல் ரீதியிலான மாற்றத்தை முன் வைத்து இதனால் நீ கோவிலுக்குள் வராதே என்று சொல்வது எந்த அளவிற்கு சரி ??

    <<
    போராட்டம் என்பது உண்மையான, சரியான காரணத்துக்கான போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர விளம்பரத்துக்காக, வீம்புக்காக இருக்கக்கூடாது.
    எது சரியான காரணம் ? எது தவறான காரணம் – இதை யார் முடிவு செய்வார் ?

    இந்த விஷயத்தை பொறுத்த அளவில் யார் விளமபரம் தேடுகிறார்கள் ?

    ===================================

    அன்புள்ள கிரி ,

    நம் வாழ்வில் முதல் 15-18 வருடங்கள் முக்கியமானவை.

    நாம் நம் பெற்றோரிடமிருந்தும் , நம் பள்ளியிலிருந்தும் , நம் சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்தும் பல செய்திகளை பெறுகிறோம் – இது அத்தனையும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை – சில நேரங்களில் சமூகத்தின் மறைமுக தேவைகளுக்காக பொய்யான விஷயங்களை நம்மிடம் விதைத்து விடும் –

    அந்த நாட்கள் தீட்டு எனவும் , அந்த நாட்களில் விளக்கு ஏற்றக்கூடாது எனவும் – தனியா ஒரு உலக்கையை வைத்து கொண்டு – யாரையும் தொடாமல் இருக்க வேண்டும் – இந்த மூட பழக்க வழக்கங்கள் இன்று பெருமளவில் குறைந்து உள்ளது – அது போல கோவிலுக்கு செல்வது என்பதை பெண்ணின் உரிமை – அதனை நடைமுறை , பெண் பாதுகாப்பு என்று சொல்லி தடுப்பது சரியல்ல – அவள் அவளுக்கு பிடித்த இடத்திற்கு செல்லட்டும் 🙂

  2. கவி உங்களுடைய விரிவான கருத்துக்கு நன்றி. உங்களுடைய கருத்தை மதிக்கிறேன் ஆனால் என்னுடைய கருத்தில் மாற்றமில்லை.

    திரும்பவும் சொல்கிறேன் பெண்களை தடுக்கவில்லை, அவர்கள் சென்று வருகிறார்கள் என்பதை உதாரணத்துடன் கூறி இருக்கிறேன்.

    “எது சரியான காரணம் ? எது தவறான காரணம் – இதை யார் முடிவு செய்வார் ?”

    இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், இதே கேள்வியை எட்டு வருடங்களுக்கு முன்பு நான் கேட்டு இருந்தேன் (https://www.giriblog.com/sex-endraal-enna/). எனவே, உடனே என்னால் இதை புரிந்து கொள்ள முடிந்தது.

    • நன்றி கிரி!
      நான் உங்களை பல காலமாக தொடர்கிறேன் 🙂
      இன்றைய கால கட்டத்தில் எதிராக ஒரு கருத்து கூறினால் , எதிரியாக எண்ணி விடுகிறார்கள் – அவ்வாறு இல்லாமல் நீங்கள் எப்போதும் போல மிக மன முதிர்வோடு எதிர் கொள்கிறீர்கள்.. நன்றி

      ஒருமுறை நான் சபரிமலைக்கு சென்று உள்ளேன்..நல்ல ஒரு அனுபவம்.

      என்றாவது ஒரு நாள் உங்களின் பேத்தியோ / பேத்தியின் மகளோ சபரிமலையில் எடுத்த போட்டோவை பார்ப்பீர்கள் – அன்று மகிழ்வீர்கள் 🙂

  3. யாருக்கும் மத விஷயங்களில் தலையிட உரிமை இல்லை. இதய போன்று மற்ற மதங்களில் உள்ள விஷயத்தை தலையிட முடியுமா ?

    ஹிந்து மதத்தில் கடவுளுக்கேற்ற மாதிரி வழிபடு முறைகள் உள்ளன அது எப்போதிலிருந்து இருக்கு என்பது தெரியாது

    அப்படி இருக்க அதை மாற்ற நமக்கு உரிமை கிடையாது.

    • அன்புள்ள சரவணன்,
      மத விஷயங்களில் தலையிட உரிமை இல்லை.

      << இது மட்டும் இன்றளவும் உண்மையாக இருந்தால் – உடன்கட்டை ஏறும் பழக்கம் இன்றளவும் நீடுத்து இருக்கும்..பெண்கள் வெள்ளை புடைவை அணிந்து கொண்டு இருப்பார்கள் – இன்றளவும் சில கொடுமைகள் நடந்து வருகிறது.

      மாறு – மாற விடு 🙂

  4. @கவி “என்றாவது ஒரு நாள் உங்களின் பேத்தியோ / பேத்தியின் மகளோ சபரிமலையில் எடுத்த போட்டோவை பார்ப்பீர்கள் – அன்று மகிழ்வீர்கள் ?”

    நான் தாத்தா ஆகும் வரை எதற்கு காத்து இருக்கணும். என்னுடைய பாட்டியே அவர் பேத்தி செல்வதை பார்த்து விட்டாரே!

    என்னுடைய அம்மா சென்றதை என் அப்பா பார்த்து விட்டாரே. தன் மகள் சென்றதை என் அம்மா பார்த்து விட்டாரே 🙂

    @சரவணன் நீங்கள் கூறுவது சரி தான் ஆனால், சில நடவடிக்கைகள் கேட்கப்பட வேண்டியதே! உதாரணத்துக்கு கவி சொன்னது போல உடன்கட்டை ஏறும் பழக்கத்தை (ஒருவேளை இது போல பழக்கங்கள் தற்போது இருந்தால்) மத விஷயத்தில் தலையிட உரிமையில்லை என்று கண்டுகொள்ளாமல் இருக்க முடியாதே.

    @கவி நான் மற்ற மதங்களை பற்றி குறிப்பிட விரும்பவில்லை, நான் சம்பந்தப்பட்ட இந்து மதம் பற்றி மட்டும் கூறுகிறேன்.

    இந்து மதத்தில் பல குறைகள் இருந்தாலும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்துள்ளது, அன்று பின்பற்றப் பற்றது இனியும் தொடர வேண்டும் என்று வாதிடுவதில்லை.

    உதாரணத்துக்கு நீங்கள் கூறிய உடன்கட்டை ஏறுதல், மொட்டை அடித்தல் என்பவையுடன் வெள்ளை புடவை கட்டுதல், பொட்டு வைக்காமல் இருத்தல் போன்றவையும் தற்காலத்தில் மாறி விட்டது.

    இதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஏனென்றால், இதெல்லாம் தவறான செயல் என்று அனைவருக்கும் தெரியும். எனவே, இதை நியாயப்படுத்தி யாரும் பேசுவதில்லை.

    காலத்துக்கு ஏற்ப இந்து மதம் மாறியே வந்துள்ளது. நீங்கள் கூறுவது போல “மாறு – மாற விடு” என்ற நிலையில் இல்லை. மாற்றம் நடந்து கொண்டே தான் உள்ளது.

    இந்து மதத்தை பலரும் விமர்சித்தும் விமர்சனங்களை கடந்தும் இன்றும் விமர்சனங்கள் தொடரக்காரணமே இந்து மதத்தில் உள்ள சுதந்திரம் தான்.

    எனவே மாற விடு என்பதெல்லாம் இந்து மதத்துக்கு ஏற்ற சொல்லே அல்ல. ஏனென்றால், அந்த அளவுக்கு கட்டுப்பாடான நிலையில் இந்து மதம் இல்லை.

    நீங்கள் இந்து மதத்தில் குறிப்பிடலாம் என்றால், சாதி பாகுபாட்டை தான் குறிப்பிட முடியும். இது குறித்து கட்டுரைகள் எழுதி இருந்தேன், படித்தது இல்லை என்றால், முயற்சி செய்யுங்கள்.

    https://www.giriblog.com/arthamulla-indu-matham-book-review/

    https://www.giriblog.com/karma/

    https://www.giriblog.com/asura-tale-of-the-vanquished-book-review/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!